மனமுறிவு
- எப்படித்தான் வாழ்கிறார்கள் -
சிறந்த தம்பதிக்கு விருது கொடுக்கும் விழா. அதற்கென்றே சில தம்பதியினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்களுக்கு தெரியாமலேயே ஒரு குழு ஒவ்வொரு தம்பதியையும் பின் தொடர்ந்தது.
தம்பதியரில் யார் சிறந்த தம்பதி என அறிவித்தார்கள். பலரும் தங்களுக்கு அந்த இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் இருந்தது. எப்படி அவர்களால் இப்படி வாழ முடிகிறது என்று பொறாமையும் பட்டார்கள்.
ஐம்பதை நெருங்கிய மனமொத்த தம்பதியினர் விழா மேடையில் ஏறுகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் பல தம்பதிகள் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள்.
பலரும் அவர்களை முன்னுதாரணமாக எடுத்தார்கள். எப்படி வாழ்கிறார்கள் பாரேன் என பேசவும் செய்தார்கள்.
மேடையில் கணவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஐயா உங்க கல்யாண நாள் எப்போ?"
அவருக்கு பதில் நினைவில் இல்லை. கூட்டத்தில் ஏதோ சலசலப்பு. பின் மனைவியிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவருக்கும் நினைவில் இல்லை.
இருவருக்குமே திருமண நாள் நினைவில் இல்லை இவர்கள் எப்படி மனமொத்த தம்பதிகளாக வாழ்வதாகச் சொல்கிறார்கள் என்று குழம்பினார்கள்.
சிலருக்கு மட்டும் அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கு இப்படித்தான் வாழ்கிறோம் என்ற பதில்தான் அவர்களுடையதும்.
அவனைக் கொல்வதற்கு முன்பாக விசாரித்தார்கள். விசாரிக்காமல் யாரையும் அதிகாரிகள் ஒருபோதும் கொல்வதில்லை. இல்லை இது கொலையில்லை. தண்டனை.
அதிகாரிகள் விசாரிக்காமல் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை.
அவன் முதலில் அழத்தொடங்கினான். அழுகிறான் அழுதுக்கொண்டே இருக்கிறான். இது அவனது நாடகமாகக்கூட இருக்கலாம். உடலில் உள்ள காயங்களும் முகத்திலிருக்கும் வீக்கமும் தலையிலிருந்து வழியும் இரத்தமும் அப்படியொன்றும் வலிக்காது என அதிகாரிகளுக்கு தெரியும்.
வாயில் காய்ந்த ரொட்டியைத் திணித்தார்கள். அது தொண்டையில் சிக்காமலிருக்க எதையோ வாயில் ஊற்றினார்கள். அவனால் எதையும் விழுங்க முடியவில்லை. எதையும் சொல்லவும் முடியவில்லை. வாந்தி எடுத்தான். திணித்ததிலிருந்து திணிக்காததும் அவன் தின்னாததும் வெளியில் தெரித்தன.
அவனை சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தார்கள்.
மீண்டும் ஒரு முறை விசாரித்தார்கள். இம்முறை அழுகை குறைந்திருந்தது. மூச்சு மட்டும் அதிகப்படியாக ஏறியேறி இறங்குகிறது.
அவனிடமிருந்து எந்த விபரங்களையும் வாங்க முடியவில்லை. அப்படியொரு பயிற்சியை அவன் பெற்றிருக்கக் கூடும்.
தாங்கள் தாக்குதல் நடத்திய இடத்தில் மயங்கிய நிலையில் இவனை கண்டுபிடித்திருந்தார்கள். தெளிவாக இருந்தால் இவனும் ஓடியிருப்பான்.
அவனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காது என உறுதியானது. உண்மையைச் சொல்லாத குற்றத்திற்காகவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத குற்றத்திற்காகவும் அதிகாரி முன் வாந்தி எடுத்த குற்றத்திற்காகவும் தாக்குதல் நடந்த இடத்தில் பிடிபட்ட குற்றத்திற்காகவும் இன்னும் சில இதுவரை கண்டுபிடிக்காத குற்றத்திற்காகவும் தீவிரவாதி என உறுதி செய்து அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இது இங்கு நடந்துகொண்டிருக்கும் போது, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சிலர் தங்களில் உறவினர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
அதில் ஓர் அம்மா தேடுவது; எப்போதும் அழுதுக்கொண்டிருக்கும் தனது ஐந்து வயதான வாய்ப்பேச வராத குழந்தையை..... குழந்தையை...... குழந்தைகளை.... குழந்தைகளையும்.....
அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த யுத்தம் யாருக்காக இருந்தாலும் எந்த மதத்திற்காக இருந்தாலும் யாருடைய ஆணவத்திற்காக இருந்தாலும் அங்கு குழந்தைகளும் பெண்களும் வயதானவர்களும் நோயாளிகளும் பாதிக்கப்படக்கூடாது. கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்காத அப்படி எந்த தெரியாத எந்த மனிதனையும் கொல்வது தர்மமாகாது.
ஆனால் வேறு வழியில்லை. யுத்தம் அதன் கோரத்தாண்டவத்தை ஆடத் தொடங்கிவிட்டது. அதிகாரியின் அறையிலிருந்து ஊர் முழுக்க கேட்கும் ஒலிபெருக்கி அதிரத்தொடங்கியது.
"அப்பாவி மக்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. ஆனால் இது யுத்தம் இரு தரப்புகளுக்குமே இழப்புகள் இருக்கும். உங்களுக்கு இன்னும் 6 மணிநேரம் அவகாசம் கொடுக்கிறோம். உடனே இவ்விட்டத்தைவிட்டு வெளியேறுங்கள். உங்கள் நிலைமை எங்களுக்கு தெரியும். இந்த யுத்தத்தில் நாங்கள் ஜெயித்த பின் உங்களுக்கான சிறந்த வாழ்வை நாங்களே உங்களுக்கு அமைப்போம். அதுவரை ஊர் எல்லையில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் நீங்கள் தஞ்சம் புகுங்கள். "
அறிவிப்பைக் கேட்ட மக்கள் மிச்சமிருந்த உயிரையும் மிச்சமே இல்லாத உடமைகளின் எச்சங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். ஊரே இப்போது மயானமாக இருந்தது. சின்ன வித்தியாசம் முன்பு நடமாடும் பிணங்கள் இருந்தார்கள். இப்போது நடமாடாத பிணங்கள் இருக்கின்றன.
சரியாக ஆறு மணிநேரம் முடிந்தது. அதிகாரி தன் அறையில் யாருடனோ பேசுகிறார்.
"உன்னிடம் இன்னும் எத்தனை குண்டுகள் மிச்சமுள்ளன..?"
"200"
"அதில் 180 குண்டுகளை நீ மிச்சப்படுத்து, மற்றதை பயன்படுத்து..... குண்டுகள் நமக்கு முக்கியம்.... வீணாக்காதே...."
பேசி முடித்ததும், மக்கள் நுழைந்த மருத்துவமனை வெடித்து மனித உடல் சிதறி விழுகின்றன.
அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. அது முழுக்க முழுக்க அப்பாவி மக்களின் செங்குருதியினால் நனைந்திருந்தது...
- தயாஜி
தலைப்பு : சிறகுகள்எழுத்து : அறிமுக எழுத்தாளர் வசுமதிவகை : குறுங்கதை(எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பின் பங்கேற்பாளர்)
என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று என் பயிற்றுவிப்பாளர், கிளி பிள்ளைக்குச் சொல்வதைப்போல் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தார். நேரம் நெருங்க நெருங்க என்னுடய இதயம் மின்னலின் வேகத்தை விட பன்மடங்கு வேகமாகத் துடித்தது, லப் டப் லப் டப்..... “லெட்சுமி, இட்ஸ் யுவர் டென் நாவ், லெட்ஸ் கோ!!”. என்னுடைய பயிற்றுவிப்பாளாரை பின்தொடர்ந்து ஒரு சிறிய விமானத்தில் ஏறினேன். சரியாக கடலின் மட்டத்திலிருந்து 15,000 அடி தூரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருக்கையில், விமானி பச்சை விளக்கை அழுத்தி, “இது உனக்கான நேரம், லெட்சுமி!” என்று “thumbs up” காட்டினார். விமானத்தின் நுழைவாயிலில் என்னுடைய பாதங்கள் பலமாக ஒட்டி கொண்டன. எட்டி பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமே தெரியவில்லை. ஒன்று, இரண்டு, மூ… லெட்சுமி என்கிற நான், வானில் பறக்கத் தொடங்கினேன்.
