சிறகுகளின் கதை நேரம் 2 – மா.அரங்கநாதனின் ‘சித்தி’
எங்களின் ‘சிறகுகளின் கதை நேரம்’, சிறுகதைக் கலந்துரையாடலில் இம்முறை எழுத்த்தாளர் மா.அரங்கநாதன் எழுதிய சித்தி என்னும் சிறுகதையைக் குறித்து உரையாடினோம் .இம்முறை எங்களின் இணைய சந்திப்பில்; என்னுடன் சேர்த்து பத்துப்பேர் பங்கெடுத்தார்கள்.
இரண்டாம் கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ‘சித்தி’ சிறுகதைகளைக் குறித்த தத்தம் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில்ம் இச்சிறுகதையை அணுகினோம். ஆமாம்; அவரவர் அனுபவங்களுக்கும் அறிதலுக்கும் உட்பட்டுதானே சிறுகதைக் குறித்த பார்வை விரிவடைகின்றது.
ஆச்சர்யம் என்னவெனில்; பல கோணங்களில் இச்சிறுகதை அணுகப்பட்டாலும் முடிவாக அதன் மையத்தை ஒவ்வொருவரும் தொட்டார்கள். அவ்விடத்தை அடைந்து அங்கிருந்து இச்சிறுகதையை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றார்கள்.
தொடக்கமாக நான் எனது பார்வையைப் பகிர்ந்து கொண்டேன். தொடர்ந்து நண்பர் அருள் அவருடைய பார்வையை முன் வைத்தார். இதுவரை அருள் பேசி நான் கேட்டதில்லை. என்னதான் முகநூல் பழக்கம் என்றாலும்’ ஒரு சிறுகதைக் குறித்த கலந்துரையாடலில் அவர் பேசி நான் கேட்பது இதுதான் முதல் முறை.
இச்சிறுகதை எழுதப்பட்ட விதமேகூட கவனிக்கத்தக்கதாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். திரைப்படக் காட்சியை அதனுடன் அவர் ஒப்பிட்டார். எதன் மீது கவனம் வைக்க வேண்டுமோ அதன் மீதே திரைப்பட காட்சி அமைக்கப்பட்டிருக்கும் அல்லவா? அதே போல இச்சிறுகதையும் வாசகன் எங்கே கவனம் வைக்க வேண்டுமோ அங்கேயே அதிக கவனத்தை எழுத்தாளரும் கொண்டுள்ளார் என்றார். இருவேறு மனிதர்களின் அணுகுமுறைகளை அவர் விளக்கினார். தான் விரும்பி செய்யும் செயலில் தனக்கு இருக்கும் மனத்திருப்தியும் அதன் மீது இன்னொருவருக்கு இருக்கு எதிர்ப்பார்ப்பையும் பேசினார்.
அவரைத் தொடர்ந்து இளம் எழுத்தாளர் அகிபிரியா பேசினார். சிறுகதையை வாசித்தவுடன் அதனை எழுதிய எழுத்தாளர் மா.அரங்கநாதன் குறித்தும் அவர் தேடி வாசித்திருக்கின்றார். உண்மையில் இது பாராட்டத்தக்கது. ஒரு எழுத்தாளரின் ஒரு கதையோடு நின்றுவிடாமல், அவரின் அடுத்தடுத்த கதைகளையும் வாசிப்பது; குறைந்தபட்சம் அந்த எழுத்தாளர் குறித்து தெரிந்து கொள்வது அவசியமனா ஒன்று. நாயகன் வில்லனாக இருவேறு நிலைகளில் அவர் இச்சிறுகதையை அணுகியிருந்ததைப் பகிர்ந்தார்.
அடுத்ததாக ஷங்கர் பேசினார். மா.அரங்கநாதனின் சிறுகதைகளில் ‘அட்டிகை’ சிறுகதையை முன்னமே அவர் வாசித்திருந்தார். ‘சித்தி’ சிறுகதையைப் பொருத்தவரை கதையில் தெளிவான பெயரோ, கதை நடக்கும் ஊர் பற்றிய தகவல்களோ இல்லாமல் இருப்பதைச் சொன்னவர் அதுவே பலமாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். ‘நீ ஜெயிச்சது நானே ஜெயிச்ச மாதிரி இருக்கு..’ என சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றோம். அந்த நிராசையின் பின்னால் இருக்கும் வலி இங்கு பலருக்கு தெரிவதில்லை என்றார்.
எழுத்தாளர் உமாதேவி வீராசமியும் அவ்வாறே தன் பார்வையைப் பகிர்ந்து கொண்டார். பிடித்ததை பிரதிபலன் பாராமல் செய்வதற்கும் ஒரு செயலை பிரதிபலன் பார்த்து செய்வதற்கும் இடைபட்ட வித்தியாசங்களையும் ஏமாற்றங்களையும் விளக்கினார். கதையின் முடிவில் இருந்த வசனம் மீது அவருக்கு கேள்விகள் இருந்தன.
