உமாதேவி வீராசாமியின் ‘நாசி ஆயாம்’
ஆசிரியரும் எழுத்தாளருமான உமாதேவி
வீராசாமியை சந்தித்தேன். எழுத்தின் மீது ஆர்வம்
உள்ளவர்களை சந்தித்து உரையாடுவது எனக்கு விருப்பமானவற்றில் ஒன்று. இம்முறை வேலை நிமித்தமாகச் சந்தித்தேன். அதுவும்
கூட எழுத்து குறித்து அமைந்திருந்தது.
எழுத்தாளர் உமாதேவி இயல் குழுமம்
நடத்திய வெண்பலகை கலந்துரையாடல் மூலம் எனக்கு அறிமுகமானவர். அக்குழுவில் இருந்து ஏறக்குறைய
பத்து பதினைந்து சிறுகதைகளை வாசித்து அதுபற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. (அங்கு
நான் எதற்காக அழைக்கப்பட்டேன் என்பதும் அதனை நான் எப்படி மடைமாற்றினேன் என்பதும் அதன்
பின் நடந்தவை பற்றியும் இன்னொருநாள் பேசலாம்). அதில் சிலரின் கதைகள் செறிவாக்கம் செய்தால்
நல்லக்கதைகளாக மாறும் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் அடிப்படையாக நல்லதொரு கதைக்கருவை
ஒவ்வொருவரும் எழுதியிருந்தார்கள்.
உமாதேவியின் சிறுகதையை வாசித்ததும்,
அதிலிருக்கும் தனித்தன்மை என்னைக் கவர்ந்தது. அச்சிறுகதையைப் பற்றி விரிவாகப்பேசினேன்.
வழக்கமான குடும்ப பின்னணிதான் கதைக்கருவாக இருந்தாலும் கதையின் தொடக்கமும் கதையை அவர்
கொண்டு சென்ற விதமும் சற்றே கவனிக்கத்தக்கதாக இருந்தது. அதிலிருந்து தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தேன். அவரும் உற்சாகமாக
எழுதத்தொடங்கினார். அவ்வாறு இன்னும் சிலரை சொல்லலாம்.
அக்குழு மூலம் எனக்கு அறிமுகமான
பலர் தொடக்கத்தில் இருந்த ‘எழுத வேண்டும்’
என்கிற பொறியை மெல்லமெல்ல மங்க வைத்துவிட்டார்கள். பின்னர் அந்தப் பொறி வேறொன்றாக மாறத்தொடங்கியது.
எழுத்தின் மீது உண்மையான ஆர்வம் உள்ளவர்களே
தொடர்ந்து எழுதினார்கள். எழுதியதை குறித்து
உரையாடினார்கள். அதுவே கலந்துரையாடலாக மாறி பலரும் பயனடையும் வகையில் அமைந்திருந்தது.
நான் எதிர்ப்பார்த்த பல எழுத்தாளர்கள் குறிப்பாக பல இளம் தலைமுறை எழுத்தாளர்கள் சரியான
வழிகாட்டுதல் இல்லாததால் அங்கொன்றும் இங்கொன்றுமென சிதறிவிட்டார்கள். சரியான கட்டமைப்பு
இருந்திருந்தால் இந்நேரம் அதிலிருந்த பலரின் படைப்புகள் பரவலாக பேசப்பட்டு அவர்களும்
நம் நாட்டின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்கள் என பலரால் பேசப்பட்டிருப்பார்கள்.
தொடக்கமாக ஐந்து எழுத்தாளர்களின்
புத்தகங்களை அக்குழு மூலம் வெளியிட்டார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு சிறுகதைகளிலும்
என் பங்கும் இருந்தது. அதில் சிலர் ரொம்பவும் முக்கியமான கதைகளை எழுதியிருந்தார்கள்.
அந்தப் புத்தகங்கள் குறித்தும் அந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் குறித்தும் இங்கு
அதிகம் பேசப்படவேயில்லை. அதற்கு அப்புத்தகத்தை விமர்சிக்க நினைப்பவர்கள் அதனை வெளியிட்ட
பதிப்பகத்திடம் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என சொல்லியிருந்ததுதான்
முதல் காரணம் என நினைக்கிறேன்.
