பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 06, 2025

- எழுதவே எழுதுகிறேன் -


இளம்கவி இளமாறனைச் சந்தித்தேன்.

வீட்டிற்கு வந்திருந்தார். கவிதைகள் எழுதுவதிலும் அது குறித்து பேசுவதிலும் ஆர்வம் உள்ள இளைஞர்களில் ஒருவர்.

தொடர்ந்து இங்கு நடக்கும் பல மரபு கவிதைகள் போட்டிகளுக்கு பங்கெடுத்து கொண்டிருப்பவர். அதோடு நவீன கவிதைகள் எழுதவும் முயற்சித்து வருகிறார்.

சில சமயங்களில் அவர் எழுதிப் பகிரும் கவிதைகள் ‘அடடே நல்லாருக்கே..’ எனவும் நம்மை சொல்ல வைத்துவிடுகிறது.

தொடர்ந்து எழுதுவதின் மூலமே அவர் அவருக்கான இடத்தை அடைவார் என நம்புகிறேன். இதுதான் இயல்பு. அதை அவர் தவறவிட்டால் 'ஒருகாலத்தில் நல்லா

எழுதுகிட்டு இருந்த பையன்...!' என்ற அடைமொழி அமைந்துவிடும்.

எனக்கு பிடித்த கவிஞர்களில் ஒருவரான கவிஞர் இந்திரனின் கவிதைகள் குறைத்து எழுதப்பட்ட ‘இந்திரஜாலம்’ என்னும் புத்தகத்தை அவருக்கு பரிசளித்தேன்.

அந்தப் புத்தகத்தின் வழி இந்தரனின் கவிதைகளை வாசிப்பதோடு அவற்றை புரிந்து கொள்ளும் பயிற்சியும் அவருக்கு கிடைக்கும். அதற்கு ஏற்றவாரே அந்தக் கட்டுரைகளை நா.வே.அருள் எழுதியிருக்கிறார்.

எழுதுவதில் ஆர்வம் இருப்பவர்களிடம் தம்முடைய படைப்புகளை வாசித்து தன்னைப் பற்றி பேசவைத்து தன்னுடனேயே இருக்க வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. (என் எழுத்துகளை வாசிப்பதும் அதைப்பற்றி பேசுவதும் அவரவர் விருப்பம்.) அப்படி செய்வது அந்த இளம் படைப்பாளிக்கு அந்தந்த நேர விளம்பரத்தையும் ஆர்வத்தையும் கொடுக்குமே தவிர; அதைத்தாண்டி அவர்களின் தனிப்பட்ட எழுத்திற்கு நீண்ட கால பயனை கொடுக்காது. கூட்டத்தில் இருந்தாலும் தனித்திருக்கும் வாய்ப்பு மிகச்சில படைப்பாளிகளுக்குத்தான் வாய்க்கின்றது. மற்றவர்களுக்கு இன்ன எழுத்தாளரின் நண்பர்/குழு, இந்த எழுத்தாளரின் வாசகர் என்கிற சிறு வட்டத்திலேயே சுருங்கி விடுகிறது.

தங்களை பெரிய வாசகச்சின்னமாக ஜொலிப்பவர்களின் பலர் ஒரே எழுத்தாளரின் வாசகராகவும் அவர்களுக்கான புகழ் மாலையை  தங்களின் நேரத்தால் தொடுக்கும் சேவகராகவும் இருந்துவிடுகிறார்கள். அதை குறைசொல்ல ஒன்றுமில்லைதான். ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் புகழ்பாடும் எழுத்தாளர் வாசிப்பதை இவர்களும் வாசிக்கிறார்களா என்று பார்த்தால் ‘ஹுஹும்’ அந்த எழுத்தாளரைத் தவிர மற்ற எதையும் வாசிப்பதுமில்லை தெரிந்து கொள்வதுமில்லை. அது பெரிய தவறில்லைதான். அதுவும் எதுவரை. பொதுவில் உங்கள் வாசிப்பை நீங்கள் கொண்டு வந்து வைக்கும்வரை. அவர்களும் தங்களை பின் தொடரும் இளம் எழுத்தாளர்களுக்கு; அவர்கள் வாசிக்க எதையும்  அறிமுகம் செய்வதில்லை. அதேபோல எதை வாசித்தால் அவர்கள் தன்னை விட்டு விலகிவிடுவார்கள் என்பதை அறிந்து அவர்களை அதனிடம் நெருங்குவதில்லை.

