பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 19, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’

புத்தகவாசிப்பு_2021 ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’

தலைப்பு – தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’

வகை – கவிதை

எழுத்து – கவிஞர் கலாப்ரியா

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794

 

கவிதையை எழுதிவிடலாம். ஆனால் வாசிப்பது சிரமம். எதையாவது எழுதி ஒன்றில் கீழாக ஒன்றை அடுக்கு இதுதான் கவிதை என சொல்லிக்கொள்ளலாம். ஆனால் கவிதையை வாசித்து அதில் பயணிப்பது அத்தனை எளிதல்ல. எழுதியது கவிதைதான் என அடுத்தவரை நம்பவைக்கலாம். ஆனால் எழுதிய/வாசித்த கவிதைக்குள் எத்தனை தூரம் நாம் அகப்பயணம் செய்துள்ளோம் என்கிற கேள்விக்கு நாம்தான் பதில் சொல்ல வேண்டும். இதில் இன்னொருவருக்கு வேலை இல்லை. நமக்குத்தான் வேலை அதிகம். நமக்கு கிடைத்த பதிலை பகிரும் போது அது மேலும் மேலும் விரிவடையும் ரசவாதத்தை கவிதைகள் நிகழ்த்திக் கொண்டே இருக்கும்.

அவரவர் அனுபவத்திற்கும் பார்வைக்கும் ஏற்றார் போல தன்னை மாற்றி காட்டும் வித்தை தெரிந்தது கவிதைகள். அதோடு புதிய அனுபவத்தையும் பார்வையையும் கொடுப்பவையும் கவிதைகள்தான்.

கவிதை என்றாலே மனதின் தோன்றும் கவிஞர்கள் ஏராளம் அதில் நிச்சயம் இடம்பெறும் பெயர் கவிஞர் கலாப்ரியா. கலாப்ரியா கவிதைகள் மனதிற்கு நெருக்கமானவை. எப்போதும் கவிதைகள் முதல் வரியில் இருந்து தொடங்கும். ஆனால் கலாப்ரியாவின் கவிதை அவரின் பெயரில் இருந்தே தொடங்கிவிடுகிறது. சொல்லப்போனால்  இளைஞர்களுக்கு மிக நெருக்கமான அனுபவங்கள். வாழ்விற்கான மற்றொரு பார்வை. படிமம். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு தாவுதல், போன்ற பல வித்தைகள் தன் கவிதைகள் கொண்டுள்ளார்.

சமீபத்தில் அவரது ‘ தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’ என்னும் கவிதை தொகுப்பை வாசித்தேன். வாசித்தேன் என்பதைக் காட்டிலும் மிதந்தேன் என்பது பொருத்தமாக இருக்கும் என வியக்கிறேன்.

இது புத்தக விமர்சனமோ கவிதை விமர்சனமோ அல்ல. கலாப்ரியாவின் கவிதைகளின் நான் மிதந்து கழித்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முற்படுகின்றேன். ‘நீங்களும் வாங்க’  என அழைக்கிறேன்.

கவிஞன் என்றாலே குழந்தைகளைக் காணாது எப்படி. குழந்தைகளைப் பாடாமல் எப்படி. குழந்தைகள் வெறும் குழந்தைகள் அல்ல என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது கவிஞர்கள்தானே. இத்தொகுப்பில் இருபதுக்கும் அதிகமான கவிதைகளில் குழந்தைகள் வருகிறார்கள். அவர்கள் குழந்தைகளாக வருகிறார்கள். நம்மை குழந்தைகளாக்கிவிட்டு செல்கிறார்கள்.

எங்கள் காலத்தில்

சோத்துப் பசை தேய்த்த

தீப்பெட்டிப் படங்கள்

இப்போதையக் குழந்தைகளுக்கு

ஸ்டிக்கர் படங்கள்

எவ்வளவு ஒட்டினாலும்

எங்காவது இடம் தரும்

மூடிய கதவுகளின்

விசால மனம்

வீட்டை விடப் பெரியது

என வருகிறது ஒரு கவிதை. ஐயா கி.ராவின் கதவு சிறுகதையை இக்கவிதை நினைவூட்டுகின்றது. எல்லா காலத்திலும் குழந்தைகள் தங்களுக்கான இடத்தை கிடைக்கப்பெறுகின்றார்கள். யாரின் அனுமதியும் அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. அவர்கள் அவர்களாக இருப்பதுவே அதற்கான காரணம். வளர்ந்தவர்களுக்கு வீடே வசதியில்லாமல் போகும் போது குழந்தைகளுக்கு மூடிய கதவுகளில் கூட வீட்டை விட விலாசமான இடம் கிடைத்து விடுகிறது. குழந்தைகளுக்கு கதவுகளுக்கும் எப்போது நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சமயங்களில் அவர்களின் எல்லைக்கோடு அதுதான். அவர்களை பயமூட்டும் பூச்சாண்டி கதவுக்கு பின்னால்தான் இருப்பான். யாருமில்லாத போதும், கதவுகள் அவர்களின் நண்பனாகி ஊஞ்சல் ஆட்டுவான்.

