பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 30, 2024

உதவி செய்

 


நான் உனக்கு
பரிசளித்தது
எனக்கு ரொம்பவும்
பிடித்தமான புத்தகம்

கொஞ்சம் அரிய
புத்தகம்தான்

இதுவரை அதனை
நான் யாருக்கும்
இரவலாகக் கூட கொடுத்ததில்லை

என்னளவிலுமே
அது ரொம்பவும் நெருக்கமான
புத்தகம்

அதைத்தான் நான் உனக்கென
பரிசளித்தேன்

ஆம் அதுதான்
அதேதான்
அந்தப் புத்தகம்தான்

என்னை வெறுத்ததால்
நீ
கிழித்து வீசினாயே
அதே புத்தகம்தான்

பரவாயில்லை

நீ
கிழித்தெறிந்ததில்
ஏதோ ஒரு காகிதத்தில்தான்
அந்த எழுத்தாளரின்
கையொப்பம் இருக்கிறது

அதைமட்டுமாவது
தேடியெடுக்க எனக்கு
உதவி செய்வாயா

அதையாவது நான்
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்...

#தயாஜி 


ஜனவரி 24, 2024

மணற்படுக்கை

 


சந்திக்கின்றோம்
நாம் சந்திக்கின்றோம்
மீண்டும் நாம் சந்திக்கின்றோம்

பலநூறு ஆண்டுகளுக்கு
ஒருமுறை
இங்கு மீண்டும்  நாம் சந்திக்கின்றோம்

ஆனாலும் அத்தனையும்
நேற்று போல
இன்று போல
இப்பொழுது போல
இந்நொடி போல
அத்தனையும் நெருக்கமாக இருக்கிறது
அத்தனை நெருக்கமாக அணைக்கிறது

நீ அதே காதலோடுதான்
இருக்கிறாயா
நீ இன்னமும் அதே காதலோடுதான் இருக்கிறாயா
சொல்

உன் பதிலில்தான்
என் பதிலையும் வைக்க
நினைக்கிறேன்

எல்லையற்ற மணற்படுக்கையில்
என்னை நானே புதைத்துக் கொள்கிறேன்
காணா தூரம் நீ
செல்வதற்கு முன்பாக
வாயேன்
என்னுடன்
கொஞ்ச நேரம்
புதைந்து கொள்வோம்

ஜென்ம ஜென்மமாய்ப்
பிரிவதற்கே சந்திக்கும்
சாபம் பெற்றவர்கள் நாம்
நம்மால் வேறென்ன செய்ய முடியும்

#தயாஜி 

ஜனவரி 22, 2024

மன்றாடல்

 

இன்றோடு முடிந்தது
என்று அறிவித்து
நடந்தார்கள்

அடுக்கி வைத்தவற்றை
எடுத்து வைக்க
நேரம் இருக்கிறது
உதவிக்கு ஆட்களும்
இருக்கிறார்கள்

கணக்கு வழக்குகளை
எல்லாம்
தனித்தனியாய்ப் பார்த்துக்கொள்வார்கள்

யாருக்கும் எந்தச்
சிக்கலும் இல்லை

நான் மட்டும் ஏனோ
தனியே அமர்ந்திருக்கின்றேன்

இல்லை
இதுவரை விற்ற புத்தகங்களின்
நினைவில் அமர்ந்திருக்கின்றேன்

இதுநாள்வரை
இங்கிருந்தவை இனி
எங்கெங்கோ செல்லப்போகின்றன

புதிய ஸ்பரிசங்களை
அனுபவிக்கப்போகின்றன
ஏதோ ஓர் உள்ளங்கை வியர்வையில் வெட்கப்படப்போகின்றன
நிச்சயம் யாரோ
ஒருவரைத் தாலாட்டப்போகின்றன
யாரோ ஒருவரின் துக்கத்தைக் கெடுக்கப்போகின்றன

எல்லாவற்றையும்
தாங்கதான் வேண்டியுள்ளது

உங்களிடம் மன்றாடியொன்றைக் கேட்கிறேன்

புத்தகங்களை கவனமாகக் கையாளுங்கள் நண்பர்களே

அதுவும் எங்களுக்கு குழந்தைகளே....


