பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 09, 2026

- கவிழும் ஸ்பைடர் மேன்கள் -


வேலையில் மனஉளைச்சல் அதுவும் காலையில். வேலையே இல்லாமல் இருக்கும் போது வந்த மனஉளைச்சலைவிடவும் இந்த உளைச்சல் உயரமாகத் தெரியவில்லை.

காலையிலேயே முதல் ஆடர். கஸ்டமருக்கு பிறந்தநாள் அணிச்சலைக் கொடுக்க வேண்டும். வீட்டிலேயே அணிச்சலைச் செய்து விற்பனை செய்யும் பெண்ணொருவர் வாகனத்தை புக் செய்திருந்தார்.

கார் அவரது வீட்டு வாசலில் நின்றது. வீட்டு எண்ணை ஒருமுறை சரி பார்த்து கொண்டேன். புக் செய்த நபருக்கு அழைத்து நான் வந்துவிட்டதாகச் சொன்னேன்.

கதவு திறந்தது. கை மட்டும் முதலில் தெரிந்தது. கொஞ்சம் காத்திருக்கும்படி செய்கையைச் செய்தார். அதிகம் நேரம் எடுக்காமல் பெட்டி ஒன்றை எடுத்து கொண்டு வந்தார்.

"கார்ல ஏர்கோன் இருக்கா...?" என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருந்தது.

என் காரில் ஏர்கோன் இருக்கிறது உங்கள் கையில் என்ன இருக்கிறது என்றேன். சிரித்தபடி கஸ்டமருக்கு அணிச்சலை அனுப்ப வேண்டும் என்றார். இங்கிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை ஆகும். கடந்த முறை இப்படி அணிச்சலை அனுப்பும் போது சூட்டால் சில இடங்களில் உருகி விட்டதாகவும் இன்னொரு முறை அனுப்பிய அணிச்சல் கொஞ்சம் சேதமாகியும் கஸ்டமருக்கு கிடைத்ததைக் குறித்து பேசினார்.

தெரிந்தோ தெரியாமலோ டெலிவரி செய்கிறவர்களுக்கும் அவரது இந்தச் சிறு தொழிலுக்கு பாட்னர் போல ஆகிவிட்டார்கள். அழகாய்ச் செய்த அணிச்சல் அதற்குரியவர்களிடம் சென்று சேர்ப்பதும் பெரிய வேலைதானே என்றார்.

பெட்டியை வாங்கி, கோ டிரைவர் சீட்டில் வைத்து விட்டு, காரில் ஏர்கோன் வசதி இருப்பதை மீண்டும் ஒரு முறை அவரிடம் சொல்லிவிட்டு சிரித்தேன்.

அவரும் சிரித்தபடி ஐந்து ரிங்கிட்டை எடுத்து கொடுத்தார். நான் கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அப்லிக்கேஷ்னில் அவர் பணம் செலுத்தியுள்ளதாகக் காட்டியது. பெட்டியைச் சேர்த்ததும் எனக்கு அந்தப் பணம் கிடைக்கும். அதனை அவரிடம் சொன்னேன்.

"இது உங்களுக்கு... நீங்கள் எங்களுக்கு பாட்னர்தான.. இது உங்க பங்கு கமிஷன் என்றபடி விடைபெற்றார்.

அந்த அணிச்சல் பெட்டியைப் பார்த்தேன். அழகாய் இருந்ததும் உள்ளே இருக்கும் அணிச்சலையும் பார்க்க முடிந்தது. யாரோ ஒருவர் தன் குழந்தையின் இரண்டு வயது அணிச்சலை ஆடர் கொடுத்திருக்கின்றான். அதில் எழுதிய பெயரை வாசிக்க முடியவில்லை. ஆனால் அதில் அமர்ந்திருந்த ஸ்பைடர்மேன் பொம்மையைப் பார்த்ததும் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று யூகித்து கொண்டேன்.

காலையிலேயே இப்படிபட்ட கஸ்டமர்கள் நமக்கு கிடைப்பது எவ்வளவு நல்லாருக்கு. என்று நினைத்தபடி கிளம்பினேன்.

அடுத்ததாய் நடக்கப் போவதை நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.
*******

எனக்கு சரியாக 45 நிமிடங்கள் என காட்டியது கைப்பேசி. வாகனத்தில் அணிச்சல் இருப்பதால் வேகமாக ஓட்ட முடியாது. ஓரளவிற்கு வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்தபடி வாகனத்தைச் செலுத்தினேன்.

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சமயம் என் வழியில் சட்டென ஒரு மஞ்சள் நிற வாகனம் குறுக்கிட்டது. முன்னறிப்பாக வலதுபக்க சமிக்ஞை இல்லாமல் அந்த வாகனம் நுழைந்ததால் சட்டென எனது வேகத்தைக் குறைக்கவும். நாற்காலியில் வைத்திருந்த அணிச்சல் கொஞ்சம் முன்னகர்ந்து பின் செல்லவும் சரியாக இருந்தது.

ஹார்னை அடித்தேன். என் வாகனத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவ்வப்போது ஹார்ன் அடிக்காது. வேகமாக அழுத்த வேண்டும். அந்த நினைப்பிலேயே ஹார்னை வேகமாக அழுத்த, இன்றும் மட்டும் ஏனோ பயங்கர சத்தமாய்க் கேட்டது.

அந்தச் சத்தம், குறுக்கே வந்த வாகனமோட்டியைக் கோவப்படுத்தியிருக்க வேண்டும். சட்டென இடது பக்கமாக வாகனத்தை செலுத்தினார். நான் வழக்கம் போல நேரே செல்லத் தொடங்கினேன்.