அடப்பாவி மனுசா!! 1,2,3 சொல்லிய பிறகு நாம் குதிப்போம் என்று கூறிவிட்டு, மூன்று சொல்வதற்கு முன்பே என்னை வானத்தில் தள்ளிவிட்ட என்னுடைய பயிற்றுவிப்பாளாரின் மீது கடுங்கோபம் வந்தது. ஆனால் அது ஒரு வினாடிக்கூட நிலைக்கவோ நீடிக்கவோயில்லை. நான் ஒரு பறவயைப்போல் பறக்க உதவி புரிந்த அந்த ஜீவனிடம் நான் எப்படி என்னுடய சீற்றத்தைக் காண்பிக்க முடியும்.
5 வினாடிகள் “free fall”-க்கு (எந்தவொரு தடையுமின்றி வீழ்தல்) பிறகு என்னுடய பயிற்றுவிப்பாளர் பாராசூட் பட்டணைக் கிளிக் செய்தார். துப்பாக்கியின் தோட்டாவைப்போல் என்னுடைய உடம்பு சர்ரென மேலே இழுத்து செல்லப்பட, என் வயிற்றில் யாரோ ஓங்கி உதைத்தது போல் ஓர் உணர்வு.
மறுபடியும் அதே உதை, “அம்மா ஆஆஆஆ... என்று கத்தியபடியே திடுக்கிட்டு எழுந்தேன். அட! இவ்வளவு நேரம் என் மகள் தூக்கத்தில் உதைத்ததால் ஏற்பட்ட வலிதான் அது என்பதை உணர்ந்தேன். என்ன ஒரு அசாதாரணமான கனவு. நான் கண்ட கனவு நிச்சயமாக மெய்ப்படும் என்ற நம்பிகையோடு படுக்கையிலிருந்து எழுந்து என்னுடய அன்றைய வேலைகளைப் பார்க்கத் தாயரானேன்
லெட்சுமியின் பல வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அவளது மனம் முழுவதும் அவள் கண்ட கனவை ஆக்கிரமித்திருந்தது. லெட்சுமி அன்றைய இரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இரவுகள் அவளுக்கு முக்கியமானவை. அவள் ஒரு சுதந்திர பறவையாக வாழ்வது அந்த இரவு நேர தூக்கத்திலும் அது கொடுக்கும் கனவுலகிலும்தான். நேற்றைய கனவில் ஸ்கை டைவிங் செய்தாள் ஆனால் தரையிறங்கும் முன்பே அவளின் கனவு கலைந்து விட்டது.
இன்றைய கனவில் எப்படியும் தரையிறங்காமல் அவள் உறக்கத்திலிருந்து விழிக்கப் போவதில்லை.
வசுமதியின் சிறகுகள் - 1
செப்டம்பரில்
குறுங்கதை எழுதும் வகுப்பைத் தொடங்கினோம். இரு மாத வகுப்பாக அதனை கட்டமைத்தோம். இம்மாத
இறுதியில் அவ்வகுப்பு நிறைவடைகிறது.
முதல் மாத வகுப்புகளில் குறுங்கதைகள் குறித்து விரிவாகவே
பேசினேன். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வகுப்பில் நடந்தவற்றைக் குறித்து என் வலைப்பூவிலும்
முகநூலிலும் பகிரவும் செய்தேன். வகுப்பு முடிந்த பின்னரும் கூட பங்கேற்பாளர்களுக்கு
மீள்பார்வை செய்ய உதவும் வகையிலேயே அவற்றை எழுதியிருந்தேன். செப்டம்பர் மாத கடைசி குறுங்கதை
வகுப்பை கேள்வி பதில்களாக அமைத்தோம். பலவிதமான கேள்விகள் வந்தன. ஒவ்வொரு கேள்விக்கும்
பதில்களை சற்று விரிவாகவே அலசினோம்.
