- 2025-இன் நான்கில் இரண்டு -
2025-ஆம் ஆண்டின் நான்கின் இரண்டாம் பகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் இரு பகுதிகள் முடிந்தன.
முதற்பகுதியில் நான் வாசித்தவைக் குறித்து முன்னமே எழுதியிருந்தேன்; இது அதன் இரண்டாம் பகுதி. மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்களைக் குறித்த சிறு பகிர்வு.
சமீபத்திய இணைய நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இளம் வாசகர் ஒருவர் அந்த எழுத்தாளர் என்ன வாசிக்கின்றார் என கேட்டார். சற்று யோசித்த எழுத்தாளர் இப்படியாக பதில் சொன்னார்.
“நான் பல வேளைகளில் பல புத்தகங்கள் வாசிப்பேன். கழிவறையில் கூட நான் புத்தகம் வைக்கிறதுக்கு இடம் வச்சிருக்கேன்…” இந்தப் பதில் அந்த இளம் வாசகருக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். அவர் திரும்பவும் கேட்டார், “சிறப்பு ஐயா.. என்னென்ன புத்தகங்கள் வாசிக்கிறீங்க..?”
அந்த எழுத்தாளரின் பதில், “அதேன் சொன்னேன்ல… இதைதான் வாசிக்கிறென்னு இல்ல.. பல புத்தகங்களைப் பல சமயத்தில் வாசிக்கிறேன்.. ஏன்னே அப்பதான் நம்மால தொடர்ந்து இந்த எழுத்துத்துறையில் இயங்க முடியும்.. இல்லைன்னா கஷ்டமாகிடும்..”
கடைசிவரை தான் என்ன வாசிக்கிறேன் என்பதை அந்த எழுத்தாளர் சொல்லவேயில்லை.
அவருக்கு அந்தத் தயக்கம் வர என்ன காரணமாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பல நாட்களாக யோசித்தேன். இதற்கெல்லாம பல நாட்கள் யோசிப்பீங்க..? என நீங்கள் கேட்கபது எனக்கும் விளங்கியது.
வாசிப்பென்பது தனிமனித செயல்பாடு. ஒரே புத்தகத்தை இருவர் வாசித்தால் இருமாதிரியான அனுபவத்தைதான் அது அவர்களுக்கு கொடுக்கும். கூட்டு வாசிப்பிலும்கூட ஒரே புத்தகம் பலருக்கு பல வித வாசிப்பு அனுபவங்களைக் கொடுக்கின்றன. அதன் இலக்கு ஒன்றை நோக்கியதாக இருந்தாலும் அதில் செல்லும் வழிகள் வெவ்வேறானவை.
தான் வாசித்ததை இன்னொருவனும் வாசித்துவிட்டால் அவனுக்கும் நமக்குமான இடைவெளி குறைந்துவிடுமே என அச்சப்படும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் சதவீதம் குறைவுதான். அதைத்தவிர்த்து பலரும் தனித்தனியாகவோ குழுக்களாகவோ தாங்கள் வாசித்த புத்தகங்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் அவர்களில் ஒருவன்தான்.
வாசித்த புத்தகங்களைக் குறித்து பேசுவதும் பகிர்வதும் வாசிப்பின் சுவையை இரட்டிப்பாக்குகிறது. அதோடு அதைப் பற்றி பேசும்போது அது மேலும் சுவையாகிறது.
இவ்வருடம் தொடர்ங்கி மார்ச் மாதம் வரை 17 புத்தகங்களை வாசித்திருந்தேன். அதுபற்றியப் பகிர்வை சிறு குறிப்புடன் எழுதியிருந்தான்.
இப்பதிவு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் பற்றியதாக இருக்கும்.
நாவல்கள். மாதம் ஒரு நாவல் என்கிற எனது திட்டமிடலில் வந்திருக்கும் மூன்று நாவல்கள்.