அந்த மஞ்சள் வாகனத்தில் யாரென நான் பார்க்கவும், எவண்டா எனக்கு ஹார்ன் அடிச்சது என அவர் என்னைப் பார்க்கவும் சரியாக இருந்தது.

'ஓ தமிழரா...?' என நானும், 'டேய் தமிழனா நீ...!!' என அவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்.

அவரது பக்கத்தில் அவரது நண்பரும் இருந்தார். அதனால்தான் என்னவோ அவருக்கு என் மீது கோவம் அதிகமாகியது. அவர் தனியாக வந்திருந்திருந்தால் கூட இப்படி ஆவேசப்பட்டிருக்க மாட்டார் போல.

அந்த மஞ்சள் வாகனம் எனது வாகனத்தை இடிப்பது போல வரத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் என் வழியில் குறுக்கே வருவது போல வித்தை காட்டியது.

எனக்கும் வயிற்றில் புளியில் இருந்து ஏதேதோ கரையத் தொடங்கியது. வாகனத்தை ஓரத்தில் நிறுத்தவும் முடியாது. தமிழன் என்ற ஒரே காரணம் போதும் இன்னொரு தமிழன் என்னை அடித்துவிட்டு அப்பறம் நடந்ததைப் பற்றி விசாரிப்பதற்கு.

இதனால் அணிச்சலுக்கு ஏதும் ஆகிவிட்டால் அது என் வேலைக்கே சிக்கலாகிவிடும். இப்போதுதான் 3 முதல் 4 ஸ்டார்கள் வரை வாங்க ஆரம்பித்திருக்கின்றேன்.

வாகனத்தை நிறுத்தாமலேயே அந்த மஞ்சள் வாகனத்தைச் சமாளித்தவாறு சென்று கொண்டிருந்தேன். இப்போதுதான் கவனித்தேன் அணிச்சலில் அமர்ந்திருந்த ஸ்பைடர்மேன் அதிலேயே கவிழ்ந்து கிடக்கின்றான்.

இன்றைக்கு அவ்வளவுதான் என நினைத்தபடி இருபது நிமிட போராட்டத்திற்கு பின் அந்த வாகனத்தில் இருந்து தனியாய்ப் பிரிந்து கஸ்டமரின் முகவரியை அடைந்தேன்.

அது அடுக்குமாடி குடியிருப்பு. என் விபரங்களை அங்குள்ள காவலாலியிடம் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்து வாகனத்தை நிறுத்தத்தில் நிறுத்திவைத்தேன்.

அணிச்சல் பெட்டியை எடுத்தேன். உள்ளே கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர் மேன் பாவமாக பார்த்தேன். இன்று அவன் பாவமல்ல இவந்தான் பாவம் என சொல்வது போல என் முகத்தில் ஒரு பகுதி அந்த அட்டைப்பெட்டியின் ஒரு பக்க நெகிழியில் தெரிந்தது.

கஸ்டமரை அழைத்தேன். அப்பாவும் மகனுமாய் உற்சாகமாக என்னை நோக்கி வருகிறார்கள். அணிச்சலைப் பார்த்ததும் அந்த உற்சாகம் இருக்குமா என தெரியவில்லை.

தூரத்தில் இருந்தபடியே கையை அசைத்தபடி வந்து கொண்டிருக்கிறார் அப்பா. உற்சாகத்தில் குதித்து கொண்டே வருகிறான் குட்டி ஸ்பைடர் மேன்.
அவன் குதித்த குதியில் கால் வழுக்கி விழுந்தான். அழதான். அப்பா அவனை சமாதானம் செய்தபடி இருந்தார் நானும் பெட்டியுடன் அவர்களிடம் ஓடினேன்.

பையன் எழுந்து நின்று என்னைப் பார்த்தான். அப்பாவும் என்னைப் பார்த்தார். அணிச்சலை வாங்கினார். அதில் கவிழ்ந்து கிடக்கும் ஸ்பைடர் மேனைப் பார்த்தார். மகனும் பார்க்கலானான். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கலானார்கள்.

"பாரு தம்பி ஸ்பைடர் மேனும் உன்னைப் போலவே விழுந்துட்டாரு..." என்றேன் பையனும் அப்பாவும் ஒருசேர சிரிக்கிறார்கள். எனக்குமே சிரிப்பு வந்தது.

பின் அணிச்சலை வாங்கி கொண்டார்கள். குட்டி ஸ்பைடர் மேனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லியபடி விடைபெற்றேன்.

வாகனத்தில் ஏறி அமர்கிறேன். கைப்பேசியில் ஒரு சத்தம். இன்றைத முதல் வேலைக்கான பணம் சேர்ந்ததாய்ச் சொன்னது. அதோடு என் வேலைக்கு இன்று 5 ஸ்டார்
இன்று அங்கிகாரமும் கிடைத்தது.

கவிழ்ந்த ஸ்பைடர் மேனுக்கும் அந்த குட்டி ஸ்பைடர் மேனுக்கும் நன்றி சொல்லியபடி வாகனத்தை கிளப்பினேன்.

எங்கள் வட்சப் குழுவில் ஒரு செய்தி வந்தது. நான் வந்த வழியில் ஏதோ விபத்து நடந்து கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதைப் படம் எடுத்து அனுப்பியிருந்தார்கள்.

அந்தக் கார் மஞ்சளாக இருக்கிறது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்