2025 புத்தாண்டு
ஒவ்வொரு ஆண்டும் நமக்கான படிப்பினையையும் அனுபவங்களையும் கொடுப்பதில் குறை வைப்பதில்லை. ஜனவரி எடுத்து வைக்கும் செல்ஃபிக்கும் டிசம்பரில் எடுத்தும் வைக்கும் செல்ஃபிக்குமே பல வித்தியாசங்கள் இருக்கும் பொழுது வேறென்ன சொல்ல முடியும்.
நான் எப்போதும் என்னை ஓர் எழுத்தாளனாகவே முன்னிறுத்த விரும்புகிறேன். விரும்புவதோடு அதற்கான உழைப்பையும் விலையையும் கொடுத்துகொண்டும் இருக்கிறேன்.
ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களின் அனுபவம் ஓர் கதைக்கான கருவைக் கொடுத்திருப்பதாக நம்புகிறேன். உரையாடல்வழி அந்தக் கருவிற்கு கதை கொடுக்கவே பலவற்றை முன்னெடுக்கின்றேன்.
சிறகுகளின் கதைநேரம்; சிறுகதைக் கலந்துரையாடலை கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிவரை 50 கலந்துரையாடல்களை நடத்திவிட்டோம். புத்தாண்டு முதல் மேலும் சில திட்டங்களுடன் கதைநேர சந்திப்பை தொடரவுள்ளோம்.
குறுங்கதை எழுதும் வகுப்பின் மூலம், பல புதியவர்களை அவர்களின் முதல் குறுங்கதையை சிறுகதையை எழுத் வைத்தோம். அவை இணைய இதழ்களிலும் வெளிவந்தன. தொடர்ந்து எழுத வேண்டியது இனி அவர்கள்தான்.
இலக்கியம் சார்ந்த பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். பலருடன் உரையாடியுள்ளேன்.
பல பள்ளிகளுக்கு சிறுகதை எழுதுவது குறித்து பேச சென்றிருந்தேன். அதே சமயம் மாணவர்களுக்கு கதைசொல்லும் கதைசொல்லியாகவும் சென்றிருந்தேன். பல மாணவர்களுடனும் ஆசிரியர்களிடனும் கதைகள் குறித்து கலந்துரையாடினோம்.
நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் வழி வழக்கம் போல தள்ளுபடியில் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்தோம். புத்தகங்களை வாங்குவதற்கு எந்த வாசகரும் சிரமப்படக்கூடாது, அவர்கள் விரும்பிய புத்தகங்களை விரும்பியபடியே அவர்களை வாங்கி வாசிக்க வைக்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து உடன் பயணிக்கும் புத்தக விரும்பிகளுக்கு எங்கள் அன்பு.
நமது வெள்ளைரோஜா பதிப்பகத்தில் இந்த ஆண்டு எழுத்தாள உமாதேவி வீராசாமியின் 'கலவரக்கோடுகள்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட திட்டமிட்டிருந்தோம். எல்லா வேலையும் முடிந்தது. எழுத்தாளரின் நிறைவான சரிபார்த்தலுக்கு பின்னர் வரும் ஆண்டில் இந்தப் புத்தகம் வெளிவரும்.
அதே போல நமது பதிப்பகத்தில் மேலும் சில புத்தகங்கள் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடக்கின்றது.
இந்த ஆண்டில் மொத்தமே 41 புத்தகங்கள் மட்டுமே வாசிக்க முடிந்தது. அடுத்த ஆண்டில் இதைவிட ஒரு புத்தகத்தையாவது கூடுதலாக வாசிக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில், தொடர்ந்து எழுதவேண்டும். அதான் என்னை வழிநடத்தும் இறையாகப் பார்க்கிறேன். அதன் வழியே நான் அறியப்படவேண்டும் எனவும் விரும்புகிறேன்.
பிறக்கவுள்ள இந்தப் புத்தாண்டு, என் வாசிப்பிற்கும் எழுத்திற்கும் என் வாழ்க்கைக்குமே துணையாக இருக்க என் இறையிடம் பிரார்த்திக்கிறேன்.
என்னோடு எப்போதும் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் புத்தாண்டு வாழ்த்துகளும்...
அன்புடன் தயாஜி
0 comments:
கருத்துரையிடுக