பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 25, 2011

நானும் கடவுள்



மனிதனை சிலையாக்குவது சாத்தியமா..? விஞ்ஞானப்படி விளக்கம் கிடைக்குமா..? ஒருவேளை........... உடம்பில் யாரும் வர்மத்தை பயன்படுத்தியிருப்பார்களோ..? நரம்பு ஏதும் கோளாறா..? மருத்துவர்கள் முதல் வியாதிக்காரார்கள்வரை இதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிறகென்ன... மனிதனை சிலைபோல நின்றவாக்கிலேயே படுக்க வைத்திருக்கின்றார்கள். அந்த மனிதன் யார் என்பதைவிட முக்கியமான ஒன்றை உங்களிடம் சொல்கின்றேன். நான் சொல்லப்போவது மூட நம்பிக்கையோ மாய மந்திரமோ இல்லை என்பதை உங்களிடம் முதலில் உறுதி செய்துக் கொள்கின்றேன்.



இதையெல்லாம் சொல்வதற்கு நான் யார்..? நான் கடவுள்..! நம்பிக்கையில்லையா..? எனக்கும்கூட நம்பிக்கை வந்திடாது இப்படி யார் சொல்லியிருந்தாலும். ஆனால் இப்போது நான் சொல்வது என் சொந்த அனுபவத்தில் இருந்து. கடவுளின் வேலை என்ன என்பதனை என்றைக்காவது நீங்கள் யோசித்தது உண்டா..? கடவுளின் தேவை என்ன..? கடவுளுக்கானத் தேவைதான் என்ன..? உங்களிடம் பதில் இருக்கின்றதா..? பரிட்சையில் பாஸாக்குவதும், கடன் தொல்லையிலிருந்து மீட்பதுதான் கடவுளுக்கு நீங்கள் தரும் வேலையாக இருக்குமோ..?
இத்தனைக் கேள்விகள் இந்த கதையில் எதற்கு என யோசிக்காதீர்கள்; தெரியாமல் எதையும் பேச நான் மனிதன் இல்லை. முன்பே சொன்னது போல் நான் கடவுள். நீங்கள் என்னை நம்பவில்லை என்பது, உங்களின் உயர்த்தியப் புருவம் மூலமும் நையாண்டி சிரிப்பின் மூலமும் தெரிகின்றது.



கடவுளாவதெல்லாம் ரொம்ப சுலபமான ஒன்றுதான். வழிமுறையும் இருக்கின்றது. வழிநடத்ததான் யாருமில்லை. சில நித்தியானத்தர்களுக்கும் எனக்கும் சம்பதமில்லை; என் வீடியோ வரும்வரை.!



நம்ம கதைக்கு வருவோம், மருத்துவமனையில் சிலை போல உறைந்து நிற்கும் மனிதனைப் பற்றி உங்களிடம் சொன்னால்தான் ‘நீங்களும்’ என்னைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்வீர்கள். நீங்களும் என நான் சொல்வதற்கு காரணம்; என்னை முதல் முதலாக கடவுள் என நான் உணர்ந்துவிட்டேன். உண்மையை சொல்லப்போனால் அந்த மனிதன் சிலையாவதற்கு இந்த கடவுளாகிய நான்தான் காரணம்.



உங்களுக்கு அவசர வேலை எதுவும் இப்போது இல்லையென்றால்; நடந்ததை சொல்கின்றேன் கேளுங்கள். என் அறையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையைச் சார்ந்தது. பள்ளி நாள்களின் படித்த புத்தகங்களைவிட ; பள்ளி வாழ்க்கைக்கு பிறகு நான் படித்த புத்தகங்கள்தான் அதிகம். தனியான அறை ஒன்றில் தனியாக வாழ்வதால் துணையாக இந்த புத்தகங்கள் வந்து சேர்ந்துவிட்டன. அப்படி வந்த ஒரு புத்தகம்தான் என்னை கடவுளாக்கியது.



வெறுமனே, கடைக்கு போனேன். புத்தகம் வாங்கினேன். வீட்டிற்கு திரும்பினேன், என சொல்வது முறையல்ல. அந்த புத்தகம் என்னிடம் எப்படி சேர்ந்தது என குழப்பம் எனக்கும் இருக்கின்றது.



மாலதி.



என் அத்தை மகள். ஒரு முறை அவளோடு பேசிக்கொண்டிருந்த சமயம் எங்கள் பேச்சு; புத்தகங்கள் பக்கம் திரும்பியது. அத்தை குடும்பத்தில் இவள் ஒருத்திதான் என்னோடு பேசுவதற்கு கொஞ்சமேனும் நேரம் ஒதுக்குவாள். நான் படித்த புத்தகங்கள் பற்றி கேட்டறிந்து; அவளே படித்ததுபோல் சக தோழி முதல் ஆசிரியர்கள் வரை பேசுவாள். விடுங்கள். அத்தை மகள். மன்னிச்சிடுவோம்..!



மாலதியின் தோழி வீட்டருகிள்; பழைய புத்தகக்கடை இருக்கின்றதாம். வெறும் புத்தகக்கடை என்றாலே எனக்கு பொருக்காது.. மாலதி சொன்னது பழைய புத்தகங்களை வாங்கி விற்கும் புத்தகக்கடையாம். நமது பழைய புத்தகங்களை அந்த கடையில் விற்கலாம். அவர்கள் அதனை சில மாற்றங்கள் செய்து குறைந்த விலைக்கு விற்பார்கள்.இந்த மாதிரி புத்தகக்கடைக்கு நான் சென்றதில்லை; ஆனால் கேள்விப்பட்டுள்ளேன். பல அரிய புத்தகளை அங்கு நாம் வாங்கலாம். ஒருவருக்கு தேவையில்லாமல் போவது மற்றொருவரின் தெடலுக்கு காரணமாக இருக்கலாம். இது வாழ்க்கைத் துணைக்கு மட்டுமல்ல; வழித் துணையாக வரும் புத்தகங்களுக்கு, பொருந்தும்.



விடுமுறை நாள் ஒன்றில் மாலதியும் நானும் அந்த புத்தகக்கடைக்குச் சென்றோம். கடையில் பழைய புத்தகங்கள் என்றாலும் உள்ளே எல்லாம் புதிதாக இருந்தது. சீனரின் கடை அது. குட்டைப் பாவாடையுடன் இருந்த அந்த வெள்ளைத்தோல்காரி ஏனோ தெரியவில்லை என்னையும் மாலதியையும் இன்முகத்துடன் வரவேற்றாள். கையில் எதுவும் வாங்காமால் போனால் இதே இன்முகம் இருக்குமா...?



வருசையாய் அடுக்கப்பட்டிருந்தன புத்தகங்கள். இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என புத்தகங்கள் என்னைப் பார்த்துக் கேட்பது போலவே இருந்தன. இது மாலதிக்கு விளங்கியிருக்க நியாயமில்லை. ஆங்கில, மலாய், சீன மொழிகள் என குறிப்பிட்டு ஓவ்வொரு அலமாரியிலும் புத்தகங்கள் அடுக்கப்படிருந்தன. கடையை இரண்டு முறை சுற்றி வந்தும் தமிழ் புத்தகம் என் கண்ணுக்குத் தெரியவில்லை. பலதரபட்ட பழைய , புதிய (பார்ப்பதற்கு புதிய) புத்தகங்கள் இருந்தன. மாத வார இதழ் தொடங்கி; பள்ளி பாட புத்தகங்கள் வரை தகுந்த இட்த்தில் இருந்தன. தேடுவதற்கு இலகுவான வழிதான் இது.