ஜனவரி 10, 2024

குறையொன்றுமில்லை கண்ணா…





எப்போதெல்லாம் சங்கடமான சூழல் ஏற்படுகின்றதோ; எப்போதெல்லாம் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தவிக்கின்றேனோ; எப்போதெல்லாம் வாழ்வின் மீதான நம்பிக்கை பலவீனமாகின்றதோ;  கண்ணீரை வெளியேற்ற முடியாமல் கண்கள் தவிக்கின்ற போதும் நான் கேட்கின்ற பாடல்……

“குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா………”

இந்தப் பாடலுக்கு நான் முதன் முதலில் உடைந்து அழுது என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டது இன்னும் எனக்கு நினைவிருக்கின்றது. ஆங்காங்கே இந்தப் பாடலைப் பல்வேறு குரலில் பக்திப் பாடலாக கேட்டிருக்கிறேன். அப்போதைய மனநிலையும் பெரிதாக அமைந்திடாத அனுபவ வடுக்களும் இப்பாடலின் உயிரை எனக்கு காட்டவில்லை.

அது நம் உயிரின் உள்சென்று  ஒரு கதறலை வெளிக்கொணரும் பாடல் என அப்போது தெரியவில்லை.

என் வாழ்வில் நான் மீண்டும் சொல்லவோ நினைக்கவோக் கூடாத பக்கங்கள் சில உள்ளன. எந்நாளும் அதனை நான் சொல்லவேக்கூடாது என்றிருக்கிறேன். ரகசியங்களைக் காக்கும் பூதம் போல காத்திருக்கிறேன். மறைந்திருக்கும் அந்தப் பூதத்திற்கு என் கண்ணீர்தான் எப்போதும் தீனி.

நாம் எத்தனை பலவீனங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் என நினைக்கையில் கூடுதலாக அழுகின்றேன். அவ்வளவுதான். அழுது பழகிய கண்களும் அழுகைக்குப் பழகிய கன்னங்களையும் வைத்து வேறென்ன பெரிதாக செய்துவிடப்போகிறோம். அழுது அழுது ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தானே முயல்கிறோம் . முடியாமல் தவிக்கின்றோம்.

உங்களின் இரகசியங்களை என்றாவது நீங்கள் அசைபோட்டதுண்டா? ஆமென்றால் நீங்கள் தனியாக இல்லை நண்பர்களே உங்களைப் போலவே ஒருவர் உலகின் ஒரு மூலையில் இருக்கவே செய்கிறேன்.

“குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா…” பாடலின் இன்னொரு வடிவத்தை ‘அறை எண் 305 கடவுள்’ திரைப்படத்தில் கேட்டதும் அன்று உடைந்து அழுதேன். அதனை அவர்கள் காட்சிப்படுத்தியதை விடவும் அப்பாடலின் வரிகள் என்னை கலங்க செய்தது.

உடைந்து சிதறிய உள்ளத்தை உங்கள் கண்ணீரைக் கொண்டே ஒட்ட வைத்து ஒத்திடம் கொடுக்கும் வரிகள் அவை. அழுத கண்களைத் துடைப்பதற்கு முன் ஆங்காங்கே ஒட்டியிருக்கும் கண்ணீரின் ஈரத்தை முழுதாக வெளியில் எடுக்க வைக்கும் பாடல் அது. ‘வாழ்வில் என்னதான் பெரிய சிக்கல் உனக்கு அழாதே?’ என நம்மிலிருந்து நாமே பிரிந்து நின்று பேசும் மாயத்தைக் காட்டும் பாடலது. அடுத்து என்ன என்பதே அடுத்த கட்டம்; அவ்வளவுதான் என தலைகோதும் தெய்வத்தின் உள்ளங்கை அந்தப் பாடல். ‘எதற்கும் ஓர் நாளுண்டு… எல்லோர்க்கும் வாழ்வுண்டு….’ என்ற வரிகளால் அப்பாடல் நம்மை கட்டியணைத்துக்கொள்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக எனது கார் பழுதானது. நானும் இல்லாளும் பொம்மியை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தோம். எல்லாம் முடிய மூன்று மணி நேரமானது. முடிந்ததும் வீட்டிற்கு வரும் வழியில் வழக்கத்திற்கு மாறாக காரில் வேறொரு சத்தம் கேட்கத்தொடங்கியது.

காரை வேகமாக ஓட்ட முடியவில்லை. காரின் வேகம் குறைகிறது. ஸ்டேரிங்கும் முன்பை விட திருப்புவதற்கு கடினமாக மாறியது. சாலையிலேயே கார் நின்றால் பெரிய சிக்கலாகிவிடும். ஆகவே காரின் குளிர்சாதனத்தை முடக்கிவிட்டு ஜன்னல்களைத் திறந்தேன். காருக்கு வெளியில் ஏதோ தீய்ந்த வாடை. எது என் காரிலிருந்துதான் வருகிறது என புரியவும், எங்கள் வீடமைக்கு பகுதிக்கு வரவும் சரியாக அமைந்தது. எப்படியாவது உடனே காரை அதற்கான ஓரிடத்தில் நிறுத்த வேண்டும்.

