பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 24, 2015

எனது எழுதுகோல் எத்தனை முக்கியமானதெனில்


கோப்பை எடுத்து வைத்திருந்தவர்
 
  வீட்டு வாசலில் காலணிகள் அழகாய் வருசையில் இருந்தன. நன்றாக நினைவில் உள்ளது. நேற்று வீட்டிற்கு வர தாமதமானது. தூக்கத்தில் நானும் வீட்டம்மாவும் காலணிகளை அப்படியே கழட்டிப் போட்டு நுழைந்தோம். மறுநாள் விடுமுறை என்றதால் கொஞ்சம் தாமதமாக எழுந்தோம். எத்தனை மணிக்கு எழுந்தாலும் விடுமுறையெனில் காலை பசியாறை வாங்குவது எனது கண்கண்ட கடமை. பத்து மணிக்கு புறப்பட்டேன்.

   வாசலில் பார்த்த அடுக்கிய காலணிகள்தான் கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்தன. அடுக்குமாடி வீடுகளில் தனியாகவே துப்புரவு பணிகளுக்கு பணம் வசூலிக்கிறார்கள். அதற்காக சுத்தம்தானே செய்வார்கள், இப்படி காலணிகளையுமா அடுக்கிக்கொடுப்பார்கள்.

    சரி யார்தான் அடுக்கியிருப்பார்கள் என யோசித்துக்கொண்டே ஆறாவது மாடி மின்தூக்கிக்கு காத்திருந்தேன். கதவு திறந்தது. உள்ளே துடைப்பமும் மோப் கம்புமாக ஒரு இந்தோனேசிய பெண் இருந்தார்.  துப்பரவு பணியாளரின் உடையில் இருந்தவர் என்னை கண்டதும், மன்னிக்கும் படி கேட்டுக்கொண்டு வெளியேறி , அவரது துப்புரவு பொருட்களை வெளியில் எடுத்து வைத்து என்னை மின்தூக்கியில் போகச்சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டேன். ஒரு வேளை ஆறாவது மாடியில்   ஏதும் வேலை உள்ளதா என விசாரித்தேன். இல்லை நானும் எனது பொருட்களும் துர்நாற்றம் வீசுகின்றன, உங்களுக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். யாரும் எங்களுடன் மின் தூக்கியில் ஒன்றாக ஏறவோ இறங்கவோ விரும்ப மாட்டார்கள் என்றாள்.

   கதவை மூட தொடங்கிய மின்தூக்கியை பட்டன் அழுத்தி நிறுத்தினேன். கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த துடைப்பத்தை எடுத்து  மின் தூக்கியில் நுழைந்து அவரையும் அழைத்தேன். அதிர்ச்சியுடனும் அவரும் பொருட்களுடனும் வந்தார். “என்னோட பதினெட்டு வயசுல நானும் இப்படிதான் கம்பெனி கம்பெனியா துப்புரவு தொழிலை பகுதி நேரமா செய்துகிட்டு படிச்சேன்.. ஆனா படிப்பு எறல.. நல்ல அனுபவம் இன்னும் மனசுல இருக்கு..” அவருக்கு இன்னும் அது அதிர்ச்சி கொடுக்கும்படியாய் அமைந்தது.

    அவரின் முகம் எனக்கு இன்னொரு பெண்ணை நினைவுப்படுத்தியது. அது குறித்து அவரிடம் பேசலானேன்

    ஏறக்குறைய இதே மாதிரியான முக அமைப்புதான். இந்தோனேசிய பெண்கள் எல்லோருக்கும் முக அமைப்பு ஒரே மாதிரிதான் என சிரித்தார். அந்த பெண் குறித்து சொல்லத்தொடங்கினேன்.

    புதிதாக யாழ் பதிப்பகத்தில் விற்பனை பிரிவு பொறுப்பாளர் பணியில் சேர்ந்திருந்தேன். எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தது. அன்று அதுவரை விற்ற கணக்கு மற்றும் இதர பள்ளி விபரங்களை காட்ட வேண்டும். மதியம் எங்களுக்கு சந்திப்பு கூட்டம் இருந்தது

   இயல்பாகவே கோப்பு சம்பந்தமான வேலையில் எனக்கு ஆர்வம் இருக்காது. ஆனால் அந்த பணியில் எனது இயல்பான பலவற்றை மாற்றியிருந்தேன். எனக்கே சில ஆச்சர்யமான பலன்கள் அதன் வழி கிடைத்தன. மதிய சந்திப்புக்கான அனைத்து அறிக்கைகளையும் முதல் நாள் இரவே கணக்கிட்டு விபரங்களை சேர்த்து ஒரு கோப்பினை செய்தாகிவிட்டது.

  காலையில் நானே இன்றைய சந்திப்பிற்கு ஆவலாக இருப்பதாய் சொல்லி சரியாக வந்துவிடும்படியும் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன்.