இவ்வகுப்பின் அடிப்படை நோக்கம் ‘வாசிக்கவும் எழுதவும்
வைப்பது’ என்பதால் வாசிக்க வேண்டிய கதைகளைப் பகிரும் அதே சமயம்; முக்கியமான எழுத்தாளர்களின்
குறுங்கதைகளை வாசித்து அதுபற்றிய பார்வையை ஒவ்வொருவரும் பகிர்ந்தார்கள். குறுங்கதைகளைப்
பொறுத்தவரை எழுதுகின்றவர்களுக்கு இணையாகவே வாசிப்பவர்களும் கதைக்குள் நுழைய வேண்டியுள்ளது.
எழுத்தாளர் சொன்ன இடத்திலிருந்து அவர் சொல்லாத இடத்தை வாசகன் தானே பயணித்து கண்டறிவது
அவ்வளவு எளிதல்லவே.
முதல் மாத வகுப்பிலிருந்து இரண்டாம் மாத வகுப்பிற்கு
அக்டோபரில் நுழைந்தோம். இம்மாதம் பங்கேற்பாளர்களை எழுத வைக்க வேண்டும். ஒரு குறிப்புச்சொல்லைக்
கொடுத்து எழுதச் சொன்னோம்.
‘நான் கண்ட கனவு’ என்கிற குறிப்புச்சொல்தான் அது.
ரொம்ப சாதாரணமாகத்தானே தெரிகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளைக் கொடுத்தோம். இச்சொல்லை
தலைப்பிலோ , கதையின் நடுவிலோ அல்லது கதையின் முடிவிலோ ஏதாவது ஓரிடத்தில் மட்டும்தான்
பயன்படுத்த வேண்டும். ஆனால் தலைப்பில் பயன்படுத்தினால் ஐந்து புள்ளிகள் கூடுதலாகவும்
, கதை நடுவில் பயன்படுத்தினால் பத்து புள்ளிகளும் கதை முடிவில் பயன்படுத்தினால் ஒரே
ஒரு புள்ளிதான் கூடுதலாகக் கிடைக்கும் படி செய்திருந்தோம்.
மொத்தம் பதினொரு எழுத்தாளர்கள் குறுங்கதைகளை எழுதி
அனுப்பியிருந்தார்கள். ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக அமைந்திருந்தது. ஒரு மாத கால வகுப்பு
பயனாக அமைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.
வழக்கமான கூகுள் வகுப்பில் கதைகளை எழுதிய எழுத்தாளர்களோடு
கதைகளைக் குறித்து பேசினேன். அதிலிருந்து சில கதைகளைச் சொல்ல வேண்டும்.
ராஜலெட்சுமி; துணை என்கிற தலைப்பில் குறுங்கதை எழுதியிருந்தார்.
தான் கண்ட கனவு பலித்தே விடுகிறது என்பதுதான் இக்கதையின் ஆதாரம். அதனை திறன்பட சொல்லியிருந்தார்.
அதே போல தனக்கொரு சம்பவம் நடந்ததையும் பகிர்ந்து கொண்டார்.
மோஹனா; மயக்கம் என்னும் குறுங்கதையை எழுதியிருந்தார்.
உறவினர் ஒருவர் பொதுவில் மயங்கி விழுந்ததைப் பார்த்த நாயகி தன் வாழ்நாளில் இப்படி மயங்கி
யார் முன்னும் விழக்கூடாது என்று முடிவெடுக்கின்றார். ஆனால் அது அவருக்கு சாத்தியமில்லாமல்
போகிறது. எதிர்ப்பார்த்த கதை முடிவில் எதிர்ப்பாராத சம்பவம் ஒன்றை இணைத்திருந்தார்.
பிருத்விராஜு; ‘பிரபஞ்ச நாயகன்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.
நடிகனின் மகன் இன்னொரு நடிகனுக்கு பரம விசிரியாக
இருப்பதால் ஏற்படும் சிக்கலைச் சொல்லும் கதை. இதனை சிறுகதையாக கூட விரிவாக்கன் செய்து
எழுதலாம்.
