பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 16, 2016

கதை வாசிப்பு -16 ' ரூஹாணிகள்

கதை வாசிப்பு -16 ' ரூஹாணிகள் '

   உயிர்மை ஜூலை (2016) இதழில் 'ரூஹாணிகள்' என்னும் சிறுகதையை ஃபீர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதியுள்ளார்.

   இக்கதையை குறித்து பேசுவதற்கு முன்பு சிலவற்றை பகிரலாம் என நினைக்கின்றேன். என்வரையில் எல்லா கதைகளும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன. காலாகாலத்துக்கும் அக்கதைகள்  சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஆனால் எப்படி அக்கதைகள் சொல்லப்படுகின்றன எந்த அரசியலை அக்கதைகள் பேசுகின்றன என்பதைத்தான் இப்போது எழுதுகின்றவர்கள் கையாளுகிறார்கள். கவனம் கொடுக்க வைக்கிறார்கள்.

வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் எல்லா கதைகளுக்குமான ஒரு வரி வாக்கியத்தை கண்டடைந்து விடலாம்.

- நல்லவன் வாழ்வான், தாமதமாகும்

- உண்மையும் நேர்மையும் வெல்லும்

- மன்னிப்பு பெரிய தண்டனை

- அம்மாவான அப்பா

- அப்பாவான அம்மா

- குடும்பத்தின் தேவை

- குடும்பத்தின் தேவையின்மை

- அவளின் பார்வை , உளவியல்

- அவனது பார்வை , உளவியல்

- மூட நம்பிக்கையின் விளைவு

- நம்பிக்கை தந்த வாழ்வு

இவை ரொம்ப மேலோட்டமான
வைதான். இன்னும் ஆழமான பார்வையில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அனைத்தையும் ஒற்றை வாக்கியத்துக்குள்ளாக அடைத்துவிடலாம்.

இவை எல்லாம் கதைகள், கதைகளுக்கான ஆதார விவரங்கள். ஆனால் இவை சிறுகதைகள் ஆவது எழுதப்படும் விதத்தை பொறுத்தது. தொடர்ந்து வாசிப்பதன் மூலம் சில எழுத்தாளர்களின் கதை சொல்லும் விதம் நமக்கு நெருக்கமாகிவிடும். நம் யூகம் போலவே கதை செல்லும் அல்லது நம் யூகத்துக்கு அப்படியே மாற்றாக கதையின் முடிவு அமர்ந்திருக்கும்.

சுஜாதாவின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த சமயம் நான் எழுதியிருந்த சிறுகதை ஒன்று சுஜாதாவின் பாணியில் இருப்பதாக எங்கள் ஊரின் பிரபலமான வானொலி நாடக ஆசிரியர் என்னை தேடி வந்து பாட்டினார்.

  அதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இப்போது 'ரூஹாணிகள்'க்கு போவோம். ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனை இக்கதை மூலமே அறிகிறேன். இதற்கு முன் அவரிடன் இதர படைப்புகளை படித்திருக்கவில்லை. ஆக இக்கதை குறித்து மட்டுமே பேச முடியும்.

கதை.
இஸ்லாமிய குடும்பம். அவர்களிம் பெண்ணுக்கு எந்தோ சிக்கல் ஏற்படுகிறது. தானாக சிரிக்கிறாள் எதையோ கண்டு பயப்படுகிறாள். அவளை குணமாக்க மந்திரவாதிகளை நாடுகிறார்கள். தந்தைக்கு அதில் உடன்பாடு இல்லையென்றாலும் தாய்க்கு அவ்வழியே சிறந்ததாக தெரிகிறது. முதலில் இஸ்லாமிய முறைப்படி மந்திரிக்கிறார்கள். பலன் இல்லை. பின்னர் தெரிந்தவர் மூலம் மலையாள மந்திரவாதியிடம் மந்திரிக்கிறார்கள்.  தாய்க்கு இப்படி இந்திய முறைப்படி மாந்திரீகம் பார்ப்பது நெருடலை கொடுக்கிறது. இரண்டாயிரம் செலவு செய்கிறார்கள். சில நாட்களில் மகள் மீண்டும் அதே தொல்லைகளுக்கு ஆளாகிறாள். இப்போது அவ்வூரில் பிரபலமான இஸ்லாமிய மாந்திரீகரிடம் போகிறார்கள். ஏழாயிரம் செலவாகும் என அவர்கள் சொல்ல தாயும் தந்தையும் விழிக்கிறார்கள். பின்னர் முதலில் மூன்றாயிரமாவது கட்டணம் கேட்கிறார்கள். மந்திரவாதியின் முன் அமர்ந்திருக்கும் மகளை அப்பசியே விட்டுவிட்டு தாயும் தந்தையும் பணம் குறித்த வாக்குவாதம்

