பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

கதை_வாசிப்பு_2019 – 1 'மழையின் சங்கீதம்'

கதை_வாசிப்பு_2019 – 1
சிறுகதை – மழையின் சங்கீதம்
எழுத்து – ந.பச்சைபாலன்

 ப.சிங்காரத்தின் கடலுக்கு  அப்பால் நாவலை படித்திருந்தேன். அது ஒரு துயர நாடகம் போல மனதை அலைக்கழித்தது. வரலாற்றில் ஆர்வமும் வரலாற்று அறிவும் அவ்வளாக இல்லாத எனக்கு, நாவலில் தொடக்க வாசிப்பு ஏனோ ஈர்க்கவில்லை. முதலில் என்னை பாதித்தது அதன் மொழிதான். பின்னர் நாவலில் பயணத்தில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன். நாயகனின்  தொல்வியிலும் அவனது கண்டடைதலிலும் நானும் கொஞ்ச நாட்களை கடத்தலாம் என்று நினைக்கிறேன். ஆக இனி வருவது  அந்நாவல் குறித்த பகிர்வு அல்ல.

அந்நாவலில் சிக்குண்டு கிடந்த மனதிற்கு மாற்றாய் கிடைத்த சிறுகதையைப்பற்றியது.

   சிலரின் கதைகளை என்னால் தைரியமாகப்  படித்து அது குறித்து பேசவோ எழுதுவோ முடியும். அவர்களால் என்னை புரிந்துக் கொள்ளவும் என் கருத்துக்கு மதிப்பளிக்கும் முடியும். அவ்வாறானவரின் ஒருவர்தான் ந.பச்சைபாலன். அதிகமாய் பாசம் பகிர்ந்துக் கொண்டு பழகி இல்லாவிட்டாலும், இருவருக்கும் இடையே மரியாதையும் அன்பும் இருக்கிறது.

   நாவலின் தாக்கத்தை தற்காலிகமாக மாற்றுவதற்கு ஏதும் தென்படுகிறதா எனத் தேடிக்கொண்டிருந்த சமயம் ந.பச்சைபாலனின் சிறுகதை கைபேசியில் பட்டு கண்ணுக்கு எட்டியது. இயல்பாகவே கவிஞர்களிடமிருந்து கதைகள் வருகிறதென்றால் அதில் எனக்கு தனித்த ஆர்வம் உண்டு. அதிலும் தற்சமயம் நான் இருக்கும் மழைச்சாரல் புலனக்குழுவில் ந.பச்சைபாலனின் கவிதைகளை குழுவின் நிர்வாகி வாணிஜெயம் தொடர்ந்து பகிர்ந்துக் கொண்டிருந்தார். ஆக சிறுகதை படிக்கும் ஆர்வம் மேலும் அதிகரித்தது.

‘மழையின் சங்கீதம்’ சிறுகதை.

   ந.பச்சைபாலனே அதில் நாயகனாக பாலன் என்ற பெயரில் வருவதாகவே வாசிக்கையில் தெரிந்தது. ஆனால் அந்த பல்கலைக்கழக காதல் காட்சிகளில் இன்றைய அவரின் தோற்றத்தையே என்னால் நினைத்துப்பார்க்க முடிந்தது என்னமோ துயரம்தான். இதனை போக்குவதற்காகவே அவரது இளமை ததுப்பும் பழைய படம் எதையாவது பார்த்து அந்த காதல் காட்சிகளில் இன்றைய பாலனை எடுத்துவிட்டு இளைய பாலனை புகுத்த வேண்டும். (இந்த வரிகளுக்கு ந.பச்சைபால் சிரிப்பார் மற்ற சிலர் எனக்கு ‘என்ன கொழுப்பு பார்’ என்பார். ரைட்டு விடுவோம்.)

கதை.

   ஞாயிறு பதிப்பில் துணை ஆசிரியராக இருக்கும் பாலன். எழுதிய பேய் கதைக்கு வாசகர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கின்றன. அதில் ஒரு வாசகர் கடிதம் இவரை காதல் கதை எழுதச் சொல்லி கேட்கிறது. ஆசிரியர் பாலனை அழைத்து அது குறித்து பேசுகிறார். காதலே நமக்கு ஆகாது இதில் காதல் கதை வேறயா என்பது போல பாலன் தயங்கி இன்னொரு பேய்கதை எழுதுவதற்கு தயார் என்கிறார். அதனை மறுத்து ஆசிரியர் காதல் கதை எழுதுவது அவருக்கு விடப்பட்ட சவால் என தூண்டி விடுகிறார். பாலனும் வேண்டாம் வெறுப்பாக ஒப்புக்கொள்கிறார்.

