பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 02, 2024

புதுமைப்பித்தனின் 'புதிய நந்தன்'

 

💙தினம் ஒரு கதை 2/30💙


  “நீங்கள் எழுத நினைக்கும் கதைகளை எப்போதோ புதுமைப்பித்தன் எழுதிவிட்டார்! நாம் இன்னொரு விதமாக அக்கதைகளை எழுத முயல வேண்டும்..” என்பதை ஒவ்வொரு புதிய எழுத்தாளருக்கும் சொல்கிறேன்.

அதன் வழி அவர்கள் தவறாது  புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வாசிப்பார்கள் எனவும் நம்புகிறேன். பெரும்பாலானவர்கள் இந்த நம்பிக்கையை வீணடிப்பதில்லை.

ஜாதிய கொடுமைகளில் இருந்து மீளவே மதம் மாறினோம்/மாறுகின்றோம் என்று; இன்றுவரை பலர் சொல்லக் கேட்கிறோம். ஆனால் அப்படி மதம் மாறியவர்களே தங்களின் ஜாதிய அடையாளத்தைக் கெட்டியாக பிடித்து கொண்டு இன்னொரு மனிதனை தனக்கு கீழாக பார்த்து புறக்கணிப்பதைப் பற்றி வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை.

அப்படியான போலி மனோபாவத்தைக் கொண்டவர்களின் முகத்தில் அறைவது போன்ற சிறுகதையை புதுமைப்பித்தன் 1934ஆம் ஆண்டிலேயே மணிக்கொடி இதழில் எழுதியிருக்கிறார்.

இச்சிறுகதை எழுதப்பட்டு தொன்னூறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த மனநிலை கொண்டவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவர்களிடம் தன் ஜாதியின் மீதான பற்று பக்தியைவிடவும் மேலோங்கியே இருக்கிறது.

“எங்கள் மதத்தில் ஜாதி பார்க்கமாட்டோம் வா” என்று யாராவது கூப்பிட்டால், எனக்கு முன்னே உங்களுடன் இணைந்தவர்கள் இன்னமும் ஏன் ஜாதிய அடையாளத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என கேட்டுவிடத் தோன்றுகிறது.

அடிமையாய் இருந்து பழகியவர்களே அதிலிருந்து வெளிவர விரும்பாது இருக்கும் துயரம் இந்தத் தீண்டாமையில்தான் இருக்கிறது.
“ஏய், என்னை தொடாதே..!”, ‘ஐயோ…சாமி நீங்க எங்களைத் தொடக்கூடாதுங்க!” என இருவருமே சொல்லிப்பழகிய பிறகு மாற்றத்தை விரும்புகிறவர்களின் நிலைதான் என்ன என்ற கேள்வியைச் இச்சிறுகதை எழுப்பிவிடுகிறது.

இத்தனை ஆண்டுகள் ஆனப்பின்னும் இச்சிறுகதை ஒரு பேசுபொருளாக இருப்பதற்கு யாரைத்தான் நாம் குறை சொல்ல..?

நிச்சயம் நீங்கள் வாசிக்க வேண்டிய சிறுகதைதான்.

#தினம்_ஒரு_கதை 

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 01, 2024

மா.அரங்கநாதனின் 'சித்தி'

 

💙தினம் ஒரு கதை 1/30💙

   சித்தி என்பது நபரையோ உறவையோ குறிக்கவில்லை. இங்கே சித்தி என்பது, முழுமையைக் குறிக்கிறது, தன்னிறைவைக் குறிக்கிறது, ஒரு மனிதன் அவன் அவனுக்காகவே ஆத்மார்த்தமாகச் செய்யும் செயலைக் குறிக்கிறது. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.

   இங்கு செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலுக்கு ஒரு நோக்கம் உண்டு; ஆனால் சமயங்களில் அச்செயலின் நோக்கம் என்பதே அந்தச் செயலை செய்வதுதான் என்பதனை சிலரே அறிந்துள்ளார்கள் . அந்தச் செயலை, செய்வது தவிர்த்து அந்தச் செயலை செய்வதற்கு வேறெந்த காரணமும் தேவையில்லை. இதனைத்தான் தன் சித்தி சிறுகதையில் சொல்லியிருக்கிறார் மா.அரங்கநாதன்.

