பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 08, 2015

ஒரு போட்டோ ஒரு வெள்ளி




 பயணம் என்பது சுவார்ஸ்யங்களின் இருப்பிடம். பள்ளி பருவத்தில் பண நெருக்கடையால் அவ்வளவாக சுற்றுலாக்களுக்கெல்லாம் போகல ஆக குறைந்தது குடும்பத்துடன் மாரான் மரத்தாண்டவர் கோவிலுக்கு வருடாவருடம் சென்று மொட்டை போட்டிருக்கிறேன். ஐந்து நாட்கள் பயணம். பள்ளி பொதுவிடுமுறையின் போது அந்த பயணம் அமையும்.

விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்றது, மாரான் பயணம் குறித்த கதைகளை விட என வடிவமற்ற மொட்டை மண்டை குறித்த கதைகள்தான் முடி முளைக்கும்வரை பேசுவோம். அவமானமாகத்தான் இருக்கும், ஆனாலும் அதில் கூட சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கிறோம். எனது தலை வட்டவடிவில் இருக்காது. முடியிருக்கும் வரை இயல்பாக தெரிந்தாலும் மொட்டையில் பார்க்கும் போது உச்சியில் பள்ளமாகவும் அதன் பின் கொம்பு வளர்வது போன்ற மேடும் இருக்கும். மற்றவர்களின் பயணத்தை யானை குதிரை , நீர் வீழ்ச்சி எல்லாமே வரும் ஆனால் எனது பயண அனுபவங்களில் சாமி, கோவில் போன்றவைதான் வரும். ஆனால் ஒரு முறை மட்டும் பயங்கர அனுபவம் கிடைத்தது. குகை கோவிலில் உள்ளே நுழையாதே போர்டை பொருட்படுத்தாது சென்று அந்த குகைக்குள்ளே ஜகத்ஜோதியாய் எரியும் காளியம்மனை பார்த்து சில நாட்கள் காய்ச்சலில் கிடந்தேன். மற்றவருக்கு அங்கு ஒன்றும் தெரியவில்லை.அந்த அனுபவத்தை இன்னொரு முறை விபரமாக எழுதுகிறேன். ஏற்கனவே நமக்கும் காளிக்கு வாய்க்கா தகராறை மூட்டிவிட்டிருக்காங்க.

இப்போது பல முறை வெளியூர் பயணத்துக்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நண்பர்களுடன் பயணிப்பது என்பது அலாதியானது. அடிக்கடி நண்பர்களுடன் பயணிப்பதாக வீட்டம்மா புகார் மேல் புகார்களை கொடுத்துக் கொண்டிருந்தாள். எதையாவது செய்து அந்த புகார்களை தகர்த்திட நினைத்தேன். ஆனால் அது கொஞ்சம் ரிஸ்க்கான வேலை. அப்படியென்ன ரிஸ்க்கான வேலைன்னு கேட்டிங்கன்னா, வீட்டம்மாவுடன் எங்காவது பயணிப்பது.

நண்பர்களுடன் பயணம் போவதென்றால் நள்ளிரவில் அழைப்பு வரும் அதிகாலையில் கிளம்புவோம். வீட்டம்மா என்பதால் சில மாதங்களுக்கு முன்பாகவே பயணத்துக்கான அட்டவனையை செய்திருந்தோம். தேவையானவை தேவையற்றவை என்ற நீண்ட பட்டியலில் ஆக கடைசியாக இரண்டு வரிகளில் எனக்கு தேவையானவை இருந்தன. ஒன்று மினரல் வாட்டர் இன்னொன்றும் மினரல் வாட்டர்.

மலாக்கா, வீட்டில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் செல்லுமிடம். சென்று சேர்ந்தோம், மலாக்கா குறித்த வரலாறுகளை இப்போது சொல்லுவேன் என நினைத்திடாதிங்க.. இப்ப மட்டுமில்ல அப்பவே எனக்கு வரலாறுன்னா ஒவ்வாது. ஆனா பயணத்தில் நான் சந்தித்த இரண்டு நபர்களை பற்றி சொல்கிறேன். 