தேவி; ‘நான் கண்ட கனவு’ என்ற தலைப்பிலேயே குறுங்கதையை
எழுதியிருந்தார். லாவகமாக கதையின் நடுவில்
குறிப்புச்சொல் சினிமா பாடலில் வருவதாக எழுதியிருந்தார். கணவன் தான் இல்லாத சூழலில்
மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்கு வழியமைக்கிறார். அவர் நினைத்தபடியே
அவர் இல்லாமலாகிறார். ஆனால் அவரின் எண்ணம் மனைவியை தனித்து வாழ பழக்கிவிட்டது என்ற
கருவில் எழுதியிருந்தார்.
கிரேஸ்; ‘மனிதருக்கு புரியுமா’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.
பூமி மாசு படுகிறது என கவலைப்படும் யாரும் விண்வெளி எப்படியெல்லாம் மாசு பட்டுக்கொண்டிருக்கிறது
என யோசிப்பதில்லை என்ற அடிப்படையில் ராக்கெட்டை வைத்து அதுவே தன்னைக் குறித்து சொல்வதாக
எழுதியிருந்தார்.
மு.பா.செல்வா; மனிதாபிமானம் என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.
பள்ளி மாணவனின் காதல் கதையாக தொடங்கி நகைச்சுவை கதையாக மாறி நம்மை சிந்திக்க வைக்கும்
கதையாக அமைந்தது. அது நடந்த சம்பவம் எனவும் தெரியப்படுத்தினார்.
கிடைத்த கதைகளில் சிலவற்றை குறித்து எழுதியுள்ளேன்.
இதில் ஒருவரான வசுமதி எழுதிய கதை எனக்கு ரொம்பவும் பிடித்த கதையாக அமைந்தது. சிறகுகள்
என்ற தலைப்பில் இல்லத்தரசிகள் எதிர்நோக்கும் மனச்சிக்களையும் மன அழுத்தத்தையும் எழுதியிருந்தார்.
குடும்பச் சூழலில் ஒரு பெண் ஏன் கனவு காண்கிறாள் எது அவளுக்கு கனவாக வருகிறது என்பதுதான்
ஆதார கேள்விகள். இக்கேள்விகளுக்கு பதில் தேட முயன்றாலே நமக்கு பல கதைகள் கிடைத்துவிடும்.
ஒரு கனவில் விட்டதை மறுகனவில் பிடிப்பேன் என கதாநாயகி நினைக்கிறார். அந்த நினைப்பே
இக்குறுங்கதையை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்கிறது. அவள் சுதந்திரமாக அவள் விரும்பியதை
செய்வது அவளுக்கு வாய்த்த கனவில்தான் என்று கதையை நாம் புரிந்து கொண்ட அடுத்த நொடி;
தூக்கம்தான் இவளுக்கு நிம்மதியென்றால் அந்தத் தூக்கமே கிடைக்காத எத்தனையோ பெண்கள் இருக்கிறார்களே
என்று யோசிக்க வைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமெனின் கதையின் தலைப்பிற்கும் கதையின்
நாயகி காணும் கனவிற்கும் கதையின் முடிவிற்கும் ஓர் ஒற்றுமை இருக்கவே செய்கிறது. சிறகுகள்,
ஆகாயத்தில் இருந்து குதித்து பறத்தல், உறக்கமே சுதந்திரமாக கனவு காண வழியமைக்கிறது,
என்கிற மூன்றும் இக்குறுங்கதையின் ஒரு வரிசையில் வந்தமைகிறது.
விரைவில்
எங்கள் வெள்ளைரோஜா பதிப்பகம் வெளியிடவிருக்கும் குறுங்கதைத் தொகுப்பு நூலில் வசுமதியின்
‘சிறகுகள்’ குறுங்கதையும் இடம்பெறும் என்பது எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.
சிறகுகள் குறுங்கதையை அடுத்த பதிவில் பகிர்கிறேன். நீங்களும்
வாசித்துப்பாருங்கள். நான் சொன்னதைவிடவும் அதிகம் பேசுவதற்கு ஏற்ற கதைதான் இக்குறுங்தை.
நிறைவாக; மீண்டும் அடுத்த மாதம் அடுத்த குறுங்கதை
எழுதும் வகுப்பை தொடங்குகின்றோம். ஆர்வம் உள்ளவர்கள் எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
பகுதி 2 – தொடங்குகிறது
- சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் 2 –
மூன்றாம் வகுப்பையொட்டிய பதிவின் இரண்டாம் பகுதியில் சந்திக்கின்றோம். கதைகளை வாய்விட்டு வாசிக்கும் போது அக்கதை நமக்கு கூடுதல் புரிதலைக் கொடுப்பதாகச் சொன்னேன். அதேபோல புதிய எழுத்தாளர்களும் கதைகளை எழுதும் போது வாய்விட்டு சொல்லிச்சொல்லி எழுதுவது அவர்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் எனவும் பார்த்தோம்.
