பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 02, 2016

கதை வாசிப்பு 2 - 'இறந்தவர்களுக்கான சட்டை'


     ஜுன் மாத உயிர்மை (2016) இதழில் 'இறந்தவர்களுக்கான சட்டை' என்ற கதை வந்துள்ளது. மலையாள மூலம் ஆர்ஷாத் பத்தேரி. தமிழாக்கம் ஶ்ரீபதி பத்மநாபா. இயல்பாக படிக்க வைக்கும் மொழியாக்கம். எம்.கே.ஆலிமம்மு பற்றிய கதை. யார் இவர். என்ன செய்கிறார் என்ன ஆகிறார் என்பதுதான் கதை.என்ன நடந்தாலும் என்ன தோன்றினாலும் அதனை சில வரி வார்த்தைகளால் சொல்லிவிடுபவர்தான் எம்.கே.ஆலிமம்மு.

'நதியிலிருந்து மணல் அள்ளாதீர்கள்
நதியினால் அதைத் தாங்க முடியாது'

   என்று அவர் எழுதிய வாசக பலகையில் கதை ஆரம்பிக்கின்றது. ஆலிமம்முக்கும் தனக்குமான தொடர்பை கதைசொல்லி கதையைச் சொல்லிச்செல்கிறார்.ஆலிமம்முவின் வாசகங்களில் ஒன்று,

'குழந்தைக இல்லைன்னா மனுஷனுக்குள்ள சைத்தான் குடியேறிடுவான்'

   ஒரு கவிஞன் போல ஒரு கலைஞன் போல வாழ்வின் தருணங்களை வார்த்தைகளாக பதிந்தும் பகிர்ந்தும் பயணிக்கிறார்.எல்லோருக்கும் தெரிந்த எல்லோரும் அறிந்து ஆலிமம்மு ஒருநாள் இறந்துவிடுகிறார்.சட்டென அவர் குறித்த எல்லா அடையாளமும் அழிந்து , மய்த்து, சவம், பாடி என ஆளுக்கு ஆள் அழைக்கிறார்கள் .

   கதைசொல்லிக்கு மட்டும் அலிமம்முவின் வாசகங்களும் சந்திப்புகளும் மனதில் தோன்றுகின்றன . கடைசியாக அலிமம்மு என்னதான் எழுதியிருக்கிறார் என அவ்விடம் நோக்கி கதைசொல்லி ஓடுவதாக கதை முடிகிறது . ஆனால் அலிமம்மு போன்ற வார்த்தை விரும்பிகளுக்கு கடைசி வார்த்தை என்ற ஒன்று எப்போதும் இருப்பதில்லையே.

   இறந்தபின் பிணம்தான் என்னும் வழக்கத்தை மட்டும் இக்கதை சொல்வதாக கடந்துவிட முடியவில்லை. நாம் நமக்கு பின்னர் நம்மை தேடி வரும் கதைசொல்லிகளை உருவாக்கியுள்ளோமா என நினைக்க வைப்பதில் கதை நிற்கிறது.

-தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்