இல்லாளையும் பொம்மியையும் கீழே இறங்கி ஒதுங்கி நிற்க சொன்னேன். காரை வளைக்க முடியாமல் ரொம்பவும் சிரமப்பட்டு வளைத்து பார்க்கிங்கில் நிறுத்தினேன். ஏனோ சட்டென மழையும் பெய்யத்தொடங்கியது. இப்போது எதையும் பார்க்க முடியாது என தெரிந்தது. வீட்டிற்கு சென்றோம்.

மறுநாள் காலை, பக்கத்தில் இருக்கும் கார் பழுது பார்க்கும் கடையில் இருந்து ஒரு சீனரை அழைத்து வந்தேன். காரை பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் காரின் முன் பக்கத்தைத் திறந்து ஏதேதோ வித்தைகள் காட்டினார். இன்னுமா இந்தக் காரை ஓட்டறீங்க என மெல்ல சிரித்தார். என்னால் சிரிக்க முடியவில்லை என்பதை கண்டுகொண்டார்.

எனக்கு புரியாத ஏதேதோ சொல்லி இதனை சரிசெய்ய குறைந்தது நாலாயிரம் வெள்ளி வரை செலவாகும் என்றார். அதாவது குறைந்தது மூன்று மாதத்திற்கான எங்கள் குடும்ப செலவை ஒரே நாளில் கேட்டார். இந்த மாத வாடகையே இன்னும் கட்டாத சூழலில் அடுத்த சில மாதங்களின் வாடகைப்பணத்தை அவர் கேட்டது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அந்த கார் அதன் வயோதிக நிலையில் இருப்பதை நானும் உணர்வேன். பல முறை என்னைக் காப்பாற்றிய கார் அது. கோவிட் காலக்கட்டத்தில் எந்த வழியிலும் வருமானம் இல்லாத போது நண்பரின் மூலம் அந்தக் கார் இரு மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அன்றைய செலவுக்கு பயன்பட்டது. ஓர் அண்ணன் போல உற்றத்தோழன் போல அந்தக் கார் என்னைக் காப்பாற்றியது.

எனக்கு எப்படியோ பழக்கமான இன்னொரு நண்பரை அழைத்து காரின் நிலையைக் கூறினேன். சிலவற்றைக் கேட்டார். சொன்னேன். பயப்பட ஒன்றுமில்லை. முடிந்தால் காரை அவரின் கடைக்கு கொண்டுவர சொன்னார்.

காரை பரிசோதித்தவர் இப்போதைக்கு முக்கியமாக சிலவற்றை மாற்ற வேண்டும் என்றார். அதற்கு ஏறக்குறைய ஐநூறு முதல் எழுநூறுவரை ஆகும் என்றார்.

எனக்கு வேறு வழியில்லை. சரி செய்யுங்கள் என்றேன். ஒரு வாரம் கழித்து வந்து எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். அதற்குள் பணத்தை நான் ஏற்பாடு செய்யவேண்டும்.

அங்கிருந்தே இல்லாளை அழைத்து விடயத்தைச் சொன்னேன். யாரிடமும் இப்போதைக்கு உடனே செலுத்துவதற்கு பணம் கையிருப்பில் இல்லை.  அவரிடம் இருந்து இரு மோதிரங்களை அடமானம் வைத்து முதலில் சமாளிக்கலாம் என்றார். சமாளித்தோம்.

சில நாட்களில் காரை கைக்கு வந்தது. மேலும் சிலவற்றை மாற்றவேண்டியுள்ளது என்றார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பினேன்.

இன்று மாலை வெளியில் கொஞ்சம் வேலை இருந்தது. சென்றேன். வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது மீண்டும் காரில் ஏதோ குலுங்கல். மனதில் என்னவோ பட்டது. இப்போதெல்லாம் காரை வேகமாக ஓட்டுவதில்லை என்பதால், என்ன நடக்கிறது என அவதானித்தேன்.

அது நெடுஞ்சாலை. பாதி வழியில் காரை நிறுத்த முடியாது. என் பின்னாலும் வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. காரின் ஹார்னை அழுத்தினேன். அது வேலை செய்யவில்லை. காரிலிருந்து சத்தம் பெரிதாக கேட்க ஆரம்பித்தது. ஏதோ ஒன்று காரின் முன், கீழிருந்து கழண்டு விழுந்தது. கார் அதன் மீதேறி ஒரு குதி குதித்து என் தலை காரின் மேல் பகுதியை இடித்தது.

