பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2020

குற்றம் நடந்தது என்ன..?


     அன்று இதுதான் சமூக வலைத்தளங்களின் முக்கியச் செய்தி. வழிப்பறி திருடர்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பாதிப்பால் காயங்கள் மட்டுமின்றி உடல் ஊனங்கள் வரை தன் வாழ் நாள் முழுக்க சுமந்துக்கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர். 

   அவ்வளவு ஏன் சமீபத்தில் கூட வழிப்பறிக் கொள்ளையில் மரணமடைந்த சிலரையாவது நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அல்லது அதன் செய்தியாவது நமது வட்சப்பில் வந்து மணியை அடித்திருக்கும்.

     அப்படியான சூழலில்தான் இச்செய்தி வந்தது. ஒவ்வொருவரும் இப்படித்தான் இனி செய்ய வேண்டும் என தங்களின் சமூக வலைத்தளங்களில் எழுதி பகிர்ந்துக்கொண்டிருந்தார்கள். லைக்குகள் அள்ளியது அதைவிட இதயங்கள் அதற்கு வந்து குவிந்தன.

     செய்தி இதுதான், மூதாட்டியிடம் வழிப்பறி செய்து தப்பித்து ஓடியவனை பின்னால் வந்திருந்த காரில் துரத்தி மோதியுள்ளான் சமூக அக்கறையுள்ள ஒருவன். கீழே விழுந்தவன் காலிலும் முதுகிலும் காயப்பட்டு மயங்கிவிட்டான். காவல் நிலையத்திற்கு சம்பவத்தைச் சொல்லிவிட்டு, பாட்டிக்கு முதலுதவி செய்திருக்கிறான். நல்லவேளையாக பாட்டியின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்சம் தாமத்திருந்தாலும் நிலமை மோசமாகியிருக்கலாம்.

     இந்த வீர, பொறுப்பான செய்திதான் இன்று தலைப்பு செய்தி. தங்கள் கார் எப்படியெல்லாம் பயன்படும் என அந்த கார் நிருவணத்தினர் முகநூலில் போட்டார்கள். இதற்காகவே கார் வாங்க வேண்டும் என்கிற தனி குழுவும் கூட தொடங்கியிருந்தது. அதற்காக கடன் கொடுக்கப்படும் என சில வட்டிக்காரர்கள் விளம்பரமாக்கினார்கள். எல்லாம் சில மணி நேரத்திலேயே நடந்தன.

     சமூக ஊடகங்களில் இல்லாத சமூகத்தினர் தங்களில் செய்தி ஊடகமான தேநீர் கடைகளில் உற்சாகமாக பேசலானார்கள். 

     வழிப்பறிக்கொள்ளை குழுவில் அங்கத்தினராக இருக்கும் பலருக்கு இச்செய்தி பீதியைக்கொடுத்தது. பலரும் தங்களுக்கு பயமாக உள்ளதாக பகிர்ந்துக் கொண்டார்கள். சிலர் கொஞ்ச நாள் விடுமுறை எடுக்கவுள்ளதாக செய்தி அனுப்பினார்கள். எப்போதுமில்லாமல் அப்போதுதான் அந்த குழுவின் தலைமை அட்மினிடம் இருந்து ஒரு செய்தி வந்தது, ‘டொன்ட் வரி’. இதுதான் முதன் முறை அந்த அட்மினிடம் இருந்து பதில் வந்திருப்பது. அக்குழுவில் அதற்கு மேல் யாரும் பேசிக்கொள்ளவில்லை.

     மறுநாள் எல்லாவற்றையும் விட பரபரப்பான செய்தி, ‘சம்பவத்தில் அடிபட்டு கிழே விழுந்த நபர் மரணம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் காரோட்டிக்கு பத்தாண்டுகள் சிறை.’ அதற்கு மேல் யாரும் அதனை படிக்கவில்லை. சிலர் அதற்கான மாற்றுக் கருத்துகளை செய்தியின் கீழே எழுதி சிலருடன் சண்டைப் போட்டுக்கோண்டார்கள். ஆயிரம் இருந்தாலும் ஒரு உயிரை கொல்வதற்கு யார் உரிமையைக் கொடுத்தார் என்பதே அதன் சாரம்.

     முதல் நாள் செய்தியைப்பகிர்ந்து தாங்கள் தெரிவித்த வீரமான ஆதரவுகளை பலர் அழித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் தேநீர் கடைகளுக்கு விபரம் போய் சேரவில்லை.

      தன் உயிரைக் காப்பாற்றிய அந்த காரோட்டிக்கு நன்றி சொல்லி கடவுளிடம் அந்த பாட்டி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தார். கடைசிவரை அந்த பாட்டி பற்றி யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்