பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 10, 2024

குறையொன்றுமில்லை கண்ணா…





எப்போதெல்லாம் சங்கடமான சூழல் ஏற்படுகின்றதோ; எப்போதெல்லாம் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தவிக்கின்றேனோ; எப்போதெல்லாம் வாழ்வின் மீதான நம்பிக்கை பலவீனமாகின்றதோ;  கண்ணீரை வெளியேற்ற முடியாமல் கண்கள் தவிக்கின்ற போதும் நான் கேட்கின்ற பாடல்……

“குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா………”

இந்தப் பாடலுக்கு நான் முதன் முதலில் உடைந்து அழுது என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டது இன்னும் எனக்கு நினைவிருக்கின்றது. ஆங்காங்கே இந்தப் பாடலைப் பல்வேறு குரலில் பக்திப் பாடலாக கேட்டிருக்கிறேன். அப்போதைய மனநிலையும் பெரிதாக அமைந்திடாத அனுபவ வடுக்களும் இப்பாடலின் உயிரை எனக்கு காட்டவில்லை.

அது நம் உயிரின் உள்சென்று  ஒரு கதறலை வெளிக்கொணரும் பாடல் என அப்போது தெரியவில்லை.

என் வாழ்வில் நான் மீண்டும் சொல்லவோ நினைக்கவோக் கூடாத பக்கங்கள் சில உள்ளன. எந்நாளும் அதனை நான் சொல்லவேக்கூடாது என்றிருக்கிறேன். ரகசியங்களைக் காக்கும் பூதம் போல காத்திருக்கிறேன். மறைந்திருக்கும் அந்தப் பூதத்திற்கு என் கண்ணீர்தான் எப்போதும் தீனி.

நாம் எத்தனை பலவீனங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் என நினைக்கையில் கூடுதலாக அழுகின்றேன். அவ்வளவுதான். அழுது பழகிய கண்களும் அழுகைக்குப் பழகிய கன்னங்களையும் வைத்து வேறென்ன பெரிதாக செய்துவிடப்போகிறோம். அழுது அழுது ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தானே முயல்கிறோம் . முடியாமல் தவிக்கின்றோம்.

உங்களின் இரகசியங்களை என்றாவது நீங்கள் அசைபோட்டதுண்டா? ஆமென்றால் நீங்கள் தனியாக இல்லை நண்பர்களே உங்களைப் போலவே ஒருவர் உலகின் ஒரு மூலையில் இருக்கவே செய்கிறேன்.

“குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா…” பாடலின் இன்னொரு வடிவத்தை ‘அறை எண் 305 கடவுள்’ திரைப்படத்தில் கேட்டதும் அன்று உடைந்து அழுதேன். அதனை அவர்கள் காட்சிப்படுத்தியதை விடவும் அப்பாடலின் வரிகள் என்னை கலங்க செய்தது.

உடைந்து சிதறிய உள்ளத்தை உங்கள் கண்ணீரைக் கொண்டே ஒட்ட வைத்து ஒத்திடம் கொடுக்கும் வரிகள் அவை. அழுத கண்களைத் துடைப்பதற்கு முன் ஆங்காங்கே ஒட்டியிருக்கும் கண்ணீரின் ஈரத்தை முழுதாக வெளியில் எடுக்க வைக்கும் பாடல் அது. ‘வாழ்வில் என்னதான் பெரிய சிக்கல் உனக்கு அழாதே?’ என நம்மிலிருந்து நாமே பிரிந்து நின்று பேசும் மாயத்தைக் காட்டும் பாடலது. அடுத்து என்ன என்பதே அடுத்த கட்டம்; அவ்வளவுதான் என தலைகோதும் தெய்வத்தின் உள்ளங்கை அந்தப் பாடல். ‘எதற்கும் ஓர் நாளுண்டு… எல்லோர்க்கும் வாழ்வுண்டு….’ என்ற வரிகளால் அப்பாடல் நம்மை கட்டியணைத்துக்கொள்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக எனது கார் பழுதானது. நானும் இல்லாளும் பொம்மியை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தோம். எல்லாம் முடிய மூன்று மணி நேரமானது. முடிந்ததும் வீட்டிற்கு வரும் வழியில் வழக்கத்திற்கு மாறாக காரில் வேறொரு சத்தம் கேட்கத்தொடங்கியது.

காரை வேகமாக ஓட்ட முடியவில்லை. காரின் வேகம் குறைகிறது. ஸ்டேரிங்கும் முன்பை விட திருப்புவதற்கு கடினமாக மாறியது. சாலையிலேயே கார் நின்றால் பெரிய சிக்கலாகிவிடும். ஆகவே காரின் குளிர்சாதனத்தை முடக்கிவிட்டு ஜன்னல்களைத் திறந்தேன். காருக்கு வெளியில் ஏதோ தீய்ந்த வாடை. எது என் காரிலிருந்துதான் வருகிறது என புரியவும், எங்கள் வீடமைக்கு பகுதிக்கு வரவும் சரியாக அமைந்தது. எப்படியாவது உடனே காரை அதற்கான ஓரிடத்தில் நிறுத்த வேண்டும்.

