சிறகுகளின் கதை நேரம் 3 – ஆதி.இராஜகுமாரனின் ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’
‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடல் சந்திப்பில் மூன்றாவது சந்திப்பு சிறப்பாய் நடைபெற்றது. இம்முறை மலேசிய எழுத்து ஆளுமைகளில் முக்கியமானவரும் எங்களின் முன்னோடிகளில் ஒருவருமான ஆதி.இராஜகுமாரனின் ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’ என்னும் சிறுகதையைக் குறித்து கலந்துரையாடினோம்.
முதல் இரண்டு நிகழ்ச்சிகளைக் காட்டிலும் கூடுதலான வாசகர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். குறிப்பாக மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானை சொல்லலாம். அதோடு எழுத்தாளரும் மருத்துவருமான இனிய நண்பன் ராஜேஸ், தொடர்ந்து பலருக்கு வழிகாட்டியாக இருந்துவரும் எழுத்தாளர்களான வாணிஜெயம், உமாதேவி வீராசாமி, சாந்தா காளியப்பன் ஆகியோரையும் சொல்ல வேண்டும்.
நம் நாட்டைப் பொறுத்தவரை நமது மூத்த எழுத்தாள்களை வாசிக்காதது ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் யார் என்றே தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனை குறையாக சொல்லவில்லை கலைய வேண்டிய குறைபாடாகவே இங்கு சொல்ல வேணடியிருக்கிறது. அதே போல வெறுமனே வார மாத இதழ்களுக்காகவும் ஞாயிறு பதிப்பிற்காகவும் எழுதி குவித்தவர்களையும் குவிப்பவர்களையும் இந்த மூத்த எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்க்கலாமா என தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் எழுத்தில் அந்தந்த இதழ்களுக்கான தேவைகள் இருக்கின்றதே அன்றி வாசகர்களுக்கான எந்தத் திறப்புகளும் இருப்பதில்லை. இதில் ஒன்றிரண்டு மாறுபடலாம் மறுப்பதற்கில்லை. இதழ்களுக்கு எழுதாமல் நேரடியாக இணையத்தில் எழுதுகின்றவர்களும் தத்தம் சமூக ஊடங்களில் குறிப்பாக தனது வலைப்பூவில் (ப்ளாக்கில்) எழுதின்றவர்களும் புத்தகமாக தங்களின் படைப்புகளை வெளியிட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஆதி,இராஜகுமாரனின் சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன். அதையொட்டிய என் வாசிப்பனுபவத்தை என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதிகமானவர்களின் பார்வைக்கு அது சென்றது. அதில் 16 சிறுகதைகள் இருந்ததன. ‘மழைச்சாரல்’ குழுவினர் அதனை சிரத்தையெடுத்து தொகுத்து வெளியீடு செய்திருந்தார்கள். இவ்வேளையில் அவர்களுக்கும் அக்குழுவின் நிறுவனர் கவிஞர் வாணிஜெயம் (மீராவாணி)க்கு இவ்வேளையில் என் நன்றி.
அத்தொகுப்பை வாசித்ததும் அதிலுள்ள பல கதைகள் வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டிருந்தன. சில புது முயற்சிகளும் அதில் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் 1984ஆம் ஆண்டு முதல் பிரசுரம் வெளிவந்தது. இத்துனை ஆண்டுகள் கழித்தும் வாசிப்பில் அவை புதுமையாக இருந்தன. அந்தத் தொகுப்பு குறித்து விரிவாகவே என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதன் லிங்க் https://tayagvellairoja.blogspot.com/2020/04/20209.html
அதில் ஒரு சிறுகதை; ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. அதனை வாசித்து நான் எழுதியக் குறிப்பை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். ‘சில கதைகளை மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். இக்கதை அந்த வகையைச் சேர்ந்தது………’
மீண்டும் இக்கதையை எங்களில் ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடலில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
பங்கெடுக்கின்றவர்கள் ஒவ்வொருவரும் சிறுகதையை வாசித்துவிட்டு வரவேண்டும்; சிறுகதைக் குறித்து சில வார்த்தைகளாகவு பகிரவேண்டும் என்பதைத் தவிர வெறேந்த நிபந்தனைகளும் இல்லை.
இன்று அதிகமானவர்கள் கலந்து கொண்டது ஆதி.இராசகுமாரன் மீதான மரியாதை என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.
சங்கர் ஆரம்பித்தார். அவர் இக்கதையை உளவியல் ரீதியில் அனுகலாம் என்றார். இரு கதாப்பாத்திரங்களிலும் எது அதிக இரக்கத்தை காட்டுகிறது என மறைமுக போட்டி இருக்கிறது என்றார். அடுத்தவர்களுக்கு தங்களை நல்லவர்களாகக் காட்டுவதில்தான் மனிதர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்று கூறினார். இளம் தலைமுறையினரிடம் இப்படியா பார்வை வந்திருப்பது பாராட்டத்தக்கது.
அவரைத் தொடர்ந்து டரிஷன் பேசலானார். தலைப்பு அவருக்கு குழப்பத்தையும் அது ஏதோ ஒன்றை தனக்குள் மறைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். தாழ்வு மனப்பான்மை ஒரு மனிதனின் இயல்பு வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என கதையில் இருந்து எடுத்துச்சொன்னார்.