     கையில் கோப்பு, எதையோ சாதித்த கர்வம், ஸ்டைலான நடையில் படி இறங்கினேன். காருக்கு சென்று கதவை திறக்கும் சமயம் காலணி கயிறு அவிழ்ந்தது. கையில் இருந்த கோப்பை காரின் மேல் வைத்து, மீண்டும் ஸ்டைலாக காலணியின்  கயிறை கட்டினேன். நிமிர்ந்து ஒரு முறை சுற்றிலும் என்னை யாரும் கவனிக்கிறார்களா என பார்வையிட்டு காரில் ஏறினேன்.

   கார் புரப்பட்டது.

   அரை மணி  நேரமிருக்கும், தொலைபேசி அழைப்பு வந்தது. இன்றைய சந்திப்புக்கான கோப்புகள் எல்லாம் தயாரா என நண்பர் கேட்கிறார். காரை ஓட்டிக்கொண்டே பக்கத்து இருக்கையில் கை வைத்தேன். நெஞ்சு பகீரென்றது. ஏதோ உளறி தொலைபேசியை துண்டித்தேன். காரை ஓரத்தில் நிறுத்தினேன். பக்கத்து இருக்கை , பின்னால் இருக்கை , தரை என அனைத்தையும் பார்த்தேன். காரை தலைகீழாக பிடித்து குலுக்காத குறை. காரில் கோப்பு இல்லை. அதெப்படி கோப்பு இல்லாமல் இருக்கும் என வியர்க்க வியர்க்க யோசிக்கலானேன்

   நினைவுக்கு வந்ததெல்லாம், கையில் கோப்புடன் தான் மாடியில் இறங்கியிருக்கேன். ஆனால் கோப்பு காருக்குள்ளே இல்லை. மாடிக்கும் காருக்கும் இடையேதான் கோப்பு தவற விடப்பட்டதாய் கண்டறிந்தேன். காரை வீட்டுக்கு செலுத்தினேன்.

   மாடியில் மூச்சிரைக்க ஓடினேன். மூச்சிரைக்க இறங்கினேன். வழியில் ஒன்றுமே இல்லை. மீண்டும் மாடியேறி வீட்டுக்குச் சென்றேன். காலையில் இருந்து நடந்தையெல்லாம் நினைத்தேன். முதல் நாள் கோப்பு எங்கே இருந்தது என அவ்விடத்தில் இன்னமும் உள்ளதா என தேடினேன். இல்லை

   நிச்சயமாக தெரியும் வீட்டை விட்டு வெளியேறும் போது கோப்பு கையில் இருந்தது. ஒருமுறை மனதாலும் உடலாலும் காலையில் இருப்பதாக நினைத்தேன். வெறும் கையில் கோப்பு இருப்பதாக நம்பிக்கொண்டேன். சில நிமிடங்கள் கண்களை மூடி அதையே முழுமையாக நினைத்தேன். கோப்பு கையுடன் ஸ்டைலாக மாடிப்படியில் இறங்கினேன். காரின் கதவு திறக்கும் சமயம் காலணி கயிறு அவிழ்ந்தது

   ஆமாம் அப்போது எனது வெறும் கை காரில் மேல் எதையோ வைத்தது. அது என் கோப்புதான். காலையில் தவறுதலாக காரின் மேலேயே கோப்பை வைத்துவிட்டேன். இப்போதுதான் எல்லாம் நினைவுக்கு வந்தன. காரின் மேல்தான் கோப்பு வைக்கப்பட்டது. காரில் செல்லும் சமயம்தான் எங்கோ விழுந்திருக்க வெண்டும்.

   காரில் ஏறினேன் , சென்ற வழியிலேயே மீண்டும் மெல்ல செல்கிறேன்.  நண்பருடன் தொலைபேசியில் பேசிய இடம் வரை கண்களில் எதுவும் சிக்கவில்லை. மீண்டும் வீட்டுக்கு வந்தேன். அங்கிருந்து பாதுகாவலர் அறைவரை நடந்தேன். வழியில் யார் வீட்டு கதவு திறந்திருக்கிறதோ அங்கு சென்று சாலையில் கோப்பு ஏதும் இருந்ததா எனவும் விசாரித்தேன், இல்லை. பாதுகாவலருக்கும் ஒன்றும் தெரியவில்லை.

   காரை எடுத்துக் கொண்டு மீண்டும் மெல்ல மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்தேன். இதயம் வேகமாக துடித்தது. காரின் ஜன்னல்களை திறந்தும் கூட எனக்கு வியர்த்தது. நடந்ததை நண்பர்களிடம் சொல்லிவிடலாம் என்றாலும், என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காணவைக்குமோ என்கிற பயம் வேறு என்னை ஏதோ செய்தது.