18. அஹில்லா – நிலவின் 28 தோற்றங்கள்
- இது சூஃபி நாவல். முஅதஸ் மத்தர் எழுதி ரமீஸ் பிலாலி தமிழாக்கம் செய்திருந்தார். அருங்காட்சியகத்தில் வேலை செய்யும் வாய் பேச முடியாத மனிதனி எதிர்கொள்ளும் சிக்கலைச் சொல்லும் நாவல். ஒருபக்கம் அங்குள்ள ஒரு பொக்கிஷயத்தை திருடவேண்டிய நிர்பந்தம் இன்னொரு பக்கம் அங்கு அவனுக்கு ஏற்படும் காதல். அந்த பொக்கிஷயம் என்ன என்பது நாவலில் இன்னொரு பகுதியாக விரிந்து செல்லும். துப்பறியும் நாவலை வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்நாவலை வாசிக்கலாம். அவர்களுக்கு ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் இந்நாவலின் முடிவை என்னை ஈர்க்கவில்லை.
19. சித்தார்த்தன்
- ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய திருலோக சீதாராம் தமிழாக்கம் செய்திருக்கும் நாவல். நீங்கள் ஒருமுறையேனும் இந்நாவலை வாசித்துவிடுங்கள். தாமதமாக இந்த நாவலை வாசித்துவிட்ட உணர்வை இந்நாவல் எனக்கு கொடுத்தது. வாழ்வின் அர்த்தம் எப்படி ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது என்பதைத் தொடர்ந்து மனித மனம் எப்படியெல்லாம் நம்மை அலைக்கழிக்கும் என்பதை ரொம்பவும் ஆழகமாக இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும்.
20. ஆலிஸின் அற்புத உலகம்
- லூயி கரோல் எழுதிய இந்நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் தமிழாக்கம் செய்திருக்கிறார். உலக புகழ்பெற்ற இந்நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. கற்பனையின் ஆழம் எதுவரை செல்லும் என நமக்கு காட்டும் நாவல்களில் இதுவும் ஒன்று.
கவிதைகள்
21. காட்டோவியம்
- ஜீ.முருகனின் கவிதைத்தொகுப்பு. எனக்கு அவரது சிறுகதைகளைப் பிடிக்கும் பல கதைகளை வாசித்து நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். முதன் முறையாக அவரது கவிதைகளை வாசிக்கின்றேன். பெரும்பாலான கவிதைகள் வாசகனோடு உரையாடுவதாக அமைந்திருந்தன.
சிறுகதைகள்/குறுங்கதைகள்
22. தீர்மானம்
- எழுத்தாளர் ரிஸ்வான் ராஜாவின் சிறுகதைகள். 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் சில கதைகளைக் குறித்து விரிவாக பேச வேண்டும் என விரும்புகின்றேன். முழுமையான ஒரு கட்டுரையுடன் வருகிறேன்.
23. ஆப்பிள் துப்பாக்கி பெட்ரோல் நிலையம்
- த. அரவிந்தனின் குறுங்கதைகள். 64 குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பு. சில கதைகளை இருமுறைக்கும் அதிகமாக வாசித்த பின்னரே புலப்பட்டது. ஏமாற்றாத குறுங்கதைகள் இவை. பலவிதமான குறுங்கதைகளை வாசித்த அனுபவத்தைக் கொடுத்தது.
கட்டுரைகள்
24. புனைநிலை உரைத்தல்
- மலேசிய எழுத்தாளர்கள் 4 பேரின் படைப்புலகம் பற்றிய விமர்சனக்கட்டுரை தொகுப்பு.
அடுத்து 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை (சில மீள்வாசிப்பு)
25. நாகம்மாளின் மனக்குறிப்புகள்
- மனோகரன் கிருஷ்ணன் சிறுகதைகள்
26. மா.சண்முகசிவா சிறுகதைகள்
- எழுத்தாளரும் மருத்துவருமான மா.சண்முகசிவாவின் சிறுகதைகள்
27. மண்புழுக்கள்
- சீ.முத்துசாமியின் நாவல்
இந்த மூன்று புத்தகங்கள் குறித்தும் விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.
ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை வாசித்த புத்தகங்கள் இவை. வாசிப்பில் எத்தனை புத்தகங்களை வாசிக்கின்றோம் என்பதை விட 'வாசிக்கிறோமா?' என்கிற கேள்விதான் முக்கியம் என நம்புகின்றவன் நான். தினம் ஒரு பக்கத்தை புரிந்து ரசித்து வாசித்தாலும் கூட நாம் வாசகர்கள்தான்.
இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியை முடித்து மூன்றாம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்ததாய் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் வாசிப்பின் ருசி என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.
உங்களுக்கு எப்போதும் என் அன்பு..
0 comments:
கருத்துரையிடுக