   ஓடுவதில் ஆர்வம் உள்ள நாயகனை ஒரு காவலாளி சந்திக்கின்றார். அவரும் ஒரு காலத்தில் ஓடியவராக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நாயகனை, பெரியவர் ஒருவரை சென்று சந்திக்கும்படி சொல்கிறார். நாயகனும் சந்திக்கின்றான். அப்பெரியவர் நாயகனுக்கு ஓடுவதற்கான பயிற்சிகளைக் கொடுப்பதோடு சில ஏற்பாடுகளையும் செய்கிறார். நாயகனும் மெல்ல மெல்ல பல இடங்களில் தன் ஓட்டத்தை நிருபித்து வெற்றி பெறுகிறான் (அவன் வரையில் அவன் ஓடுகிறான் அவ்வளவே) . இந்த ஓட்டம்  ஒலிம்பிக் தங்கத்தை பெற்று தரும் என்று பெரியவர் முதல் பலரையும் எதிர்ப்பார்க்க வைக்கிறது.

  ஆனால் அவ்வாறு, எதன் மீதும் நாயகனுக்கு விருப்பமோ ஆசையோ எதிர்பார்ப்போ இருக்கவில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் ஓடுவது. அது மட்டுமே அவனை ஒரு முழுமையான மனிதனாக வைத்திருப்பதாக நினைக்கிறான். ஓடுவதைத் தவிர அது கொடுக்கும் எந்தப் புகழும் பிரபலமும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவன் ஓடுவதை; ஓடுவதற்காகவே ஓடுகிறான் ! அவ்வளவுதான்.

அவனுக்கு வழிகாட்டியாக இருந்து அவன் மூலமாக விளையாட்டு துறையில் சாதனையை நிகழ்த்தும் எண்ணமும், ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை பெறலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்த பெரியவர் இப்போது நாயகனை புரிந்து கொண்டதும் அவன் மீது கோவப்படுகின்றார்.      அவரால் அதைத்தான் இப்போது அவனுக்கு செய்ய முடிகிறது.

அதனைத்தான் எழுத்தாளர் தனது கதையின் முடிவில் வைக்கிறார். ஆனால் அங்கு அந்தக் கதை முடிந்தாலும் நம் வாசிப்பின் வழி அச்சிறுகதை நம்மை வேறொரு இடத்திற்கு; சுய விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது. நீங்கள் தவறாது வாசித்துப் பாருங்கள்.

“எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பதுதான் நான் ஓடுவதற்கு காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். எனக்கு வேறெதுவும் தெரியாது” என நாயகன் சொல்கிறான்.

எந்த விளைவையும் எதிர்ப்பாராது, நாமும் நமக்கு விரும்பிய ஒன்றை விரும்புகிறோம் என்பதற்காகவே அதனை செய்யத்தோன்றுகிறது.


#தினம்_ஒரு_கதை 1/30
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 11, 2024

காரணம் போதும் !

 


ஒரு கொலையை நியாயப்படுத்த
அந்தப் பிணத்திற்கு
மதத்தின் அடையாளத்தையோ
இனத்தின் அடையாளத்தையோ
ஜாதியின் அடையாளத்தையோ
மொழியின் அடையாளத்தையோ
சொல்லிவிட்டால் போதும்

என்கிற மனநிலைக்கு
மெல்ல மெல்ல
நம்மை நகர்த்தி
தோழமையோடு தள்ளிவிட்டு
நம்மையும் நம்ப வைத்துவிடுகிறார்கள்...

#தயாஜி 


ஆகஸ்ட் 07, 2024

எழுதுவதற்கு முந்தைய ஏற்பாடுகள்




ஜூலை இறுதி வாரத்தில், 38-ஆவது பேரவை கதைகளுக்கு அல்லது  அப்போட்டிக்கு சிறுகதைகளை எழுத விரும்புகின்றவர்களுக்கு ‘சிறுகதை பட்டறையை’ ஏற்பாடு செய்திருந்தார்கள். இணையம் வழி சந்திப்பு.

அதில் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் எழுத்தாளர் விஜலெட்சுமியும் பயிற்றுநர்களாக இருந்தார்கள். இந்த இருவரும், இருவரின் எழுத்துகளும் எனக்கு பரிட்சயம் என்பதால் நானும் ஒரு பார்வையாளனாக பங்கெடுக்க விரும்பி திகதியைக் குறித்துக்கொண்டேன்.

