போலி புரட்சியால் பாட்டி பலி உடன் கொஞ்சூண்டு பட்டர்……
முகநூலில் மூன்றே நாளில் பலரால் பார்க்கப்பட்ட வீடியோ காட்சி. பலரால் பார்த்த
மட்டுமல்ல, பலரும் திட்டிய வீடியோ காட்சி அது எனலாம். பல புரட்சியாளர்களை சட்டென பெற்று
தந்த பெருமைமிகு வீடியோ அதுவென்றால் கொஞ்சம் நக்கலாக தெரியும். தெரிந்தாலும் அந்தில்
மறுப்பில்லை. முதலில் அந்த வீடியோ என்னவென்று பார்க்கலாம்.
வீடியோ காட்சி ;
வீட்டின் வரவேற்பறை. தரையில் ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறார். அருகில் இருக்கும்
நாற்காலிகளில் சில பதின்ம வயதினர் இருக்கிறார்கள். ஒரு பெண் அந்த பாட்டியை துன்புறுத்துகின்றார்.
எல்லோரும் சிரிக்கிறார்கள். ஆளுக்கு ஒன்று பேசுகிறார்கள். அந்த பாட்டிக்கும் அந்த பெண்ணுக்கும்
சண்டையாகிறது. கையில் இருக்கும் தட்டிலிருந்து எதையோ அந்த பாட்டி , பெண்ணின் மீது ஊற்றுகிறார்.
அப்பெண் கத்துகிறார் கூடவே சில, நாமெல்லோரும் கேட்டுப்பழகிய பேசிப்பழகிய கெட்ட வார்த்தை
சொல்லி திட்டுகிறார். வீடியோ காட்சி அங்குமிங்கும் அலசுகிறது. மீண்டும் வரவேற்பறையைக்கு
காட்சி வருகிறது. பாட்டியை அந்த பெண் போட்டு அடி அடியென அடிக்கிறார். அந்த பெண்ணின்
குட்டை பாவாடை கொஞ்சூண்டு கிழிந்துவிட்டது கவனிக்கத்தக்கது.
நன்றி kaigal kaarathu - FB |
மேற்சொன்னதுதான் அந்த வீடியோ, இதன் இரண்டாவது பகுதியிலும் இப்படிதான் பாட்டி
அடிவாங்குகின்றார்.
இதனை யாரோ முகநூலில் பகிர்ந்திருக்கிறார்கள். யாரோ என்ன யாரோ அந்த வரவேற்பறையில்
வீடியோ எடுத்தவரோ அல்லது அங்குள்ளவராகவோத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், யாருக்கோ
பகிர்ந்து அது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முகநூலிலும் பலரால் அந்த வீடியோ
தொடர்ந்து திட்டுகளுடன் பகிரப்பட்டது. அது என்னமோ தெரியல, இந்த தொடர் பகிர்வுக்கு ’வைரல்’
’வைரல்’-ன்னு சொல்லறாங்க. அதையுமா
இப்போ தமிழில் சேர்த்துட்டாங்க.
பகிர்தலோடு நிற்கவில்லை. வழக்கமாக அப்படியேதும் வீடியோ காட்சியோ அல்லது
பிரச்சனையான காணொளி காட்சியோ பகிரப்பட்டு உரியவர்களிடம் அனுப்பப்படும். ஆனால் இம்முறை
அப்படியாகவில்லை.
விஜயகாந்தைவிட கோவமாக கண்கள் சிவந்த நிலையில் பலரும் வீடியோ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த வீடியோவில் தோன்றியிருக்கும் புரட்சியாளர்களை பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்
என நினைக்கிறேன். ஒருவர் அவர் பேசியிருந்த வீடியோ காட்சியை எனக்கு அனுப்பி கருத்தும்
கேட்டார். அவர் அனுப்பாது இருந்திருந்தால் நான் பாட்டுக்கு என் வேலையை செய்துக்கொண்டு
இருந்திருப்பேன்.
அனுப்பிய வீடியோ காட்சியில் இருந்த புரட்சிமிகு வசனங்களில் சில;
“என்னால முடியலைங்க” ,”இப்படி பாட்டி அடிவாங்கறதை வீடியோ எடுக்கறியே நீயெல்லாம்
ஆம்பளையா” , “நான் இதை சும்மா விடமாட்டேங்க” ,”எனக்கு அந்த பாட்டியோட அட்ரஸ் வேணும்”
,”நாளைக்கே நான் போலிஸ்க்கு போறேன்”, “நீங்க யாரா இருந்தாலும் நீங்க உங்க வீட்டு பக்கத்துல
இருக்கற போலிஸ் ஸ்டேசனுக்கு போய் ரிப்போட் பண்ணுங்க”, ”எனக்கு இதை பாக்கவே முடியல,
பாட்டியை அடிக்கற இதுங்களுக்கு நல்ல சாவே வராது”, இத்யாதி இத்யாதி. மேற்கொண்டு அவர் பேசியிருந்ததை எழுத இயலவில்லை.
விரல்களின் புரட்சித்தீ எனது கணினியை காயப்படுத்திடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை.
நேற்று இன்னும் சில வீடியோக்கள் வந்தன.
காணொளி 1;
அந்த பாட்டி பேசுகிறார். அவரை சந்தித்து ஒருவர் நலம் விசாரிக்கிறார். பாட்டி
அந்த பிள்ளைகளுடன் விளையாடியதாக சொல்கிறார். எப்போதும் இப்படிதான் விளையாடுவாராம்.