செய்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே மகள் தன்னை நோக்கி ஏதோ கை வருவதை உணர்கிறாள். அது அந்த மந்திரவாதியின் கை போல இருக்கிறது. சத்தமிட முடியாமல் மகள் அப்படியே உறைந்து போகிறாள் என கதை முடிகிறது.

இக்கதையை குறித்து,
கதையின் தொடக்கம் ஈர்க்கும்படி இருக்கவில்லை. மகளில் பயத்தில் இருந்து இக்கதையை தொடங்கியிருக்கலாம். கதை போக்கும் முடியவேண்டிய இடத்தில் முடியாமல் நீண்டுக்கொண்டே போகிறது.

வாசகரை அந்நீளம் சோர்வடைய வைக்கிறது. கதையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு சரியான யுக்திமுறை பயன்படுத்தப்படவில்லை.
இக்கதை எல்லா காலத்திலும் செவி வழியாகவும் புனைவாகவும் உண்மையாகவும் சொல்லப்பட்டு பகிரப்பட்டு வந்திருக்கும் கதை. இதனை சிறுகதையாக்க எத்தனை சிரத்தை கொண்டிருக்க வேண்டும்.
 மகளின் உளவியல் ஆழமாக சொல்லப்பட்டிருக்கவேண்டிய இடங்கள் எல்லாம் காலியாக உள்ளன. மேலோட்டமாக சொல்லப்பட்டதாலேயே இக்கதை வாசகரை கவருவதில் சிக்கலை சந்தித்துள்ளது.

இதன் அரசியல்
இக்கதையில் ஓர் அரசியல் சிக்கல் இருப்பதை கவனிக்கிறேன். கதையின் முடிவில் அப்பெண்ணை இஸ்லாமிய மந்திரவாதி தொடுவதுபோல இருக்கிறது. அப்பெண் அங்கு பாலியில் தொல்லைக்கு ஆளாகப்போகிறார் என்று வாசகர்கள் கணித்திருப்பார்கள். கதை சொல்லியும் அதற்கான இடைவெளியைத்தான் கொடுத்துள்ளார்.

இந்திய மந்திரவாதி பணம் வாங்கி ஏமாற்றுவதாகவும் இஸ்லாமிய மந்திரவாதி பணமும் வாங்கி பாலியல் தொல்லை தருவதாகவும் காட்டியிருப்பது என்ன மாதிரியான அரசியல் பார்வை.

இம்மாதிரி கதைகளை எழுதுகின்றவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டாமா? கதையை வாசித்த வாசகர்கள் மீண்டும்.ஒரு முறை கதையை எழுதியவரின் பெயரை பார்க்க நேரும் நெருக்கடி நிகழ்கிறது.

மருத்துவரையோ, மனோவியல் நிபுணரையோ நாடாமல் இன்னமும் மந்திரவாதிகளை நம்பும் மனநிலையை சொல்ல முயன்று சரியான அரசியல் இல்லாமல் கதை அதன் தன்மையை இழக்கிறது.

மந்திரவாதி அப்படி பாலியல் தொல்லை கொடுப்பதாக நான் எழுதவில்லை நீங்களே அப்படி முடிவு செய்தால் என் தவறல்ல என எழுதியவர் கேட்டால்;  ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்த கதையில் பாக்கலாம்.நன்றி

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்