பின் மிகச்சரியாக அந்த நாளை மறந்திருந்தேன். சரியான நேரத்தில்  இளம் எழுத்தாளர் பிருத்விராஜு நினைவுப்படுத்தி சந்திப்பிற்கான இணைப்பையும் அனுப்பினார். உடனே இணைந்துவிட்டேன்.

தொடக்கமாக எழுத்தாளர் கோ.புண்ணியவான் சிறுகதைகள் குறித்து பேசத்தொடங்கினார். எனக்கு தெரிந்து தேர்ந்த வாசிப்பின் வழி இலக்கியம்  பேசுகின்றவர்கள் புதுமைப்பித்தனைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள். சில கதைகளைச் சொல்லும் போது இந்தப் பெயரை நினைவுக்கூராமல் இருக்கவும் முடியாது. 

இதனை குறிப்பாக சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு:

இன்னமும் புதுமைப்பித்தனின் எழுத்துகளை வாசிக்காமலும்; சிறுகதைகளில் அந்த மனிதன் செய்த முயற்சிகளையும் சாதனைகளையும் அறிந்து கொள்ளாமலும் இங்கு இலக்கிய அந்தஸ்த்தை சுமந்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு பொன்னகரம் கதையின் முடிவு கூட புத்திக்கு புரியாமல்; என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு அப்படியா போவா? ச்சேச்சே அருவருப்பு என சொல்லிக்கொண்டே இளம் தலைமுறைகளுக்கு இலக்கிய உலகில் தாங்களே வழிகாட்டி என்பது மாதிரியான போஸ்டர்களை அடித்துக்கொள்கிறார்கள். 

எழுத்தாளர் கோ.புண்ணியவான், தனது உரையில் அதே பொன்னகரம் சிறுகதையைக் குறித்து பேசினார். ஒரு சிறுகதையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் அந்தக் கதை, அதில் தோன்றிய மனிதர்களுக்கு நியாயம் செய்திருக்கிறதா எனவும் குறிப்பிட்டார். அதனையடுத்து சங்குத்தேவனின் தர்மம் என்னும் சிறுகதையைக் குறித்து பேசினார். புதுமைப்பித்தனின் இந்த இரண்டு சிறுகதைகளும் பங்கேற்பாளர்களுக்கு எழுத்தாளர் மீது ஒரு தேடலைக் கொடுக்கும் என்றால் மகிழ்ச்சி. 

சிறுகதைகளில் கையாளப்படும் யுக்திகளான, நனவோடை, அங்கதம், மாய எதார்த்தம் போன்றவற்றையும் கோடிகாட்டினார். அதோடு எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் சிறுகதை யுக்திகளையும் குறித்து பேசினார்.

காட்சியை எழுதுதல் என்பதற்கும் காட்சிப்படுத்துதல் என்பதற்குமான வித்தியாசங்களைப் பேசியவர், ‘காட்சி மொழி’ சிறுகதைகளுக்கு ஏன் முக்கியம் எனவும் விளக்கம் கொடுத்தார்.

வழக்கமாக சிறுகதைகள் குறித்து பேசுகிறேன் என்பவர்கள் உள்ளூர் படைப்பாளிகளைப் பேசுவது குறைவு. தமிழகத்து அல்லது வெளிநாட்டு எழுத்தாளர்களை பெயரளவிலாவது தெரிந்து கொண்டு இவர் பேசுவதை கேட்கவே நமக்கு சமயங்களில் சிரிப்பு வந்துவிடும். அந்தவகையில் கோ.புண்ணியவான் போன்ற ஒரு சிலர் தனது உரையாடலில் மலேசிய எழுத்தாளர்களைக் குறித்து பேசியதற்கு நன்றி.

எழுத்தாளர் சி.முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதையைக் குறித்தும் ரெ.கார்த்திகேசு எழுதிய மல்லியும் மழையும்  சிறுகதைக் குறித்தும் பேசி, வாசக இடைவெளி எப்படி வெளிப்படுகின்றது என சுட்டிக்காட்டினார்.

படைப்பில் வெளிப்படும் ‘கலையமைதி’ குறித்து பேசும் போது, கல்லிற்கும் சிற்பத்திற்கும் உள்ள வேறுபாடு, வெறும் சுவருக்கும் ஓவியம் வரையப்பட்ட சுவருக்கும் இருக்கும் வேறுபாடுகளைக் கூறியது  ரொம்பவே கவர்ந்தது.