பெற்ற பிள்ளைகளுடன் இல்லாமல் வேறொருவர் வீட்டில் இருக்கிறாராம். அந்த பிள்ளைகளை மன்னிக்கும்படி
கேட்டுக்கொண்டார். உடனிருப்பவர் மீண்டும் பிரச்சனை ஏதுமில்லையே என்கிறார். இல்லை என
பாட்டி கூற காணொளி முடிகிறது.
நன்றி MY MALAYSIA (FB) |
காணொளி 2;
பாட்டி தனியே தோன்றுகிறார். கைகளை கூப்பி, அந்த பிள்ளைகளுடன் இப்படிதான்
தான் விளையாடுவேன். அவர்கள் சின்ன பிள்ளைகள் . இதனை பெரிதாக ஆக்க வேண்டாம். அந்த வீடியோவை
அழித்திடுங்கள் . இவங்க வீட்டுலதான் நான் இப்போ இருக்கேன். அந்த பிள்ளைங்கள விட்டுடுங்க..
அந்த வீடியோவை எல்லோரும் அழிச்சிடுங்க. என மன்றாடுகிறார்.
செய்தி;
அந்த வீடியோவின் சம்பந்தப்பட்ட ஐவர் கைதாகியுள்ளார்கள் .( இது எந்த அளவு
உண்மை என இதனை எழுதும் இந்த தருணம் வரை எனக்கு தெரியவில்லை.)
இது மாதிரி சம்பவங்களை நான்கு வகையாக பிரிக்க நினைக்கிறேன்.
1.
ஒரு சம்பவம் நடக்கிறது.
பதிவாகிறது.
2.
அந்த சம்பவத்துக்கு
கருத்து செல்கிறார்கள். கோவப்படுகிறார்கள்.
3.
சம்பந்தப்பட்டவர்களை
தண்டிக்க துடிக்கிறார்கள். வீடியோ செய்கிறார்கள்.
4.
தண்டனை கிடைத்த பின்
மகிழ்ந்து எப்போதும் போல முகநூலில் கலாய்க்கிறார்கள்.
பாட்டியை அடித்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என துடித்த எவருக்கும்
, ”சரி வாங்க பாட்டி நான் பார்த்துக்கறேன்” என சொல்ல வழியில்லை. ஏனெனில் அது சிற்றின்பம்
போல அமைந்துவிடாது. நீண்ட நாள் தாக்குப்பிடிக்க வேண்டும். சும்மாவாச்சும் ஒரு வீடியோவில்
முகத்தை காட்டி பிரச்சனையை பேசி, புகார் செய்யுங்கள் , தண்டனை கொடுங்கள் என விஜயகாந்துகளாக
(இதுல விஜயகாந்தை கலாய்த்தல் வேற) தங்களை ஒரு புரட்சியாளர் போலவோ சமூக ஆர்வலர் போலவோ
முகமுடி அணிந்து இரண்டு நாளில் கழட்டி வைத்துவிடலாம்.
அந்த பாட்டி சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன். தான் பெற்ற பிள்ளைகள் வீட்டில்
நான் இப்போது இல்லை இவர்கள் வீட்டில்தான் இருக்கிறேன் என்கிறார். இப்போது அந்த வீட்டு பிள்ளைகள் ஐந்து
பேர் கைதாகியிருக்கிறார்கள் என்றால் அந்த பாட்டி இனி எங்கு போய் தங்குவார். அந்த பாட்டிக்காக
வீடியோவில் பொங்கியவர்களும் அந்த பிள்ளைகளை போலிஸ் பிடிக்க படாதபாடு பட்டவர்களும் தத்தம்
வீட்டு முகவரியை அந்த பாட்டிக்கு தருவதன் மூலம் வாரம் ஒருவர் வீட்டில் அந்த பாட்டி
தங்கிக்கொள்ளலாம்.
பாட்டிக்கு உதவுவதாக புரட்சி புடலங்காய்கள் எல்லாம் செய்து பாட்டிக்கு
தீராத நிம்மதியிழப்பை கொடுத்துவிட்டார்கள்.
இது போதாதென்று சில பட காமிடிகள் வேறு செய்திருக்கிறார்கள். அன்று ஒரு
பாட்டி வடை சுட்டாரம் இன்று இந்த பாட்டி பிளாந்த(பட்டர்) பூசிவிட்டாராம். அடப்பாவிங்களா,
இனி அந்த பாட்டிக்கு தூக்கம் வரும்னு நான் நினைக்கவில்லை.
”இப்ப தெரியுதா அந்த கிழவிய நான் ஏன் வீட்டுல சேர்க்கலைன்னு..” என்று யாரோ
தன் தரப்பு நியாயம் மாதிரி எதையோ ஒன்றை சொல்லி சிரித்துக் கொள்வதாக தெரிகிறது.
இனியாவது அடுத்தவர்க்கு தண்டனை கொடுப்பதை இரண்டாம் பட்சமாக வைத்து, பிரச்சனைக்கு
சரியான தீர்வு கிடைக்க வழி செய்வோம். அதன் பிறகு வீடியோவில் ஹீரோவாக தோன்றிக்கொள்ளலாம்.
0 comments:
கருத்துரையிடுக