கண்ணாடியில் பின்னால் பார்க்க கறுப்பாக ஏதோ ஒன்று காரில் இருந்து விழுந்தது தெரிந்தது. அதன் பின் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஹார்ன் சத்தத்துடன் விறுவிறுவென நிலமையைச் சமாளித்து பக்கத்து வழியில் வாகனத்தை செலுத்தின.

நல்லவேளையாக காரை ஓரமாக நிறுத்துவதற்கு எனக்கும் இடம் கிடைத்தது. காரை நிறுத்தினேன். காரின் முன் பக்கத்தை திறக்கிறேன். புகை மூட்டம் தோன்றி மறைந்தது. உள்ளே முழுக்கவும் எண்ணெய்க்கசிவு. முதல் வேலையாக சாலையில் விழுந்து கிடப்பதை எடுக்கச் சென்றேன். காரின் இன்ஜினை தாங்கிப்பிடிக்கும் பிடிமானம்தான் அது. முழுக்கவும் கறுப்பு எண்ணெயாய் நனைந்திருந்தது.

அதனைக் கையில் எடுத்துக்கொண்டு காருக்கு வந்தேன். பக்கத்தில் ஒருவர் காரை நிறுத்தி என்னவென்றும் விசாரித்தார். கையில் உள்ளதைக் காட்டி கழண்டு விழுந்ததைச் சொன்னேன். அப்படியா!  என்றவர் அப்படியே கிளம்பினார்.

காருக்கு வந்ததும் என்ன செய்வதென்று புரியாமல் நிற்கிறேன். இன்னொருவர் மோட்டாரில் அவ்வழியே வந்து விசாரித்தார். நானாக எதையும் தெளிவாக சொல்வற்கு முன் அவராகவே காரின் நிலையை புரிந்து கொண்டு காருக்கு அருகில் வந்து சிலவற்றை சரி பார்த்தார். கறுப்பு எண்ணெய்க் குழாய் அடியில் உடைந்துவிட்டதாகவும் இனி காரை ஓட்ட முடியாது என்றார். தீப்பிடிக்கவும் வாய்ப்புள்ளதைச் சொன்னவர் மேலும் சிலவற்றை சரி பார்க்கிறார்.

வீடு தூரமா என்றார். ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் என்றேன். காரில் கைவசம் கறுப்பு எண்ணெய் உள்ளதா என கேட்டார். இருந்தது. உடனே அதனை இன்ஜினின் ஒரு பகுதியில் ஊற்றினார். கீழே குணிந்து பார்க்கிறார். ஊற்றிய எண்ணெய் கீழே ஒழுகும் வேகத்தை வைத்து ஏதோ கணக்கிட்டார். “இன்னும் கொஞ்ச நேரம் இது தாங்கும் நீங்க தைரியமா வீடுவரை காரை ஓட்டிப்போகலாம்” என்றார். அவரும் கொஞ்சம் தூரம் பின்னால் வருவதாச் சொன்னார்.

சொன்னபடியே வீட்டிற்கு அருகில் வரும்வரை வந்தார். சட்டென காணவில்லை. நான் அவருக்கு நன்றியைக் கூட சொல்லவில்லை.

எந்த இடத்தில் என் கார் இன்று நின்றதோ அதே நெடுஞ்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் சாலையில் விழுந்து கிடந்த இரும்பு துண்டை எடுத்து தூரம் போட்டது என் நினைவுக்கு வந்தது. இன்று எந்த இடத்தில் என் கார் நின்றதோ அதே இடத்தில்தான் அன்றும் காரை நிறுத்தி நடந்து சென்று நடு சாலையில் கிடந்த இரும்பு துண்டை எடுத்து தூக்கி போட்டேன். மீண்டும் என் காருக்கு வரும் வரை பல வாகனங்கள் எனக்காக ஹார்ன் அடித்தன; அதற்கு எப்படி பதிலளிப்பது எனத்தெரியாமல் நான் காரில் ஏறினேன்.

வீட்டுக்கு அருகில் காரை நிறுத்தினேன். உண்மையில் உயிரைக் கையில் பிடித்துகக்கொண்டுதான் வந்தேன். யோசிக்கையில் என் உயிரையும் ஏதொ ஒன்று கெட்டியாக பிடித்திருப்பதாகத் தோன்றுகிறது.

வீட்டிற்கு வந்தேன். காரை மீண்டும் பழுது பார்க்க வேண்டும். அல்லது காரை மாற்றியாக வேண்டும். இப்போதைக்கு இரண்டுக்கும் பணம் வேண்டும். கையிலும் சேமிப்பிலும் எதுவும் இல்லை.