அதனையடுத்து, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘புத்தனாவது சுலபம்’, ஜெயமோகன் எழுதிய ‘தேவகி சித்தியின் டைரி’ போன்ற கதைகளைக் குறித்தும் பேசினார்.

கோ.புண்ணியவான் அவரின் உரையில் நிறைவாக தேய்வழக்கு குறித்தும் பேசி முடித்தார்.

அவரையடுத்து எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலகருமான விஜயலெட்சுமியும் பேசினார்.

இப்போட்டிக்கு இதற்குமுன் வந்திருந்த சிறுகதைளிலிருந்த சிக்கலையும் எழுத்தாளர்களின் கவனக்குறைவையும் பேசி, எப்படியான சிறுகதைகள் கவனம் பெறும் என்பதையும் விளக்கினார். சில மலேசிய சிறுகதைகள் குறித்து பேசினார். தங்களுக்கு கிடைக்கும் சிறுகதைகளில் பெரும்பாலானவை கதைச்சுருக்கமாக இருப்பதையும், நாவல் சுருக்கம் போல இருப்பதாகவும் சுட்டிக்காட்டியவர், சிறுகதையென்பது ஒரு தருணத்தையோ ஓர் சம்பவத்தையோ ஓர் உணர்வையோ மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்றார்.

பின் கேள்வி நேரத்தில், பங்கேற்பாளர்கள் தங்களின் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றார்கள்.

வெறுமனே கதை எழுதும் போட்டிகளை அறிவித்துவிட்டு கடந்துவிடாமல், போட்டிக்கு எழுத விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரி பட்டறைகளையோ விளக்க கூட்டங்களையோன் நடத்துவது வரவேற்கத்தக்கது. போட்டிக்கு எழுதுபவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் அது பயனான இருக்கும். 

எதையும் எழுதுவதற்கு முன்பாக என்ன எழுதுகிறோம் எதற்கு எழுதுகிறோம் எப்படி எழுதுகிறோம் என்பது மிகவும் முக்கியம். அதோடு போட்டிக்கு எழுதும்போது அவர்களின் விதிமுறைகளைப் புரிந்து கொள்வதும் முக்கியம். 

ஏனெனில் குலைந்த அமைதியை எழுதுவதும் அமைதியை குலைக்காமல் எழுதுவது இருவேறு இடங்களுக்கு போகவேண்டிய எழுத்து. இரண்டையுமேதான் நாம் எழுத வேண்டும்.

இந்த பட்டறையில் பங்குபெற்று இரு எழுத்தாளர்கள் மூலம் விளக்கம் பெற்றவர்கள் யாரேனும் சிறுகதை எழுதி வென்றால் எது எல்லோருக்குமே மகிழ்ச்சிதான்.

ஆகஸ்ட் 03, 2024

விழிகளின் வழியில்…

 



“எங்களுக்கு குறையும் உண்டு; அதனை நான் அழுது சொல்லலாமா?

என் தாயும் நீயிருக்க; உந்தன் செல்ல மகன் வாடலாமா?”

ஆடிமாதமென்பதால், வீரமணிதாசன் என் வீட்டில் பாடிக்கொண்டிருந்தார். இல்லாள் பூஜையில் தியானித்திருந்தார்.  நான் கணினியில் என்  தியானத்தை எழுதிக்கொண்டிருந்தேன். 

நான் இசைக்கு ரசிகன் அல்ல, என்னால் அதன் ரம்மியத்தை ரசிக்க இயலாது. எனக்கு  எந்த இசைக்கருவியில் பெயரும் சரியாகச் சொல்லத்தெரியாது. ஆமாம் அது வயலின்னா? பியானோவா? என்ற வகையறா!

ஆனால் எனக்கு ஒலிகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதன் சத்தம் என்னை சட்டென என்நிலை மறக்க செய்துவிடும். அந்தச் சத்தம் மழையில் இருந்து வரலாம், தட்டச்சு செய்யும் போது வரும் “டக் டக்” சத்தமாக இருக்கலாம், பழுதடைந்த காத்தாடியில் வரும் “கிரீச் கிரீச்” சத்தமாக இருக்கலாம். அல்லது திரும்பத்திரும்ப ஒலிக்கும் மந்திர வார்த்தைகளாக இருக்கலாம்.

