ஓ மை காட்...
அடுக்குமாடி வீட்டில் ஒரு காருக்கு மடடும்தான் இலவச பார்க்கிங்.
அதற்கடுத்த கார்களுக்கு பார்க்கிங்கிற்கு நாளொன்றுக்கு ஐந்து ரிங்கிட் கொடுக்க வேண்டும். தினம் ஐந்து ரிங்கிட் கொடுத்தால் மாதம் நூற்று ஐம்பது வெள்ளி என்பது முதலாம் ஆண்டு கணக்குத்தான்.
ஆனால் இடத்திற்கு முன்பணமாக
இருநூறு ரிங்கிட் கொடுக்கச்சொல்வது என்ன கணக்காக இருக்கும் என
புரியவில்லை. கேட்டதற்கு கார் நிறுத்துவதற்காக டெப்பாசிட் பணம்
என்றார்கள். கார் நிறுத்த அவசியமில்லையென்றால் முன்பணத்தைகொடுத்துவிடுவார்கள். நமட்டு சிரிப்பு வேறு.
மற்ற இரண்டாம் மூன்றாம் கார்காரர்கள் போலவே அடுக்குமாடி குடியிருப்பைச்
சுற்றி இருக்கும் சாலையோரத்தில் காரை நிறுத்த ஆரம்பித்தேன். நல்ல வாகானமர நிழலில் எனக்காக காலி இடம் ஒன்று இருந்தது.
தினமும் காரை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருக்கும் மரத்திடம், காரை
பார்த்துக்கொள்ளச் சொல்லுவேன். அதுவும் கிளையசைக்கும். மீண்டும் காரைஎடுக்க வரும் போது காரை பார்த்துக்கொண்டதற்கு நன்றி என்பேன், மரம் இலையசைக்கும். ஒவ்வொரு நாளும் காரின் மேல் குறைந்த இலைகளே இருக்கும்.
காருக்கு மேலே இருக்கும் கிளை பரப்பு மட்டும் பச்சைப்பசேலென்று செழுமையாக இருக்கும்.
சில சமயங்களில் வேறு யாரும் அவ்விடத்தில் காரை நிறுத்திவிடுவது உண்டு.அப்போதெல்லாம் அவ்வழியில் நடந்து வரும் போது மரத்தையும் கிழே இருக்கும் வேறொரு காரையும் ஓரப்பார்வைப் பார்ப்பேன். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது சட்டென கிளை முறிந்து அந்த காரின் மீது விழுந்தது. எனக்கு பகீரென்றது. மறுநாள் யாரும் அங்கு கார்களை வைப்பதில்லை.
ஏதோ நம்பிக்கை என்றில்லாமல் மரத்தின் மீதிருந்த அன்பினால் என் காரை வழக்கம் போல அங்கு நிறுத்திகொண்டு வருகிறேன்.
சொல்ல வந்த விடயம் அதுவல்ல.
இன்று காரை நிறுத்திவிட்ட சமயம் ஏதோ பதற்றம் தோன்றியது. சிறிது நேரம் மரத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்டுபிடித்துவிட்டேன்.
மரத்தின் அடிப்பகுதியில் சங்கிலி கறுப்பு சாமி படத்தை வைத்து அதனை சுற்றி கருப்பு துணியை போட்டு கூடவே அவர் குடிப்பார் என இவர்களில் யாரோ குடித்த காலி பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில் பல விதமான சாமி படங்களை மரத்தைச்சுற்றி அடுக்குவார்கள்.
வாரம் ஒரு நாளென படையல் வைப்பார்கள்.
யாராவது சீனனிடம் சிலைக்கு ஸ்பான்ஸர் வாங்குவார்கள்.
ஒருவருக்கு சில நாட்களில் ஐயா நம்பர் அடிக்க வைப்பார், அதில் அவர்
தாவாரம் போடுவார்.
அமர்ந்து பேசுவதற்கும் பாட்டில்களை அடுக்குவதற்கு மேஜை நாற்காலியை போடுவார்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து அமர்ந்து உலக வரலாறு முதல்
உள்ளூர் கிசுகிசு வரை பேசிக்கொள்வார்கள்.
இப்படியே போனால் சரியில்லையென, குரூப்பில் ஒருவரை தலைவராக்குவார்கள்.
அவரும் பதவிக்கு வந்த அடுத்த நாளே அந்த வட்டார மக்களிடம் வசூலுக்கு வருவார்.
நாளுக்கு நாள் அவ்விடம் விசாலமாகும்.
மரமே மதுரை வீரனாகவோ சங்கிலி கருப்பராகவோ காளியாகவோ மாற்றம் கண்டிருக்கும்.
மாதத்தில் முதல் வாரம் அண்ணதானம் நடக்கும்.
வாகன நெரிசல் ஏற்படும்.
தூரத்தில் இருக்கும் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு நடந்தே வர
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள்.
கார்டூன் போல உடையணித்து கலர்கலர் மண்டைமயிரில் சில இளைஞர்கள் நடந்துச்செல்லும் அருள் சாமிக்கு பாடிகார்ட்டுகளாக நடந்துவருவார்கள்.
24 மணிநேர உணவகங்கள் போல இவ்விடம் அருள் வங்கிகளாக வருவோர் போவோர்களுக்கு
ஆசி வழங்கி ரிசிட் கொடுக்கும்.
இரவு பன்னிரெண்டுக்குக்கூட உடுக்கை அடித்து பஜனை பாடுவார்கள்.
கோவில் உறுப்பினர் வீட்டு விஷேசங்களுக்கு இங்கு பட்டாசு வெடிப்பார்கள்.
சீக்கிரமே நகராட்சி மன்றம் இதனை கண்டுகொள்ளும் அல்லது புகார் போயிருக்கும்.
அவர்களும் இடத்தின் மூலத்தை கண்டறிந்து ஒரு மாத நோட்டிஸ் கொடுப்பார்கள்.
இவர்கள் எதையும் கண்டுக்காமல் கோவிலில் அனுமார் சிலை வைக்க காசு கேட்பார்கள்.
மறுமாதமே இவர்கள் கட்டி முடித்த கோவிலை இடிக்க ஓங்கி இயந்திரமும் இரும்பு உளிகளும் வந்திருக்கும்.
பக்தி முத்திய நிலையில் பாதி இடித்த கோவிலை முக நூலில் போட்டு யாராவது.லைவ் வீடியோ செய்வார்கள்.
கூட இருந்தவர்கள் எல்லாம், தமிழர்களுக்கு இங்கு உரிமையில்லை என முகநூலில் பொங்கி வழிந்து சில நாட்களை ஓட்டுவார்கள்.
இடிபட்ட கோவில் இடுக்கில் இதுவரை நின்றிருந்த மரமும் சிக்கியிருக்கும்.
கோவில் இடிபட்டதாக இருக்கும் எண்ணிக்கையில் இன்னொன்றையும் கணக்கெடுத்துக் கொள்வார்கள்.
மரமிருந்ததில் அடையாளமாக பூமியில் ஏதோ ஓர் ஆழத்தில் அதன் வேர் பாதி செத்திருக்கும்.
அவ்விடம் தனியார்க்கானது என பலகையுடன் வேலி போடப்பட்டு அந்த நடைபாதி மூடப்படும்.
இப்படியே நடந்து முடிந்திருக்கும் சமயத்தில் என் காரை பார்க் செய்ய
வேறெங்காவது இடம் கிடைக்குமா என தேடிக்கொண்டிருப்பேன். எனக்கும்
மரத்திற்குமான உறவு மறக்கப்பட்டிருக்கும்.
- தயாஜி