இல்லாளையும் பொம்மியையும் கீழே இறங்கி ஒதுங்கி நிற்க சொன்னேன். காரை வளைக்க முடியாமல் ரொம்பவும் சிரமப்பட்டு வளைத்து பார்க்கிங்கில் நிறுத்தினேன். ஏனோ சட்டென மழையும் பெய்யத்தொடங்கியது. இப்போது எதையும் பார்க்க முடியாது என தெரிந்தது. வீட்டிற்கு சென்றோம்.

மறுநாள் காலை, பக்கத்தில் இருக்கும் கார் பழுது பார்க்கும் கடையில் இருந்து ஒரு சீனரை அழைத்து வந்தேன். காரை பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் காரின் முன் பக்கத்தைத் திறந்து ஏதேதோ வித்தைகள் காட்டினார். இன்னுமா இந்தக் காரை ஓட்டறீங்க என மெல்ல சிரித்தார். என்னால் சிரிக்க முடியவில்லை என்பதை கண்டுகொண்டார்.

எனக்கு புரியாத ஏதேதோ சொல்லி இதனை சரிசெய்ய குறைந்தது நாலாயிரம் வெள்ளி வரை செலவாகும் என்றார். அதாவது குறைந்தது மூன்று மாதத்திற்கான எங்கள் குடும்ப செலவை ஒரே நாளில் கேட்டார். இந்த மாத வாடகையே இன்னும் கட்டாத சூழலில் அடுத்த சில மாதங்களின் வாடகைப்பணத்தை அவர் கேட்டது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அந்த கார் அதன் வயோதிக நிலையில் இருப்பதை நானும் உணர்வேன். பல முறை என்னைக் காப்பாற்றிய கார் அது. கோவிட் காலக்கட்டத்தில் எந்த வழியிலும் வருமானம் இல்லாத போது நண்பரின் மூலம் அந்தக் கார் இரு மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அன்றைய செலவுக்கு பயன்பட்டது. ஓர் அண்ணன் போல உற்றத்தோழன் போல அந்தக் கார் என்னைக் காப்பாற்றியது.

எனக்கு எப்படியோ பழக்கமான இன்னொரு நண்பரை அழைத்து காரின் நிலையைக் கூறினேன். சிலவற்றைக் கேட்டார். சொன்னேன். பயப்பட ஒன்றுமில்லை. முடிந்தால் காரை அவரின் கடைக்கு கொண்டுவர சொன்னார்.

காரை பரிசோதித்தவர் இப்போதைக்கு முக்கியமாக சிலவற்றை மாற்ற வேண்டும் என்றார். அதற்கு ஏறக்குறைய ஐநூறு முதல் எழுநூறுவரை ஆகும் என்றார்.

எனக்கு வேறு வழியில்லை. சரி செய்யுங்கள் என்றேன். ஒரு வாரம் கழித்து வந்து எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். அதற்குள் பணத்தை நான் ஏற்பாடு செய்யவேண்டும்.

அங்கிருந்தே இல்லாளை அழைத்து விடயத்தைச் சொன்னேன். யாரிடமும் இப்போதைக்கு உடனே செலுத்துவதற்கு பணம் கையிருப்பில் இல்லை.  அவரிடம் இருந்து இரு மோதிரங்களை அடமானம் வைத்து முதலில் சமாளிக்கலாம் என்றார். சமாளித்தோம்.

சில நாட்களில் காரை கைக்கு வந்தது. மேலும் சிலவற்றை மாற்றவேண்டியுள்ளது என்றார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பினேன்.

இன்று மாலை வெளியில் கொஞ்சம் வேலை இருந்தது. சென்றேன். வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது மீண்டும் காரில் ஏதோ குலுங்கல். மனதில் என்னவோ பட்டது. இப்போதெல்லாம் காரை வேகமாக ஓட்டுவதில்லை என்பதால், என்ன நடக்கிறது என அவதானித்தேன்.

அது நெடுஞ்சாலை. பாதி வழியில் காரை நிறுத்த முடியாது. என் பின்னாலும் வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. காரின் ஹார்னை அழுத்தினேன். அது வேலை செய்யவில்லை. காரிலிருந்து சத்தம் பெரிதாக கேட்க ஆரம்பித்தது. ஏதோ ஒன்று காரின் முன், கீழிருந்து கழண்டு விழுந்தது. கார் அதன் மீதேறி ஒரு குதி குதித்து என் தலை காரின் மேல் பகுதியை இடித்தது.

கண்ணாடியில் பின்னால் பார்க்க கறுப்பாக ஏதோ ஒன்று காரில் இருந்து விழுந்தது தெரிந்தது. அதன் பின் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஹார்ன் சத்தத்துடன் விறுவிறுவென நிலமையைச் சமாளித்து பக்கத்து வழியில் வாகனத்தை செலுத்தின.

