பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 23, 2020

#கதைவாசிப்பு_2020_13 'இறகுகள்'



#கதைவாசிப்பு_2020_13 இறகுகள்
கதை – இறகுகள்
எழுத்து – ரேமண்ட் கார்வர் (தமிழில் ஜி.குப்புசாமி)
புத்தகம் – காலச்சுவடு பிப்ரவரு 2020


   ரேமண்ட் கார்வர். சிறுகதைகளை குறிப்பிடாதவர்களை காண்பது அரிது. அவரின் சிறுகதைகளை பலர் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.

 இம்முறை ரேமண்ட் கார்வரின் சிறுகதையை ஜி.குப்புசாமி 'இறகுகள்' என மொழிப்பெயர்த்துள்ளார். முதலில் ஜி.குப்புசாமி அவர்களுக்கு நன்றி. அவர் மூலம் பல மொழிப்பெயர்ப்பு படைப்புகள் அறிமுகமாகியுள்ளது. அவரின் மூலமே எழுத்தாளர் 'சிம்மண்டா என்கோசி அடிச்சி' அவர்கள் எனக்கு அறிமுகம். சிமமண்டோ எனது விருப்ப எழுத்தாளர் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.

    இக்கதை பிப்ரவரி 2020-ல் காலச்சுவடு இதழில் வெளிவந்திள்ளது. 'பட்' தன்னுடன் பணிபுரியும் நண்பர் 'ஜேக்-கை' தன் வீட்டு விருந்திற்கு அழைக்கிறார். ஜேக் தன் மனைவி பிரானுடன் அங்கு செல்கிறார். 

   பட்-டும் அவரது மனைவி ஓலாவும் அவர்களின் குழந்தையும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறார்கள். நகரத்தில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் அவர்களின் வீடு இருக்கிறது. ஒரு முறை கூட ஜேக் அங்கு வந்திருக்கவில்லை. பட் கொடுத்திருந்த வரைப்படத்தின் மூலம் பட்டின் வீட்டிற்கு வந்து சேர்கிறார்கள்.

  பட் வீட்டில் நடப்பது முதலில் , ஜேக்கிற்கும் அவர் மனைவி பிரானுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. வீட்டை சுற்றி இருக்கும் சூழல். அசூயையைக் ஏற்படுத்தும் மயிலின் குரல். தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் இருக்கும் அருவருப்பான பல் செட். வரும்போதும் கூட வெறுமனே எந்த பெரிய எதிர்ப்பார்ப்பும் இல்லை. ஆனால், போகப்போக தங்களைவிட அவர்களிடம் ஏதோ ஒன்று கூடுதலாக இருப்பதை உணர்கிறார்கள். இத்தனைக்கும் பட் , ஓலாவின் இரணாவது கணவன். அவர்களின் உரையாடலில் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்தது.

    கதை முழுக்க அந்த விருந்தில்தான் நடக்கிறது. விருந்திற்கு வந்திருந்தவர்கள் எதைதோ கண்டுபிடுக்க மனதிற்குள்ளாகவே முயல்கிறார்கள். சாதாரண விருந்து என்றாலும் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மையும் அருகில் அமரவைத்துவிடுகிறது.

   அவ்வீட்டில் இருக்கும் குழந்தைதான் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என தவறாக புரிந்துக்கொள்கிறாள் ப்ரான். அவர்கள் இருக்கும் இடையில் இருக்கும் பரஸ்பர அன்பை இவர்கள் கவனிக்க தவறிவிட்டார்கள்.

   விருந்து முடிந்தது. புறப்படுகிறார்கள். அன்று இரவே இதுவரை தேவையில்லை என நினைத்திருந்த குழந்தைக்கு தங்களை தயார் செய்துக் கொள்கிறார்கள்.

   சில வருடங்கள் ஆகின்றன. ஜேக் பிரான் தம்பதிகளுக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் எதிர்ப்பார்த்த எதுவும் அவர்களின் வாழ்வில் நடக்கவில்லை. மாறாக நிலமை மேலும் மோசமாகியது. இன்னும் மோசமாகிக்கொண்டுதான் போகும். 

  கதையை முடிக்கையில் மனதில் குழப்பம் ஏற்படாமல் இல்லை. இரண்டாம் முறையாக வாசிக்க வேண்டியதாக இருந்தது. 

  கேள்விகளும் தேடல்களும் எனக்குள்ளே எழத்தொடங்கின. இக்கதையில் பட் தன் வீட்டிற்கு வந்து தன் குழந்தையுடன் விளையாட்டு காட்டும் மயிலைக் குறித்து இவ்வாறு சொல்வதாக வரும், "இந்த மயில் சரியான கிறுக்கு, இந்த முட்டாள் பறவைக்கு தான் ஒரு பறவை என்பதே தெரியவில்லை. அதனிடம் இருக்கும் பெரிய தொல்லை அதுதான்"

    இக்கேள்விதான் கதையின் ஆதாரம் என நினைக்க வைக்கிறது. நாம் யாராக இருக்கிறோமோ அதுவாகவே நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் நேசிக்காமல் ஏதோ ஒரு போலி பதில்கள் மீது கவனத்தை வைக்கிறோம்.
ஜேக் பிரான் தம்பதிகளுக்கு அதுதான் நடந்தது.

   தத்தம் உறவினை முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை, எதிர்ப்பார்ப்புகள் அற்ற அன்பை கொடுக்கவில்லை. ஆனால் போலியாக ஏதோ ஒன்றில் அதன் காரணத்தை வைத்து மென்மேலும் தங்கள் வாழும் நாட்களை  சூனியமாக்கிக் கொண்டார்கள்.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்