உணவு..
தூக்கம் வரவில்லை. எவ்வளவு நேரம் தான் அப்படியே படுத்துக் கிடப்பது. சுவரின் வலது மூலையில் இருக்கும் பல்லி இதுவரை பதினைந்து தடவை வாலை ஆட்டிவிட்டது. பத்து தடவைக்கு மேல் சத்தம் போட்டுவிட்டது.
காற்றே வராத காற்றாடி வாசிக்கும் இசை, இப்போதெல்லாம் இம்சிப்பதில்லை. குமாருக்கு எல்லாம் பழகிவிட்டது. அவ்வப்போது புரண்டு படுத்து கட்டில் கொடுக்கும் சத்தத்தையும் காற்றாடி கொடுக்கும் இசையையும் ஒருங்கிணைப்பது சமயங்களில் ஜாலியாக இருக்கும். ஆனாலும் கட்டில் உடைந்துவிடுமோ என்கிற எண்ணம் குமாரை பயப்படுத்தவே செய்கிறது.
நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவனது வாழ்வு முடிந்துவிடுவதை அவன் விரும்புவதில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பான். ஆனால் ஏதுவும் செய்யத் தோன்றாது.
வாழ்க்கையின் மீது ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச ஒட்டுதலும் ஒதுங்கிக் கொண்டதும். காரணம்? தெரியவில்லை. தெரிந்துக் கொள்ள விரும்புவதில்லை.
அந்த பல்லி மெல்ல முன்னேறுவதைப் பார்க்கிறான். அது செல்லும் இடத்தில் ஒரு ஈ ஏனோதானோவென்று அமர்ந்திருக்கிறது. ஈ தப்பிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான். யாரிடம் வேண்டினான் என தெரியவில்லை. பல்லியைப் பார்க்கவும் பாவமாக இருக்கிறது. ரொம்பவும் சப்பையான பல்லி அது. அநேகமாக இவன் இந்த அறைக்கும் வந்தபோது வழி மாறி வந்திருக்கலாம். வெளியேறத் தெரியாமல், எப்போதாவது இவன் சாப்பிட்டு கீழே சிந்தும் சோற்றுப் பருக்கை அதற்கு கிடைக்கும்.
இன்று இங்கே வந்திருக்கும் ஈ, அவன் அறையின் விருந்தாளியாக நினைக்கிறான். எப்படி ஒரு விருந்தாளியை இன்னொரு விருந்தாளி சாப்பிட அனுமதிப்பது. ஆனால் எப்படி பழைய விருந்தாளியைப் பட்டினி போடுவது.
அவனுக்குள்ளாக பல கேள்விகள் எழுந்தன.
யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு உணவாவதை யார்தான் தடுக்க முடியும் என்கிற ஞானம் அவனுக்கு தோன்றியது. கிழித்துப்போட்டிருந்த தனது நண்பர்களின் புகைப்படங்களை பொறுக்கி எடுத்தான். மேஜை மீது கொட்டினான். பழையபடி ஒட்டினான். மிகவும் சந்தோசமான நாட்கள் அவை.
கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் அவற்றை கிழித்துப் போட்டான். இப்போது பல்லியும் சத்தமிடுகிறது. திரும்பிப் பார்த்தான். ஈ அங்கு இருக்கவில்லை.
அந்த பல்லி நேராக தன்னை நோக்கி வருவதை கவனித்தான். எத்தனை பேர்தான் என்னை சாப்பிட்டு சக்கையாக்குவார்களோ என்கிற கேள்வியோடு அந்த பல்லியிடம் தன் கைகளை நீட்டலானான்.
#தயாஜி
1 comments:
🇲🇾👍👍👍
கருத்துரையிடுக