வார்த்தைகள். ஆமாம் வார்த்தைகள்தான். 

ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருள் கொண்டிருப்பதுபோல; நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அது தன்னில் மறைத்து வைத்திருக்கும் தொணியும் அது வெளிப்படும் ஒலியும் உங்கள் மனதின் நீங்கள் சொல்ல நினைத்து பூசி மொழுகி வார்த்தையை செதுக்கி  சொன்னதின் உண்மை உருவத்தை சட்டென நிராயுதபாணியாக்கி விடுகின்றன. அப்படி பலரின் நிராயுதபாணிச் சொற்களை எனக்கு தெரியும். அதனைச் சொன்ன மாவீரர்களையும் உங்களுக்குத் தெரியும்.

என் இரவு நேரங்கள் பெரும்பாலும் புத்தகங்கள் வாசிப்பதும் பின்னணியில் ஏதாவது இசைக்கோர்வை ஒலிப்பதுவாகவும் இருக்கும். அது என்னை என் மேஜையைத் தாண்டி எந்தச் சத்தமும் எனக்கு கேட்டுவிடாமல் உலாவிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் அது கடல் அலையின் சந்தமாகவோ, மெல்லியக் காற்றின் சத்தமாகவோ இருக்கும். அதே சமயத்தில் பிரார்த்தனைப் பாடல்களாகவோ இருக்கும். என் மனநிலைக்கு ஏற்றார்போல பழைய சினிமா பாடல்களும் அவ்வபோது வந்து காதுகளை உரசிவிட்டுப்போகும். புதியப்பாடல்களிலும் சிலரின் குரல் எனக்கு ஏற்றதாய் அந்நேரத்தில் ஒலிக்கும்.

இன்று கணினியில் மும்முரமாய்த் தட்டச்சு செய்துக்கொண்டிருந்தேன். சட்டென அந்தப் பாடல் என்னை ஸ்தம்பிக்கச் செய்தது. தட்டிக்கொண்டிருந்த விரல்கள்  நடுங்க ஆரம்பித்தன. கண்முன்னே இருந்த கணினிக்குள் நுழைந்து என் பழைய நினைவுகளில் மிதக்கலானேன்.

“எங்களுக்கு குறையும் உண்டு; அதனை நான் அழுது சொல்லலாமா?

என் தாயும் நீயிருக்க; உந்தன் செல்ல மகன் வாடலாமா?”

இந்தப் பாடல்தான் இதற்கெல்லாம் காரணம். சிறு வயதில் அடிக்கடி கேட்டப் பாடல்தான். அப்போது மாரியம்மாவிற்கான பாடலாகத்தான் இதனை கடந்து வந்திருந்தேன். இந்தப் பாடலை மட்டுமல்ல, பெரும்பாலான பக்திப்பாடல்களை அப்படித்தானே கடந்து வந்திருக்கிறோம். ஏதோ ஒரு நாளில் இம்மாதிரி பக்திப்பாடல்களை மாரியம்மனுக்காக அல்லாமல் நம் மனதிற்காக நாம் கேட்கலாம். பெரும்பாலான பாடல்கள் தன்நிலையைச் சொல்லி, குரல் ஒடிந்து, என்னைக் காப்பாற்று தாயே என கேட்கும் குரலாகவேதான் ஒலிக்கிறது. 

இன்று இந்தப்பாடலை, நான் என் குரலிலேயே கேட்கும்படி மாயம் நடந்தது. எல்லோரும் உடைந்தழ தாயாராய்த்தான் இருக்கிறோம். ஏனோ அதனை நம் கௌரவ குறைச்சலாக பாவித்து தப்பித்துக்கொள்கிறோம். உண்மையில் தப்பிக்கின்றோமா என்பது கேள்விக்குறிதான்.

இந்த வரிகள் கொடுக்கும் ஆறுதலுக்கு யாருக்கு நன்றி சொல்லலாம். பாடியவருக்கா எழுதியவருக்கா இசையமைத்தவருக்கா (சமயங்களில் இந்த மூவருமே ஒருவராகத்தான் இருப்பார்கள்.). இதனைத் தாண்டி இன்னொன்றும் இருக்கின்றது. அதுதான் நம் சூழல். அதுதானே நம்மை வழி நடத்துகின்றது.