ஏற்கனவே எனது மருத்துவ செலவுக்கும் இல்லாளின் பிரசவத்திற்கும் செலவாகியது. அதையே இன்னும் ஈடு கட்ட முடியாமல் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு இடியைத் தாங்க முடியவில்லை.

இந்த மாதிரியான இக்கட்டுகளுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் போதேல்லாம் வலிநிவாரணியாக வரும் பாடல்தான் அது.

திரைப்படத்திற்காக சேர்க்கப்பட்ட பாடல்வரிகள் என்னை உடைந்தழ வைக்கின்றன. இதோடு ஐம்பது தடவையேனும் அந்தப் பாடலைக் கேட்டு கொண்டிருக்கிறேன். ஆறுதல் போதவில்லை அழுகை இன்னும் தீரவில்லை. இன்றிரவுக்குள் மனமும் நானும் கொஞ்சம் நிதானமாவோம். ஆக வேண்டும். ஏனெனில் இப்போது நான் தனியாள் இல்லையே. எப்போதும் நான் தனியாக இருந்ததில்லை உங்களோடுதானே இருக்கின்றேன்.


ஜனவரி 04, 2024

செல்லுமிடம் தூரமில்லை

 


நீண்ட நாட்களுக்கு பிறகு

நாங்கள் சந்தித்தோம்

உணவருந்தினோம்

பேசினோம்


எங்கள் இருவரில்

யார் சொன்னாரோ தெரியவில்லை


சட்டென ஒரு வார்த்தை 

எங்கள் இருவரின் 

காதிலும் ஒரே நேரத்தில்

விழுந்தது


நாங்கள் அதிர்ச்சியானோம்


அந்த வார்த்தை 

மெல்ல மெல்ல

கீழிறங்கி இதயம் வரை

எட்டிப்பார்த்தது


அது எங்களுக்கு நாங்களே

சொல்லிக்கொள்ளும்

வார்த்தையாகவே

தன்னைக் கற்பிதம் செய்தது


எங்கள் உரையாடல் நின்றது

வாயிலிருந்து வெளிவரவேண்டிய

வார்த்தைகளையும் கேள்விகளையும்

எங்களுக்குள் நாங்கள் 

அனுப்பிக்கொண்டோம்


அது எங்களுக்கான

உரையாடலாய் மாறி

இன்னொரு பரிணாமம்

அடைய முற்பட்டது


நாங்கள்

மீண்டும் ஒருவரையொருவர்

பார்க்கலானோம்

மீண்டும் அந்த வார்த்தைகள் 

எங்கிருந்தோ வந்தன..


"இங்கு யாருக்கும் எதுவும் தெரியாமலில்லை... 

அவரவர் தேவைக்கு ஏற்றார்போலவே அவரவர் பழக்கத்தை வைத்துக்கொள்கிறார்கள்.... அவர்களுக்காக வருத்தப்பட என்ன இருக்கிறது... 

நீ உன் வேலையை செய்தாலே போதும்.. நீ அதற்காகப் பிறந்தவன் தானே அதை மட்டும் செய்.... அவரவர்க்கு தெளிவு  பிறப்பின் அவர்கள் தானாய் வருவார்கள்.. 

வழி அறிவார்கள்.."


அந்த அசரீரி 

எங்கிருந்து வந்ததென

தெரியவில்லை

ஆனால் அது

எங்குச் செல்லவேண்டுமென

தெரிகிறது....

ஜனவரி 01, 2024

சிறகுகளின் கதை நேரம் 4 - அரு.சு.ஜீவானந்தனின் 'புள்ளிகள்' பதிவு 1




 நாம் விரும்பி செய்யும் செயலில் தொடர்ந்து நடக்கும் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் நமக்கு மேலும் உற்சாகமளிக்கும் அதுவே நமக்கு செயலூக்கமாகவும் அமையும்.

அப்படியொரு ஆச்சர்யம் இன்று நடந்தது.

 இன்று, 'சிறகுகளின் கதை நேரம்' நான்காவது வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடல் நடைபெற்றது. இணையம் வழி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம்.

 வருடத்தின் முதல் நாள் நிகழ்ச்சியை எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனின் 'புள்ளிகள்' சிறுகதை கலந்துரையடலில் தொடங்கினோம்.

 எதிர்ப்பாராத விதமாக இன்றைய கலந்துரையாடலில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் கலந்து கொண்டார்.  ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அவரின் சிறுகதையைக் குறித்து நாங்கள் பேசுவதை அவர் ஆர்வமாக கேட்டார். 