கார் பார்க் செய்யும் நேரம். ஒரு கார் உள்ளே செல்லும் சமயம் இன்னொரு கார் வெளியேற முடியாதவாறு அமைந்திருந்தது பார்க்கிங் செல்லும் சாலை. ஒரு வேலையாள் அங்கிருக்கும் கார்களுக்கு மடமடவென டிக்கட்களை கொடுத்துக் கொண்டிருந்தார். நான் காருடன் உள்ளே நுழைவதை கவனித்த அவர் கையாட்டி உள்ளே வரவேண்டாம் என்றார். என்னடா இது வம்பா போச்சி உள்ளதானே பார்கிங்க போடனும்னு சொன்னாங்க இந்த மனுசன் உள்ளே வராதென்றாரே என கடுப்பில் காரை பின்னால் செலுத்த, மீண்டும் அவர் கையாட்டி போக வேண்டாம் என்றார், நான் நல்ல நாளிலேயே குழம்பிடிவேன். இப்ப சொல்லவா வேணும். அப்படியே காரை நிறுத்திவிட்டேன். அப்போதுதான் உள்ளிருந்து கார் வெளிவந்ததையும் அந்த காவலாளிக்கு ஒரு கைமட்டுமே இருப்பதையும் கவனித்தேன். எனக்கு ஆச்சர்யம். ஒற்றை கையுடன் அவரால் அத்தனை சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. எனக்கு அவரிடம் பேசவேண்டும் போலிருந்தது. இயல்பாகவே பேசினார். அவரிடம் இருந்து கிளம்பும்போது சார் ஒரு போட்டோ… தப்பா எடுத்துக்காதிங்க என்றேன். அட அதனாலென்ன என்றவர் சட்டென அவரின் அறைக்கு சென்று அவருடைய தொப்பியை பொட்டுக்கொண்டு வந்தார்.




கைகால் நல்லா இருக்கறவனே போட்டோ புடிச்சா கொஞ்சம் மோசமாதான் வருவான் நம்ம பாருங்க போட்டோல எப்படி வருவோம்னு என சொல்லி சகஜமாக பக்கத்தில் நின்றுவிட்டார்.  விடைபெறும்போது கைகொடுக்கபோனேன், தம்பி லெப்ட் கைதான் இருக்கு பரவாலயா என்றார். அதனால என்ன சார் அதுதான் சார் நமக்கு வேண்டிய நம்பிக்கை, கையை கொடுங்க என்றேன்.

அவரிடம் இருந்து நடந்து சென்ற கொஞ்ச தூரத்தில், ஏன்னா வீட்டுக்காரம்மாவை கூட்டிப்போனக்கா ரொம்ப தூரமெல்லாம் போக முடியாது. கால் வலிக்கும் கை வலிக்கும் பசிக்கும் பாருங்களேன், அதனால கொஞ்ச தூரத்தில் சிலர் கூட்டமா எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னதிது நமக்கு தெரியாம என்னமோ நடக்குதுன்னு அங்க போய் பார்த்தேன். ஒரு நீல கலர் சிலை நிற்க, ஒவ்வொருவரும் அதன்பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு பக்கத்தில் இருக்கும் டப்பாவில் ஒரு வெள்ளியை போட்டார்கள்.



நமக்கு ஒன்னும் புரியல, அப்படியொன்னும் இந்த சிலை சரித்திர சிலை இல்லையேன்னு புறப்பட நினைக்கையில்தன், அந்த சிலை அவ்வளவு நேரம் நின்றிருந்த வடிவில் இருந்து மாறி நின்றது. அட சிலை இல்லை, நம்மை போன்ற மனுசன் தான். உடல் முழுக்க சாயம் பூசி சிலை போல நிற்கிறான். அவனிடம் புகைப்படம் எடுக்க ஒரு வெள்ளி. அதில் அழகு என்னவென்றால் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு டப்பாவை தட்டி போட்டோ பிடித்தவர்களை பணம் போட நினைவுப்படுத்துகிறான். அந்த டப்பாவில் ஒரு போட்டோ ஒரு வெள்ளி என எழுதியிருந்தது. எனக்கு ஆச்சர்யமா இருந்தது. ஒரு வெள்ளி கொடுத்து  போஸ் கொடுத்தேன். ஆமா எதுக்கு இப்ப இந்த போட்டோ என வீட்டம்மாள் விசாரித்தாள். இதெல்லாம் ஏமாற்று வேலை, ஒழுங்கா ஏதும் வேலை வெட்டிக்கு போகவேண்டிதானே என்றாள். அதாவது, என்னன்னா என தொடங்கினேன். சரி வாங்க பசிக்குது அங்க கடை இருக்கு சாப்பிடலாம் என்றாள். அடிப்பாவிங்களா கடைசிவரை புருசனுங்கள பேசவே விடமாட்டிங்களா என நினைத்த மாத்திரம் சத்தமாக கேட்டும்விட்டேன். நல்லவேளை விளங்கவில்லை. 






