பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 14, 2014

வி-10

 வி-10
 
 
 
 
இதனை தட்டச்சு செய்துக் கொண்டிருக்கும் சமயம்.
என்னுடைய கைவிரலில் இருந்து வழிந்துக் கோண்டிருக்கும் ரத்தத்தினை துடைக்க மனமில்லை.
அதற்கான அவசியமும் இனி இருப்பதாக தெரியவில்லை. கணினிக்கு ஏதும் ஆகிடுமோ என்ற பயமில்லாமல்
எழுத்துகளை தட்டுகிறேன். இவ்வளவு வேகமாக தட்டச்சு செய்ததில்லை. சொல்லவேண்டியது மிக
முக்கியம் அவசியமும் கூட.
 
    அருகில் ஆழ்ந்து உறங்கிகொண்டிருக்கிறாள் மனைவி.
பெட்டியில் இருந்து அவளை இனி எழுப்ப இயலாது. நானும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் பேச்சு
மூச்சற்று போகலாம். இரண்டு பெட்டிகளில் எனக்கான பெட்டியை நான் தான் பூர்த்தி செய்யவேண்டும்.
அதற்கு உங்களுக்கு சிலவற்றை சொல்லியாக வேண்டும். விபத்து எத்தகையானதாக இருந்தாலும்
அதன் பாதிப்பு சம்பத்தப்பட்டவருக்கு வார்த்தைகளில் சிக்காத ஒன்றாக இருந்துவிடுகிறது.
 
   அதனால்தான் என்னவோ விபத்துகள் குறித்த பிரக்ஞையின்றி
வாகனங்களில் செல்கிறார்கள். என்னால் பார்க்கவியலாத அளவுக்கு முகத்திலும் கழுத்திலும்
ரத்த ஒழுகளுடன் இருக்கிறாள் மனைவி. மிகவும் பிரகாசமான முகம் கொண்டிடுந்தவள் அவள். அவளில்
குரலின் இனிமை அத்தனை சுகமானது.
 
   எங்களின் காதல் கதைகள் முழுக்கவும் அவளது முக பிரகாசமாகவும்
, இனிமை குரலாகவும்தான் சூழ்ந்திருக்கிறது. கோவத்தில் கூட அவளின் குரல் ஒலி எனக்கு
காதலையே வளர்த்தது. வழக்கம் பொலவேதான் வீட்டில் சம்மதிக்க மறுத்து சண்டையிட்டு நாங்கள்
கைக்கோர்த்தோம்.
 
   எங்களின் இல்லற வாழ்க்கை தனிக்குடித்தனமாக இருந்தாலும்,
எப்போதும் வீட்டில் மகிழ்ச்சி, வீட்டு இருப்பை அழுத்தமாக்கிகொண்டே இருந்தது. தொலைக்காட்சி
இல்லாததால் எங்களில் இருவரின் முகங்களே வீடு முழுக்க நிறைந்திருந்தன. வானொலி இல்லாததால்
எங்களின் குரல் மட்டுமே வீட்டில் மூளை முடுக்கலில் எல்லாம் தங்கியிருந்தன.
 
   இரவுகளில் நாங்கள் எங்களுக்குள் கிச்சி கிச்சி
மூட்டிக்கொண்டு வித்தியாசமாக சிரித்து ஒருவரை ஒருவர் பயம்காட்டுவோம். இருவரில் யார்
முதலில் பயப்படுகிறார்கள் என்பதே போட்டி. இருவரில் யார் முதலில் பயந்தாலும் இருவருக்கும்தான்
குதூகலாக அன்றைய பொழுது விடியும். இப்படி நாங்கள் ஒருவரை ஒருவர் பயமூட்டி சிரித்து
கொண்டாலும் எங்களை பயமூட்டும் ஒன்றும் அவ்வபோது வீட்டிற்கு வந்து போகும். சிலந்தி.
 
    சிலந்திகளுக்கு
எங்கள் மேல் என்ன கோவமென்று தெரியாது. பல முறை எங்களை கடிக்க வந்திருக்கின்றன. பல வடிவங்களில்
வந்திருக்கின்றன. சிலந்திகளுக்கு பயந்தே வீட்டில் அங்குமிங்கும் மருந்துகளை வைத்திருக்கிறோம்.
எங்களின் பாக்கெட்டிலும் சிலத்திக் கொல்லி மருந்து எப்போதும் இருக்கும். கரப்பான் பூச்சிகளால்
எங்களுக்கு ஒரு போதும் தொல்லை இருந்ததில்லை. செத்த சிலந்திகளை தின்பது இந்த கரப்பான்
பூச்சிகள்தான். என் மனைவி சொல்வதை கரப்பான் பூச்சி கெட்கிறதோ என்று கூட எனக்கு சந்தேகம்
ஏற்படும். அது அவ்வளவு பெரிய அதிசயம் இல்லாததால் அதுபற்றி இதுவரை கேட்டதில்லை. கேட்டிருக்கலாம்.
 