   அப்போதுதான் தூரத்தில் ஒரு பெண் சாலையை கூட்டிக் கொண்டிருந்தார். அவரது கையில் கறுப்பு குப்பை பையும் இருந்தது. அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்றும் யோசித்துக் கொண்டே இரண்டு முறை அவர் இருந்த இடத்தை சுற்றினேன். சட்டென காரை நிறுத்தி படபடப்புடன் கோப்பு குறித்து விசாரித்தேன், அவரும் இந்தோனேசிய பெண். அவருக்கு நான் சொல்வது சரியாக புரியவில்லை. நல்ல நாளிலேயே நான் மலாய் மொழி பேசினால் பாதிதான் புரியும். இப்போதிருக்கும் நிலையில் எனக்கே பாதி புரியாமல்தான் பேசுகிறேன்.

   வேறுவழியின்றி, கைகளில் கோப்பை செய்துக்காட்டினேன். அப்போதுதான் அவரது கண்ணில் ஒளி தெரிந்தது. ஆமாம் என தலையாட்டினார். அவரிடம்தான் இருப்பதாக கூறினார் . என்னை அங்கேயே காத்திருக்க சொல்லி அவர் சென்று எடுத்துவருவதாக சொன்னார். பரவாயில்லை என் காரிலேயே போகலாம் என்றேன். தயங்கினார். மீண்டும் அழைத்ததால் காரில் ஏறினார்.

   அவர் சொல்லிய இடத்தில் காரை நிறுத்தினேன். குப்பைகளை வைத்திருக்கும் இட்த்துக்குச் சென்று தான் தனியாக பையில் கட்டி வைத்திருந்த பொட்டலத்தை எடுத்து வந்தார். அதில் எனது கோப்பும் இன்னும் சில தாட்களும் இருந்தன.

   எனது காரில் அவ்வழியே செல்லும் போதுதான் காரின் மேலிருந்து கோப்பு விழுந்ததாம். என்னை அழைக்க முடியவில்லையாம். தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக கார்கள் வந்ததால் உடனே கோப்பை எடுக்க முடியவில்லை. சில கார்கள் மேலேறியதில் கோப்பின் ஒரு பகுதி நசுங்கியும் சில தாட்கள் அந்திலிருந்து வெளியேறியும் கிடந்தன என்றார். ஆனால் கவலை வேண்டாம், எந்த தாளும் காணாமல் போகவில்லை, அவரும் அவரது கணவரும் எல்லாவற்றையும் எடுத்து யாராவது வருவார்கள் என தனியே கட்டி வைத்திருக்கிறார்கள்.

   எனது கண்கள் கலங்கின. என்னிடம் கோப்பை கொடுத்து விடைபெறுவதாக சொன்னார். சட்டென எனது பாக்கெட்டில் இருந்து பத்து வெள்ளியை கொடுத்தேன். வாங்க மறுத்துவிட்டார். இது எனக்கு எத்தகைய முக்கியமான கோப்பு என கூறினேன். அப்போதும் மறுத்தார். பின் சாதாரணமாக சொன்னார், இதுவரை நான் காரில் ஏறியதில்லை, நீங்கள்தான் ஏற்றினீர்கள் அந்த மகிழ்ச்சி போதுமானது என்றார்.

   மேற்கொண்டு அவருடன் பேசவில்லை. தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடன் ஒரு புகைப்படம் என்றேன். ஏன் என வினவினார். என்றாவது உங்களை குறித்து எழுதுவேன். அப்போது பயன்படும் என்றேன். .. நீங்கள் எழுத்தாளரா என்றார். ஆமாம் என்றேன். சற்று தயங்கி என்னிடம் ஏதும் பயன்படுத்தாத எழுதுகோல் இருக்கிறதா என்றார். புரியவில்லை எனக்கு

   எழுத்தாளர்களிடமிருந்து எழுதுகோல் வாங்கி கொடுத்தால் தன் மகனும் பெரிய எழுத்தாளனாவான், அவனும் யார் குறித்தாவது எழுதுவான் என்றார். உடனே பக்கத்து கடையில் இருந்து சில எழுதுகோல்களை வாங்கிக் கொடுத்தேன். ஒன்று போதும் என்றார்.

   உங்கள் மகனுக்கு ஒன்று கொடுங்கள், நீங்கள் மகனாக நினைக்கும் மற்ற யாருக்கும் இதர எழுதுகோல்களை கொடுங்கள் என்றேன். சிரித்தபடி கையில் எழுதுகோல்களை பெருமையாய் பிடித்தபடி விடைபெற்றார்

   அவரின் பெயர் நினைவில் இல்லாவிட்டாலும் அவருடன் பிடித்துக் கொண்ட செல்பி இருக்கிறது என்றேன். எனது அனுபவத்தைச் சொல்லி முடிக்கும் போதுதான் மின் தூக்கி திறந்து நானும் அந்த துப்புரவு பணிப்பெண்ணும் எனது கார் வரை வந்து நிற்பது தெரிந்தது. இருவரும் விடைபெறும்போது, அவரும் என்னிடமிருந்து ஒர் எழுதுகோலை கேட்டார். பாக்கெட்டில் இருந்த எழுதுகோலை கொடுத்துவிட்டு புறப்பட்டேன்.

வழக்கம் போல சில எழுதுகோல்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்