வாழ்வின் சூதாட்டம்
தற்போது மலேசிய முகநூலர்களிடம் அதிகம் பகிரப்படும் காணொளியாக இருக்கிறது திரு. Ben Nathan குறித்தான காணொளி.
காரில் இருந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கதவுக்கு வெளியில் நைந்து சில இடங்களில் கிழிந்தும் அழுக்கு படிந்த ஆடையுடன் மெலிந்த , நீண்ட செம்பட்டை முடியுடன் தளர்ந்திருக்கும் ஒருவருடன் காரில் இருந்தபடியே ஒருவர் ஏதோ விசாரிக்கிறார். அந்த வயோதிகரும் தான் இன்னும் பாடிக் கொண்டிருப்பதாகவும் , வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் சொல்கிறார். காரில் இருந்து சிவப்பு வண்ண கடித உரை வெளியில் வருகிறது. பெருநாள் காலங்களில் பணம் வைத்து கொடுக்க பயன்படும் சீனர்களின் 'அங் பாவ்' தாள் அது. வயோதிகர் நன்றி சொன்னவாரே அதனை வாங்கிக்கொள்கிறார்.
உண்மையில் அக்காணொளி பலரை போல என்னையும் அதிர்ச்சிக்குள்ளானது. 80ஆம் ஆண்டுகள் புகழ் பெற்ற பாடகரான அவரை இப்படி பார்க்கையில் யார் மனம்தான் கலங்காது.
ஆறு ஆண்டுகளுக்கு முன் மின்னல் பண்பலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்காசாபுரியில் (அலுவல கட்டிடத்தின் பெயர் ), இருக்ககும் சில உணவகங்களில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும். ஒருமுறை, எங்களுக்கு முன்பே பெருத்த பூனையொன்று சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அண்டாவில் இருந்த கோழி குழம்பை நக்கிக்கொண்டிருந்ததை பார்த்ததில் இருந்து வெளியில் சென்று சாப்பிடுவது எங்களுக்கு பழக்கமானது. பின்னர் அங்கு வளர்ந்த எலிகள் பூனைகளை ஓட ஓட விரட்டியதால் பூனைகளில் தொல்லை இல்லை என்கிறார்கள்.
அப்படி சாப்பிட செல்லும் பல சமயங்களில் திரு. Ben Nathan-ஐ பார்த்துள்ளேன். தீவிர சிந்தனையைக் காட்ட முகம் . வாட்டசாட்டமான தேகம். கருத்து தொள்பட்டையில் விழுந்திருக்கும் கேசம். கருப்பு கண்ணாடி. கையில் நெகிழியில் தேநீர். வேகமான நடை என இருப்பார்.
ஒருமுறை கூட தளர்ந்த நடையிலோ சோர்ந்துவிட்ட முகத்தையோ அடுத்தவரின் உதவியில் வாகனத்திலோ கண்டதில்லை . சில சமயம் வாகன நெரிசலில் அங்காசாபுரியில் இருந்து பிரிக்பீல்ட்ஸ்க்கு நாங்கள் செல்வதற்கு முன்பாக அவர் நடந்தே சென்றிருப்பார். ஏதோ ஆள் என்றுதான் முதலில் அவரை கடந்துச்சென்றேன்.
ஒரு சமயம் நண்பருடன் பயணிக்கையில் சாலையில் அவரைக் கண்டதும் அதிர்ச்சியாகிவிட்டார். நண்பர் கூறிய பின்னர்தான் தெரிந்தது. அவர் மிஸ்டர் Ben Nathan . 80களில் மலாய் ஆல்பம் செய்து புகழ் பெற்றவர் என்றும் அப்போது (இப்போதும்) புகழ் பெற்ற 'எலிகேட்ஸ்' குழுவுக்கு போட்டியாக வருவார் என பலராலும் கணிக்கப்பட்டவராம்.
மலேசிய தமிழ் இசை துறையில் இப்போது இருக்கும் புகழும் ஓரளவு பண புழக்கமும் அப்போது இல்லை. ஆனால் மலாய் இசை உலகம் அப்படியல்ல. அவர்கள் அன்று சம்பாதித்ததைதான் இன்றைய தமிழ் இசைக்கலைஞர்கள் சம்பாதிக்கின்றார்கள் எனவும் சொல்லலாம்.
அப்படிப்பட்ட சூழலில் ஓர் இளைஞர் ஒரே ஆலபத்தில் (குறுந்தட்டில்) மலேசிய குறிப்பாக மலாய் இசை துறையில் புயல் போல தோன்றியுள்ளார் என்றால் அவர் புகழும் சம்பாத்தியமும் எப்படியானதாக இருந்திருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்.
ஆனால் அது எதுவும் அவர் வாழ்வில் நடந்திருக்கவில்லை. புயல் போல நுழைந்தவர் அதைவிட வேகமாக காணாமல் போயிருக்கிறார்.
அந்த இசைக்கலைஞன், அந்த பாடகன், அந்த கலைஞன் யாரும் அறிந்திடாத அரிதாரமொன்றை தனக்கே அணிந்துக்கொண்டான்.
இன்று ,
சமீபத்தில் வெளிவந்த திரு.Ben Nathan காணொளி அதிகமாக பகிரப்படுகிறது. தனது ரசிகர்களை மீண்டும் தன்னிடம் திரும்ப வைத்திருக்கிறது. அவருடன் மேடையில் ஒன்றாக பாடிய நாட்டின் புகழ்பெற்ற பாடகராக Datuk DJ Dev அவர்களே தேடிவந்து. திரு.Ben Nathan-னிடம் எஞ்சியிருக்கும் நினைவுகளை சொல்ல வைக்கிறார். அவரது உறவினர்களின் உதவி மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். அதனை முகநூலில் live video (நேரடி ஒலிபரப்பாக) செய்திருக்கிறார்கள். திரு.Ben Nathan பேசும் ஆங்கிலம் அவர் கொண்டிருக்கும் தோரணையும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. ஆனாலும் காவல் துறையினர் அவரை அழைத்துச்செல்ல முயலும் போது அவர் அடைந்த பதட்டமும் கலவரமும் நம்மை கலங்கடிக்கிறது. முழுமையாக அதனை பார்க்க முடியாதபடி வேதனைக்குள்ளாகிறேன்.
மலேசிய மலாய் நாளேடுகளிலும், இணைய இதழ்களிலும் இவர் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திரு.Ben Nathan-ஐ காணொளி.மூலம் பரவலாக அறிய வைத்ததில் முகநூலில் இருக்கும் (mannin Mainthan ) மண்ணின் மைந்தன் பக்கம்தான் . அதன் குழுவினர்க்கு நன்றி. மீண்டும் திரு.Ben Nathan-னுடைய பாடல்கள் ஒரு சுற்று வரவேண்டும் என பிரார்த்திப்போம்.
ஏனோ தெரியவில்லை, திரு.Ben Nathan குறித்த காணொளியைக் கண்டதும் இதனை எழுத தோன்றியது.
யோசிக்கையில் தொலைத்த பின் தேடுவது ஒரு பக்கம். பக்கத்தில் இருப்பதையே தொலைத்துக்கொண்டிருப்பது மறுபக்கம் என வாழ்க்கை நாம்முடன் விளையாடிக்கொண்டிருப்பதாகவே நினைக்கவைக்கிறது.
அன்புடன் தயாஜி
0 comments:
கருத்துரையிடுக