  நிறைவாக சிலவற்றை பேசவும் செய்தார். விரைவில் அவரின் படைப்புகள் குறித்த ஒரு சந்திப்பு கூட்டத்தை அல்லது இன்னொரு முழுமையான உரையாடல் நிகழ்ச்சியை செய்ய திட்டமுள்ளதை பேசினேன். அவரும் சம்பதித்தார்.

 இவ்வாண்டின் முதல் கலந்துரையாடலுக்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளரே எதிர்ப்பாராதவிதமாக கலந்து கொண்டு எங்கள் செயல்பாடுகளை வாழ்த்தியது எங்களுக்கான ஆசீர்வாதமாக பார்க்கிறோம்.

 இன்றைய நிகழ்ச்சியில் பேசும் போது அரு.சு.ஜீவானந்தனின் பழைய புகைப்படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த புகைப்படம் குறித்து பேசினேன். அவர் சிரிக்கலானார். அவரிடமே இதனை பலமுறை சொல்லியுள்ளேன். இதனுடன் அந்தப் புகைப்படத்தையும் இணைக்கிறென்.



 இன்று நடந்த சிறகுகளின் கதை நேரம் நிகழ்ச்சி குறித்த பதிவை வழக்கம் போல முழுமையாக எழுதி இந்த வாரத்தில் பகிர்கிறேன். 

 அதற்கு முன்பாக எங்கள் செயல்பாட்டுக்கு கிடைத்த செயலூக்கத்தைச் சொல்வதற்காக இதனை எழுதியுள்ளேன்.


பிறிதொரு நாள்.


கதைகளை குரல் வழி அறிமுகம் செய்து; அவற்றைத் தேடி வாசிக்க காரணமாய் இருக்கும் தோழர் ரெ.விஜயலெட்சுமியின் முதல் நாவல்.

' பிறிதொரு நாள்'.

அவரின் சொந்த பதிப்பகமான 'தேன்கூடு' பதிப்பகத்தில் வெளிவருகிறது.

அவருக்கு இந்த கூட்டாளியின் அன்பும் வாழ்த்துகளும்.

அவரின் நாவலை வாசித்து, அவரெப்படி மற்ற புத்தகங்களைப் பற்றி பேசுகிறாரோ அதே போல அவர் நாவலையும் நாம் பேசவேண்டியுள்ளது. பேசுவோம்.

இவ்வாண்டு இந்த சந்திப்பு நிகழ்ச்சியை நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்யவுள்ளோம். 

மற்றவை அவரின் நாவல் நம் கைக்கு வந்தபின் கலந்துரையாடுவோம். தயாராவோம்💙

அன்புடன்

#தயாஜி 

#சிறகுகளின்_கதை_நேரம் #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

2023-ல் வாசித்தவையுடன் சில முன்னெடுப்புகளும்….

 


கடந்த ஆண்டு நடந்தவற்றை நினைப்பது போலவே; கடந்த ஆண்டில் வாசித்ததை மீண்டும் நினைக்க மனம் குதூகலமாகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நான் வாசித்த புத்தகங்களைவிட பலமடங்கு அதிகமான புத்தகங்களையே வாங்கி வைக்கிறேன். 

எல்லாவற்றையும் என்னால் வாசித்து முடிக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் வாசிக்க இவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன என்பதே என் மனதிற்கு உற்சாகத்தைக் கொடுத்து என்னை இயங்க வைக்கிறது. புத்தகமாக வாசித்ததைப் பற்றி மட்டுமே இப்பதிவில் எழுதுகிறேன்.

இவை தவிர; தனித்தனியாக வாசித்த சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகளை இதில் இணைக்கவில்லை. 

கடந்த ஆண்டு எனது பட்டியலில் இரு புத்தகங்களை நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் என்னால் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்க முடியவில்லை. அந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருந்த சில கதைகள் என்னை ஈர்க்கவில்லை. ரொம்பவும் மேலோட்டமாக எழுதப்பட்டதாகவே தோன்றியது. இருந்தும் என்னை நானே சமாதானம் செய்துகொண்டு ஐம்பது பக்கங்கள் வரை வாசித்தேன். அதற்கு மேல் முடியவில்லை. அப்படியே மூடி வைத்துவிட்டேன். அதுபற்றி பேசவும் தோன்றவில்லை. தொடர்ந்து வாசிக்கவோ மீண்டும் வாசிக்கவோ தோன்றவில்லை. 