எங்களின் குறுங்கதை எழுதும் வகுப்பில் பலரும் அவர்களில் கருத்துகளை அதைனையொட்டி பகிர்ந்து கொண்டார்கள்.
இன்றைய வகுப்பில் பயன்படுத்திய இரண்டாவது குறுங்கதையைப் பார்ப்போம். இது ஜென் கதை. சிறுவயதில் இருந்து ஜென் கதைகள் மீதும் குறிப்பிட்ட வயது வந்ததும் ஜென் கவிதைகள் மீதும் எனக்கு ஆர்வம் எழுந்தது. இந்தக் குறுங்கதை வகுப்பிற்காக இரு துறவிகள் பேசிக்கொள்ளும் கதையை தேர்வு செய்தேன். இது குறுங்கதையா? ஜென் துறவிகள் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்தன.
இதற்கு முன்னமே கூட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அப்படியான கேள்விகள் எழுந்தன. ஜென் கதைகளை நம்மால் சுலபமாக குறுங்கதை வடிவத்தில் கொண்டுவர முடியும். அதோடு; அங்கிருந்து ஓர் உரையாடலையும் நம்மால் தொடங்க முடியும். எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் இவற்றை குறித்து மேலும் விரிவேக பேசுவேன்.
இன்று நான் பகிர்ந்த ஜென் கதையில் ; மரணத்தருவாயில் இருக்கும் ஒரு துறவியிடம் இன்னொரு துறவி ஏதும் உதவி வேண்டுமா என கேட்கிறார். அதற்கு அவர்; நான் தனியாகத்தாமே வந்தேன் தனியாகத்தானே போகவேண்டும் என்கிறார். அதுவரை அது வழக்கமான ஒரு கதையாக இருக்கிறது. உண்மையில் நாமே பல முறை இப்படி பேசியிருப்போம் தானே. தனியாக வந்தோம் தனியாகத்தானே போகப்போகின்றோம் என.
அதற்கு அந்தத் துறவி கொடுக்கும் பதிலில்தான் இக்கதை குறுங்கதை வடிவத்திற்குள் வந்துவிடுவதாக உணர்கின்றேன். இவர் என்ன சொல்கிறார் என்றால் இங்கு யாரும் வரவும் இல்லை யாரும் போகவுமில்லை. அப்படி நினைப்பது பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதை ஒன்று இருக்கிறது என்கிறார். இதை வாசித்ததும் நமக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. இதுவரை நாம் நம்பியிருந்த கற்பிதமான தனியாக் வந்தோம் தனியாக போவோம் என்பது தன்னை மறுத்து இன்னொரு இடத்துக்கு போகிறது; அவ்விடம் , இங்கு யாரும் வரவுமில்லை போகவுமில்லை என நம்மை சிந்திக்க வைக்கிறது.
இச்சிந்தனையை நாம் அப்படியே பல்வேறு கேள்விகளாக வார்த்து எடுக்கலாம். உடல் அழிகிறது ஆத்மா அழிவதில்லை; ஆத்மா ஓர் சுழல் வடிவில் முடிவில்லாத வட்டத்ததில் சுழல்கின்றது; மறுபிறவி என்பது என்ன; இப்படியாக பலவற்றை நம்மால் கேள்வியாக்கி அதற்கான பதிலை நோக்கி பயணிக்க இக்கதை உதவுகின்றது. அதிலும் இது குறுங்கதை வடிவத்தில் வைத்து யோசிக்கும் போது அது நமக்கு சாத்தியமாகிறது.
இக்கதையைக் குறித்து வகுப்பு பங்கேற்பாளர்களிடம் சில கேள்விகள் எழுந்தன. ஒவ்வொன்றுக்கும் வகுப்பிலேயே பதில் கொடுத்துவிட்டேன்.