திரும்பத்திரும்ப இந்த வரிகளையே கேட்டுக்கொண்டிருக்கின்றேன். யாரை நோக்கி என் குரல் செல்கிறது என தெரியவில்லை. ஆனால் நம்முள்ளிருந்து இப்படி நம் குரல் வெளிவருவதே நமக்கு ஆறுதல் தருவதாக அமைந்துவிடுகிறது, 

‘ஆடு ஜீவிதத்தில்’ ஒலித்த ‘பெரியோனே ரஹுமானே’ பாடலும் சரி காலையில் ஒலித்த ‘எங்களுக்கும் குறையுமுண்டு’ பாடலும் சரி திக்கற்று நிற்கும் எவருக்கும் வார்த்தைகள் வழி கரம் பிடித்து வாழ்வின் மீதான நம்பிக்கைகளைக் கொடுப்பதை நிறுத்துவதில்லை. நாம்தான் எல்லாவற்றுக்கும் ‘கடவுள்’ என்கிற சாயத்தையும் ‘கடவுள் இல்லை’ என்கிற சாயத்தை பூசிப்பூசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

இந்த வரிசையில் ‘எங்கும் நிறைந்தோனே…. இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்’ என்ற நாகூர் ஹனிபா பாடியப் பாடலையும், ‘யேசு… ராஜா உன் மாளிகையில் ராப்பகலாய் அமர்ந்திருப்பேன்’ என்ற ஃபாதர் பெர்க்மன் பாடியப் பாடலையும் நான் இணைத்துக்கொள்கிறேன்.

நேரம் இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். அதன் வரிகளுக்காகவும் நாம் வாழும் இந்த வாழ்க்கைக்காகவும். 

நம் அழுகை யாரை நோக்கி பாய்கிறது என்பதைவிட; அது நம்  கண்களை விட்டு வழிந்து செல்கிறது என்பதுதான் முக்கியம். அழுது அழுது மடிந்தவர்களைவிடவும் அழாமலேயே உள்ளுக்குள் மடிந்தவர்களின் கதைகள் இங்கு ஏராளமல்லா !

- தயாஜி


https://youtu.be/W31NM5XJRZ4?si=0aMqR0etWQXuKvHV

https://youtu.be/FZWef5x06z4?si=0X4hdpPTjuCpXV0B

https://youtu.be/EZCxtFRlQEQ?si=NRPPiMXFkVmIAaTA





ஜூலை 31, 2024

மாணவர்கள் சிறுகதைப் பட்டறை


ஜூலை மாத தொடக்கத்தில் (SMK PUTERI, SEREMBAN) சிரம்பான், புத்ரி பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கு சென்றிருந்தேன். மாணவிகளுக்கு சிறுகதைப் பட்டறையை வழிநடத்த அழைத்திருந்தார்கள்.

குறைந்தது 70 மாணவர்கள் வரை பங்கெடுத்தார்கள். அரங்கம் நிறைந்திருந்தது.

ஒவ்வொரு முறையும் பள்ளிக்கூடங்களுக்கு சிறுகதைப் பட்டறை வழிநடத்த செல்லும் போது, ஒரே மாதிரி பேசுவதையும் ஒரே கதைகளை மாணவர்களுக்கு சொல்வதையும் தவிர்த்துவிடுவேன்.

பள்ளிக்குச் செல்வதற்கு முன்னமே, மாணவர்களுடன்  என்னென்ன புதிதாகச் சொல்லலாம், எந்தக் கதைகளை உதாரணங்களாகக் கொடுக்கலாம் போன்றவற்றை வாசிக்கவும் குறிப்பெடுக்கவும் செய்வேன். இது நமக்கும் கூட பயிற்சியாக அமையும் என்பதால் 'முன் தயாரிப்பு' எப்போதும் இரு தரப்பிற்கும் லாபம்தான்.

பட்டறையில், அவர்கள் பரிட்சைக்கு எழுத வேண்டிய சிறுகதைக்கு செல்வதற்கு முன்பாக ஏன் சிறுகதைகள் நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன என்று மாணவிகளுடன் பேசினேன்.

அந்தக் கதைகள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கைக்கு பயன்படுகின்றன, என்ன படிப்பினையை என்னென்ன எதார்த்தங்களைக் கொடுக்கின்றன என மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

பிற்பகல் மணி 2.30க்கு பட்டறை தொடங்கியது. அது இயல்பாகவே நம்மை தூங்க வைக்கும் நேரம் என்பதால் என் பேச்சினை மாணவிகளிடுனான உரையாடலாக மாற்றினேன்.