இம்முறையும் அப்படியொரு சிறுகதைத் தொகுப்பை முழுமையாய் வாசிக்க முடியவில்லை. இதற்கான காரணம் வேறொன்றாக இருக்கிறது. புத்தகத்தை வாசிக்க தொடங்கிய சமயத்தில் உடல் நிலையில் சிக்கல் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும்படியானது. அதோடு எனக்கொரு பொம்மியும் பிறந்தாள். அந்தக் காலக்கட்டத்தில் எடுத்து வைத்த சிறுகதைத் தொகுப்பு அப்படியே தங்கிவிட்டது. 

அவ்விடத்தை மற்றவை நிரப்பிவிட்டன. அந்தப் புத்தகத்தை இந்த ஆண்டில் வாசித்துவிட வேண்டும்.

இம்முறை முதன் முறையாக வாசிப்பு பட்டியல் என்ற ஒன்றை தொடங்கியுள்ளேன். இவ்வாண்டு என்னென்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேனோ அவற்றை இப்பட்டியலில் இணைத்து முடித்தவரை என் பேச்சை நானே கேட்க முயல்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு புத்தகத்தை வாசித்து முடித்து அடுத்ததை வாசிக்க எடுக்கும் போது ஏற்படும் குழப்பங்களும் தேர்வின் எண்ணிக்கையும் ஏற்படுத்தும் சிக்கல்களை இதன் வழி ஓரளவாவது கலையலாம்.


ஜெயமோகன்

1. எழுதுக – கட்டுரைகள்

2. தன்னைக் கடத்தல் – கட்டுரைகள்

3. வணிக இலக்கியம் – கட்டுரைகள்

4. நத்தையின் பாதை – கட்டுரைகள்

5. இலக்கியத்தின் நுழைவாயில் – கட்டுரைகள்


எஸ்.ராமகிருஷ்ணன்

6. சிறிய உண்மைகள் – கட்டுரைகள்

7. புனைவின் வரைபடம் – நேர்காணல்கள்


கட்டுரைகள்

8. பெருந்தேவியின் ‘கவிதை பொருள் கொள்ளும் கலை’

9. இந்திரனின் ‘கவிதையின் அரசியல்’

10. அ.முத்துலிங்கத்தின் ‘தோற்றவர் வரலாறு’

11. தமிழ்மகனின் ‘தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்’


நாவல்கள்

12. நசீமா ரசாக்கின் ‘மராம்பு’ (குறுநாவல்)

13. தஸ்தயெவ்ஸ்கியின் ‘விசாரணை அதிகாரி’  (கரமசோவ் சகோதரர்கள் நாவலின் ஓர் அத்தியாயம்)

14. பேர் லாகர் குவிஸ்டு எழுதிய ‘பாரபாஸ்’, கா.ந.சுவின் மொழிபெயர்ப்பு


சிறுகதைள்

15. எம்.பிரபுவின் ‘தலைவர்’

16. பிரியா தமிழாக்கம் செய்த ‘ ஒரு வசீகரமான மைம்பெண்ணின் முகம்’

17. தி.மரிய தனராஜ் தொகுத்த ‘மற்றவர்களின் சிலுவை’

18. ஆர்.அபிலாஷின் ‘தேவி’


கவிதைகள்

19. கலாப்ரியாவின் ‘தண்ணீர் சிறகுகள்’

20. மனுஷ்ய புத்திரனின் ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’

21. கவிதா லட்சுமியின் ‘சிகண்டு- தன்னைக் கடந்தவள்’

22. எம்.ஏ.நுஃமானின் ‘துப்பாக்கிக்கு மூளை இல்லை’


பிற

23. அங்குர் வாரிக்கூ எழுதிய ‘பெருங்கனவு காணத் துணியுங்கள்’

24. பிரைன் டிரேசியின் ‘காலை எழுந்தவுடன் தவளை’

25. சுஜாதாவின் ‘சிறுசிறுகதைகள்’ (மீள்வாசிப்பு)

26. சந்தோஷ் நாராயணனின் ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ (மீள்வாசிப்பு)


இன்னும் சிலவற்றை வாசித்துள்ளேன். அவை என் தனிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேடும் வகை புத்தகங்கள். இப்போதைக்கு அதனை பொதுவில் பகிர்வதில்லை.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை சற்றே குறைவுதான் என்றாலும் வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன் என்பதில் எனக்கு எப்பவும் மகிழ்ச்சி.

உங்களுக்கு புத்தகங்களை வாசிப்பதில் ஏதும் சிக்கலோ அல்லது வாசிப்பை ஊக்கப்படுத்த ஒரு நண்பன் உங்களுக்கு வேண்டுமெனில் நீங்கள் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

‘சிறகுகளின் கதை நேரம்’ என்னும் வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடலை ஒவ்வொரு திங்களன்றும் இணையம் வழி நடத்துகின்றோம். வாரம் ஒரு சிறுகதையை வாசித்து பேசுவதன் வழி மாதம் குறைந்தது நான்கைந்து சிறுகதைகளை உங்களால் வாசித்திருக்க முடியும். இது உங்களின் தொடர் வாசிப்பிற்கு உதவும். 