மூன்றாவது குறுங்கதையாக; சந்தோஷ் நாராயணன் எழுதிய ‘பொம்மைகள்’ குறுங்கதையைக் குறித்து வகுப்பில் பேசினேன்.
நான்கு பத்திகளில் இக்கதை முடிந்துவிடுகிறது. முதல் பத்தி தன் அப்பாவின் மார்புக்கு நேராக பொம்மைத் துப்பாக்கியை காட்டி விளையாடுகிறது குழந்தை.
இரண்டாம் பத்தியில் அந்த அப்பா யார், என்ன வேலை செய்கிறார், இக்கதையில் திருப்பத்தை அமைக்கப்போகும் காரணம் என்ன என்று நமக்கு தெரிந்துவிடுகிறது. அதாவது சீனா விளையாட்டு துப்பாக்கிகள் என்கிற பெயரில் நிஜ துப்பாக்கிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவிட்டன. அவை இன்றோடு செயல்படப்போகின்றன என தனது இன்டெலிஜென்ஸ் துறையினர் மூலமாக அப்பா தெரிந்து கொள்கிறார்.
மூன்றாம் பத்தியில் தன் மகன் தன் மார்பு மீது குறி வைத்திருக்கும் விளையாட்டு துப்பாக்கியை அப்பா பார்க்கிறார்.
நான்காவது பத்தியில், அந்தத் துப்பாக்கியில் மேட் இன் சீனா என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவுதான் குறுங்கதை முடிந்துவிட்டது. ஆனால் இக்கதையின் பின்னணியில் ஒரு துயர்மிகுந்த உண்மை ஒன்று இருக்கிறது.
உங்களில் பலருக்கும் அது தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பல குழந்தைகள் ஊனமாக இருக்கிறார்களாம். அது ஒரு சூழ்ச்சியினால் நடந்தது. மக்களில் யாரும் வருங்காலத்தில் தங்களுடன் யுத்தத்தில் ஈடுபடக்கூடாது போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அங்குள்ள சாலைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை கொட்டுகிறார்கள். அதனை ஆசையாசையாய் விளையாட எடுத்து செல்கிறார்கள் சிறுவர்கள். கொஞ்ச நேரத்தில் அந்த விளையாட்டு பொருட்கள் வெடிக்கின்றன. அந்த வெடிவிபத்தால் (சூழ்ச்சியால்) பல சிறுவர்கள் கை கால்களை இழக்கின்றார்கள்.
கண்பார்வையைப் பறிகொடுக்கின்றார்கள். கேட்கும் திறனை இழக்கிறார்கள். நாம் வாழும் உலகத்தில் ஏதோ ஒரு நாட்டில் இப்படியாக ஒரு கொடுமை நடக்கிறது.
நானும் எனது குறுங்கதை புத்தகத்தில் இப்படியான போரில் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் குரலாகவும் போர்ச் சூழலை மையப்படுத்தியும் சில குறுங்கதைகளை எழுதினேன். அது பரவலான வாசிப்பிற்கு சென்றது. அந்த வரிசையில் ஆசிரியை உமாதேவி அவர்களும் போர்ச்சூழலை மையப்படுத்தி சில குறுங்கதைகளை எழுதியிருந்தார்.
ஒரு சம்பவத்தை குறுங்கதையாக்கி அதனை வாசிக்கையில் இவ்வுலகத்தில் அதிகார வர்க்கம் செய்யும் கொடுமைகளில் ஒன்றைக் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது பொம்மைகள் என்னும் இக்கதை.
வகுப்பில் இக்கதையைக் குறித்தும் அவ்வாறு நடந்த சில போர்க்குற்றங்களைக் குறித்தும் பேசும் போது பலர் பேச்சற்று இருந்தார்கள். ஓர் எழுத்தாளனாக நமது எழுத்து குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து பேசினேன்.
நான்காவது குறுங்கதையாக எனக்கு பிடித்த கவிஞர் பெருந்தேவியின் ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை.
இரண்டே பத்திகளில் இக்கதையினை எழுதியிருக்கிறார். இப்படி குறிப்பிட்டுச் சொல்வதற்கு காரணம் என்னவெனில் இக்கதையை அவர் எழுதிய விதம்தான்.
