தேடிவந்த தேவதை
அவளை மணி அப்போதுதான் முதன் முதலாக சந்தித்தான். ஆனால் அச்சந்திப்புதான் அவர்களின் முதல் சந்திப்பென அவன் மனம் மறுத்தது. எத்தனையே பெண்களை கடந்திருக்கிறான். தினம் தினம்தான் கடக்கிறான். ஆனால், இவள் கொண்ட விழிகளை இதுவரை கண்டதில்லை. இவனுக்கானவள் இவள்தான் என அந்த விழிகள்தான் காட்டின.
மணியை நோக்கிதான் அவள் வந்துகொண்டிருந்தாள், அவள் நடையழகில் தான் செய்துக்கொண்டிருந்த வேலையை மறந்தான் மணி. இது ஒரு புது அனுபவம். வான் நோக்கி பறக்கும் தேவதை அவள், இவனுக்காய் மண்ணோக்கி இவனை முன்னோக்கி வருவது இவனை ஏதோ செய்தது. வெண்மை பொங்கும் உடையோடு, இறகு முளைத்த முதுகோடு, இதயம மயக்கும் சிரிப்போடு அவள் தெரிந்தாள். மணி அமர்ந்திருந்த மேஜைக்கு மிக அருகில் அவள் நிற்கிறாள்.
பரபரப்பு மிகுந்த வங்கியில், மணிக்கு மட்டும் ரம்மியமான இசை கேட்கிறது. அவன் அவளை பார்த்துக்கொண்டே இசையில் லயிக்கலானான். தங்கமென நின்றிருந்தவள் ஜொலிக்கிறாள். என்ன நடந்தது என்ன பேசினான் என விபரங்களை மனம் மூளைக்கு அனுப்பும் முன்பாகவே, சிரித்த முகத்தோடு தன் வேலையை முடித்துக்கொண்டு அவள் புறப்படுகிறாள். எழுந்து அவளை மீண்டும் அழைக்க நினைத்தவன் அப்போதுதான் யோசிக்கலானான், இது மதிய சாப்பாட்டு நேரம். எழுந்து, ஏன் அவளை அழைக்க வேண்டும். கொஞ்ச தூரம் அவளை பின் தொடர் என்றது மனம்.
வங்கியில் இருந்து கொஞ்ச தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த காரின் கதவை திறக்கும் தருணம். மெல்லிய விரல் பட்டு, வலித்திடாமல் இருக்க தன்னைதானே திறந்ததோ அந்த கார் கதவு. இப்போது மணியும் அவள் அருகில் நின்றுவிட்டான். காரில் உட்கார்ந்த சமயம் மணியை கவனித்தாள் அவள். சற்று முன்னர்தான் வங்கியில் பார்த்திருந்ததால், விசாரிகலானாள். அவளில் சிரித்த உதடுகளில் இருந்து வந்த வார்த்தைகள் வண்ணமயமாக உருவெடுத்து அவனுடலை கயிறாய் கட்டிப்போட்டது. அதுவரை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வந்தவன், அப்போது கோமாளியைப் போல நெளியவும் வாய் உளரவும் செய்தான். அதனை கவனிந்த அவள், எதையோ சொல்ல தயாரானாள்;
இரைச்சல் சத்தம் கேட்கிறது. காலியான கார் நிறுத்துமிடத்தில் அவன் மட்டும் நின்றுக்கொண்டிருந்தான். என்ன நடந்தது , எங்கே அவள் என்ன பேசினான், அவள் என்ன கேட்டாள், என்பதெல்லாம் ஒரு புதிராகவே இருந்தது. ஆனாலும் அவன் மனம் அப்படியொரு மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை. அந்த பரபரப்பிலும், அவன் மனம் மலர்வனம் ஒன்றில் நடந்துக்கொண்டிருந்தது. எதிரே அவள் அவனுக்காக காத்திருந்தாள். அவள் கையை அவன் பற்ற , மணியின் கை உதறியது. பிரக்ஞை கொண்டவன் உடல் சிலிர்த்தான். மீண்டும் கார் நிறுத்துமிடத்தில் அவன். கையில் வைத்திருந்த கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதில் அவனது அந்த தேவதையின் புகைப்படம், அவள்தான் அனுப்பியிருந்தாள்.
