50வது கலந்துரையாடல்
இந்த வார திங்கட்கிழமையுடன் (23/12/24) இதுவரை நாம் நடத்திவந்த ‘சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல்’ நிறைவடைகிறது.
இது நமது ஐம்பதாவது கலந்துரையாடல் கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் பரிட்ச்சார்த்த முயற்சியில் தொடங்கி இவ்வாண்டு வரை (2024) ஐம்பது கலந்துரையாடல்கள் வரை கடந்துவிட்டோம். உண்மையில் இந்த ஐம்பதாவது கலந்துரையாடலை ‘கோ.புண்ணியவான் படைப்புலகம்’ என்ற தலைப்பில் அவரின் படைப்புகளைப் பற்றி ஒரு முழுமையான கலந்துரையாடலை வைக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம்.
அதற்கென வகுத்த செயல் திட்டங்களில் எனக்கு போதிய அனுபவம் இல்லாததாலும் நாங்கள் தேடிய புத்தகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காததாலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால் நிச்சயம் மீண்டும் முயல்வோம்.
இருந்தாலும் சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடலுக்கு திட்டமிட்டதில் இருந்து தொடர்ந்து உடன் பயணிக்கும் இளம் எழுத்தாளர் பிருத்விராஜூவின் சிறுகதையை ஐம்பதாவது கலந்துரையாடலில் பயன்படுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி சிறப்பான முறையில் விளம்பரத்திற்கான பதாகைகளை செய்து கொடுப்பவரும் அவர்தான்.
இணையம் வழி எந்தவித செலவும் இன்றி (நேரத்தைத் தவிர) இந்தக் கலந்துரையாடலை நடத்தியிருந்தாலும் சில சிக்கல்களையும் நாங்கள் எதிர்கொண்டோம்.
குறிப்பாக இந்தக் கலந்துரையாடலுக்கு வந்தால் சிலர் தாங்கள் நட்பாக இருப்பவர்களிடம் இருந்து விலக நேரிடும் என்று கூட நேரடியாகவே சொல்லியுள்ளார்கள்.
போதாக்குறைக்கு நமது நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்னொரு புலனக்குழுவில் நண்பர் ஒருவர் பகிர்ந்த போது, இதையெல்லாம் இங்கே பகிர அவசியம் என்ன இருக்கிறது என்றும் இதனால் மலேசிய இலக்கியம் அடையப்போவது ஒன்றுமில்லையென்ற விவாதத்தை அறிவிலியொன்று புலம்பியும் குழம்பியும் திரிந்தது.
அந்த அறிவிலி சொல்வதும் உண்மைதான். நாங்கள் மேடைகளை நம்பவில்லை. மாலை மரியாதையைக் காட்டி யாரையும் கவரவில்லை. இலக்கியம் என்ற பெயரின் தனிமனித விளம்பரத்தையோ தனிப்பட்ட வருவாய்க்கான ஏற்பாடுகளையோ செய்யவில்லை. அடிப்படையில் வாசிக்க சொல்லுகிறோம். “எதையாவது எழுதுங்கள், பிறகு யாரை வைத்தாவது எடிட் செய்து… புத்தகம் போட்டு எல்லோர் முகத்திலும் அடிப்போம்…” என்ற வெட்கமற்ற வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை.
ஒரு கதையை வாசித்து அதற்கான நம் மனவோட்டத்தை சக நண்பர்களோடு பகிர்வதற்கு ஒரு களத்தை உருவாக்கியிருக்கிறோம்.
எழுத்தாளருக்கும் வாசகருக்குமான நேரடியான உரையாடல் களமாக இந்தக் கலந்துரையாடல் அமைந்திருக்கிறது.
தன் சுய இலாபத்துக்காகவும், தனக்கு கிடைக்கும் போலி பாராட்டுகளுக்காகவும் மயங்கி யார் பின்னாலும் நடப்பவர்கள் ஒருபோதும் படைப்பாளிகளாக ஆக முடியாது என்கிற அடிப்படை தெரியாதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. தனக்கு நடக்கும் ஏமாற்றத்தையே கண்டறிய முடியாவதவர்கள் வாசகர்களுக்கு எதை எழுதிவிட உத்தேசிக்கிறார்கள் எனவும் புரியவில்லை.
இந்த ஐம்பதாவது கலடந்துரையாடல்வரை பல சிறுகதைகளைப் பற்றி பேசியுள்ளோம். மூத்த படைப்பாளிகள் முதல் இளம் படைப்பாளிகளின் முதல் சிறுகதைகள் என பல கதைகளை கலந்துரையாடல் செய்துள்ளோம். மலேசியா மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்களோடும் உரையாடல்களை நடத்தியுள்ளோம்.
எங்கள் நோக்கத்தை புரிந்து எங்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு சிறகுகள் நண்பர்கள் சார்பாக எங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
எழுத்தாளர்கள் மட்டுமல்லாது, பல வாசகர்களும் கலந்துரையாடலுக்கு வந்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து உங்கள் சந்தேகங்களை எழுத்தாளர்களிடம் கேட்டு உரையாடலை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினீர்கள். நீங்கள் எங்கள் நன்றிக்குரியவர்கள்.
இலக்கியம் குறித்து நீங்கள் சண்டையிடுங்கள் சேர்ந்து கொள்ளுங்கள் முரண்படுங்கள் உடன்படுங்கள் ஆனால் உங்களின் சுயதேவைக்கு இலக்கியத்தைப் பயன்படுத்தி மேலே வர சதி செய்யாதீர்கள். நீங்கள் மேலே வருவீர்கள் ஆனால் அங்கேயே அதிக நேரம் உங்கள் உங்களை நிறுத்தி வைக்க முடியாது.
நிறைவாக;
இந்த ஐம்பதாவது கலந்துரையாடலுடன் நமது சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல் நிறைவடைகிறது. சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் நாம் வாரந்திர கலந்துரையாடலில் இணைவோம். வாசிப்பை நம்புகின்றோம் வாசிக்கின்றோம். உரையாடலை நம்புகின்றோம் பேசுகின்றோம். இலக்கியத்தை நம்புகின்றோம் வாழ்கிறோம் வாழ்வோம்.
0 comments:
கருத்துரையிடுக