புத்தகவாசிப்பு_2022_9_வாசிப்பின் வழிகள்
வாசிப்பின்
வழிகள்
தலைப்பு
– வாசிப்பின் வழிகள்
எழுத்து
– ஜெயமோகன்
வகை
– கட்டுரைகள்
வெளியீடு
– விஷ்ணுபுரம் பதிப்பகம்
நூல்
வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)
‘வாசிப்பின்
வழிகள்’ கட்டுரைத் தொகுப்பு மொத்தம் 21 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும்
முன்னமே ஜெயமோகன் வலைத்தளத்தில் வெளிவந்தவை. வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் கொடுத்த
முழுமையான பதில்கள் அவை. அவற்றை வாசிப்பு என்ற மையக்கருவைக் கொண்டு ‘வாசிப்பின் வழிகள்’
என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.
வாசிப்பு
என்பது மிகவும் அகவயமானது. நாம் ஏன் வாசிக்கின்றோம். எதற்கு வாசிக்கின்றோம் என்பதற்கான
பதில்கள் ஆளுக்கு ஆள் மாறுபடும். உண்மையில் நாம் சொல்லும் பதில்கூட சில ஆண்டுகள் அல்லது
சில புத்தக வாசிப்புகளில் இன்னொரு பதிலாக பரிணாமம் அடைந்துவிடுவதைக் காணலாம்.
முகம்
தெரியாத எழுத்தாளர்களிடம் வாசிப்பின் வழியே வாசகம் நெருக்கமாகிறான். அதே போலத்தான்
வாசிப்பின் வழியே அந்த எழுத்தாளரை விரோதியாகவும் கற்பித்துக் கொள்கிறான்.
இலக்கிய
உலகிற்கு நுழைய வாசிப்பைத் தவிர வேறோர் வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சரியான
வாசிப்பு இல்லையெனில் கடைசி வரை இலக்கிய உலகில் கண்களற்றவர்களாக நாம் அலைந்து கொண்டிருப்படி
ஆகிவிடுகிறது. இந்தச் சரியான வாசிப்பு எப்படி அமைகிறது எவ்வாறு அமைத்துக்கொள்ளப்படுகிறது
என்பது வாசகனின் தேடலைப் பொறுத்தது. இன்னும் சொல்லப்போனால் வாசிப்பவர்கள் எழுத்தாளர்களாக
ஆகத்தான் வேண்டுமா? என்றால் இல்லை. எழுத விரும்பாது வாசிப்பது மட்டுமே போதுமென இருப்பவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள். தான் வாசித்தக் கதையில் அந்த எழுத்தாளர் என்ன சொல்கிறார்
என்ன கவனிக்கவில்லை என அவர்களால் பேச முடியும் ஆனால் அவர்கள் எழுதுவதை விரும்புவதில்லை.
வாசிக்கிறார்கள், வாசிப்பதில் மட்டுமே இன்பம் காண்கிறார்கள்.
இயல்பாகவே
ஆரம்பகால வாசகனுக்கு வாசிப்பில் சில சிக்கல்கள் எழுவது இயல்பு. தொடர் வாசகனுக்கும்
கூட ஒருவித சலிப்பு வருவதும் உண்டு. அவர்கள் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். அவர்களுக்கு
கிடைக்கும் பதில் ஒருவருக்கான பதிலாக அல்லாமல் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு பதிலை
ஜெயமோகன் முன் வைக்கிறார். அது வாசிப்பவர்களுக்கு பல திறப்புகளைக் கொடுக்கிறது. இவர்கள்
தங்கள் கேள்விகளை ஏன் ஜெயமோகனிடம் வைக்கிறார்கள். அவர் தரும் பதிலுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்
என்பது அவரவர்க்கு மாறுபடலாம் அதே போல ஜெயமோகனின் பதில்களின் வழி ஏன் சிலர் அவரை புறக்கணிக்கின்றார்கள்
என்பதும் அவரவர்க்கு மாறுபடும். ஆனால் முற்றாக அவரை புறக்கணிக்க முடியாது என்பது அவரை
வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
‘வாசிப்பின்
வழிகள்’ தொகுப்பில் எனக்கானக் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. ‘எழுத்தும் உடலும்’ என்ற
கட்டுரையில் தூக்கம், உணவு, நேரம் இவை மூன்றும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எவ்வளவு
முக்கியம் என சொல்கிறார்.
எது
நவீன இலக்கியம் எது வணிக இலக்கியம் என உதாரணங்களுடன் விளக்குகிறார். ரஷ்ய இலக்கியங்களை
வாசிப்பதற்கு வாசகன் எப்படி தன்னைத் தயார் செய்ய வேண்டும் என்கிறார். இலக்கிய விவாதங்கள்
தற்சமயம் அதன் எல்லையைக் கடந்துவிடுவதாகத் தோன்றிலானும், ‘இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்’
என்ற கட்டுரையில் இராமலிங்க வள்ளலார் காலக்கட்டத்தில் இருந்து மேற்கோள் காட்டி நீண்ட
கட்டுரையை எழுதியுள்ளார். இப்படி மேலும் பல தலைப்புகளில் எழுதியுள்ளார். அது ஒவ்வொன்றும்
அடிப்படையில் வாசிப்பையே மையமாகக் கொண்டுள்ளது.
வாய்ப்பிருப்பின் என சொல்ல விரும்பாது; வாய்ப்பை ஏற்படுதுக்கொண்டு இந்நூலை வாசிக்க வேண்டும் என முன்மொழிகிறேன்
- தயாஜி
(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)
0 comments:
கருத்துரையிடுக