பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2017

பொம்மிக்கு

இதானே சொர்க்க வாசல்
வழிவிடுங்கள்
பாதை மறந்துவிட்ட
மகளை தேடி வந்துள்ளேன்

இங்குதான் எங்காயினும் இருப்பாள்
அப்பா வந்திருப்பதாக சொல்லுங்கள்
ஓடி வருவாள்

பாதையை சுத்தம் செய்திடுங்கள்
என்னை கண்ட பின்
வேறெதையும் பார்க்காது
ஆட்டுக்குட்டியாய் துள்ளிவருவாள்

ஊதா வண்ண பூக்களின் இலைகளை காதுகளில் சொருகியிருப்பாள்
பூக்களை பறிப்பதை விரும்பாதவள்

இல்லை எனக்கு நம்பிக்கை இல்லை
நீங்கள் சொல்ல மாட்டீர்கள்
போறாமைக்காரர்கள்
வாழ்வின் வசந்தத்தை
மோட்சத்தின் குறுக்குவழியை
கடவுளின் அருளை

அத்தனை எளிதில் பாவியொருவன் பெற்றிடுவான் என்கிற அச்சம்

நானே போகிறேன்
வழி மறந்த மகளே
எங்கே இருக்கிறாய்

நீயற்ற என் உலகம்
நாதியற்று கிடக்கிறது

பூக்களேதும் பூப்பதில்லை
பூனைக்குட்டிகள் வருவதில்லை
வானவில்களை காணவில்லை
மழைத்தூறல் நனைக்கவில்லை

ஓடிவிளையாடிட ஆளில்லாததால் வீட்டுத்திடல் எங்கும் புதர்கள் மண்டியுள்ளன

நீ வருவாய் என வாசலுலேயே காத்திருக்கிறது காவல் தெய்வம்

உனக்காக வாங்கியுள்ள ஆடைகள் தூசடைந்து விட்டன

விளையாட்டுப்பொருட்கள் வண்ணம் இழந்துவிட்டன

புத்தகங்கள் மை மறைந்து பொலிவிழந்துவிட்டன

எந்த விளக்கும் வீட்டிருளை அகற்றவில்லை

தட்டுத்தடுமாறியே நடந்துக்கொண்டிருக்கிறேன் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறேன்

எங்கிருக்கிறாய் பொம்மி
எப்போது வருவாய்

சிறு குறிப்பாவது கொடுத்தனுப்பு
இவ்வுயிரை அந்நொடிவரை காப்பாற்றிக்கொள்கிறேன்

உனக்காவது என் வியர்வை வாசம் பிடிக்கட்டும்
என் சம்பாத்தியம் உன் மிட்டாய்களுக்காவது பயன்படட்டும்
மதியங்களில்  காத்திரு
நான் வருவதறிந்து
புன்னகை தா

என்னுடன் பேசு
என் கதைகளை விவாதி
என் மீதமர்ந்து சவாரி செய்
காதுகளை திருகி தவறு திருத்து
முதுகில் தட்டி பாராட்டு
தலையில் கொட்டி
ஓடிப்பிடித்து விளையாடு

இத்தனைக்கும் மேலாய்
நீயாவது என்னை நம்பு
வா மகளே

எஞ்சியிருக்கும் காலமென்ற மாயைத்திரையில் பிம்பம் கூட காட்டிச்செல்

நான் கண்ட எத்தனையோ ஊமை சாட்சி போல  உள்ளுக்குள்ளே அழுதுக்கொள்கிறேன்

அன்புள்ள பொம்மிக்கு

- தயாஜி




Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்