தொடர்ந்து நிகழ்ச்சிகள் போட்டிகள்
நடத்துவதில் அக்குழுவிற்கு இருந்த ஆர்வத்தை, தாங்கள் வெளியிட்ட ஐந்து எழுத்தாளர்களின்
புத்தகங்கள் மீதான வாசிப்பிற்கும் கலந்துரையாடலுக்கும் பயன்படுத்தியிருக்கலாம். இதில்
எனக்கும் ஒரு வருத்தம் இன்றளவுமே இருக்கின்றது. வெறுமனே புத்தகங்களை அச்சடிப்பதும்
அதனை பள்ளிக்கூடங்களுக்கு ஏற்ற மாதிரி தயார் செய்வதும் அதனை மாணவர்களிடமும் பள்ளிக்கூடங்களிலும்
விற்பனை செய்வதும் வியாபார யுக்தி என பாரட்டலாமே
தவிர; இலக்கியத்தில் நாம் எதிர்ப்பார்த்த பயனைக்
கொடுக்காது.
சிறு உதாரணம் சொல்கிறேன்.
ஐந்து எழுத்தாளர்கள். ஐந்து புத்தகங்கள்.
மூன்று சிறுகதைத் தொகுப்பு இரண்டு குறுங்கதைத் தொகுப்பு. எழுதியவர்களின் மூன்று பேர்
ஆசிரியர்கள் ஒருவர் சமயப்பணிகளில் ஈடுபாடுள்ள அமைப்பை சார்ந்தவர். ஒருவர் இளம் ஆசிரியை.
அவர்களின் சிந்தனை அவர்களின் எழுத்து எதை நோக்கி அமைந்திருக்கிறது என
ஒரு கலந்துரையாடலை நடத்தியிருக்கலாம்.
அவை நல்ல கதைகளா அல்லது நமத்து
போன கதைகளா என காலம்தான் சொல்ல வேண்டும் என்று நம்மால் ஒதுங்கிவிட முடியாது. அந்தக்
காலத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். காலம் தாழ்த்தி விவாதிக்கப்படும் கதைகள் ஒரு
பக்கம் இருந்தாலும் எழுத்தாளர்கள் இருக்கும் போதே அவர்களின் படைப்புகள் பேசப்படுவதும்
அவசியம்தானே.
ஒருவேளை பல்வேறு இடங்களில் இந்த
ஐந்து புத்தகங்களுக்கான கலந்துரையாடல் நடந்திருந்தால் நிச்சயம் அது இந்நாட்டின் இலக்கிய
வளர்ச்சிக்கு பயனாக அமைந்திருக்கும். இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். நூல் வெளியீடு
என்பதும் நான் சொல்லும் கலந்துரையாடல் என்பது வேவ்வேறு என மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்த
வேண்டியுள்ளது. அதைவிட முக்கியம் புத்தகம் வெளியிடு செய்வது மட்டுமே இலக்கிய செயல்பாடும் ஆகிவிடாது.
இம்முறை எழுத்தாளர் உமாதேவி வீராசாமியை
சந்தித்தது, அவரது அடுத்த புத்தகத்திற்கான முதற்கட்ட வேலைக்காக. விரைவில் இரண்டாம்
புத்தகமாக சிறுகதைத் தொகுப்பினை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
இந்தத் தடவை கதைகளை செறிவாக்கம்
செய்யும் வேலையை நான் செய்கிறேன். பலமுறை பல புத்தகங்களுக்கு புனைவை செறிவாக்கும் வேலையை
செய்திருந்தாலும் முறையாக கட்டணம் என வாங்கியதில்லை. பல சமயங்களில் அக்கறையில் பெயரிலும்
சில சமயங்களில் சிறு ‘டோக்கனை’ பெற்றுக்கொண்டும்
செய்திருக்கிறேன்.
