பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 27, 2015

சிறுகதை - ‘சாய் ராம் ஓம் சாய் ராம்....’


“வாங்க  வாங்க சாய்ராம் எப்படி இருக்குங்க சாய்ராம்.."

“எனகென்ன சாய்ராம். அதான் நம்ம  சாய்ராம் இருக்காறே.... குறை வைப்பாரா நமக்கு..?”

“ஆமாம் சாய்ராம். அதை சொல்லுங்க சாய்ராம். ரொம்ப நாளா இங்க உங்களை பாக்க முடியலையே சாய்ராம்...”

“ஆமா சாய்ராம். எங்க வீட்டு பக்கத்துலயே ஒரு செண்டர் ஆரம்பிச்சியிருக்காங்க... கொஞ்ச நாளா அங்க போய்கிட்டு இருந்தேன்... ”

“என்ன சாய்ராம் இப்படி சொல்லிட்டிங்க.... வீட்டுப்பக்கத்துல புது செண்டர் வந்ததுக்காகவா இங்க வருவது இல்ல... ரொம்ப கஷ்டமா இருக்கு சாய்ராம்....”

“என்ன சாய்ராம் இப்படி சொல்றிங்க...”

“பின்ன என்ன சாய்ராம்...  இங்கதானே நீங்க முதல்முதலா வர ஆரம்பிச்சிங்க... இந்த சாய்ராமைதானே உங்களுக்கு தெரியும்... இங்க வந்த பிறகுதானே உங்களுக்கு நல்ல காரியங்கள் எல்லாம் நடந்ததா சொன்னிங்க.... இப்போ பாருங்க சாய்ராம்... வீட்டு பக்கத்துல ஒரு செண்டர் தொறந்துட்டாங்கன்னு சொல்லி இதை மறந்துட்டிங்க...”

“ஐயோ அப்படியில்ல சாய்ராம்.... வேலை முடிஞ்சி வீட்டுக்கு போற வழிதானேன்னு போவேன் அவ்வளவுதான் மத்தபடி ஒன்னும் இல்ல சாய்ராம்... என்ன இருந்தாலும் நம்ம செண்டரை மறக்க முடியுமா சொல்லுங்க.... கூடவே இருந்து குழி பறிச்சவங்கள நம்ம செண்டருக்கு வந்த பிறகுதானே கண்டுபிடிடிச்சேன்... ”

“தெரிஞ்சா சரி சாய்ராம்... ஆமா உங்க கூட்டாளிங்களாம் வரலையா...?”

“என்ன சாய்ராம்... அதுங்க எல்லாம் மனுஷனே இல்லைன்னு நினைக்கிறேன்... அதுங்களை போய் கூட்டாளிங்கன்னு சொல்றிங்களே சாய்ராம்....”

“ச்சே...ச்சே..... அப்படி இல்ல... நாமெல்லாம் செண்டரில் இருக்கிறவங்க இப்படி யாரையும் வெறுக்கவோ பேசவோ கூடாது... சாய்ராம் சாய்ராம்..”

“அட போங்க சாய்ராம், நீங்க மட்டும் என்னவாம், இங்க செண்டருல இருந்து இங்கயே வேலை செஞ்சு உங்க  பொண்ணை காதலிச்சான்னு அடிச்சிதானே போலீஸ்ல புடிச்சிக் கொடுத்திங்க.... என்ன சாய்ராம்.... ”

“மகளை மட்டுமா சாய்ராம் காதலிச்சான் கொஞ்சம் உட்டிருந்தா இந்த செண்டரையே அவன் கைக்கு மாத்தி என்னை தெருவுல விட்டிருப்பான்.... பாவி பய... ச்சே சாய்ராம் சாய்ராம்....” 

“அதேதான் இங்கயும்... சாய்ராம்... என்கூடவே இருந்து, என்னைப்பத்தியே மத்தவங்கக்கிட்ட போட்டுக்கொடுத்தவனுங்கதானே இவங்களும்.... மனுஷ ஜென்மங்களா இதுங்க.... கேவலம் கேவலம்... ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்...”

