பொதுவாக சொல்கிறவர்கள்
'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."
'நான் எல்லோரையும் சொல்லவில்லை.."
என
சொல்லிச்சொல்லியே
நம்மாலும்
அவர்களாலும்
எல்லோரையும்
சொல்லிவிட முடிகிறது
நாம்
எல்லாவற்றுக்கும் நேரடியாக
பதில் கொடுக்க வேண்டிய
அவசியம் இல்லை
அமைதியாய்
எதிர்கொள்ளலாம்
அவரவர் வாய்
அவரவர் சொல்லும் பொய்
அதுதான் அவர்களின்
சோற்றுக்கான வழியென்றால்
நாம் ஏன்
அதை கெடுப்பானேன்
பொய்யைச் சொல்லி
பொய்யைத் தின்று
பொய்யாலே புதைந்து போக
அவர்களே தயாராய் இருக்க
நம்மால் என்ன
செய்ய முடியும் சொல்லுங்கள்
நாம்
கொடுக்காத பதிலுக்கான
வாய்ப்பை
காலம் பயன்படுத்தி கொள்ளட்டும்..
பொய் சொல்ல
கற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே
அதுவொன்றும் பெரிய
குற்றமில்லை
யாருக்கும் தெரியப்போவதுமில்லை
சொல்லப்போனால்
இந்தப் பொய்கள் மீது
மற்றவர்களுக்கு பொறாமைதான்
வருமே தவிர
கோவமெல்லாம் வராது
அப்படியே வந்தாலும்
அதுவும் அவர்கள் மீதுதான்
வரும்
நமக்கு எந்தச் சிக்கலுமில்லை
ஆனால்
இந்தப் பொய்களை
நாம் மனதார சொல்லவேண்டும்
அடுத்தவர் நம்புவதற்கு முன்
நாமே நம்மையும்
நாம் சொல்லும் பொய்யையும்
நம்பவேண்டும்
ஆழமாக
ரொம்பவும் ஆழமாக
தோண்டிய பின்
நாமே மேலேறி வர முடியாதபடிக்கு
ஆழமாக
அதை நாம்
நம்ப வேண்டும்
கண்டிஷனாக
காலை மூன்று வேளை
இரவு மூன்று வேளை
சொல்லியே தீரனும்
மதியத்தில் சொல்வதும்
சொல்லாததும்
அவரவர் பாடு
தனியாக அமர்ந்து கொள்ளுங்கள்
மூச்சை நன்றாக
மேலுக்கு ஒருமுறை
கீழுக்கு ஒருமுறை
என
முறையாக
மூன்று மேலும்
மூன்று கீழும்
விடவும்
ஒரேடியாக விட்டுவிடாதீர்கள்
கவனம்
கண்கள் இரண்டும்
புருவ மத்தியை
நோக்க வேண்டும்
காதுகளுக்கு இம்சை கொடுக்காத
எந்தப் பின்னணி இசையையும் வைத்து கொள்ளலாம்
இப்போது
நீங்கள்
பொய் சொல்ல
தயாராகிவிட்டீர்கள்
ஆரம்பிக்கலாம்
சொல்லுங்கள்
மனதார சொல்லுங்கள்
சந்தேகங்களின்றி சொல்லுங்கள்
முழுமையாக ஒவ்வொரு சொல்லையும் உணர்ந்து சொல்லுங்கள்
"நான் நன்றாக இருக்கிறேன்.."
"நான் நன்றாக இருக்கிறேன்.."
"நான் நன்றாக இருக்கிறேன்.."
திற
முதலில் உள்ளிருக்கும்
கசப்புகளும் கசடுகளும்
கண்ணீரால் கழுவி விடப்படட்டும்
பின்
எங்கிருந்தாவது ஓரொளி
உன் விழியை
வந்தடையும்
காலியிடங்களே நிரப்பபடும்
இதுதானே இயற்கை
சந்தேகம் கொள்ளாதே
கண்ணீர் விடவும்
காலி செய்யவும்
கொஞ்சமாய்த் தேவை
துணிச்சல்
அவ்வளவேதான்..
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
புத்தாண்டின் புதிய உற்சாகம் என சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்...
நடுகல்.காம் இணைய இதழுக்கு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற மதாந்திர தொடரை எழுதுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னமே என் வலைப்பூவிலும் முகநூலிலும் இந்தத் தலைப்பில் எழுத தொடங்கி; தொடராமல் போன தொடர் இது...
அதற்கான குறிப்புகளையும் புத்தகங்களை மீள்வாசிப்பு செய்வதற்கான நேரம் இப்போது அமைந்துள்ளது.
இம்முறை இத்தொடரை எழுதுவதற்கான தகுந்த இடம் கிடைத்திருக்கிறது. இனி திட்டமிட்டபடி இதனை முழுமையாக்கலாம்.
நான் வாசித்த/வாசிக்கும் மலேசிய புத்தகங்கள் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை இனி ஒவ்வொரு மாதமும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
இதுதான் இப்புத்தாண்டில் உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு. அதனை வாசிப்பதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. இவ்வாண்டு முழுக்க நாம் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளவிருக்கின்றோம். மகிழ்ந்திருப்போம்
அன்புடன் தயாஜி.