ஆனால் இப்போது அதனை எனக்கான வேலைகளில்
ஒன்றாக மாற்றிவிட்டேன். எழுத்தாளர் சொல்ல வந்தக் கதைகள் அவர் என்னதான் சொல்லியிருக்கிறார்
என்பதில் தொடங்கி புனைவு ரீதியில் அவரின் படைப்பு எப்படி உள்ளது
என கலந்துரையாடுகின்றேன். முடிந்தவரை எழுத்தாளர் எழுதியிருக்கும் மூலத்தைக் கலைக்காமல்
அதனை மேலும் தீவிரமாக்குவதுதான் என் வேலை. ஆனாலும் இறுதி முடிவு எழுத்தாளர் கைகளில்தான்
இருக்கின்றது. இம்முறை அதற்கான கட்டணத்துடன் இவ்வேலையைச் செய்கிறேன்.
பத்து சிறுகதைகளுடன் எழுத்தாளர்
உமாதேவி சந்தித்தார். ஏறக்குறைய அரை நாளில் எங்களால் சில சிறுகதைகளையே செறிவாக்கம்
செய்ய முடிந்தது. அவர் இந்தத் தொகுப்பிற்காகவே சில கதைகளையும் எழுதியிருந்தார். அதில்
‘நாசி ஆயாம்’ என்னும் சிறுகதை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது.
அச்சிறுகதை அவருக்கு நல்ல பெயரை
எடுத்து கொடுக்கும் எனவும் அதற்கான காரணங்களையும் அவருக்குச் சொன்னேன். அதோடு ஒரு சிறுகதைக்கான கருவை அவர் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் அக்கதைக்கருவை சிறுகதையாக முடிக்காமல்
விரிவாக எழுதினால் குறுநாவலாக மாறும் தன்மை கொண்டிருந்தது. இன்றளவும் உழைப்பே பிரதானமாக
இருக்கும் அவரது தந்தையைப் பற்றிய அவரது சிறுவயது நினைவுகளை சிறு சிறு பகுதிகளாக அடுக்கி மேலும் சிலவற்றை அவர்
இணைத்தால் அது சாத்தியப்படும் என்றேன். அவர்
கண்களில் அதற்காக ஆர்வம் தெரிந்தது.
இருந்தும் இச்சிறுகதைத் தொகுப்பை
முடித்த பின்னரே அடுத்ததில் களம் இறங்கலாம் என்று முடிவெடுத்தோம்.
மீண்டும் ஒரு நாள் இணையம் வழி
சந்தித்தோம். புத்தகத்திற்கான கதைகளையும் இன்ன பிற விபரங்களையும் பேசி முடிவெடுத்தோம்.
ஒட்டுமொத்தமாக குடும்ப உறவுகளை
மையப்படுத்திய கதைகளே அவரிடம் அதிகம் இருந்தன. ஆனால் ஒன்று போல் மற்றொன்று இல்லை என்பது
ஆச்சர்யம். புத்தகம் முழுமையடைந்து நம் கைகளுக்கு வந்த பின் அந்தப் புத்தகத்திற்கான
கலந்துரையாடலை நாம் ஏற்பாடு செய்யலாம்.
ஆசிரியை, அனுபவசாலி, எழுத்தில்
ஆர்வம் கொண்டவர். அவரின் படைப்புகள் அதற்கான கவனிப்பையும் அங்கிகாரத்தையும் விரைவில்
அடையும் என எதிர்ப்பார்க்கிறேன்.
-தயாஜி
2 comments:
எழுத்தாளரின் பதிவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். முதலில் குறுங்கதைத் தொகுப்பு, அடுத்துச் சிறுகதைத் தொகுப்பு, தொடர்ந்து குறுநாவல். இறைவனின் திருவருளால் இரண்டாம் நிலையில் இருக்கிறேன். தயாஜி ஐயாவின் ஊக்க வார்த்தைகளும், முறையான வழிகாட்டலும் குறுங்கதைத்தொகுப்பு உருவாகக் காரணமாக இருந்தன. கூடிய விரைவில் சிறுகதைத் தொகுப்பு. நிறைய எழுத வேண்டுமென உள்ளம் விரும்புகிறது. கட்டாயம் எழுதுவேன். என் கனவுகள் நினைவாகச் செயலாற்றிய செயலாற்றிவரும் அனைவருக்கும் நன்றிகள் பல. 🙏
அன்பும் நன்றியும்...
தொடர்ந்து வாசியுங்கள்.. எழுதுங்கள்... வாழ்த்துகள்..
கருத்துரையிடுக