நல்லவேளையாக காரை ஓரமாக நிறுத்துவதற்கு எனக்கும் இடம் கிடைத்தது. காரை நிறுத்தினேன். காரின் முன் பக்கத்தை திறக்கிறேன். புகை மூட்டம் தோன்றி மறைந்தது. உள்ளே முழுக்கவும் எண்ணெய்க்கசிவு. முதல் வேலையாக சாலையில் விழுந்து கிடப்பதை எடுக்கச் சென்றேன். காரின் இன்ஜினை தாங்கிப்பிடிக்கும் பிடிமானம்தான் அது. முழுக்கவும் கறுப்பு எண்ணெயாய் நனைந்திருந்தது.

அதனைக் கையில் எடுத்துக்கொண்டு காருக்கு வந்தேன். பக்கத்தில் ஒருவர் காரை நிறுத்தி என்னவென்றும் விசாரித்தார். கையில் உள்ளதைக் காட்டி கழண்டு விழுந்ததைச் சொன்னேன். அப்படியா!  என்றவர் அப்படியே கிளம்பினார்.

காருக்கு வந்ததும் என்ன செய்வதென்று புரியாமல் நிற்கிறேன். இன்னொருவர் மோட்டாரில் அவ்வழியே வந்து விசாரித்தார். நானாக எதையும் தெளிவாக சொல்வற்கு முன் அவராகவே காரின் நிலையை புரிந்து கொண்டு காருக்கு அருகில் வந்து சிலவற்றை சரி பார்த்தார். கறுப்பு எண்ணெய்க் குழாய் அடியில் உடைந்துவிட்டதாகவும் இனி காரை ஓட்ட முடியாது என்றார். தீப்பிடிக்கவும் வாய்ப்புள்ளதைச் சொன்னவர் மேலும் சிலவற்றை சரி பார்க்கிறார்.

வீடு தூரமா என்றார். ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் என்றேன். காரில் கைவசம் கறுப்பு எண்ணெய் உள்ளதா என கேட்டார். இருந்தது. உடனே அதனை இன்ஜினின் ஒரு பகுதியில் ஊற்றினார். கீழே குணிந்து பார்க்கிறார். ஊற்றிய எண்ணெய் கீழே ஒழுகும் வேகத்தை வைத்து ஏதோ கணக்கிட்டார். “இன்னும் கொஞ்ச நேரம் இது தாங்கும் நீங்க தைரியமா வீடுவரை காரை ஓட்டிப்போகலாம்” என்றார். அவரும் கொஞ்சம் தூரம் பின்னால் வருவதாச் சொன்னார்.

சொன்னபடியே வீட்டிற்கு அருகில் வரும்வரை வந்தார். சட்டென காணவில்லை. நான் அவருக்கு நன்றியைக் கூட சொல்லவில்லை.

எந்த இடத்தில் என் கார் இன்று நின்றதோ அதே நெடுஞ்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் சாலையில் விழுந்து கிடந்த இரும்பு துண்டை எடுத்து தூரம் போட்டது என் நினைவுக்கு வந்தது. இன்று எந்த இடத்தில் என் கார் நின்றதோ அதே இடத்தில்தான் அன்றும் காரை நிறுத்தி நடந்து சென்று நடு சாலையில் கிடந்த இரும்பு துண்டை எடுத்து தூக்கி போட்டேன். மீண்டும் என் காருக்கு வரும் வரை பல வாகனங்கள் எனக்காக ஹார்ன் அடித்தன; அதற்கு எப்படி பதிலளிப்பது எனத்தெரியாமல் நான் காரில் ஏறினேன்.

வீட்டுக்கு அருகில் காரை நிறுத்தினேன். உண்மையில் உயிரைக் கையில் பிடித்துகக்கொண்டுதான் வந்தேன். யோசிக்கையில் என் உயிரையும் ஏதொ ஒன்று கெட்டியாக பிடித்திருப்பதாகத் தோன்றுகிறது.

வீட்டிற்கு வந்தேன். காரை மீண்டும் பழுது பார்க்க வேண்டும். அல்லது காரை மாற்றியாக வேண்டும். இப்போதைக்கு இரண்டுக்கும் பணம் வேண்டும். கையிலும் சேமிப்பிலும் எதுவும் இல்லை.

ஏற்கனவே எனது மருத்துவ செலவுக்கும் இல்லாளின் பிரசவத்திற்கும் செலவாகியது. அதையே இன்னும் ஈடு கட்ட முடியாமல் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு இடியைத் தாங்க முடியவில்லை.

இந்த மாதிரியான இக்கட்டுகளுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் போதேல்லாம் வலிநிவாரணியாக வரும் பாடல்தான் அது.

திரைப்படத்திற்காக சேர்க்கப்பட்ட பாடல்வரிகள் என்னை உடைந்தழ வைக்கின்றன. இதோடு ஐம்பது தடவையேனும் அந்தப் பாடலைக் கேட்டு கொண்டிருக்கிறேன். ஆறுதல் போதவில்லை அழுகை இன்னும் தீரவில்லை. இன்றிரவுக்குள் மனமும் நானும் கொஞ்சம் நிதானமாவோம். ஆக வேண்டும். ஏனெனில் இப்போது நான் தனியாள் இல்லையே. எப்போதும் நான் தனியாக இருந்ததில்லை உங்களோடுதானே இருக்கின்றேன்.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்