சாப்பிட்டு முடித்ததும். சரி கிளம்பலாம் என்றாள். என்னங்க கொடுமை இது இப்படி ஒரு மணி நேரம் காரோட்டி வந்து அரைமணி நேரத்துல கிளம்பலாமா..? பிறகுதான் எப்போதாவது நடக்கும் அதிசயம் நிகழ்ந்து. இன்னும் கொஞ்சம் தூரம் போகலாமே என்றதுக்கு சம்மதித்தாள். நானும்கூட சமயத்துல புண்ணியமெல்லாம் செய்திருக்கென்ற நினைப்பே இதுமாதிரி நேரத்தில்தான் வரும்.

அப்போதுதான் மூன்றாவது ஆளை சந்தித்தேன். ஆமா தொடக்கத்தில் இரண்டு பேரைத்தானே சந்தித்ததா சொன்னேன்னு கேட்கறிங்கதானே.? அட என்னங்க நீங்க.. வீட்டம்மாவே என் பேச்சை கேட்டாச்சி..நீங்க என்னங்க..

கிழிந்த சட்டை எத்தனை நாள் சீவாத தலை முடியோ தெரியவில்லை. கறுத்துப்போய் போவோர் வருவோரிடம் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். வேறு யரும் பிச்சை கேட்டால் போடலாமா வேண்டாமா என யோசிப்போம். நம்மாலு பிச்சை கேட்டா மட்டும் வரும் பாருங்க ஒரு கோவம். ஏம்பா இப்படி பிச்ச எடுத்து மானத்தை வாங்கறியே .. உடமெல்லாம் நல்லாத்தானே  இருக்கு.. உழைக்க வேண்டிதானே என்று கொஞ்சம் சத்தமாகத்தான் கேட்டேன். பிச்சைக்காரர்களை என்னதான் கோவப்படுத்தினாலும் சட்டென காசு கொடுத்தால் கூலாகிவிடுவார்கள் என அப்போதுவரை நம்பியிருந்தேன். 

அந்த பிச்சைக்காரனுக்கு என்னா கோவமோ தெரியல. டப்புன்னு எழுந்து கைல இருந்த குச்சியை காட்டினான். என்னடா இது வம்பா போச்சேன்னு நினைச்சா.. அந்த இடத்தில் ஒரு டப்பா இருந்தது. ஒரு போட்டோ ஒரு வெள்ளி என எழுதியிருந்தது. அடப்பாவிங்களா இதுவும் கூட வேடமா என நினைத்து அண்ணே சும்மா தத்ரூபமா இருக்கிங்க என ஐந்து ரிங்கட்டை போட்டேன். தம்பி படம் எடுக்கலயா என்றார். ஐயோ படமா ..? வேணாம்னே… உங்களை பார்த்ததே மனசுல பதிஞ்சிப்போச்சி.. படமேல்லாம் மறக்கறவங்கதான் அண்ணே எடுத்துப்பாங்க.. சரி அண்ணே கிளம்பறேன். 

 

இப்படியான ஒரு நாளில், என் மீது வீட்டம்மா கொடுத்த புகாரை ரத்து செய்யும் படி பெட்டிஷன் போட்டிருக்கிறேன். இன்னும் முடிவு தெரியவில்லை.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்