பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 12, 2021

புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்

புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்

 தலைப்பு – எழிலிக்கு வேரின் சாயல்

வகை – கவிதை

எழுத்து – கவிஞர் நெய்தல்

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794

 


      எழிலிக்கு வேரின் சாயல். தலைப்பு முதலில் என்னை ஈர்த்தது. யோசிக்க வைத்தது. யார் அந்த எழிலி என தேட தூண்டியது. புத்தகத்தின் முகப்பு ஓவியமும் வசீகரித்தது. ஏதோ ஒன்றை சொல்ல காத்திருக்கும் ஒன்றாகவே ஓவியம் அமைந்திருந்தது. கையில் எடுத்து கொஞ்ச நேரம் முகப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தோள் மீது அமந்திருக்கும் அந்த குழந்தைதான் எழிலியா என எண்ணிக்கொண்டேன்.  எழிலி என்றால் மேகம். என என் தேடலுக்கு கவிஞர் பதில் கொடுத்துள்ளார்.

      ஐம்பது கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு. வேவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. ஆச்சர்யம் என்னவெனில் எந்த கவிதைக்கும் தலைப்பு இல்லை. வாசிக்கின்றவர்களையே கவிதைகளுக்கு ஏற்ற தலைப்பை வைக்கும் படி கவிஞர் கூறியுள்ளார். இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாய் இருக்குமென வசிக்க ஆரம்பித்தேன். முதல் இரண்டு கவிதைகளுக்கு தலைப்பு வைத்தேன். ஆனால் அடுத்தடுத்த கவிதைகளுக்கு அது சாத்தியமில்லாமல் போனது. தலைப்பைத் தேடுவதைக் காட்டிலும் கவிதை கொடுக்கும் அனுபவம் அசாத்தியாமாக அமைந்தது.

‘நிலமிழந்த உழவன்

அங்காடி வாசலொன்றில்

காப்பாளனாய் நிற்கிறான்

வனமிழந்த களிறு

கடவுளின் வணிக வளாகத்தில்

சில்லறைகளுக்கு ஆசி வழங்குகிறது

பிரபஞ்சத்தின் இரு பெரும்

சோக சாயல்கள்’

      என்றொரு கவிதை(பக்கம் 40). நிலமிழந்த உழவனையும் வனமிழந்த யானையையும் ஒரு கோட்டில் வைக்கிறார். தனக்கான வாழ்நிலத்தை இழந்து இன்று ஏதோ ஓரிடத்தில் அடிமையாக இருக்கும் இருவரையுமே இந்த பிரபஞ்சத்தின் சோக சாயல்களாக பார்க்கின்றார்.

      ஏதோ அவசரத்தின் நடுவில்

     சட்டென கடந்துபோகும்

     அந்த ஒற்றைபபாடல்’

      என்றொரு கவிதை தொடங்குகிறது (பக்கம் 13) நமது வாழ்க்கை பாடலோடு இணைந்துதான் இருக்கிறது. நம் சோகத்தை நம் மகிழ்ச்சியை நம் ஆற்றாமையை என நமது எல்லாவித உணர்ச்சிகளையும் ஒரு பாடல் தூண்டிவிடக்கூடியது. அப்படியான ஒரு அனுபவத்தை சொல்கிறது கவிதை.

      தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் கலைந்துபோன கடந்த கால நினைவுகளாக பதிவாகியுள்ளன. அவற்றில் வீடு, நிலம், உறவு, அருவி, காடு, இரவு, மரணம், ஏக்கம், காதல்  என வந்து நம்மையும் மீள் நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது.

     ‘ஒரு நாளில் என்ன இருக்கிறது?’

      என்ற கேள்வியோடு ஒரு கவிதையை ஆரம்பிக்கின்றார்(பக்கம் 65/66). ஒருநாளில் என்னவெல்லாம் நடக்கின்றது என சொல்லும் எளிய கவிதைதான். ஆனால் அதன் முடிவில் ‘எத்தனையோ இருக்கிறது/அத்தனையையும் பார்க்கும் விதத்தில்தான்/ இருக்கிறது’ என நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கும் தருணங்களை கோடிட்டு காட்டுகின்றார்.

      ரசிக்கப்படாத கோடை மாலை’

      என்று தொடங்குகிறது ஒரு கவிதை (பக்கம் 19). கண்டுகொள்ளாத காதலை சொல்லத்துடிக்கும் கவிதை இது. இத்தொகுப்பில் காதல் மீதான ஏக்கமும் அதன் ஏமாற்று வலியும் பல இடங்களில் கவிதைகளாக வெளிபட்டு நாம் மறைத்து வைத்திருக்கும் நினைவுகளுக்கு கதவை திறந்துவிடுகின்றது.

      ஆயுதமேந்தி கடவுள்களை வாழ்விக்கும்

     கொள்கைவாதிகளே!

     உங்களுக்கு எமது பிரியங்கள்’

      என்று தொடங்கும் காலத்திற்கு ஏற்ற கவிதையும்(பக்கம் 26) உள்ளது. கவிதையின் முடிவில் ‘அன்பு செய்ய பழகுவோம், வாருங்கள்’ என்கிறார். சொல்லப்போனால் நாம் எல்லோரும் அதைத்தான் கேட்கிறோம். ஆனால் சாத்தியப்படுவதில்லை.  

      ‘மழையின் போதெல்லாம்

     துளித்துளியாய் உள்ளிறங்குவாள்

     பள்ளியோடத்து அக்கா’

      என்கிற கவிதை(பக்கம் 58) பள்ளியோடத்து அக்காவை நினைவுப்படுத்துகிறது. ஆனால் ஏன் நினைவுப்படுத்துகிறது எப்படி நினைவுப்படுத்துகிறது என்பதில்தான் கவிஞர் நம் மனதை கணக்க வைக்கிறார்.

      ஒரு கவிதை ஒன்றில் இருந்து இன்னொன்றாய் மாறும் அதிசயத்தை செய்துள்ளார் கவிஞர். (பக்கம் 46/47) தொடக்கத்தில் வேப்பமரத்தை நினைக்க வைக்கிறது. அது வெறும் வேப்ப மரம் மட்டுமல்ல என்கிறதை சொல்லிக்கொண்டே அங்கிருந்து இறந்தவர்கள் பற்றிய நினைவலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகின்றது.

      நிறைவாக, இக்கவிதை தொகுப்பு நம்மை கவிதைகளுக்கான தலைப்பை தேட வைத்து கவிதைகளுக்குள்ளே நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. இன்னும் அதிகம் இத்தொகுப்பை பற்றி எழுதலாம். நீங்களும் வாசித்துவிட்டு வாருங்கள். நாம் கலந்துரையாடலாம். அதுதானே கவிஞருக்கு நாம் கொடுக்கும் கை குலுக்கள்.

நன்றியும் அன்பும்

-       தயாஜி

 

 

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்