அதோடு வாசிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நண்பர்களும் நம்முடன் இருக்கும் போது உற்சாகம்  தானாகவே நம்முள் எழுந்து நிற்கும்.

இந்த நேரத்தில்; எனக்கு நானே சொல்லிக்கொள்வது என்னவெனில் பிறந்திருக்கும் இந்த ஆண்டு முடிவதற்குள் குறைந்தது 50 புத்தகங்களை வாசித்திருக்க வேண்டும். குறைந்தது 100 சிறுகதைகளையாவது (தனியாகவோ புத்தகத்திலிருந்தோ) வாசித்திருக்க வேண்டும். அதோடில்லாமல் வாசித்தவற்றை பதிவுகளாகவும் எழுத வேண்டும்.

நீங்கள் விரும்பினால் இணையுங்கள். 

வாசிப்போம்… நேசிப்போம்… வளர்வோம்…


அன்புடன் 

#தயாஜி

வாசிப்பு பட்டியல் 1 - 2024

 


 இதிலிருக்கும் ஒரு மலேசிய நாவலில் இருந்துதான் எனது புத்தாண்டு தொடங்குகிறது....

 அதே போல, இவ்வாண்டு இந்த நான்கு நாவல்களையுமே முதற்கட்ட வாசிப்பு பட்டியலில் இணைத்து கொண்டேன்...

 பிறந்திருக்கும் இந்த ஆண்டில் மலேசிய படைப்புகள் குறித்தும் மலேசிய படைப்பாளிகளிடமும் ஓர் உரையாடல் களத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்

 விரும்புகிறவர்கள் கைக்கோர்க்கலாம். நாம் வாசிப்பின் வழி இணைவோம்💙

அன்புடன்
#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்
#சிறகுகளின்_கதை_நேரம்

தாரா பொம்மியைச் சந்தித்தாள்.

 


ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'பொம்மி'யை வெளியிட்டிருந்தேன். அது என் மூன்றாவது புத்தகம். 

பொம்மி என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமான புத்தகம். பொம்மி முதல் பிரதியை யாருக்கு அனுப்பலாம் என யோசிக்கலானேன். பொம்மி கவிதைகளை நான் எழுதத்தொடங்கிய காலக்கட்டத்தில் பல்வேறு வகையில் எனக்கு பக்கபலமாகவும் பக்குவம் சொல்பவராகவும் இருந்தவருக்கு அதனை கொடுக்க முடிவு செய்தேன்.

அவ்வாறு, பொம்மியை எழுத்தாளர் ம.நவீனுக்கு அனுப்பி வைத்தேன்.

அன்றைய தினத்தில் அவரை சந்தித்து கொடுக்கும் மனநிலையிலும் உடல்நிலையிலும் நான் இல்லை. தபாலிலேயே அனுப்பி வைத்தேன். இருந்தும்  எந்தச் சிக்கலுமின்றி அவரும் பொம்மியைப் பெற்றுக்கொண்டு சில வார்த்தைகள் எழுதி பகிர்ந்தார்.

அவருக்கு முதல் புத்தகத்தைக் கொடுத்ததால் அந்தப் புத்தகத்தை வாங்கமாட்டேன் என சொன்னவருக்கு நான் சொன்னது ஒன்றுதான். படைப்பையும் படைப்பாளியையும் நாம் நமது சொந்த விருப்பு வெறுப்பில் அணுகக்கூடாது. ஆனாலும் அவர் கடைசிவரை இந்தப் புத்தகத்தை வாங்கவே இல்லை என்பது வேறு விடயம்.

இன்று இந்தப் புத்தாண்டில் பொம்மிக்கு முதல் புத்தகப்பரிசாக தாரா வந்து சேர்ந்தாள். அதோடு, தாரா தன்னுள்ளே பொம்மிக்கு வாழ்த்தையும் ஆசிர்வாதத்தையும் சுமந்திருந்தாள்.

எழுத்தாளர் ம.நவீனுக்கு பொம்மியின் அன்பும் நன்றியும்...💙




(பொம்மி புத்தகமும் தாரா புத்தகமும் பச்சை வண்ணத்திலேயே அமைந்திருப்பது தற்செயலாக இருக்காது. அதிலும் ஏதாவது அமானுஷ்யம் இருக்கலாம்தான்😉)

#தாரா
#பொம்மி
#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்