அடுத்ததாய் ஆசிரியை இராஜலெட்சுமி பேசினார். சில முறை இணைய சிக்கலால் இணைய முடியாவிட்டாலும்’ ஒருவழியாக இணைந்து பேசிவிட்டார். கதையின் நாயகன்; அவன் எதில் முழு கவனம் வைத்திருக்கிறான் என்பதைப் பேசினார். குறிப்பாக வீட்டில் குத்துச்சண்டையைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் அங்கும் கூட வேறு எதையோ கவனித்து பயந்ததைப் பேசினார்.
அவர்களை அடுத்து இச்சந்திப்பில் புதியவராக இணைந்திருந்த டரிஷ்ன் பேசினார். வெற்றி தோல்விகளுக்காக ஏற்படும் சிக்கல்களைக் கூறினார். வெற்றியை மட்டும் நோக்கமாக வைத்து பயிற்சிகள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் வெற்றி லாபகரமாக மாற்றப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து கவிஞர் செல்வம் பேசலானார். குழுவில் உள்ளவர்களின் மாறுபட்ட பார்வையை அவர் சிலாகித்தார். அவருக்கு இக்கதையின் மூலமே கூட வேறொன்றாக தெரிந்திருக்கிறது. நாங்கள் நாயகனாக நினைத்தவ கதாப்பாத்திரத்தை அவர் பெண்ணாகவும் பார்க்கலாமே என்றார். அதோடு இந்த சிறுகதைக்கு வைத்த தலைப்பில் இருந்தும் சில உதரணங்களைக் கூறி மா.அரங்கநாதன் வேறு ஏதோ ஒன்றை சொல்ல வருவதாகவும் யூகித்தார்.
ஒவ்வொருவரின் கருத்தும் பார்வையும் அவரவர் வரையில் சரிதான். ஆனால் அதனையொட்டிய உரையாடல் மட்டும் நம் பார்வையை விசாலமாக்கும். அதற்காகவே நாம் உரையாடவுள்ளது.
மா.அரங்கநாதனின் சிறுகதை எனக்கு பிடித்ததற்கு காரணம்; அது நான் உள்ளுக்குள் தேடிக்கொண்டிருந்ததற்கு பதிலாக அமைந்துவிட்டதுதான். இப்படியும் இருக்கலாம்தான் சிக்கல் இல்லை என என்னை நம்ப வைத்ததுதான்.
இதனை வெறும் சிறுகதைதானே என என்னால் கடந்துவிட முடியவில்லை. யோசிக்கையில் இங்கு எது வெற்றி எது தோல்வி என குழப்பம் வருகின்றது. நாம் விரும்பி செய்யும் செயல் நமக்கு பேரும் புகழும் கொடுக்கத்தான் வேண்டுமா? எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமலேயே நம்மா நம் திருப்திக்காக ஒன்றை செய்ய முடியாதா என்ன?
நான் ஒரு செயலைச் செய்கிறேன். காரணம் நான் அந்தச் செயலைச் செய்யவேண்டும் என ஆசைப்படுவதுதான் என இருப்பதில் என்ன தவறு இருந்துவிட முடியும். இந்த உலகம் அப்படியா யாரையும் செய்ய விடுவதில்லை. எல்லாவற்றுக்கு பின்னும் வெற்றி தோல்விகளை சுமத்துகின்றது. போதாக்குறைக்கு “இதனால எவ்வளோ சம்பாதிச்ச..?” என்கிற பொருளாதார தேவைகளையும் காட்டி நம்மை பயமுறுத்துகின்றது.
செய்வதற்கு ஒரு வேலை இருக்கிறது.செய்கிறோம். பார்த்துக்கொள்ள ஒரு குடும்பம் இருக்கின்றது. பார்த்துக்கொள்கிறோம். பொருளாதார தேவைகள் இருக்கின்றன. அதனைச் சமாளிக்கின்றோம். இதற்கிடையில் நமக்கு பிடித்த ஒன்றை நாம் நேசிக்கும் ஒன்றை நம் திருப்திக்காக அதனை செய்ய வேண்டும் என்கிற பிரியத்தின் பொருட்டு அதனை செய்தால் என்ன அவ்வளவு குற்றமா?
இப்படி இருப்பவர்களை; வேண்டுமானால் பிழைக்கத்தெரியாதவர்கள் என சொல்லிக்கொள்ளுங்கள்; ஆனால் எங்களை வாழவே வக்கில்லாதவன் என சொல்லாதீர்கள்.
(ஒவ்வொரு திங்களும் இரவு மணி 8முதல் 9 வரை ‘சிறகுகளில் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடல் இடம்பெறும். இஃது இணைய கலந்துரையாடலாக இடம்பெறுகின்றது விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம். வாசிப்போம்… நேசிப்போம்… வளர்வோம்…)
0 comments:
கருத்துரையிடுக