தொடர்ந்து; மூத்த படைப்பாளியான கோ.புண்ணியவான் பேசலானார். அவர் இக்கதையில் முழு குற்றத்தையும் ஆணில் மீதே உள்ளது என்றார். ஆணில் மனம் எப்படியெல்லாம் சந்தேகத்துக்கு ஆளாகும் என்றால் அவரின் பேச்சு பங்கேற்பாளர்களை கொஞ்சம் குழப்பமடையச் செய்தது.
ஏறக்குறைய அவரின் கருத்தோடு மருத்துவர் ராஜேஸும் ஒத்துப்போனார். இக்கதையின் ஏற்பட்ட திருப்பத்திற்கு இந்தச் சமூகம் முக்கிய காரணம் என்றார். இச்சிறுகதையின் மொழி தன்னைக் கவர்ந்ததாகவும் சொன்னார்.
இடையில் கோ.புண்ணியாவன்; ஆதி.இராஜகுமாரன் குறித்த சில சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
அடுத்தவர் பிருத்வி. தலைப்பில் ஏதோ ஒன்று மறைந்திருப்பதை அவரும் சுட்டிக்காட்டினார். இக்கதையின் முடிவில் ஏற்படும் மரணத்தை கணக்கை யார் மீது எழுத வேண்டும்; நிச்சயம் அதற்கு குற்றவாளி இக்கதையில் வரும் இதர கதாப்பாத்திரங்கள்தான் என்றார். சூர்யா நடித்த பேரழகன் படத்திற்கும் இந்தக் கதைக்குமான ஒற்றுமை வேற்றுமைகளையும் விளக்கினார்.
அடுத்ததாக, உமாதேவி வீராசாமி பேசலானார். அவர் இக்கதை குறித்து பேசியவர்களின் கருத்தோடு ஒத்துப்போவதாகச் சொன்னார். ஆனால் கோ.புண்ணியவான் மற்றும் ராஜேஸ் ஆகியோருடனான கருத்தில் உடன்படவில்லை எனறும் எதைவைத்து நாயகன் மீது இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என வினவினார்.
அது ஒரு விவாதத்தைத் தொடங்கியது. அவரவர் அவர்களின் பார்வையில் இருந்து சிலவற்றை பகிர்ந்து கொண்டார்கள்.
ஒரு சிறுகதை; அதனை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையைக் கொடுப்பது அதன் பலம். அதிலிருந்து ஒற்றைப்புள்ளியில் அச்சிறுகதையை வாசகர்கள் இணைக்க வேண்டியது வாசிப்பின் அவசியம் என்பதை வழியுறுத்தினேன்.
கவிஞர் வாணி ஜெயம், இக்கதை எழுதப்பட்ட பின் அன்றைய காலக்கட்டத்தில் ஆதி.இராஜகுமாரனுடன் நிகழ்ந்த உரையாடல் குறித்து பகிர்ந்து கொண்டார். ஓர் எழுத்தாளரின் கதையும் அவருடனான உரையாடலும் அவ்வளவு சீக்கிரத்தில் வாசகர்களால் மறக்க முடியாதுதான்.
என் பார்வையில், ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. சில கதைகளை மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளத்தோன்றும். இக்கதை அந்த வகையைச் சார்ந்ததுதான். நாம் பிறரின் நன்மைக்காக செய்யும் செயல் அவர்களுக்கு பெரும் தீமையைக் கொடுத்துவிடவும் கூடும் என்பதுதான் கதை. அவளுக்கு தன் உருவ அமைப்பால் திருமணம் தடுங்களாகிப் போகிறது. ஆனால் அவளுக்கு பார்வையற்ற ஒருவரை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் மனம் வலித்தாலும் பின்னர் தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறாள். தனக்கு பார்த்திருக்கும் பெண் மிகவும் அழகானவள் என்பது போன்ற விபரங்கள் மாப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. பார்வையற்ற ஒருவனை திருமணம் செய்து அந்த பெண் அவள் வாழ்வை வீணாக்க வேண்டாம். அவளாவது நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என திருமணத்தை வேண்டாம் என்கிறார். ஒரு பார்வையற்றவருக்குக் கூட தனக்கு வாழ்க்கைத் தர முன்வரவில்லையே என அப்பெண் தற்கொலைச் செய்துக் கொள்கிறாள். சமயங்களில் பிறருக்கு நாம் செய்யும் நன்மைகள் நமக்கே பெருந்துயரத்தைக் கொடுத்துவிடுகின்றன.
நிச்சயம் வாசிக்கப்படவேண்டிய எழுத்தாளர்களின் பட்டியலில் ஆதி.இராஜகுமாரனின் பெயர் இருக்கிறது. இன்று நம்மிடையே அவர் இல்லாவிட்டாலும் அவரின் எழுத்துகள் வழி நாம் அவர்களோடு உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.
‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடலில் மலேசிய படைப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கின்றோம். உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இணையம் வழி எங்களின் கலந்துரையாடலில் பங்கு கொண்டு உரையாடலாம்.
இவ்வாண்டின் நிறைவு நிகழ்ச்சி இதுதான்.
ஜனவரியில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி எட்டுக்கு சிறகுகளின் கதை நேரம் இடம்பெறும். முறையே நம் இலக்கிய முன்னோடிகளின் சிறுகதை, மலேசிய எழுத்தாளர்களின் கதை, புதிய எழுத்தாளர்களின் கதை என திட்டமிட்டுள்ளோம். நாம் தொடர்ந்து உரையாடுவோம். ஏனெனின் சிறகுகளின் கதை நேரம் முழுக்க முழுக்க உரையாடுவதற்கான புதிய களம்.
அன்புடன் தயாஜி
0 comments:
கருத்துரையிடுக