 வெலைக்கு சென்ற பின்னும் நாங்கள் குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு
ஒரு முறையாவது குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்வோம். பேசிக்கொள்வோம். இன்னும் சொல்லப்போனால்,
அலுவலகத்தில் இருக்கும் அழகானவர்கள் குறித்தும் சிலாகித்துக் கொள்வோம்.
 
    பெண்களின் குறித்து நான் பேசும் ஒவ்வொரு முறையும்
ஆண்களைக் குறித்து அவள் பேசுவாள். நிஜத்தில் நாங்கள் இருவருமே பொய் சொல்கிறோம் என்பது
எங்களுக்கு தெரியும். இருந்தும் அப்படியாக ஒரு விளையாட்டும் எங்களிடம் உண்டு. ஏனெனில்
அலுவலகத்தில் சகஜத்தில் நாங்கள் யாருடனும் பழுகுவதில்லை. மூன்றாம் தரப்பினர் யாரும்
எங்களுக்கு ஊடலை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்புவதில்லை. அலுவலகம் என்பது வேலை செய்யவே.
அதற்கு மட்டுமே அங்கு செல்வோம். இருவருக்கும் இதில் ஒரே சிந்தனை இருப்பது இன்னும் மகிழ்ச்சிதான்.
இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். ஒன்றை தவிர.
 
    எல்லாம் சரியாக இருந்தால் அதில் என்னவிருக்கிறது
சுவாரஸ்யம் என்று எவன் சொன்னானோ தெரியவில்லை. எங்களில் இருந்த ஒரே முரன் அந்த ஒன்றுதான்.
இந்த விபத்துக்கும் அதுதான் காரணமாக அமைந்து விட்டிடுந்தது.
 
   இரவு. எத்தனை நட்ச்சத்திரங்களை காட்டிக்கொடுக்கிறது.
எத்தனை அழகை அடக்கி வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியாது. ஏனோ எனக்கு அது
தெரிந்திருக்கிறது.
 
   இருள் மட்டும்தானே இவ்வுலகில் நிரந்தரமான ஒன்று.
வந்து போகும் சூரியனில் ஒளி குறித்தெல்லாம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலையில்
வருகிறது மாலையில் மறைகிறது. அவ்வளவுதான். என்னமோ வெளிச்சம் தருகிறது. உயிர்கள் வாழ
சூரிய வெளிச்சம் தருகிறது என்பதெல்லாம் விஞ்ஞானிகளின் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கவேண்டும்.
அதைவிடுங்கள் நாம் பேச வேண்டியது இரவை குறித்து, இரவின் அழகை அழிக்கும் சூரிய ஒளியைக்
குறித்தல்ல.
 
   இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதுதுதான் முதன்
முதலாக எனக்கும் எனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு உருவானது. மறுநாள் நண்பரின் திருமணத்திற்கு
செல்லவேண்டும். இரவில் பயணிக்கலாம் என்று இரவை குறித்து பேச்செடுத்த சமயம்தான் எனக்கே
அவளுக்கு இரவின் மீது இருந்த ஏதோ பயம் பிடிபட்டது.
 
   பகலில் வெயிலில் வெறுப்பு இருந்தாலும் காரணம்  சொல்லலாம். 
இதத்தை கூட்டும் இரவில் ஏற்பட்ட வெறுப்பின் காரணம் அவளுக்கு சொல்ல தெரியவில்லை.
அதனை தொடர்ந்து ஏதோ இருக்கிறது என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. இவள் எதையாவது மறைக்கிறாளோ
என்று என் ஆள்மனதில் ஒரு குரல் கேட்டது.
 
  சட்டென திருமணத்திற்கு முந்திய எந்த நாளிலும் நாங்கள்
இரவுகளில் சந்தித்ததில்லை என்பது பிடிபட்டது. ஏன் இதுவரை எனக்கு அது குறித்து தெரிந்திருக்கவில்லை
எனற குழப்பம் என்னை கோவப்படுத்தியது. இன்னமும் ஆழமாக பழைய நினைவுகளில் மூழ்க முயன்றேன்
. நனைந்தேனே தவிர நினைவுக்கு எதுவும் வரவில்லை.
 
   அவளுக்கு பேய்கள் என்றால் பயமாக இருக்கலாம் என்று
என்னை நானே சமாதானம் செய்துக் கொண்டேன். எனக்கு நானே பேசிக்கொண்டேன். ஆனால் அது என்
குரல் அல்ல என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் அது சொல்வதை நான் கேட்டேன். அந்த
குரல் வழக்கமான எனது ஆழ்மனதில் இருந்துதான் வந்தது.
 