குழந்தைகளை கண்டித்தும் அவர்களை ஓரிடத்தில் அமரவைப்பதுமே ஒழுங்கு, ஒழுக்கம் என பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் குழந்தைகளின் குதி ஆட்டத்தை இப்படிச் சொல்கிறார் கவிஞர்;

அருவிக்குக் கால் முளைத்தது போல்

ஆட்டம் போடுகின்றன

குளிக்கும் குழந்தைகள்

            அருவியின் ஆளுமையை குழந்தைகளின் ஆட்டத்தில் பார்க்கும் மனம்தானே கவிதை. குழந்தைகளை எதனுடன் ஒப்பிடுகின்றோம் என்பதில் நாம் கவிஞரின் குழந்தை மனதை கண்டறியலாம். அப்படியான இன்னொரு கவிதை வருகிறது இப்படி;

அடைத்த கோயில்

மணியில் ஒளிந்திருக்கும்

மௌனம் போல

குழந்தைகள்

வந்து போன

கோடை வீடு

என்கிறார் கவிஞர். இன்னொரு கவிதையில்,

           நிகழ்ச்சி முடிந்ததும்

          மகிழ்வுடன்

உரைக்குள் புகுந்து கொள்ளும்

இசைக்கருவி போல

கதை கேட்ட குழந்தை

தூக்கத்திற்குள்


என்கிறார்.

           குழந்தையிடம்

கத்தியை

எடுத்து வரக் கேட்டுவிட்டு

தோட்டத்தில்

தவிப்புடன் நிற்கிறது

தாய்க் கவிதை

குழந்தைக்கு நம்மால் எதுவரை கற்றுக்கொடுத்துவிட முடியும். எதையெல்லாம் குழந்தைகள் கற்றிருக்கிறார்கள், என்பது கவனிக்க வேண்டிய கேள்விகள். தோட்டத்தில் காத்திருக்கும் தாயொருத்தி கவிதையாக மாறிக்கொண்டிருந்தாலும், குழந்தையையும் கத்தியையும் வாழும் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகின்றது. கையில் பிடித்திருக்கும் கத்தியால் தனக்கோ அல்லது யாருக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய சாத்தியங்கள் நிறைந்துக் கொண்டிருக்கும் சூழலில் மனம் பயப்படத்தான் செய்கிறது.

பலவற்றைப் பேசும் கவிதைகள் இத்தொகுப்பில் இருந்தாலும் என மனம் மீண்டும் மீண்டும் குழந்தைகள் பற்றிய கலாப்ரியாவின் கவிதைகளையே  வாசிக்க வைக்கிறது. குழந்தையாகவே இருந்திருக்கலாம் என எண்ணிக்கொண்டிருப்பதும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வாசிக்க வாசிக்க இயல்பிலிருந்து நாம் கவனிக்க மறந்த தருணத்தை கவிதையாக்கி நம்மை பார்க்கச் செய்யும் மாயத்தினை தன் கவிதைகள் வழி நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார் கவிஞர்.

நிறைவாக,

பயணிகள் ரயிலில்

அசாத்தியக் கூட்டம்

எழுந்தால் இடம்

பறி போய் விடும்

விக்கலுடன்  போராடும்

யாரோ பாட்டி

தண்ணீர் கேட்கிறாள்

இருவது ரூபாயில்லா

புருவம் உயர்த்துகிறார்கள்

அம்மையும் அப்பனும்

பாட்டிலைத்

தந்து சிரிக்கிறது குழந்தை.

இக்கவிதையில் கவிஞர் பெரிதாக என்னத்தை சொல்லிவிட்டார். ஒரு பேருந்து, கூட்டம், பாட்டி, தாகம் , தாய்தந்தை குழந்தை அவர்களிடத்தில் ஒரு சம்பவம் அவ்வளவுதானே. ஆனால் யோசிக்கையில் நாம் குழந்தையா இல்லை அந்த அம்மையப்பனா என்று மனசாட்சியை கேள்விக்குட்படுத்துகின்றார். அங்குதான் அவர் கவிஞராக நிற்கின்றார்.


- தயாஜி

                                               

 

-        

           

 


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்