முதற்பத்தியில் வாசகர்களிடம் ஒன்றை சொல்லிக்கொண்டே தனது அடுத்த பத்தியில் அதுவல்ல என்று இறங்கி வந்து, கடைசி ஒரு வரியில்; ஒரு வரியில் என்று கூட சொல்ல வேண்டாம். ஒரு சொல்லில் முழு கதையும் இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.
இக்கதையை மேலோட்டமாக வாசித்தால்; பக்கத்து வீடு சத்தமாக இருக்கிறது என புகார் கொடுத்தவரே தன் வீட்டை காலி செய்யும்படி ஆகிவிட்டது என இருக்கும். ஆனால் பெருந்தேவியின் கதைகள் அதன் மேல் போர்த்தியிருக்கும் எளிமையைக் கொஞ்சம் விலக்கிவிட்டு பார்த்தால் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுக்கும்.
ஒரு பேய்க்கதையின் தொடக்கமாகவே முதல் பத்தியை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஆனால் இது பேய்க்கதையா என்றால் இல்லை. ஆனால் கடைசி வரியில் ‘காவல்துறையிடம்’ என வரும் இடத்தில் ‘சாமியார்/போதகர்’ என எழுதியிருந்தால் இக்கதை அதன் சுவை குன்றாத பேய்க்கதையாக அமைந்திருக்கும்.
இப்போது இக்கதையில் இருக்கும் மூன்றாவது சாத்தியத்தைப் பார்ப்போம்; இதுவரை இன்னொரு வீடாக நம்மை வாசிக்க வைத்தவரேதான் பிரச்சனைக்கு காரணம். அவர்ன் வீட்டில்தான் அந்த சத்தகங்கள் எழுகின்றன. அவர்தான் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறார். அதனால்தான் கடைசியில் அவரே ‘நான் உடனடியாகக் காலி செய்யாவிட்டால்’ என்கிறார்.
இக்கதையில் இருக்கும் ‘நான்’ என்னும் சொல்லை கடைசியில் இல்லாமல் வேறு இடத்தில் அதாவது ‘நான் புகார் கொடுத்தேன்’ என வரும்படி எழுதியிருந்தால்; உண்மையில் இது பாதிக்கப்பட்டவரின் குரலாக மாறியிருக்கும்.
ரொம்பவும் கவனமாக இக்கதை எழுதப்பட்டிருப்பதை அதன் ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர முடிகிறது. இப்படி இக்குறுங்கதையின் பல்வேறு சாத்தியப்பாடுகளை வகுப்பில் விளக்கினேன். நாம் எழுதும் கதைகளில் ஒவ்வொரு வரியும் எவ்வளவு முக்கியம் என; அதிலும் குறிப்பாக குறுங்கதைகளுக்கு ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் என இக்கதையின் மூலம் வகுப்பினர்களுடன் பேசினேன்.
அதன் பின், வகுப்பில் நான் எழுதிய குறுங்கதைத் தொகுப்பு புத்தகத்திலிருந்து , ‘அங்கே ஓரிடம் வேண்டும்’ என்ற கதையையும் ‘கடவுள் VS சாத்தான்’ என்ற கதையையும் பேசும்படி கேட்டுக்கொண்டதால் பேசினேன். அதனைப்பற்றி இங்கு நான் எழுதப்போவதில்லை. எப்படி மற்ற எழுத்தாளர்களின் கதைகளைக் குறித்து நான் பேசி எழுதுகின்றேனோ, அப்படி மற்றவர்கள் யாரும் என் குறுங்கதைகளை வாசித்து பேச வேண்டும் என ஆசைப்படுகின்றேன்.
இதுவரையில் எங்கள் ‘குறுங்கதை எழுதும் வகுப்பின்’ மூன்றாம் வார வகுப்பில் நடந்தவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்தடுத்த வாரங்களுக்கு பின் வகுப்பின் பங்கேற்பாளர்களும் அவர்களின் கதைகளை அவர்களே எழுதுவார்கள். எழுத வேண்டும்.
உங்கள் யாருக்கும் எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
நாம் சேர்ந்தே எழுதுவோம்.
எழுதுங்கள்..
அதுதான் ரகசியம்..
அதுவேதான் தியானம்…
அன்புடன் தயாஜி.