   என் நினைவுகளை ஏமாற்றி ஏதோ ஒன்று எனக்குள் புகுந்திருப்பதை
உணர்ந்த நொடி. வேர்வை என் கால் வேர் வாரை மொட்டுவிட தொடங்கியது. வெளியேரு என சொல்வதாய்
இருந்தாலும் யார் அது என தெரிய வேண்டுமே. ஊர் பேர் தெரியாதவரை எப்படி விரட்டுவது எப்படி
போரிடுவது. இதென்ன பேஸ்புக்கா ஊர் பேர் தெரியாதவர்களோடு சும்மாவேணும் சண்டையிட்டு கூத்தடிப்பதற்கு.
 
   இத்தனை குழப்பத்திற்கு மத்தியிலும் என்னை பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கும் மனைவிக்கு என்னமோ தெரிந்திருக்கிறது. அவளின் சிரிப்புக்கு
நானும் கூட சிரித்தேன். பெரிய வித்தியாசம் இல்லாத சிரிப்பு அது. ஒரே மாதிரியான ஒலி,
ஒரே மாதிரியான பற்கள், ஒரே மாதிரியான தொனி.
 
   பல கேள்விகளுடன்தான் பயணிக்கலானோம். என்னுடைய கணிப்புப்படி
மதியம் கிளம்பி இரவு வரை நெருங்கிக் கொண்டிருந்தது பயணம்.
 
   சாலை கொஞ்சம் கொஞ்சமாக இருளால் சூழத்தொடங்கியது.
மனைவியின் கண்களில் இருந்த வசீகரம் பீதியாக தன்னை மாற்றியிருந்தது.
 
    நண்பனின் வீட்டுக்கு செல்ல வேண்டிய பயணத்தில்தான்
விபத்தும் அதையடுத்து விபரீதமும் ஏற்பட்டது. மனைவியின் பேச்சில் இருந்திருந்த காரணத்தையும்
பயத்தையும் புரிந்துக் கொள்ள இத்தனை தாமதமாகியிருக்கவேண்டாம்.    
 
   இவ்விபத்துக்கு பிறரை காரணம் காட்டுவதைவிட நாங்களேதான்
முதன்மையான காரணமாக இருக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
 
   சாலையில் உடன் வந்துக் கொண்டிருந்த இதர வாகனங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. இப்போது இருள் சூழ ஒற்றைவழி நெடுஞ்சாலையில் நாங்கள் மட்டுமே
பயணித்துக் கொண்டிருந்தோம்.
 
   இந்த வழியை பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும்  வழியில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாததை
நண்பன் முன்னமே சொல்லியிருந்தான். ஜீ.பி.எஸ் போன்ற பாதை காட்டி துணையில்லாமல் போய்க்கொண்டிருந்தேன்.
 
   தூரப்பயணம் வருகிறதென்றால் காரை ஒரு முறை பரிசோதனை
செய்துக் கொள்வது எனது பழக்கம். இந்த முறை என்னமோ கோளாரால் கார் வேகமெடுத்தால் குதித்து
குதித்து செல்வது போல தோன்றியது. குதிக்கிறதா என கவனமெடுத்து கூர்ந்தால் அப்படியொன்றும்
இல்லை.  இல்லையென்பதை உறுதி செய்த்த பிறகு கார்
குதித்த குதியில் என் தலை மேலே முட்டிவிட்டு வந்தது. மனைவியின் கண்கள் கொஞ்சமும் அசராமல்
இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
 
    அவளின் கண்கள் தூரத்தில் எதையோ கண்டுவிட்டதை அவளின்
செயல்களில் இருந்து தெரிந்துக் கொண்டேன். உண்மையில் எனக்கு முன்னதாகவே அவள் கவனித்திருப்பது
குறித்த கேள்விகள் இல்லை.
 
   குழந்தையோடு ஒருத்தி நின்றுக் கொண்டிருந்தாள்.
 
   பல கதைகளில் இப்படி பேய்கள்தான் பெண்களாகவும் குழந்தையாகவும்
வந்து நிற்பதாக படித்தும் கேட்டும் இருக்கிறோம். இப்படியான பேய்கள் எல்லாம் இப்போதும்
இருக்குமோ என்ற பயத்தில்  எனக்கும் பீதியானது.
மனைவியும் நானும் ஒருவரை ஒரு பார்த்துக்கொண்டோம். கார் நேராக அந்த பெண்ணுக்கு அருகிள்
நின்றது.
 
   கார் இப்போது வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.
 
