சிறகுகளின் கதை நேரம் 1 - தி.ஜானகிராமனின் முள்முடி
டிசம்பரில் (2023) மீண்டும் சிறுகதைக் கலந்துரையாடலை தொடங்கினோம் . இம்முறை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி 8 முதல் 9 வரை என திட்டமிட்டோம் . இணைய சந்திப்பு என்பதால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளலாம் என்பது எல்லோருக்கும் வசதி . அவ்வப்போது நேரடியாக சந்தித்து சிறுகதைகளைப் பற்றி உரையாடவும் செய்வோம் .
முதல் கலந்துரையாடலுக்கு தி.ஜானகிராமனின் முள்முடி சிறுகதையைத் தேர்வு செய்தோம். சில நாட்களுக்கு முன்னமே சிறுகதையினை ஆர்வம் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். நிச்சயம் வாசித்துவிட்டு கலந்துரையாடலுக்கு வரவேண்டும் என விண்ணப்பமும் கொடுத்தோம்.
சில காரணங்களால் இம்முறை வர இயலாது என சிலர் கூறினார்கள். இன்னும் சிலர் அடுத்த வாரத்தில் இருந்து வருகின்றோம் என்றார்கள். சிலர் உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இன்னொருவரின் நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுக்கப்பட்டுவிடுவோம் எனவும் பயந்தார்கள். அவர்கள் நன்றியோடு இருக்க விரும்புபவர்கள்; இருக்கட்டும் ஆனால் அவர்களால் யார் பயனடைகிறார்கள் என அவர்கள்தான் யோசிக்க வேண்டும். சிலர் கதையை வாசிக்க நேரமில்லை ஆனால் கலந்துரையாடலுக்கு வருவோம் என்றார்கள்; நான் வேண்டாம் என்றுவிட்டேன். முடிந்தவரை கதையை வாசித்துவிட்டு சிறு கருத்தையாவது பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றேன்.
தொடக்க கலந்துரையாடலுக்கு நான்கு பேர் கலந்து கொண்டு முள்முடியைக் குறித்து பேசினார்கள்.
வழக்கமாய் ஒவ்வொரு இலக்கிய நிகழ்ச்சிக்கும் ஆர்வமாய் கலந்து கொள்ளும் எழுத்தாளர் காந்தி முருகன், நாங்கள் வழிநடத்தும் குறுங்கதை எழுதும் வகுப்பிலிருந்து புதிய எழுத்தாளர் அகிபிரியா, எனக்கே கூட புதிய அறிமுகமாய் தி.ஜாவின் பெயரைக் கேட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதியவர் சங்கர். நான்காவதாக ஒரு சிலிப்பிங்க் பாட்னர் வந்திருந்தார். அவர் யார் என்பது இப்போதைக்கு வேண்டாம்.
முள்முடி தனக்கு ஏற்படுத்திய குழப்பத்தை எந்த ஒரு கூச்சமும் இன்றி பகிர்ந்து கொண்டார் அகிபிரியா. இப்படியானவர்களின் ஆரவம் எனக்கு எப்பவும் பிடிக்கும். தனக்கு எல்லாம் புரிந்த மாதிரி வெளியில் காட்டிக்கொள்ளாமல். எனக்கு இவ்வளவுதான் புரிந்தது; ஆனால் சில குழப்பங்கள் உள்ளன என தன் குழப்பத்தை பகிர்ந்தார்.
எழுத்தாளர் காந்தி முருகன் அவருக்கே உரிய பாணியில் முள்முடியைக் குறித்து பேசினார். தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வரும் காந்தி முருகனின் பார்வையும் பங்கேற்பாளர்களுக்கு பயனாக அமைந்தது.
இக்கலந்துரையாடலில் எனக்கு மகிழ்ச்சியளித்த ஒன்று, சங்கர் என்னும் மாணவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தற்போது தி.ஜாவின் கதைகளை வாசித்து வருவதாகக் கூறினார். முள்முடியுடன் வன்முறை குறித்த பார்வையையும் பகிர்ந்து கொண்டார். 'அம்மா வந்தாள்' நாவலைக் குறித்து ஒருசில வார்த்தைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். வாசிப்பதில் ஆர்வம் உள்ளதோடு தொடர்ந்து வாசித்துவரும் இளம் தலைமுறையினரிடம் உரையாடுவதும் இரு தரப்பிற்கும் பயனாக அமையும் என நம்புகின்றவன் நான்.
முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் பாலமா இலக்கியம் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். அவ்வழியே நாம் ஓர் உரையாடலை நடத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எங்களின் இந்த 'சிறகுகளின் கதை நேரம்' சிறுகதைக் கலந்துரையாடல் அதற்கு உதவும்.
தனிப்பட்ட முறையில் முள்முடி எனக்கு ரொம்பவும் நெருக்கமான சிறுகதை. அச்சிறுகதையை வாசித்த பின் சில நாட்களாக பல சம்பவங்கள் என் மனதில் நிழலாடின. அந்தச் சிறுகதையின் வடிவம் கதாப்பாத்திரங்கள் கதைக்கரு என எல்லாமே எனக்கு முக்கியமாகப்பட்டது. எப்போதும் பேசவேண்டிய ஒரு கதைக்கருவாக அச்சிறுகதை அமைந்திருந்தது. என்னதான் நாம் நல்லவர்களாக இருந்து வந்தாலும் இருக்க பழகினாலும் ஏதோ ஒரு வகையில் நம்மால்; நம்மை அறியாமலேயே ஒருவர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாதோ என்னவோ. ஆனால் அதற்கான குற்றவுணர்ச்சியை நாம் சுமக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதான் அவரவர் தெளிவு.
முள்முடி சிறுகதையை வாசித்தப்பின் எனக்கு தெரிந்த சிலரிடம் கதையை அனுப்பி வாசிக்க சொல்லியிருந்தேன். ஒவ்வொருவரும் அவர்கள் வாசித்த கதை குறித்து பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஒரு நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுகதை குறித்து உரையாட ஆரம்பித்தோம்.
தி.ஜாவின் முள்முடி முக்கியமான கதை எனதான் அவருக்கு சொல்லியிருந்தேன். அதில் அவருக்கு மாற்று கருத்து இருந்தது. அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது எனறார். நான் என் கருத்திற்கு வலு சேர்க்க மேலும் சிலவற்றை பகிர்ந்து கொண்டேன். நண்பரும் விடுவதாகச் சொன்னார். சரி, இந்தக் கதை திஜாவின் முக்கியமான கதையாக இல்லையென்றால் எது அவரின் முக்கியமான கதை என கேட்டேன். அப்போது அவர் சொன்னதுதான் சுவாரஷ்யம். அவர் இதுவரை தி.ஜானகிராமனின் எந்தப் படைப்பையும் வாசிக்கவில்லை. ஒருவேளை தி.ஜாவின் மற்ற கதைகளை வாசித்து அதிலிருந்து இது முக்கியமான கதை; இதைவிட அது முக்கியமான கதை என சொல்லியிருந்தால் கூட எங்கள் உரையாடல் தொடர்ந்திருக்கும். ஆனால் வாசித்த ஒரே கதையை எதை வைத்து ஒப்பிடுகின்றார் என தெரியவில்லை. அதோடு எங்கள் உரையாடலை வேறு பக்கம் திருப்பி கொண்டேன்.
இப்படியாக பலரை சந்திக்க முடிகின்றது. வாசிக்காமலேயே தன்னை சிறந்த வாசகர்களாய் நினைத்து கொண்டு மேடைகளில் பேசுகிறார்கள். இளம் படைப்பாளிகளுக்கு அறிவுரைகள் சொல்கிறார்கள். அதையெல்லாம் மாற்ற அவர்களும் முன்வர வேண்டும். அவ்வளவே.
நிறைவாக;
‘சிறுகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் எங்களுக்கு திருப்தியைக் கொடுத்தது. அடுத்த திங்கள் கலந்துரையாடலில் மா.அரங்கநாதனின் ‘சித்தி’ சிறுகதையைக் குறித்து பேசவுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு கதையினை அனுப்பி வைக்கின்றோம். நிகழ்ச்சியன்று உங்களுக்கு கூகுள் இணைப்பையும் அனுப்பி வைக்கின்றோம்.
வாசிப்போம்… நேசிப்போம்… வளர்வோம்…\
அன்புடன் தயாஜி
0 comments:
கருத்துரையிடுக