முன்றாவது சுற்றுக்கு கிளம்பத் தயாராகின்றேன்; மாலதி அழைத்து,
“பசிக்குது மாமா... சாப்பிட போலாமா...மணி ஆகுது...” என்றாள்.
“ஆமா... அரைமணி நேரத்துக்கு மேல ஆச்சி... வா போகலாம்...இங்க தமிழ் புக்கே இல்லை...”என்றேன்.



நான் நின்றுக் கொண்டிருந்த அலமாரியிலிருந்து வெளியேறத் தொடங்கி இரண்டாவது அடியை வைக்கவும் என் பின்னால் புத்தகம் விழவும் சரியாக இருந்தது. தமிழ் புத்தகம். இங்குதான் இவ்வளவு நேரம் தேடினேன். அப்போது கிடைக்காத புத்தகம் இப்போது எப்படி விழுந்த்து..? இந்த கேள்வியை அப்போது நான் யோசிக்கவில்லை.. ஒருவேளை யோசித்திருந்தால் நான் கடவுளாகியிருக்க முடியாதோ என்னமோ..?



விழுந்த புத்தகத்தை எடுத்தேன். ரொம்ப பழைய புத்தகம்தான்.மஞ்சள் நிறம். கடைசி சில பக்கங்கள் கிழிந்திருப்பது தெரிந்தது. முதல் பக்கத்தை திறந்தேன். ‘வினோத ஜாலக்கண்ணாடி’ என எழுதியிருந்தது. கடைக்கு வந்து வெறும் கையோடு வெளியேற யோசித்திருந்தேன். இந்த புத்தகத்தை வாங்கிச் செல்லலாம். மாலதி மீண்டும் அழைப்பதற்கு முன்னமே நான் அவளிடம் சென்றுவிட்டேன்.



“என்ன மாமா , தமிழ் புத்தகமே காணோம்... ஐ.. கைல என்ன மாமா...! எங்கிருந்து எடுத்திங்க..?”
“மாலதி.. நான்தான் எப்பவும் சொல்லுவேன்ல.. சில புத்தகங்களை நாம் தேடுவோம் ;சில புத்தகங்கள் நம்மை தேர்ந்தெடுக்கும்.. அப்படித்தான் இந்த புத்தகமும்... உனக்கு கிடைக்கல எனக்கு கிடைச்சிருக்கு.... சரி வா; பசிக்குதுன்னு சொன்ன...பணம் கட்டிட்டு சாப்டு வீட்டிக்கு போகலாம்”
சாப்பாட்டைப் பற்றிப் பேசியதும், மாலதி முகம் மலர்ந்தது.



புத்தகத்தை பணம் செலுத்தும் இடத்தில் கொடுத்தேன்.
“இந்த புத்தகத்தை எங்கிருந்து எடுத்திங்க..?”
“அதோ அந்த அலமாரியில் இருந்துதான் எடுத்தேன் ‘ஆண்டி’ விலை எவ்வளவு..? புத்தகத்தில் ஒன்னும் போடக் காணும்”
“இது இங்குள்ள புத்தகமில்லை.. நாங்க தமிழ் புத்தகத்தை இதுவரைக்கு வாங்கினது இல்லை.. இந்த கடைக்கு நீங்க முதல் தமிழ்காரங்க வரிங்க..”
“இல்லை ஆண்டி, இங்கிருந்துதான் எடுத்தேன்....!!!! ”
இந்த உரையாடல் எனக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தது. அந்த கடைக்கார சீனப் பெண் யாருக்கோ தொலைபேசியில் அழைத்து சீன மொழியில் பேசி அசட்டு சிரிப்பு சிரித்தாள்.பின் என்னைடம் இது இங்குள்ள புத்தகம்தான்; தான் கடைக்கு புதுசு அதான் தெரியவில்லை; விலை 10ரிங்கிட் என்றாள். அவள் தொலைபேசியில் சிரிக்கும் போதே யூகித்தேன் இவள் கடைக்கு புதியவள் என்ற பதிலை.!.



பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கினேன்.கடையில் சாப்பிடும் போது மாலதியிடம் நடந்ததைப் பற்றி சொன்னேன். நான் ஏமாந்து விட்டதாகச் சொன்னாள். உண்மையில் நான் கடவுளாக அது கட்டணம் என்று எனக்கே அப்போது தெரியாது,
.................................................................................................................................



அன்று இரவு; வழக்கம் போல் படுக்கும் முன் ஒவ்வொரு புத்தகங்களாக எடுத்துப் பார்த்து வந்தேன். நினைவு மதியத்தில் வாங்கிய புத்தகத்தில் திரும்பியது. ஆனால் வைத்த இடம் நினைவில் இல்லாமல் போனது. இதுவரைக்கு இப்படி நடந்ததில்லை. எதை மறந்தாலும் புத்தகம் வைத்த இடத்தை மறக்கமாட்டேன். மறுமடியும் தேடிக் கிடைக்காத்தால்; மாலதியிடம் விசாரிக்க கதவு பக்கம் சென்றேன். ஏதோ சத்தம். அட ஆமாம் அந்த புத்தகம் கீழே விழுந்து கிடக்கிறது. அங்குதான் நான் அமர்ந்தும் நடந்தும் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். எங்கிருந்து விழுந்திருக்கும். முகம் வியர்க்க ஆரம்பித்தது.



எனது கண்ணாடி அலமாரி மேஜையில் இருக்கும் முருகன் படத்தை பார்த்தேன். அங்கிருக்கும் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டேன். புத்தகத்தை எடுத்தேன். கட்டிலில் அமர்ந்தேன். முதல் பக்கத்தை திறந்தேன்;ஒன்றுமில்லை. அடுத்த பக்கம்;ஒன்றுமில்லை;முன்றாம் பக்கம்; ஒன்றுமில்லை.முன்பு நான் திறக்கும் போது இரண்டாவது பக்கத்தில் அதன் தலைப்பு இருந்தது. இப்போது இல்லை.



என்னை அறியாமல் ஒவ்வொரு பக்கமாய் திருப்பிக் கொண்டே இருந்தேன். பத்தி பத்தியாக எழுதப்படிருந்தது. சிவப்பு மையால் யாரோ அதில் நட்சத்திரம் வரைந்து எதையோ எழுதியிருந்தார்கள். ஒரு பக்கத்திற்கு பிறகு என்னால் அடுத்த பக்கத்தைத் திறக்க முடியவில்லை. அந்த தலைப்பின் வசிகரமா இல்லை என் இயலாமையா தெரியவில்லை!



அந்த வசிகர தலைப்பு இதுதான் ‘...கணத்தை நிறுத்தி கடவுளாகு...’ அதன் அருகில் ; நான் கடவுள்; நான் கடவுள்; என 29 தடவை எழுதப்பட்டிருந்தது. ஆர்வமாய் படித்தேன். புரியாத வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் போலதான் தெரிந்தது. புரியவில்லை. அதை 108 முறை சொல்லவும் என இருந்தது. நானும் சொன்னேன்...... 108 தடவைக்கு மேலாகச் சொன்னேன். தலையில் கிரிடமும் வரவில்லை...என்னைச் சுற்றி புகை மூட்டமும் எழவில்லை. ஆனால் புத்தகத்தில் நான் கடவுள் என எழுதப்பட்டிருந்த எழுத்துகள் ஒவ்வொன்றாக மறைந்தன. உண்மை; ஒவ்வொரு எழுத்தாக பின்னால் இருந்து மறைந்துக் கொண்டே வந்தது. கடைசி எழுத்து மறைந்த நேரம் சட்டென விளக்கெல்லாம் அணைந்துவிட்டது. சம்பந்தமில்லாமல் புத்தகத்திலிருந்து விசித்திர ஒளி ஒன்று வெளியெறியது.



எந்தப் புரிதலுமின்றி சுவரையேப் பார்த்துக் கொண்டிருந்த என்னை ;மாலதிதான் தெளியவைத்தாள். அத்தை அழைப்பதாகச் சொன்னவள் மாடியிலிருந்து வேகமாக இறங்கி ஓடினாள். கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பார்த்தேன். அதில் முன்பு கையெழுத்தால் எழுதப்பட்டிருந்த சிவப்பு நிற எழுத்துகள் இப்போது இல்லை.
எழுத்துகள் எங்கே... அந்த ஒளி எங்கிருந்தது... மாலதி என்னை குலுக்கும்வரை நான் என்ன ஆனேன்....



கார் சத்தம் கேட்கவும் கீழே இறங்கி அத்தையிடம் விசாரித்தேன். மாலதி உட்பட அவளின் தங்கை தம்பிகள் இருவரும் மாமாவுடன் வெளியில் சென்றுள்ளார்களாம்; அத்தை மட்டும் வழக்கமான தொடர் நாடகத்தில் மூழ்கியிருந்தார். ஒரு வழியாக தொடர் நாடகம் முடிந்தது. என் குழப்பம் மட்டும் தொடர்ந்தவண்ணம் இருந்தது.



மீண்டும்;
எழுத்துகள் எங்கே... அந்த ஒளி எங்கிருந்தது... மாலதி என்னை குலுக்கும்வரை நான் என்ன ஆனேன்....அந்த புத்தகத்தில் உள்ளதென்ன மாய வார்த்தைகளா...?

“என்ன மணி, ஏதோ யோசனையில் இருக்க போலிருக்கு.... பாரு உனக்கும் நாடகம் மேல ஆர்வம் வந்திருச்சி.... ”
“அத்தை; அப்படியில்லை.... இந்த நாடகத்தில் அப்படி என்ன இருக்குன்னு.... வெளிய கூட போகாம பார்த்துகிட்டு இருக்கிங்கன்னு யோசிச்சேன்...”
“அதுவா... அந்த கொலைகாரன் யாருன்னு இன்னிக்கு காட்டுவாங்கன்னு காத்திருந்தேன்; பாரு இன்னிக்கும் தொடரும் போட்டுடாங்க...”
இன்று மட்டுமில்லை இதோடு எட்டாவது வாரமாக அத்தை காத்திருக்கின்றார். அந்த கொலைகாரனைத் தெரிந்துக்கொள்ளவதற்கு. நாடக இயக்குனருக்கே இன்னும் தெரியவில்லை... இவர்களுக்கு மட்டும் எப்படி தெரியும். அத்தையுடன் எனது பேச்சு தொடர்ந்தது. வழக்கத்திற்கு மாறாக அன்று நானும் அத்தையும் அதிகமாக கைகளை ஆட்டி பேசிக்கொண்டிருந்தோம். எப்படி எங்கள் பேச்சு விரல் சொடுக்குதல் வரை வந்தன்னுத் தெரியலை....
“அத்தை இதெல்லாம் விரல் சொடுக்கறதுக்குள்ள செய்திடலாம்...”
“முதலாவதா உனக்கு விரல் சொடுக்கத்தெரியுமா.... இதோ விரல் சொடுக்கினா இந்த மாதிரி சத்தம் வரனும்.... எங்க செய் பார்க்கலாம்....”



உண்மையில் அந்த அளவுக்கு என் விரல் சொடுக்களில் சத்தம் வாராதுதான் ஆனாலும்; நம்பிக்கையுடன் அத்தையின் முகத்திற்கு நேராக விரலைச் சொடுக்கினேன். அவ்வளவுதான் அத்தை அப்படியே சிலைபோல மாறிவிட்டார். அசைவற்று இருந்த அத்தையை எப்படி எப்படியோ கூப்பிட்டேன் குழுக்கினேன்;பயனில்லை. பயம் என் உடல் முழுவதும் பரவியது..... மீண்டும் அந்த புத்தகத்தில் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையில் மாடிக்கு ஓடினேன். மறுபடியும் புத்தகத்தைக் காணவில்லை...! கீழே கார் சத்தம். மாமாவும் பிள்ளைகளும் வந்துவிட்டார்கள். வாசற்கதவை திறக்கும் சத்தம்.



ஓடி அத்தையை மீண்டும் முடிந்தவரைக் குலுக்கினேன். மின்னல் யோசனையில் அத்தை முன்னே என் கைவிரலைச் சொடுக்கினேன். மாமா கதவை திறந்தார்.
“முதலாவதா உனக்கு விரல் சொடுக்கத்தெரியுமா.... இதோ விரல் சொடுக்கினா இந்த மாதிரி சத்தம் வரனும்.... எங்க செய் பார்க்கலாம்....”
மீண்டும் அத்தை அசைய ஆரம்பித்துவிட்டார். அதோடில்லாமல் முன்பு பேசிய அதே வார்த்தைகளை கொஞ்சமும் மாறாமல் கேட்கின்றார். மாமா வந்த்தும் அவர் கையில் இருந்த பொருட்களை நானும் அத்தையும் வாங்க சென்றோம். அத்தை பிள்ளைகளும் ஆளுக்கொரு பொருளைக் சாப்பீடவாரே கைவீசி உள்ளே வந்தனர்.
ஆக; நான் கணத்தை நிறுத்தும் கடவுளாகிவிட்டேன். நான் கடவுள்.,... ஹ்ஹ்ஹ்ஹா... நான் கடவுள்.

என் அறை. கட்டில் மேல் கால் மேல் போட்டு படுத்திருந்தேன். இருக்கும் இடத்தை விட்டு ஆடாமல் அசையாமல் விரல் சொடுக்கல் வழி தலைமேல் சுற்று காத்தாடியை சுற்றவும் நிறுத்தவும் செய்துக்கொண்டிருந்தேன். என்னால் இப்போது கணங்களை என் கைக்குள் நிறுத்த முடியும். மீண்டும் நான் என் கையால் கணங்களை விடுவிக்க முடியும். தலையில் கிரிடமும் காலுக்கு கீழ் புகையும் தேவையில்லாமலே நான் கடவுளாகிப்போனேன். அந்த புத்தகத்தில் வேறு எதும் இருக்கின்றதா எனத் தேட புத்தகத்தைக் காணவில்லை...அது சரி இனி அந்த புத்தகம் எனக்கு அநாவசியம். நான்தான் கடவுளாகிவிட்டேனே.
கடவுளாகிய நான் கல்லாகியிருந்தால் பிரச்சனை இருந்திருக்காதுதான். ஆனால் நான் செயல்பட்டுவிட்டேன். மனித புத்தியை என்ன செல்வது..?
என் விரல் சொடுக்கில் என்னவெல்லாமோ செய்ய நினைத்த நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணாடியைப் பார்த்து விரலைச் சொடுக்கினேன். ம்.... கண்ணாடியில் தெரிந்த என்னையே நான் சிலையாக்கிவிட்டேன்..! இதோ இப்போ என்னை சுற்றி இத்தனைப் பேர் அதிசயமா பார்க்க நின்ற மாதிரியே படுக்கையில் வைத்து தள்ளிக்கிட்டு போறாங்க.. பாவம் டாக்டர் என்ன செய்யப்பொறாரோ..? அந்த புத்தகம் யார் கைல கிடைக்குதோ தெரியலையே... எனக்கு விடுதலை கிடைக்காதா..? என்ன இருந்தாலும்ங்க எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அது என்னான்னா ?
மனிதனை சிலையாக்குவது சாத்தியமா..? விஞ்ஞானப்படி விளக்கம் கிடைக்குமா..? ஒருவேளை............



தயாஜி

ஏப்ரல் 23, 2011

அவளும் அவனும்




அவள்- மலை ,பனியுடன் காற்று, பரவசமான குருவிங்க சத்தம்.... இதையெல்லாம் நாளைக்கு நான் பாக்கபோறதில்லை ஆனா.. அதே சமயம் என் பிரச்சனை எதுவும் என்னுடன் இருக்காது. கடைசி உறக்கம்; இதுதான் எனக்கு....



அவன்- ஹெலோ...



அவள்- (மௌனம்)



அவன்- ஹெலோ உங்களைத்தாங்க..?



அவள்- யாருங்க நீங்க ..? எதுக்கு என்னைத் தொல்லைப்படுத்தறிங்க..?



அவன்- அயயோ.. தொல்லையெல்லாம் இல்லைங்க.. தனியா சாகலாம்னுதான் வந்தேன்; துணையா நீங்களும் கீழே குதிக்கப்போறிங்கன்னு நெனைக்கறேன் அதான். சாகறதுக்கு முன்னமே பேரை தெரிஞ்சிக்கிடா செத்த பிறகு கூப்ட வசதியா இருக்குமே..



அவள்- (சிரிப்பு)



அவன்- அடட.. நல்லாதான் சிரிக்கிறிங்க ஆனா இதுதான் உங்க கடைசி சிரிப்பா இருக்கும்னு நெனைச்சா..



அவள்- இதுதான் என் முதல் சிரிப்புன்னு நெனைக்கறேங்க..ஆமா உங்க பேரு..?



அவன்- அது நான் சொல்லனும்ங்க. நான் எப்போ சிரிச்சேன்னு எனக்கே தெரியலங்க..ம்.. நான் மணி. நீங்க..



அவள்- தேவி..



அவன்- சரி தேவி. இனி நாம் நண்பர்கள்.



அவள்- என்னது நண்பர்களா..?



அவன்- ஆமா



அவள்- சாகறதுக்கு முன்னாடி இந்த நட்பு அவசியம்தானா..?



அவன்- வாழும்போதுதான் நல்ல நட்பு இல்லாம இருந்தேன்.சாகறதுக்கு முன்னமாச்சும்

எனக்கும் நல்ல தோழி இருந்தாங்கன்னு நிம்மதியா சாகலாமே..?



அவள்- உங்களுக்கு நண்பர்களே இல்லையா..? குடும்பம் எல்லாம்..?



அவன்- (சிரிப்பு) நண்பர்களா..? இருந்தாங்க இருந்தாங்க.. ஆனா இப்போ இல்ல.. ஒரே ஒரு மையொப்பம்தான் என் வாழ்க்கையையே திருப்பிடுச்சி.. அவசரம்னு கேட்டதால நானே முன்னிருந்து கடன் வாங்கிக் கொடுத்தேன்.. இப்போ அவனுங்க யாரையும் காணோம்.. கடன் கொடுத்த சீன தவுக்கே என்னை புடிச்சிகிட்டான்.. வாங்கின கடனுக்கும் வட்டிக்கும் வீடு கார் எல்லாம் கொடுத்தும் பத்தல.. என்னால என் குடும்பத்துக்கும் பிரச்சனை.. அதான் ஒரே வழின்னு இங்க வந்துட்டேன். நல்லவேலையா என் வீடு எங்க இருக்குன்னு தவுக்கேக்கு தெரியாது. அந்த ஒரு நிம்மதி போதும்.



அவள்- ஆனா உங்களைப்பாத்தா கடன்பட்டு நொந்தவர் மாதிரி தெரியலையே..?



அவன்- நம்முடைய பிரச்சனை அடுத்தவங்களுக்கு தெரிஞ்சி அவங்க கஷ்டப்படறத நான் விரும்பறது இல்லைங்க..இப்பகூட பாருங்க நான் வேளிநாட்டுக்கு வேலைக்கு போறேன்னுதான் வீட்டில் எல்லாம் நினைச்சிக்கிட்டு இருப்பாங்க.. இன்னையொட என் கதை முடிஞ்சிடும். இங்கிருந்து விழுந்த கண்டுபிடிக்கறது கஷ்டம்.யாருக்கும் சந்தேகமும் வராது. ஆமா என் கதையைக் கேக்கறிங்க உங்க கதை என்ன..? செல்லமாட்டிங்கலா..?



அவள்- என் கதை இருக்கட்டும். நீங்க எவ்வளவு பணம் தந்தா உங்க பிரச்சனை தீரும்..?



அவன்- ஏங்க கொடுக்கப்போறிங்கலா.. நீங்களும்தானே சாகப்போறிங்க.?



அவள்- இந்தாங்க இது என்னோட செக் புக் இதில் உங்களுக்கு தேவையான பணத்தை எழுதிக்கோங்க..



அவன்- என்னங்க நீங்க அவ்வளவு பெரிய ஆளா..



அவள்- பணம் என்னங்க பணம்.. மனசனுக்கு உடம்பு ஆரொக்கியம்தானே முக்கியம். என்

கதையைக் கேட்டிங்கலே சொல்லவா..? எனக்கு புற்று நோய். எப்படியும் சாகப்போறேன். எதுக்கு நோயால நொந்து சாகனும் அதான் நானே சாகலாம்னு முடிவு எடுத்துட்டு வந்துட்டேன்.



அவன்- என்னங்க எவ்வளவோ பணம் இருக்கும் உங்களுக்கு, இதை குணப்படுத்தலாமே.?



அவள்- அப்படியா.. எவ்வளவு பணம் கொடுத்தா இந்த நோயில் இருந்து நான் தப்பிக்கலாம் சொல்லுங்க.. ஒரே ஒரு மருந்தைச் ஒல்லுங்களேன்.. எல்லாம் பார்த்தாச்சிங்க



அவன்- நான் வேணும்னா ஒரு மருந்து சொல்லவா..?



அவள்- ம்



அவன்- நம்பிக்கை



அவள்- என்கிட்ட இல்லாத நம்பிக்கையா..?



அவன்- நம்பிக்கை என்பது இருக்கிறது இல்லைங்க.. நாமா உருவாக்கறது. நாம் உருவாக்கினதை எந்த ஒரு சந்தேகம் இல்லாமான் முழுமையா நம்பனும்.



அவள்- ஆனா..இந்த நோயால நான் சாகறது உறுதிதானே..?



அவன்- இல்லைங்க அந்த நோய் இல்லாட்டியும் மரணம் உறுதிதான். நோயை நம்பற நீங்க உங்களை நம்முங்களேன். வாழப்போற கொஞ்ச நாளிலாவது உங்களால யாருக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து நிம்மதி அடைங்க..



அவள்- இவ்வளவு பேசற நீங்களும் தற்கொலைக்குத்தானே வந்திருக்கிங்க..?



அவன்- என் கதை வேறங்க.. உங்களைப்போல நோய் இருந்திருந்தா பரவாலைங்க..என்னால சமாளிச்சிருக முடியும்.. ஆனா இங்க இருக்கற நிலமை வேற.. பணத்தை கட்டிமுடிக்கலைனா என் குடும்பத்துக்கும் எனக்கும் ஏற்படப்போறதை நெனைச்சா ரொம்ப பயமா இருக்கு.. அதான் தினம் பேப்பர்ல பாக்கறமே.. வெட்டி கொன்னாங்க சுட்டுக் கொன்னாங்கன்னு. நானும் அப்படி சாக விரும்பலைங்க... நான் எங்கயோ இருக்கேன்ற நம்பிக்கையை வீட்டில் உள்ளவங்ககிட்ட கொத்தாலே போதும் அவங்க கொஞ்சமாவதும் நிம்மதியா இருப்பாங்க..



அவள்- அதைவிடுங்க; இனி அந்த பிரச்சனை இல்ல. இந்தா இந்த செக் உங்க வாழ்க்கையை மாற்றும்.. உங்க பிரச்சனைக்கு என்கிட்ட தீர்வு இருக்கு



அவன்- ஆமாங்க அதே போல உங்களுக்கு தேவை நம்பிக்கையான வார்த்தைகள். ஆக உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு என்கிட்ட இருக்கு.



அவள்- ஆச்சர்யா இருக்கே... உங்க பிரச்சனைக்கு என்கிட்ட தீர்வும் என் பிரச்சனைக்கு உங்ககிட்டயும் தீர்வும் இருக்கிறதை பார்த்தா..



அவன்- சாக வந்த நாம ஏன் இங்கயே நம்முடைய புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூடாது..



அவள்- எனக்கும் அப்படித்தான் தோணுது ஆனா... எனக்கு புற்றுநோய்...



அவன்- அதனால என்னங்க இருக்கிற கொஞ்ச நாளிலாவது நான் உங்களை சந்தோஷமா வச்சிருந்தா அதுவே எனக்கு போதும்.. ஆனா...ஒன்னு.. கேட்கவா..?



அவள்- ம். கேளுங்க..



அவன்- உங்களுக்கு தங்கச்சி இருக்கா..?



அவள்- அடப்பாவி.. அதுக்கு நீ சாகலாம்



அவன் - நான் மட்டுமா நீங்களும் வாங்க..



அவள் - ஆ...!



அவன் - ஆ......!



அவள்- மலை ,பனியுடன் காற்று, பரவசமான குருவிங்க சத்தம்.... இதையெல்லாம் நாளைக்கு

நான் பாக்கபோறதில்லை ஆனா.. அதே சமயம் என் பிரச்சனை எதுவும் என்னுடன் இருக்காது. கடைசி உறக்கம்; இதுதான் எனக்கு....



அவன்- ஹெலோ...



அவள்- (மௌனம்)



அவன்- ஹெலோ உங்களைத்தாங்க..?



அவள்- யாருங்க நீங்க ..? எதுக்கு என்னைத் தொல்லைப்படுத்தறிங்க..?



அவன்- அயயோ.. தொல்லையெல்லாம் இல்லைங்க.. தனியா சாகலாம்னுதான் வந்தேன்;துணையா நீங்களும் கீழே குதிக்கப்போறிங்கன்னு நெனைக்கறேன் அதான். சாகறதுக்கு முன்னமே பேரை தெரிஞ்சிக்கிடா செத்த பிறகு கூப்ட வசதியா இருக்குமே.....
...................................................................................................................................................

ஏப்ரல் 09, 2011

பேனாக்காரன் 4


தங்கமீன் என்ற இணையப்பக்கத்தில் எனக்கு எழுத வாய்ப்பு தந்து அதன் வழி பத்தியை பதிய என்னாலும் முடியும் என கோடிட்டுக் காட்டிய அதன் ஆசிரியர்க்கு நன்றியை சொல்லிக் கொள்கின்றேன். மூன்று மாதம் எழுதிய அந்த பேனாக்காரன் என்ற தொடர் நான்காம் பாகத்தை தொடரவில்லை. அதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் இதுதான். 1. ஓர் இணையப் பத்திரிக்கையில் எழுதுகின்றவர்கள் மற்ற இணையப் பத்திரிக்கையில் எழுத கூடாது. 2. பேனாக்காரன் எழுதத் தொடங்கிய சமயம் மலேசிய இணைய இதழான வல்லினத்தில் அதன் ஆசிரியர் மா.நவின் என்னை வல்லினத்தும் வாய்ப்பினை கொடுத்தார். இந்த இரண்டு மட்டும் போதுமானது. வல்லினத்தில் என் பயணிப்பவனின் பக்கம் பாகம் ஒன்று வெளிவந்ததும்; தங்கமீன் ஆசிரியர் என்னுடன் மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டு இதுவரையில் நான் அறிந்திராத முகத்தினைக் காட்டி; வல்லினம் போதும் என்னை வளர்த்திட, தங்கமீன் தேவையில்லை என சொல்லிவிட்டார். அதோடு அடுத்த வார்த்தையாய் வந்தது ‘தங்கமீன் உங்களை அடையாளப்படுத்தியது என குப்பையாய் இனி பேச வேண்டாம். உங்களால் நிச்சயம் நல்ல எழுதினைக் கொடுக்க முடியும் வாழ்த்துகள்’ . இருந்து அவர் மீது கோவம் கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியவில்லை. செய்யும் அவசியமும் எனக்கில்லை. பின்னர் எங்களை அறிமுகப்படுத்திய முகநூலில் இருந்து என்னை விலக்கிவிட்டார். ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை. நான் மட்டும் ஓர் இணைய இதழில் எழுதினால் மற்ற இணைய இதழில் எழுதக் கூடாதாம் ஆனால் மற்றவர்கள் இங்கும் எழுதுவார்கள்;அங்கும் எழுதுவார்கள்;எங்கும் எழுதுவார்கள், அது மட்டும் சாத்தியமாம்..! இவர் தங்கமீனுக்கு விதிவிலக்கோ..? சரி விடுவோம்... எழுத வேண்டியது எவ்வளவோ உள்ளது. பேனாக்காரனை எந்த ஒரு காரணம் சொல்லியும் நிறுத்த மனமில்லை. இனி தொடர்ந்து என் வலைப்பூவிலும் முகநூலிலும் வெளிவரும். இதனை திருத்துவதற்கோ செதுக்குவதற்கோ குறிப்பிட்ட யாரும் இல்லை. இதனைப் படிக்கும் நீங்கள் (யாராக இருந்தாலும்) உங்கள் வெளிப்படையானக் கருத்தினைப் பதிந்தால், இதன் குறை நிறைகளை என்னால் கவனிக்க முடியும். பேனாக்காரனாக எதனை எழுதப்போகின்றேன்.? எதையெல்லாம் எழுத எண்ணுகின்றேனோ அதையெல்லாம்தான்.

மார்ச் 31, 2011

ஆனாலும் நான் ஆண்


ஒருமுறைக்கு இருமுறை; பலமுறையாய்; ஒவ்வொருவரும் கேட்டார்கள்; உண்மையைச் சொன்னாலும்; உலகத்துக்காகச் சொன்னாலும்; உள்ளம் என்னமோ; ஒத்துக்கொண்டது; எனக்கான ஒருத்தியாய்; அவளை; ஒப்புக்கொண்டது; அவளும் பெண்தான்; அழகானப் பெண்ணல்ல; ஆசிர்வாதம் தவிர; அவள் தாய்தந்தையால்; வேறெதற்கும் வழியில்லை; ஆனாலும் மனம்; ஒத்துக்கொண்டது; எனக்கான ஒருத்தியாய்; அவளை; ஒப்புக்கொண்டது; இருந்தாலும் என் தோழி; தேவி; இதையெல்லாம் மறுத்திட்டாள்; அவளின் தேவை; அழகனுக்கு அழகி; அழகிக்கு அழகன்; அதில் நானும் ஒருவன்; அவள்வரையில் அழகன்; என் எண்ணம் சொன்னதும்; ஏற்காமல் அவள்; என்னை திட்ட வந்தாள்; இரண்டாடுக்கு பின்; என்னை பார்க்க வந்தாள்; நான் அனுப்பியக் குறுஞ்செய்தி; அவளுக்கு; கடுஞ்செய்தி; அதனால்தான் என்னவோ; நேற்றுவரைக்காதோடு பேசியவள்; இன்று; நேராக பார்க்க வருகின்றாள்; இந்த அழகனுக்கு; அந்த பெண்ணா; அம்மா அப்பாவின்; கேள்வி; அவளிடமும் இருந்தது..! ஆச்சர்யம்; நான் பார்த்தவள்; அழகில் மட்டுமல்ல; கண்; பார்வையிலும் குறைவுதான்; பார்ப்பதெல்லாம் அவளுக்கு; மங்கிய வெளிச்சம்தான்; எனக்குப் பொறுத்தமாய்; எத்தனையோபேர் இருப்பார்கள்தான்; அதோ; அவள் தேவி; என் தோழி; என்னைச் சந்திக்க வந்தவள்; என் எதிரிலேயே; தேடுகின்றாள்; என்; இரண்டாண்டு முந்தைய முகத்தை; தெரிந்திருக்க நியாமில்லைதான்; சமீபத்திய அம்மையால் முகம் உருமாறி; குழிகள் நிறைந்த தெருவாகியக் கதை; அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்; ஒருவேளை; தெரிந்திருந்தாள்; ஒத்துக்கொண்டிருப்பாள்; ஆனால் அம்மாதான்; மங்கிய கண்ணை விட; இந்த அம்மை தழுப்புக்கு; ஆயிரம் அழகிகள் வருவார்கள்; எனப் புலப்புகின்றாள்; இதெற்கெல்லாம் காரணம்; ஆண்; அம்மைத்தழுப்பு ? ; ஆனாலும் நான்; ஆண்......!

மார்ச் 10, 2011

வாங்கியக் காதலிகள்.....



6-3-2011-கெடா சுங்கை பட்டாணி சென்றபோது வாங்கியக் காதலிகள்.....


1. அவதார புருஷன்
- வாலிபக் கவிஞர் வாலியில் படைப்பு. சில ஆண்டுகளுக்கு முன் என் ஆசிரியர் DR.சிவலிங்கம்-இடமிருந்து அரைமணிநேர இரவலில் என்னைக் கவர்ந்த புத்தகம். திறந்ததும் ராமரைப் படிக்காமல் இராவணன் குறித்து படித்தேன். வார்த்தை ஜாலத்தில் அப்படியே இழுக்கும் ஆற்றல் இன்னமும் வாலிக்கு இருப்பது உண்மை........

'இராவணன்'
இவனுக்கு;
இடக்கை வலக்கை -என
இருபது கை..!
இருபது கைக்குள் இருந்தது
இலங்கை..! அதற்கு
இவந்தான் கட்டிவிட்டான்
புகழ்-
சலங்கை......


2. இது சிறகுகளின் நேரம் !
- விகடனில் தொடராக வந்த தொடர். கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியவை.

3. நீல வானமும் சில நட்சத்திரங்களும்
- மலையாளச் சிறுகதைகள்.
-தகழி, பி.கேசவதேவ், உறூப், வி.டி.நந்தகுமார் , மலயாற்றூர் ராமகிருஷ்ணன் , எம்.முகுந்தன் , கோபிக்குட்டன் ஆகியோரின் மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கின்றார் சுரா.

4. ஜாக்கிசான்
- திரைக்கு பின் ஜாக்கிச்சான் வாழ்க்கை குறித்த பதிவு.

5. முன்னோடி
6. மணலும் நுரையும்
-இரண்டு புத்தகமும் கலில் ஜிப்ரான் என்ற தீர்க்கதரிசியின் பதிவுகள்.

7. பாக்யராஜின் பதில்கள்
- பொதுவாகவே நான் பாக்யராஜின் ரசிகன். அவரது கேள்வி பதிகளில் அதிக நாட்டம் கொண்டவன்.

8. நாஸ்டர்டாமஸ் சொன்னார், நடந்தது
-குவைத் நாட்டின் மீது சதாம் ஹுஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியப் போது; சமீபத்தில் நியூயார்க் கட்டிடங்கள் மீது ஒசாமா பின் லெடன் தாக்குதல் நடத்திய போதும்; உலக மக்கள் பரவலாக பேசியது இவரைப் பற்றிதான்.... இந்த தீர்க்கதரசி யார்...?
இவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லியுள்ளார்..?


வாய்ப்பிருப்பின் படித்தவற்றை பகிர்கின்றேன்.

இப்படிக்கு;

தயாஜி

பிப்ரவரி 21, 2011

நடுநிசி நாய்கள் - எல்லோர் மனதிலும் திரிகின்றது......

நடுநிசி நாய்கள் - எல்லோர் மனதிலும் திரிகின்றது......

சமீபத்திய விமர்சனங்களால் அதிகம் கடித்து குதறப்படும் படம் ‘நடுநிசி நாய்கள்’. மீண்டும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ என்றார்கள்; அதை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் அவரது பேட்டியில் குறிப்பிட்டுவிட்டார் எனபதை இவர்கள் படித்திருக்கவில்லை. அதனால்தான் திரைக்கதை - இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் என காட்டப்பட்டது. இதை இவர் கொடுத்திருக்கக் கூடாதாம்; எதிர்ப்பார்த்து போனவர்கள் ஏமாந்து வந்தார்களாம்.. சரி இதை வேறு யார் கொடுத்திருக்க வேண்டும்..? இப்படி எதிர்ப்பார்த்து திரையரங்கு செல்பவர்கள் முதலில் தங்களில் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றார் போல திரைக்கதையை எழுதி கையில் வைந்திருந்தால்; இயக்குனரின் அடுத்த கதைக்காவது பயன்படும்..!
இதுதான் தன் பாணி என இருப்பதை உடைத்து இதுவும் என் பாணிதான் என சொல்லும் தைரியம் எல்லோர்க்கும் வாய்க்காது. இன்னும் சொல்லப்போனால் ரஜினிக்கே சந்திரமுகியில்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது (ஏறக்குறைய). ஆனால் கௌதம் மேனன தனது ஒவ்வொரு படைப்பிலும் தன்னுடையப் பழைய பாணியை உடைத்து வருகின்றார். ஒன்றின் சாயல் மற்றதில் இல்லை. வாழ்த்துகள்
கதை என்ன..?
பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுவன். மனச்சிதைவுக்கும் ஆளாகின்றான். அவன் வளர்ந்து வரும் நேரம் முறையான எடுத்துக்காட்டும் போதனையும் இல்லாததால்; அவன் மனநோயாளி ஆகின்றான். தனக்கேத் தெரியாமல் முன்று நபர்களாக தன்னை நினைக்கத் தொடங்குகின்றான். முன்று நபர்கள் என்ற நினைப்பில் முன்று வித காரியங்களைச் செய்கின்றான். ஒன்று அழுகை மற்றொன்று கொலை அடுத்து கொலை முயற்சி. தன் தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுவன் வளர்ந்து வந்ததும், ஆண்களைவிட பெண்களையே பலி கொள்கின்றான். அதற்கானக் காரணம் இதுதான். தந்தையால் ஏற்பட்ட மனபாதிப்புக்குச் சரியான தீர்வு இல்லாத அவன்; நடுத்தர வயது பெண்ணால் வளர்க்கப்படுகின்றான். அப்போது அவனுக்கு பெயர் மாற்றப்படுகின்றது. சமர் வீரா ஆகின்றான். குறிப்பிட்ட வயதில் அவனது உடலிலும் மனதிலும் மாற்றம் ஏற்படுகின்றது. மீண்டும் அவனது கடந்தகால வாழ்க்கையும் அப்பா செய்த கொடுமையும் இவனை பயமூட்டத் தொடங்குகின்றன. பயத்தின் காரணமாய் தன்னை வளர்க்கும் நடுத்தர வயது பெண்ணின் காட்டிலில் அவள் கால் பிடித்து கதறி அழுகின்றான்.
இதுவரை அமைதியாய் இருந்த அவனது பழைய எண்ணத்தின் வெளிபாடு, அங்கே தன்னை வளார்க்கும் பெண்ணை தன் இச்சைக்கு பலிவாங்குகின்றது. அவளும் நடுத்தர வயது. திருமணம் ஆகவில்லை. சில முறை அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தாலும் அவனின் தொடுதல் அவளை இனங்க வைக்கின்றது. இதுவரையில் வளர்த்து வந்தவள்; இந்த நொடியில் அவனுக்கு வாழ்க்கையாகின்றாள்.காதல் என்பதை அந்த இளைஞன் தவறாக அர்த்தப்படுத்துகின்றான்.

‘எல்லாம்’ முடிந்ததும், அவளால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அவனை விரட்ட; அவனும் இவள் கால் பிடித்து கதற..... அவனது பலவீனத்தை இவள் மன்னிக்கின்றாள். ஆனாலும் அதை அப்படியே விட இவளால் முடியவில்லை. ஏனெனில் இவள் மீதும் தவறு இருக்கின்றது. (உடனே சண்டைக்கு வராதீர்கள்-முடியும்வரை படியுங்கள்-முடியாதவர்கள் கிளம்புங்கள்...!) அவன் , அவளை குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் பார்த்து ரசிக்கின்றான்.
தனக்கு கல்யாணம் எனவும் தனது நண்பன் ஒருவனை திருமணம் செய்யப்போவதையும் அவனுக்கு சொல்லி நண்பனை அவனுக்கு அறிமுகம் செய்கின்றாள். அப்பாவித்தனமும் காமமும் கலந்திருந்த அவனுக்குள் குரோதமும் வந்து சேர்கின்றது. திருமணம் முடிந்து புதுமணத் தம்பதியர் கட்டிலில் தங்களில் கடந்த கால பள்ளி வாழ்க்கையைப் பேசும் சமயம் கணவன் கொலை செய்யப்படுகின்றான். அந்த இளைஞனின் கொலை இங்குதான் தொடங்குகின்றது.


அங்கே எதிர்பாராத வகையில் தீ விபத்து நடக்கின்றது. அவள் உடல் முழுக்க தீக்காயங்களுடன் மீட்கப்படுகின்றாள்; அந்த இளைஞனால். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவள் இருக்கின்றாள். இருந்தும் இறந்த கணவன் மீது பலி சுமத்தி அந்த இளைஞனை காப்பாற்றுகின்றாள். தன் சொத்துகள் அனைத்தையும் இளைஞனுக்கு எழுதி வைக்கின்றாள். அவளில் குற்ற உணர்ச்சி கொஞ்சநஞ்சம் இருக்கும் உயிரையும் கொல்கின்றது.
இறந்த அவள் தன்னுடன் வாழ்வதாகவும் தானும் இரண்டு ஆட்களாக இருப்பதாகவும் அந்த இளைஞனது எண்ணம் முழுமையாக நம்புகின்றது. அந்த நம்பிக்கை அவன் எந்த அளவுக்கு கொண்டுப்போகின்றது என்பது மீதிக்கதை.

(முழுக் கதையை சொல்வது என் நோக்கமல்ல- திரையறங்கு வெளியில் சிலரின் தவறானப் புரிதல்களும் கேள்விகளும் கடந்து வந்த்தால் இதை எழுதுகின்றேன்)

சிறுமிகள் மட்டுமல்ல, சிறுவர்களும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். ஆனால் இதுபோன்ற பாலியல் கொடுமைகள் நூற்றுக்கு ஐம்பது சதவிதமாவது பதிவு செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறி. பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்ற சுறுவர் சிறுமியர் அதற்கு சரியான முறையில் சிகிச்சையோ ஆலோசனையோ இல்லாத பட்சத்தில் எப்படி தவறான உணர்ச்சிகளால் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் இந்த ‘நடுநிசி நாய்கள்’.
அது என்ன ‘நடுநிசி நாய்கள்’...? சுந்தர ராமசாமியில் கவிதைத் தொகுப்பின் தலைப்பு மட்டுமா..? இந்த கதைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்..?
யோசிக்கின்றேன்...!
நடுநிசியில் நாய்களின் செய்கைகளைக் கவனித்தது உண்டா..? அதன் தேவை என்ன..? காலை முதல் மாலை வரை இருக்கும் நாய்களுக்கும் நடுசிநி போன்ற வேலையில் திரியும் நாய்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். முன்னது குறைக்கும். பின்னது குறைப்பதோடு நிற்காமல் தன் கூட்டத்தை கூப்பிட்டு கடிக்கவும் அஞ்சாது. அதன் தேவையொன்றின் மீதே குறி இருக்கும். அதற்காக சக நாய்களிடம் கூட சண்டையிடும்.
அப்படி சாமன்ய மனிதர்களாக நம்மோடு நடக்கும் - பணி செய்யும் - உணவு சாப்பிடும் - ஜோக் அடிக்கும் - ஒரு நபர் மனநோய்க்கு ஆளாகியிருந்தால் அதன் பாதிப்பால் எதையும் / கொலையும் செய்யத் துணிவார்கள். உணர்ச்சிவசப்பட்டு கத்துவதுவது போல்தான் உணர்ச்சி வசத்தால் தன் உடலுக்காக அலைவதும். கோவப்படாதிங்க......! கோவப்பட்டு கத்தும் போதும் நீங்க நீங்களா இருக்கறது இல்ல... குரல் முதல் வரும் வார்த்தைகள் வரை உங்களுக்கே புதிதாகவும் இருக்கும். அந்த நேர உணர்ச்சிக்கு நீங்கள் அடிமை. அதுவேதான் இங்கும். இந்த நேர உணர்ச்சிக்கு இவர்கள் அடிமை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனநோயால் பாதிக்கபட்டிருக்கின்றார்கள். ஆனால் சிலருக்கு ஏற்படும் பாதிப்புகளும் அனுபவங்களும் அவர்களின் மனநோயை அதிகப்படுத்துகின்றது.

‘சிவப்பு ரோஜாக்கள்’ கமலுக்கும் ‘நடுநிசி நாய்கள்’ வீராவுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. கமல்- தான் வளர்ந்து வரும் சமயத்தில் சில பெண்களால் பாதிக்கப்படுகின்றார். அந்த பாதிப்பு அவருக்குள் விதைப்பதை இளைஞனானப் பிறகு; பருவப் பெண்களிடமிருந்து அறுவடை செய்வார். விரும்பி வரும் பெண்களும் தான் விரும்பி அழைக்கும் பெண்களும் இதில் அடங்கும். கமலின் நோக்கம் பெண்கள்; கட்டில்; கொலை; இவ்வளவுதான். காமமும் பலியுணர்ச்சியும் கமலை இயக்குவதாக காட்சியமைத்திருப்பார் அதன் இயக்குனர் பாரதிராஜா. இது 32 ஆண்டுகளுக்கு முன்.

இப்போது 32 ஆண்டுகளுக்கு பின். ‘நடுநிசி நாய்கள்’ வீரா வித்தியாசப்படுகின்றான். பலியுணர்ச்சியும் காமமும் இவனது இலக்கு அல்ல. தந்தையால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, முறையான வடிகால் இல்லாமல் வளர்ந்த நடுத்தர வயது பெண்ணை இச்சைக்கு பலிவாங்குகின்றான். அந்த பெண்ணின் மரணத்துக்குப் பிறகு சென்னை வரும் வீரா மூன்று கதாப்பாத்திரமாக வாழ்கின்றான்.

1-சமர் - தந்தையால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டவன்.

2- வீரா - நடுத்தர வயது பெண்ணால் வளர்க்கப்பட்டவன்.

3- மீனாட்சி - வீராவுக்கு ஆதரவாக இருந்து; அவனுக்கே பலியானவள்.

இந்த மூன்றும் அவன் ஒருவனே. (split personality) வீராவாக அன்புக்கு ஏங்குகின்றான். அமிராக காமத்துக்கு அலைகின்றான். மீனாட்சியாக பெண்களை கொன்று தலைமுடியை சேகரிக்கின்றான்.

இதில் மீனாட்சியைப் பற்றி தெரிந்துக் கொள்ளதான் வேண்டும். இவள்தான் அந்த அமர் என்ற வீராவை அவனது தந்தையிடமிருந்து காப்பாற்றிவள். அவனுக்கு யாரும் இல்லாத பட்சத்தில் தானே வளர்க்கத் தொடங்குகின்றாள். பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கோ கவுன்சிலிங்கிற்கோ அனுப்பாததுதான் அவனது தற்போதை நிலைக்கு முதன்மைக் காரணம். அப்படி செய்திருந்தால் தொடக்கத்திலேயே அவனது உணர்ச்சிகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை மேற்கொண்டிருக்கலாம். அதோடு அவள் திருமணம் செய்திருந்தால் இந்த பிரச்சனையும் வளர்ந்திருக்காது.

பதினம் வயதில் இருக்கும் அவனுக்கு ஓர் இரவில் மீண்டும் பழைய நினைவுகள் எழ ஆரம்பிக்கின்றது. எழுந்த நினைவுகள் அவனது உணர்ச்சியைத் தூண்டுகின்றது. முதலில் தூண்டிய உணர்ச்சி பயம். அதன் காரணமாக மீனாட்சியின் காலை பிடித்து நடுங்குபவன் கொஞ்சம் கொஞ்சமாக மேலேருகின்றான். ஏறுவது அவன் மட்டுமல்ல; மாறாக இது நாள் வரை அவனுள் வடிகால் கிடைக்காமல் இருந்த உணர்ச்சியும்தான். இவனது இச்சைக்கு அவள் பலியாகும் தருணம் நீளமானதுதான். இதை எப்படி வேண்டுமானாலும் காட்டியிருக்க முடியும். கட்டில்; பதின்ப வயது ஆண்; திருமணமாகாத நடுத்தர வயது பெண். ஆனால் கௌதம் மேற்சொன்ன எதையும் நம்பாமல். அந்த நடுத்தர வயது பெண்ணின் முகத்தைத்தான் காட்டுக்ன்றாள். முதலில் அவள் புரியாமல் தவிப்பது.பின் அவனிடமிருந்து விலக நினைப்பது. அவளும் உணர்ச்சிவசப்படுவதும் அவளில் முகத்தில் தெரிகின்றது. இதுவரை இல்லாத உணர்ச்சி அவளுக்கும் !. இந்த காட்சியை சுருக்கியிருந்தால் கதைக்கரு மதிப்பிழந்திருக்கும்.
வீரா நேசிக்கும் பெண்கள்; சமரால் கற்பழிக்கப்படுகின்றனர்; மீனாட்சியால் கொலை செய்யப்படுகின்றார்கள். மூன்றுக்கும் ஒரே உடல். ‘அந்நியன்’ விக்ரம் போல தலைமுடியெல்லாம் மாற்றி கண்ணாமூச்சி காட்டாமல் எதார்த்தமாகன ஒருவனாக வருகின்றான் வீரா.

இதெல்லாம் படமா என விமர்சித்து தங்களில் நேர்மையைப் பறைசாற்றுவதற்கு முன் கவனிக்க வேண்டியது பல இருக்கின்றது.

சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களும் பாலியல் பலாத்காரம் செய்யபப்டுகின்றார்கள்.

இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் அல்லது மனநல ஆலோசகரிடம் பரிசோதித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கு வடிகால் அவசியமாகின்றது; சில மத அடிப்படையிலும் சில மன அடிப்படையிலும்.

இணையம் வழி வரும் உறவுகளால் ஏற்படும் பாதிப்பு.

யோசிப்போம்.

‘நடுநிசி நாய்கள்’ குறித்தான விமர்சனம் சொல்லும் அளவுக்கு நான் இல்லை. சராசரி ரசிகன் என்ற முறையிலிருந்து வாசிப்பின் மூலம் ஒரு அடி மேல் சென்று பார்த்ததால் இதனை எழுதினேன். ‘நில்லுங்கள் ரோஜாவே’, ‘ஆ’ போன்ற சுஜாதாவின் கதைகளையும் மற்ற உண்மைக் கதைகளைப் படித்ததாலும் மனம் சார்ந்த தகவல்களைத் தொழிலுக்காகவும் தனி ஆர்வத்தில் பேரிலும் தொடர்ந்து படித்து வருவதால் வீரா; சமர்; மீனாட்சி போன்ற கதாப்பாத்திரங்களை சந்தித்த அனுபவம் எனக்கும் இருக்கின்றது. வெளிப்படையால் சொல்வதென்றால் எனக்கும் கொஞ்ச நாட்களாக மண்டைக்குள் சத்தம் கேட்டது........!!!!!!!!!!


இப்படிக்கு தயாஜி

பிப்ரவரி 03, 2011

வாங்கிய புத்தம்.....


2-2-2011-ல் வாங்கிய புத்தம். விக்கிரமாதித்தன் கதை.
மொத்தம் 32 கதைகள் இருக்கின்றன.

சிறுவனாக இருக்கும் போது தந்தை கொடுத்த அம்புலிமாமாவில் விரும்பி படித்த கதைகளில் ஒன்று. இது போன்ற வேதாளம் தேடும் வேட்டையில்தான் ஆவிகள் குறித்து தகவல்களை சேகரிக்கத் துடங்கினேன்.

இதுமட்டுமல்லாமல் தெனாலி ராமன்;மரியாதை ராமன்; ஜான்கிராமன் ; பீர்பால் ; அக்பர் போன்ற கதைகளை என் சிறுவயது முதல் விரும்பிப்ப் படித்தும்; கேட்டும் வந்திருக்கின்றேன்...

அவைதான் இன்றைட என் வாசிப்புக்கு பிள்ளையார் சுழி. இன்று நான் சந்திக்கும் சிறுவர் சிறுமியரை கேட்டால் மேற்ற்சொன்ன கதைகள் பற்றிய எந்த ஒரு :தெரிதல்: இல்லாமல் இருக்கின்றார்கள்.

இதன் காரணம் என்ன..?

பள்ளி நூல் நிலையமா..?

ஆசிரியர்களா..?

பெற்றோரா..?

என் பால்ய வயதில் இவை நான்கும் ஒரு சேர அமைந்தது.


இதனை எழுத்துச் சித்தர் என அழைக்கப்படும் இந்திர சௌந்திரராஜன் அமானுஷ்ய நாவலாக எழுதியுள்ளார்.

சரி வெளிப்படையாகப் பேசுவோம் உங்களில் எத்தனைப் பேர் இந்த கதைகளைப் படித்திருக்கின்றீர்கள்...
அல்லது கேள்விபட்டுள்ளீர்கள்..??

இது போன்ற நம் தமிழர்களின் காலம்காலமா சொல்லப்பட்டு வாசிக்கப்பட்ட கதைகள் என்னஎன்ன இருக்கின்றது தெரியுமா..?

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்