நானும் மனைவியும்
பேச்சு மூச்சற்று முன் இரு இருக்கையில் இருந்தோம். பின்னால் கைக்குழந்தையுடன் அந்த
பெண். அவள் கார் கண்ணாடியையே வெறுத்துக் கொண்டிருந்தாள். அவள் குழந்தையிடமிருந்து எந்த
அசைவும் இன்னமும் வரவில்லை. அது குழந்தைதானா. கையில் கொண்டிருக்கும் அந்த பெண்ணும்
பெண்தானா.
 
   சாலையின் இருள்கள் காரினை நிறைத்துக்கொண்டிருந்தது.
காருக்குள் சூன்யம் சூழ்ந்துவிட்டதாய்ப்பட்டது. சுழ்ச்சியில் சுழலில் சுற்றிகொண்டதாக
படபடத்தது.
 
    காரின் சத்தம் மட்டுமே இப்போது காதுகளை அடைத்தது.
அடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விளகிக்கொண்டிருக்கிறது. அடையாளம் காட்டாத இரைச்சலில் நாங்கள்
ஆட்பட்டோம்.
 
   குழந்தையின் அழுகுரல் எங்களை சுய பிரக்ஞைக்கு கொண்டுவந்தது.
குழந்தை அவளின் கைகளில் அசைந்தது. குழந்தைகளுக்கே உரிய அசைவாக இருக்கவில்லை. நெழிந்தது.
அந்த பெண் இன்னமும் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியையேதான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
 
   அடுத்ததாய் நடந்துவிட்டதை நாங்கள் கனவிலும் கண்டிருக்கவில்லை.
அந்த பெண்ணின் கண்களில் இருந்து வந்த ரத்தம் வளைந்து மூக்கினுள் போனது. அவளின் பற்கள்
தெரிய  எங்களை நோக்கி வாயை திறந்தாள். தொண்டைக்குழி
பாதாளம் போல நீண்டிருந்தது. ஒட்டடைகள் காற்றில் அசைய எக்கச்சகமான சிலந்திகள்  அங்குமிங்கும் ஓடின. அவளின் கண்களின் தெரிந்த பசி
எங்களின் வயிற்றில் அமிலத்தை ஊற்றியதாய் செய்தது. கையிலிருந்த குழந்தையை பாதள வாய்க்கும்
கொஞ்சம் கொஞ்சமாக நுழைத்தாள்.
 
   அடுத்ததாக அவளது பாதாள வாய்க்கும் நாங்கள் இருவரும்தான்
செல்லப்போவது உறுதியானது. விபத்து அப்போதுதான் நடந்தது.
 
  காரின் முன்னே கவனிக்காமல் நான் என் மனைவியை பார்க்க
அவளும் சொல்லி வைத்தார் போல என்னை பார்த்தாள். இருவரும் ஒரே மாதிரி சிரித்தோம். ஒரே
மாதிரியான ஒலி வந்தது.
 
   இருவரும் சத்தமாக சிரிக்கத்தொடங்கினோம். சட்டென
இருவரும் பின்னால் பாய்ந்தோம். எப்படித்தான் இருவரின் உடலும் பின்னால் போனதோ தெரியவில்லை.
பயங்கர அலறல் சத்தம்.
 
  கார் இன்னமும் நேராக சென்றுக் கொண்டிருந்தது. முன்
இரு இருக்கைகளும் காலியாக இருக்க நானும் மனைவியும் பின்னால் அந்த பெண்ணை கடித்து தின்றுக்
கொண்டிருந்தோம். கார் முழுக்க சிலந்திகள் கதறிக் கொண்டு ஓடின. வழக்கம் போல கரப்பான்
பூச்சிகள் வழக்கத்திற்கு மாறாக ஓடிக்கொண்டிருக்கும் சிலந்திகளை பிடித்து தின்றுக்கொண்டிருக்கின்றன.
 
    விடியப்போகிறது நானும் பெட்டிக்குள் செல்லவேண்டும்.
இரவு வந்ததும் வாருங்கள் இன்னும் சொல்லவேண்டியவை உள்ளன.
 
    பெட்டிக்குள்ளே போனேன். என்மேல் கரப்பான் பூச்சிகள்
போர்வைபோல போர்த்திக் கொண்டிருந்தன. பக்கத்து பெட்டியில் உள்ளது போலவே என் முகத்தையும்
விட்டுவிட்டு உடல் முழுவதும் கரப்பான்கள் நிறைந்து வழிந்தன. சட்டென மூடி தானாக வந்து
மூடியது. சூரியன் வருவதற்கு முன்பாக வீடு இடிந்து மண்ணுக்குள் போனது.
 
    இரவில் வீடு மீண்டும் முளைக்கும். பசிக்கும்.  நாங்கள் வருவோம். .
 
   
 -தயாஜி-
நன்றி மலைகள்.காம்
2014

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்