இங்கு சில இளம் எழுத்தாளர் தாங்கள் வாசிக்கும் எழுத்தாளர்களின் ‘பிழை திருத்துனர்களாகவே’ மாறிவிட்டார்கள். அந்த எழுத்தாளர் எழுதும் கதைகளை இவர்களுக்கு அனுப்பிவிட்டு “உங்கள் பார்வைக்கு மட்டும், பிழைகளோ குழப்பங்களோ இருந்தால் சொல்லவும். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்’ என்கிறார்கள். இதே செய்தியை (தாழ்மையான விண்ணப்பத்தை) ஒருவருக்கு மட்டுமல்ல பலருக்கும் அனுப்புகிறார்கள். பிழைகளில் இருந்து அவர் எழுதிய புனைவுகள் வரை இருக்கும் பல சிக்கல்களை பலபேர் சொல்லக்கேட்டு அதற்கான திருத்தங்களையும் அவர்களிடமே கேட்டு திருத்தி தங்கள் பிரசுரிக்க அனுப்புகிறார்கள். (அப்படி செறிவாக்கம் செய்வது படைப்பிற்கு நல்லதுதான் ஆனால் ஒரு படைப்பை செறிவாக்கம் செய்வதற்கும் ஒன்றுமில்லாததை செறிவாக்கம் செய்வதாகச் சொல்லி அடுத்தவர்களை அந்தப் புனைவை எழுத வைப்பது நல்லா என்ன?) அதுவே நாளை புத்தகமாக பிரசுரமாகும் போதும் அதனைத் திருத்திய செறிவாக்கம் செய்த யாரின் பெயருமே அந்தப் புத்தகத்தில் இருக்காது. ஏனேனில் அந்தப் புனைவு அந்த எழுத்தாளரின் நூறு சதவித திறமையாம்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். அதுதான் நான் சொல்ல வந்ததை முழுமையாக்கும்.

நண்பராக இருந்தாலும் சரி வாசகராக இருந்தாலும் சரி அல்லது முன்னால் நண்பராக வாசகராக இருந்தாலும் சரி, ஒரு சிலரால் மட்டுமே தாங்கள் வாசித்த படைப்பின் குறைநிறைகளை எந்தத் தடையுமின்றி எழுதவும் பகிரவும் முடிகிறது. அவர்களால் ஒரு படைப்பை அந்தப் படைப்பாளியிடம் இருந்து விலக்கி முழுக்கவும் அந்தப் படைப்பையொட்டி விவாதிக்க முடிகிறது.

அதனை ஒருபக்கம் விடுவோம், இன்றைய இளம் தலைமுறை எழுதுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனை அவரவர் தன் சுய இலாபத்திற்காய்ப் பயன்படுத்தியும் கொள்கிறார்கள். வாசிக்க ஆரம்பித்தாலே போதும் இதுபோன்ற சூழ்ச்சிகளில் இருந்து இவர்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

எழுத வேண்டும் என இவர்களிடம் வருபவர்கள், இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களாகவும், இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் வாங்கி கொடுப்பவர்களாகவும், கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தால் இலவசமாக நிகழ்ச்சிக்கான இடத்தை ஏற்பாடு செய்பவராகவும், வி.ஐ.பிகளை மரியாதையோடு மேடை ஏற்றி இறக்குபவர்களாகவும் இப்படி பல 'களாகவும்' ஆகிவிடுகிறார்களே தவிர ஒருபோதும் எழுத்தாளர்களாக ஆவதில்லை.

இதில் யாரை குறை சொல்ல?

வாசிக்காமலேயே எழுத வேண்டும் என களம் இறங்குவதில் இருந்துதானே இந்த இலக்கிய ஸ்கேம் தொடங்குகிறது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்