“சரி சரி சாய்ராம்...  இங்க வந்தும் அதை பேசனுமா.. சொல்லுங்க.. ஆமா சாய்ராம் அவனுங்களை சும்மாவா விட்டிங்க....?”

“அதெப்படி சாய்ராம் சும்மா விடமுடியும்.... என்னென்ன செய்யனுமோ  எல்லாத்தையும் செஞ்சிட்டு முடிச்சிட்டேன்....இன்னும் கொஞ்ச நாளுதான் .... பாருங்க சாய்ராம்.. அவனும் அவனோட குடும்பமும் நடுத்தெருவுல வந்து நிக்க போகுது..... ”

“ஹ்ஹ்ஹ்ஹ...... எல்லாம் அதுவா நடக்கும் சாய்ராம்.... ஆமா சாய்ராம் அந்த புது செண்டருல காசு ஏதும் வசுல் செய்யறாங்களா...?”

“ஆமா சாய்ராம்... அதான் அங்க போகறத நிறுத்திட்டேன்...”

“நெனைச்சேன் சாய்ராம்... இதுக்குத்தான் செண்டரை ஆரம்பிச்சிருப்பானுங்க... முதல்ல பக்தியா இருக்கற மாதிரி காட்டிக்குவானுங்க... அப்பறம் போகப்போக உண்டியலை வைப்பாங்க..... அப்பறம் படம் சிலைகள்னு விக்க ஆரம்பிப்பாங்க... ஒரு குரூப்ப உருவாக்கி மாச சந்தாவையும் வாங்க ஆரம்பிச்சிடுவாங்க.... ஏமாந்த ஜனங்களும்.... சாய்ராம் சாய்ராம்னு  கேட்கறப்பல்லாம்.... காசை தண்ணியா கொடுக்கறாங்க... என்ன சொல்றது சாய்ராம்...”

“ஆமா ஆமா.... அததுக்கு ஒரு கூட்டம் ... காசுன்னு... இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலம் வருமோ தெரியல.... சாய்ராம் சாய்ராம்...”

“ம்.. சொல்ல மறந்துட்டேன் சாய்ராம்.... நீங்க ரெண்டு மாச சந்தாவை இன்னமும் கொடுக்கல......”

“மறப்பனா சாய்ராம்... சொல்லுங்க... மூனு மாச சந்தா பணத்தையும் ஒரேடியா கட்டிட்டுத்தானே போவேன்.... சாய்ராம் ”

“சாய்ராம்.... சாய்ராம்..... அப்பறம் சாய்ராம், புதுசா  பளிங்கு சிலை வந்திருக்கு.... வீட்டில் வச்சா ரொம்ப நல்லது.... வேணுமா... நிறைய பேரு ஓர்டர் செஞ்சு எடுத்துட்டு போய்ட்டாங்க...... உங்க அதிஷ்டம் ஒரே ஒரு சிலை மட்டும் தங்கிருச்சி.... எடுத்துக்கிறிங்கலா.... ”

“ஓ.... சந்தோஷம் சந்தோஷம்....  அந்த சிலை எங்கிருக்கு.... சாய்ராம்”
“தோ அங்கதான் சாய்ராம்...”

“அடடே சாய்ராம்..... சில கண் சிமிட்டுற மாதிரி இருக்கே!!!..... ”

“அட என்ன சாய்ராம் நீங்களும் சின்ன புள்ளைங்க மாதிரி.... காலைல இருந்து அந்த சின்ன பசங்கதான் அந்த  சிலை கண்சிமிட்டுது.... அந்த சிலை சிரிக்குது.... தலையாட்டுதுன்னு சொல்லிகிட்டி இருக்காங்கன்னா நீங்களுமா... அப்படியே சிலை செஞ்சிட்டாலும்.... செண்டரை நடத்தர நமக்கே ஒன்னும் தெரியலை.........  ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ ”

“அதை சொல்லுங்க சாய்ராம்.... ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..”

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்