லவ் ஹவுஸ்
காலையில் மருத்துவமனையில் இருந்து அழைத்தார்கள். குரலைக் கேட்டவுடன் சிரித்துவிட்டேன். அதே நர்ஸ்தான். எப்படி என் எண் கிடைத்திருக்கும். ஏன் அழைத்திருக்கிறார். என்ன கேட்கப்போகிறார் என மனம் பட்டாம்பூச்சியாய் படபடத்தது.
அவர் அதனை புரிந்திருக்க வேண்டும். தொடர்ந்தார். எனது மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதன் முன்பதிவு நாளை உறுதி செய்துகொண்டார்.
சாப்பிடவேண்டிய மருந்துகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு வரும் என்றார். அது கிடக்குது, நாலஞ்சு பை நிறைய என்றேன். ஒரு மாதம் வரை வருமா என்றார். வரும் என்றேன். மருந்து சாப்பிடும் அவசியம் இல்லையா என்றேன்.
அப்படியொன்றுமில்லை, 'கொரோணா' பிரச்சனையால் எனது முன்பதிவு தினத்தை அடுத்த மாதம் வைக்கலாமா என்றார்.
அப்போதுதான் உரைத்தது. அப்படியொரு சிக்கலில் தானே எல்லோரும் சிக்கிக் கொண்டுள்ளோம்.
மீதமிருக்கும் மாத்திரைகளுக்கு ஏற்றபடி அடுத்த தேதியைக் கொடுத்து குறித்துக்கொள்ள சொன்னார். பின்னர் இப்போதைய என் உடல் நிலை குறித்தும், இன்னும் சில விபரங்களைக் கேட்டு சில ஆலோசனைகளைச் சொன்னார். விரைவில் நலமாகும் என அவர் சொல்லும் வார்த்தையை மனம் முழுமையாக நம்பியது.
நிச்சயம் ஒரு நாள் நோயாளி நர்ஸ் ஆகியோரின் தொடர்பு துண்டிக்கப்படும். மறந்துவிடப்போகிறோம். ஆனால் நாம் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு வகையில் மருத்துவமனை மருத்துவர்கள் தாதிகள் என இன்னபிற பல பணியாளர்களுக்கு கடமை பட்டுள்ளோம். அதில் ஒருவரின் முகமாவது நம் மனதில் தங்கியிருக்கும். இன்றைய சூழல், நம் அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்வதற்காக அன்பின் பேரொளியாய் பலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நர்ஸ் பேசி முடித்ததும். நான் அவர் நலம் விசாரித்தேன். அவரை கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். சொல்லப்போனால் என்னைவிட அதிகம் தெரிந்தவர் அவர்தான். ஆனால் நான் சொல்வதை எந்த இடையூறும் இல்லாமல் கேட்டுக்கொண்டார். ஒரு குழந்தைதாய் எல்லாவற்றுக்கும் அவர் தலையசைப்பதாய் தோன்றியது
விடைபெற்றோம். மருத்துவமனை எண்களை 'லவ் ஹவுஸ்' என சேமித்துக் கொண்டேன்.
அவருக்கு மட்டுமல்ல இந்நேரம் நம்பொருட்டு நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அதைத்தான் கேட்டுக்கொள்ள நினைக்கிறேன்.
'கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்'.
இப்போது புரிகிறது இவ்வுலகமே காதலால்தான் ஆகியிருக்கிறது.
நம்மை நாம் காதலித்துக்கொள்ள, யார் இனி நம்மைத் தடுக்கப்போகிறார்கள்.
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக