பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2025

முடியாது என் கதை 4


நாங்கள் ஏழாம் எண் அறையில் இருந்து நான்காம் எண் அறைக்கு சென்றோம். அதுவரை அங்கிருந்த ஒரு மருத்துவர் வெளியேறினார். இன்னொரு பெண் மருத்துவர் எங்களுக்கு முதுகாட்டி அமர்ந்திருந்தார். 

வாசலில் சட்டென பரபரப்பு. இன்னொருவரை கட்டிலில் படுக்கவைத்து தள்ளிக்கொண்டு போனார்கள். இது எத்தனையாவது விபத்து என தெரியவில்லை. நாங்கள் வந்ததில் இருந்து பலரை இரத்தக் காயங்களுடன் பார்த்து கொண்டிருக்கிறோம்.

புதிய நோயாளிகள் வரவர; பழைய நோயாளிகள் அதிகமாகி கொண்டே இருந்தார்கள். பெயரை பதிந்து கட்டணம் செலுத்த தாமதம். கட்டணம் கட்டிய பின் மருத்துவரை சந்திக்க தாமதத்திலும் தாமதம். மருத்துவரை சந்தித்தபின் மருந்து எடுக்க வேண்டிய மருந்தகத்தையும் மூடிவிட்டார்கள்; ஒருவேளை ஓய்வுக்கு போயிருக்கிறார்களா அல்லது விடிந்ததும்தான்  திறப்பார்களா என தெரியவில்லை.

நாங்கள் நிற்கும் இடத்தில் கூட ஆங்காங்கே இரத்தத்துளிகள் சிறிதும் தெரிதுமாக இருக்கின்றன. அதில் சில இன்னும் காயவும் இல்லை. 

போதாக்குறைக்கு அதன் மேலேயே சிலர் நடந்தும் போயிருக்கிறார்கள் போல. காலணி அச்சில் இரத்தக்கறையைப் பார்க்கவே பயமாக இருந்தது. அதைப் பார்க்கவே எனக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. எப்போதுமே இப்படி இருக்காது. நான் எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் பலமுறை இங்கு வந்திருக்கிறேன். வழக்கமாக அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். 

ஆனால் இன்று இப்படி இருப்பதற்கு; எதிர்ப்பாராத அதிக நோயாளிகள் காரணமா அல்லது குறைவாக இருக்கும் மருத்துவர்களும் பணியாளர்களும் காரணமா என தெரியவில்லை. தெரிந்து கொள்ள வேண்டிய மனநிலையிலும் இல்லை.

நாங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கும் இதே நேரத்தில்தான் ரொம்பவும் ஆபத்தான நிலையில் வருகிறவர்கள் கவனிக்கப்படுகின்றார்கள். நமக்கு எப்போதும் நம் வலியும் நம் வேதனையும் மட்டுமேதானே தெரியும்.

நாங்கள் நான்காம் எண் அறைக்கு செல்லவும் அங்கே இருவர் வந்து அமரவும் சரியாக இருந்தது. வந்திருந்தவர்களை அப்படியே அமரவைத்துவிட்டு அந்த மருத்துவர் தன்னிடம் உள்ள மற்ற கோப்புகளில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். பின் அந்த இருவரில் ஒருவரை விசாரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

அவர்கள் பேசி முடிக்கும்வரை காத்திருக்கலாம் என இல்லாள் சொல்லிவிட நாங்கள் அங்கேயே காத்திருந்தோம். இல்லாளுக்கும் காய்ச்சல் வந்துவிட்டது. வீட்டில் பொம்மி விடாது அழுது கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மருத்துவர் பேசி முடித்ததும், சட்டென இல்லாள் அவருடன் சென்று நாங்கள் பல மணி நேரமாய்க் காத்திருக்கிறோம். கூப்பிடவேயில்லை. நாங்கள் சென்று; நாளை காலை வருகிறோம் எங்களின் பரிந்துரை கடிதத்தை கொடுங்கள், என சொல்லிவிட்டார். 

மருத்துவரோ எந்தக் காரணத்தையும் கேட்கவில்லை. அந்தப் பரிந்துரை கடிதத்தை படித்துக்கூட பார்க்கவில்லை. எங்களிடம் கொடுத்துவிட்டார். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

மருத்துவமனைக்கு வரும்போது எனக்கு மட்டுமே உடல் நலமில்லை. இப்போது வீட்டிற்கு திரும்பும்போது எங்கள் இருவருக்குமே உடல் நலமில்லை. எப்படியோ அந்த விடிகாலை நேரத்தில் வாகனங்கள் அதிகம் இல்லாததால் ஒருவழியாக காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

மறுநாள் காலை மீண்டும் மருத்துவமனை செல்லலாம் என முடிவானது. இம்முறை பரிந்துரை கடிதத்தை வழக்கமான மருத்துவ பரிசோதனையிலேயே காட்டி பதிவு செய்து கொள்ளலாம் என நினைத்தோம்.

ஆனால் அந்தப் பரிந்துரை கடிதத்தில் மறைந்திருந்த வெடிகுண்டை நாங்கள் அறிந்து கொள்ளவில்லை……

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்