வாசிக்க இணைப்பு 👉
https://nadukal.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae/
பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் வாசிக்க ஆரம்பித்திருக்கும் புத்தகம். எலிஃப் ஷ்ஃபாக் எழுதி ரமீஸ் பிலாலி மொழியாக்கம் செய்த;
'காதலின் நாற்பது விதிகள்'
Tamil translation of The Forty Rules Of Love.
"பிரபஞ்சம் கதைகளால் ஆனது, அணுக்களால் அல்ல...." நாவலில் வாசித்த முதல் வாக்கியம்.
இந்த நாளை மட்டுமல்ல, இவ்வாண்டின் இறுதிநாள் வரை கொண்டாடுவதற்கு வேறென்ன வேண்டும்....
நல்லத் தொடக்கம்தானே💙
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்
ஒவ்வொரு ஆண்டும் நான் வாசித்த புத்தகங்களை எண்ணிக்கையிட்டு பகிரும் போது, இதைவிட அதிகம் வாசித்தவர்களின் புத்தக பட்டியலைப் பார்க்கும் போதும் கொஞ்சம் வெட்கப்படுவதோடு அடுத்த ஆண்டு இன்னும் அதிகமான புத்தகங்களை நம்மால் வாசிக்க முடியும் என்கிற உந்துதலையும் பெறுகின்றேன்.
ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 50 புத்தகங்களைக் கூட வாசிக்க முடியவில்லையா என்னை நானே திட்டிகொண்டாலும், அந்த எண்ணிக்கையை தொடுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுக்கவும் செய்கின்றேன்.
வெறுமனே வாசிக்கிறேன் என இல்லாமல், முடிந்தவரை தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். வாசித்ததையொட்டி பதிவு செய்வதோடு இன்னொரு வாசகனுக்கு அறிமுகமும் செய்கிறேன்.
இது கடந்த ஆண்டில் (2024)
நான் வாசித்த புத்தகங்கள்..
நாவல்கள்
1. தாரா – ம.நவீன்
2. கரிப்புத் துளிகள் – அ.பாண்டியன்
3. கையறு – கோ.புண்ணியவான்
4. ஆழம் – சீ.முத்துசாமி
5. அவன் காட்டை வென்றான் – கேசவ ரெட்டி (தமிழாக்கம் ஏ.ஜி.எத்திராஜுலு)
6. பாய்மரக்கப்பல் – பாவண்ணன்
7. கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழாக்கம் எம்.எஸ்)
8. பிறிதொரு நாள் – ரெ.விஜயலெட்சுமி
9. பனியரசி – ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (தமிழாக்கம் சூ.ம.ஜெயசீலன்)
10. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
11. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
12. வாழும் மாமலை – அமிதாவ் கோஷ் (தமிழாக்கம் கண்ணன்)
கவிதைகள்
13. புன்னகைக்கும் பிரபஞ்சம் – கபீர் (தமிழாக்கம் செங்கதிர்)
14. மங்கிய நீலப் புள்ளி – சந்துரு
15. நான்சென்ஸ் – நாச்சியாள் சுகந்தி
16. வாடியது கொக்கு – ஹைக்கூ கவிதைகள்
17. அகப்பறவை – பூங்குழலி வீரன்
18. துப்பாக்கிக்கு மூளை இல்லை – எம்.ஏ.நுஃமான்
19. என் பெயர் ஜிப்சி – நக்கீரன்
20. குஞ்ஞுண்ணி கவிதைகள் (தமிழாக்கம் பா.ஆனந்தகுமார்)
21. நீராலானது – மனுஷ்ய புத்திரன்
22. ஒரு இரவில் 21 சென்டிமீட்டர் மழை பெய்தது – முகுந்த் நாகராஜன்
23. உடல் பச்சை வானம் – அனார்
சிறுகதைகள்
24. தேவதைகளற்ற வீடு – கே.பாலமுருகன்
25. முரண் – ந.பச்சைபாலன்
26. இளந்தமிழன் சிறுகதைகள் – இளந்தமிழன்
27. மிட்டாய்க் கதைகள் – கலீல் கிப்ரான் (தமிழாக்கம் என்.சொக்கன்)
28. ஜென் கதைகள் – கி.அ.சச்சிதானந்தம்
கட்டுரைகள்/பொது
29. இலக்கியமும் இலக்கியவாதிகளும் – வண்ணநிலவன்
30. படிப்பது சுகமே – வெ.இறையன்பு
31. எப்போதும் வாழும் கோடை – மனுஷ்ய புத்திரன்
32. மேடைப் பேச்சின் பொன்விதிகள் – செல்வேந்திரன்
33. கதை டூ திரைக்கதை – ஜா.தீபா
34. எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
35. எழுத்தாளராக இருப்பது எப்படி? – ஆர்.அபிலாஷ்
36. சின்னஞ்சிறு பழக்கங்கள் – ஜேம்ஸ் கிளியர் (தமிழாக்கம் நாககலட்சுமி சண்முகம்)
பிறமொழி/ஆங்கிலம்
37. How to enjoy your life and your job – Dale Carnegie
38. The Art of Public Speaking – Dale Carnegie
39. On Writing Well – William Zinseer
40. Surrounded by Setback – Thomas Erikson