அன்றைய முதல் சந்திப்பில் மணிக்கு தோன்றியதை அவன் சொல்ல அவள் இருப்பு கொள்ளாமல் குதுகலமானாள். அவளின் அந்த குதூகலம், மீண்டும் அந்த முதல் சந்திப்பின் சூழலை கண் முன் காட்டியது. அந்த விழி, விழி வீசிய பார்வை, பார்வை பேசிய மொழி. இரண்டாம் உலகம் மூன்றாம் உலகம் என ஏதேதோ உலகத்துக்கு சென்று வந்தான். அவள் எப்படி பேரழகியானாள். இத்தனை நாள் எங்கிருந்தாள் என தனக்குத்தானே கேட்டுகொண்டான். அவள் சிரிக்கிறாள். மணியின் மனம் அந்த சிரிப்பினில் சில்லறையென சிதறுகிறது.
இன்று அவர்களுக்கு திருமணம். கனவுகள் கைகூடும் தருணம். காத்திருந்த உன்னத நிமிடங்கள் இன்னும் சில நிமிடங்களில் நடந்தேறவுள்ளன. எல்லாமே கனவு போல இருந்தது அவனுக்கு. அந்த திருமண மேடை முழுவதும் உறவுகள் நண்பர்கள். அவள் அவனுக்கு அருகில், இருவர் முகத்திலும் புன்னகை. வந்திருந்தவர்களின் ஆசீர்வாதத்தில் கெட்டிமேளச் சத்தம் கேட்கிறது.
மணியின் தோல்பட்டையை யாரோ குலுக்கினார். இதுவரையிலான எல்லாமே கனவென அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனின் தேவதையும் கனவு, காதலும் கனவு, கல்யாணமும் கனவு. எப்படி அவன் ஏற்றுக்கொள்வான். உண்மையில் அப்படி ஒரு தேவதை அங்கு வந்தாளா இல்லை சாப்பாட்டு இடைவெளிநேர குட்டி தூக்கத்தின் வெளிபாடா. குழம்பினான் மணி. வங்கிக்கு ஆட்கள் வர தொடங்கினார்கள். தனது நண்பர் உணவருந்த செல்லவிருப்பதால் வரும்வரை மணி அந்த இடத்தில் இருக்கவேண்டும். தூக்கம் கொடுத்த துக்கம் கொண்டு, விரக்தியின் பிடியில் மணி நண்பரின் இடத்துக்கு செல்லுகிறான். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. மணியின் கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. வெறுப்புடன் அதனை எடுக்கும் போது கைத்தவறி கீழே விழுந்துவிட்டது. அவனுக்கு முன்னதாக ஒரு மெல்லிய கரம் அந்த கைபேசியை எடுத்தது. அது, அவள்தான். மணியின் தேவதை . இதுகூட கனவா நினைவா என தெரியாமல் , கைபேசியைக்கூட வாங்காமல் அவளை பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அவள்தான் அந்த வங்கிக்கு புதிதாக வந்திருக்கும் பணியாளர். இனி மணிதான் அவளுக்கு வேலையை கற்றுக்கொடுக்கவேண்டுமென அவளுடன் வந்திருந்தவர் சொல்லிச்சென்றார். மணி கைபேசியை வாங்கி அவளுக்கு கைகுலுக்கினான். பஞ்சினை போல மென்மையான கரங்கள் கொண்டிருந்தாள் மணியின் தேவதை. இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்தனர். கைபேசி எண்களை மறிமாறிக்கொள்கின்றனர். மணியின் கைபேசியில் அவனது தேவதையின் எண்கள். மணிக்கு அருகில் அவள் அமர்ந்துக்கொண்டாள். அவள் பெயர் ரதி. ரதி என்றால் தேவையென்றும் ஒரு பொருள் உள்ளதை மணி மட்டுமே அறிவான்.
(2014-ல் வானொலிக்கு எழுதியது)
0 comments:
கருத்துரையிடுக