  அப்போது மழை. மழையில் பாலனுக்கு பல்கலைக்கழக காதல் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அவரின் பால்யமும் அந்த பருவமும் நேர்த்தியாக சொல்லப்படுகிறது. நாயகி  பூரணி. ந.பார்த்தசாரதியில் குறிஞ்சி மலர் நாவலின் நாயகி. பாலனுக்கு அப்படித்தான் தோன்றுகிறது.  இருவருக்குமான நெருக்கம் தொடங்குகிறது . அங்கிருந்து காதலை நோக்கி நாம் பயணிக்கிறோம். அடடே நல்லதொரு காதல் கதைக்கு வாசகர்கள் தயாராகும் சமயத்தில் ஒரு திருப்பம். வழக்கமான காரணங்களின் பொருட்டு அது நடக்கிறது.

   மழை மனிதற்கு முதல் காதலை மட்டுமல்ல மறுகாதலையும்தான் நினைக்க வைத்துவிடுகிறது ! அப்படி இரண்டோடு நின்றுவிட்ட துர்பாக்கியசாலிகளில் பாலனும் சேர்ந்துக் கொள்கிறார். எனக்கெல்லாம் பெய்துக் கொண்டிருக்கும் மழை மட்டுமல்ல, மழைன்னு யாரும் சொன்னாலே காதலிகள் வரிசையா நின்றுக் கொள்வார்கள். யாரைத்தான் நினைக்காமல் இருக்க முடியும் சொல்லுங்கள் ?

   கதையில் அடுத்த பரிணாமம். பத்திரிகை துறையில் சேர்கிறார் பாலன். அங்கு வேலை சேர்வதற்கு வீட்டில் ஆதரவு இல்லை. தாத்தாவை போல பேரனும் இப்படி பத்திரிகை கதை கட்டுரை என வீணாய் போவதை அம்மா விரும்பவில்லை. இதனை படிக்கையில் இதே போன்ற வசனம் அம்மா சொல்வதாக ந.பச்சைபாலனின் இன்னொரு கதையில் படித்ததாய் தோன்றுகிறது. யார் சார் உங்க தாத்தா… எனக்கே அவரை பாக்கனும் போல இருக்கு…?

வேலை நிமித்தம் வெளியில் செல்லுகையில் நந்தினியை சந்திக்கின்றார். ஆமாம் அங்கொரு காதல் கதை ஆரம்பமாகிறது. ஆனால் பாவம் பாலனால் நந்தினியில் இன்னொரு உலகத்துக்கு நுழைய முடியவில்லை. நவீன உலகத்தை பொறுத்தவரை ஒவ்வொருவரும் இவ்வாறான இரண்டு உலகங்களில் வாழ தங்களை பழக்கிக்கொள்கிறார்கள். வேறு வழி இல்லை என்பது மாதிரியான சூழல் இங்கு அமைந்துவிடுகிறது. சரி தவறு என்பதை தாண்டி மக்கள் பயணித்து நாளாகிவிட்ட நிலையில் பாலன் போன்றவர்களும் இருக்கிறார்கள். நாம் எதிர்ப்பார்த்த காதல் கதையில் இன்னொரு திருப்பத்தை நமக்கு பாலன் தருகிறார்.

   தனது ஏமாற்றங்களை மிள் உருவாக்கம் செய்து அதனை காதல் கதையாக்கி அதிலாவது வெற்றி அடைவார் என வாசகர்கள் எதிர்ப்பார்க்கும்  சமயத்தில்;

   ‘ஆதலினால் கொலை செய்வீர்’ (இந்த தலைப்பில் சுஜாதாவின் நாவல் இருக்கிறதே !) இன்னொரு திகில் கதையை எழுதிக் கொடுக்கிறார். ஏமாற்றத்துடன் ஞாயிறு ஆசிரியர் காதல் கதை குறித்துக் கேட்கவும்.  அடுத்த கதை காதல் கதைதான் என சொல்லிவிட்டு செல்கிறார். நாமும் அந்த ஞாயிறு ஆசிரியர் போல  நம்பிகொண்டு இருக்கும் போது; தன் இடத்தில் வந்து அமர்கிறார். ஜன்னல் வழி வானம் பார்க்கிறார். அவருக்கு வானம் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல மழை வராது என்றும் கூட அவருக்கு தோன்றிவிடுகிறது. வராமல் போவது மழை மட்டுமல்ல அவரிடம் இருந்து காதல் கதையும்தான் என நாம் நினைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவர் சொல்லாமல் செல்வது போல போக்கு காட்டிய இரண்டு இடங்களிலும் காதல் உண்டு அங்கு கதையும் உண்டு.

   படிப்பதற்கு சுவாரஷ்யமான கதை. நம்மை கொஞ்ச நேரம் பழைய காதலில் இளைப்பார வைக்கிறது. தங்குதடையின்றி கதைக்குள்ளே செல்ல முடிகிறது.

  ஓர் ரகசியம்; பாலனுக்கு முன்றாவது காதல் வரலாம். ஏனெனில் அவ்வபோது அவரது அலுவலகத்தில் தேநீர்  கொடுக்கும் பெண்ணின் பெயர் மாலினி.

மாலினி பெயர் நல்லாருக்குல்ல…

https://patchaibalan.blogspot.com/2019/05/blog-post_21.html?m=1
(சிறுகதையை வாசிக்க )

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்