மாணவிகள் உற்சாகமாகவே பங்கெடுத்தார்கள். ஆசிரியை குமுதா சிறப்பாகவே இப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு நன்றி.

வழக்கம் போல எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல', 'குறுங்கதை எழுதுவது எப்படி' புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம் கவிதைத் தொகுப்புகளையும் பள்ளி நூல் நிலையத்திற்கு கொடுத்தேன் 

சில மாணவர்கள் இயல்பாகவே கதைகள் எழுத ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். தமிழ்கூறு நல்லுலகம் அவர்களின் எழுத்துகளையும் வாசித்து சேமிக்க காத்திருப்பதைச் சொல்லி பட்டறையை நிறைவு செய்தேன்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்


ஜூலை 23, 2024

பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024

 


பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024, ஈப்போவில் (21/7/24) சிறப்பாக நடைபெற்றது.  ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் ஏற்பாட்டிலும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தோழமையிலும் இம்மாநாடு நடந்தது.

இம்மாநாட்டிற்கு நானும் இளம் எழுத்தாளர் பிருத்வியும் அறிவிப்பாளர்களாகச்  சென்றிருந்தோம்.

இம்மாநாட்டிற்கு 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்னும் இலக்கிய உரை வழங்க தமிழ்நாட்டில் இருந்து 'கல்விக் கடவுள் காமராச அறக்கட்டளை நிறுவனரும் காமராசரின் பேத்தியுமான  திருமதி T.S.K மயூரி கண்ணன் M.A வந்திருந்தார்.




18 பிரமுகர்களுக்கு தக்கார் சிறப்பு செய்யப்பட்டது. நம் நாட்டில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

புத்தகக்கண்காட்சியும் நடைபெற்றது. அரங்கம் முழுக்க அறிந்த எழுத்தாளர்கள் புதிய/இளம் எழுத்தாளர்களும் நிறைந்திருந்தார்கள்.




மாநாட்டின் முத்தாய்ப்பாக 148 சிறுகதைகள் அடங்கிய மூன்று தொகுதிகள் கொண்ட 'சிறுகதைக் களஞ்சியமும்' வெளியீடு கண்டது.
அதோடு மாநாடு குறித்த சிறப்பு மலரையும் வெளியிட்டார்கள்.

சிறுகதைக் களஞ்சியத்தில் என்னுடன்  அறிவிப்பாளராக வந்திருக்கும் ஆசிரியரும் இளம் எழுத்தாளருமான பிருத்வியின் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.



மாநாட்டு சிறப்பு மலரில்  'இளையோர் எழுதட்டும் இலக்கியம் வளரட்டும்' என்ற தலைப்பில் திரு.எம்.ஏ.அலி ஒரு கட்டுரையையும், 'எழுத்தாளர்களின் ஆக்கத்திறனில் செயற்கை நுண்ணறிவின் பங்கும் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் முனைவர் க.உதயகிமாரும், 'விமர்சனங்கள் யாருக்காக?' என்ற தலைப்பில் நானும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளோம்.

ஒருமைப்பாடு துறை துணை அமைச்சர் மாண்புமிகு சரஸ்வதி கந்தசாமி தன் உரையில், தன் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தவுள்ளதாகக் கூறினார்.

இம்மாநாடு அந்த எண்ணத்திற்கு காரணமாக அமைந்ததையும் கூறியவர், அப்போட்டிக்கான   பரிசு தொகை விபரங்களையும் பேசினார். இப்போட்டி இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமையவும் புதிய எழுத்தாளர்களுக்கு நல்லதொரு தொடக்கமாக அமையவும் வாழ்த்துவோம்;எதிர்ப்பார்ப்போம்.




கையில் கிடைத்த மூன்று தொகுதிகள் கொண்ட சிறுகதைக் களஞ்சியத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. மலேசியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் இதில் பங்கெடுத்துள்ளார்கள். நம் நாட்டின் மூத்த படைப்பாளிகளில் இருந்து இளம் படைப்பாளிகள், மாணவர்களின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் பெரிய உழைப்பு அடங்கியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எனக்கு இந்தக் களஞ்சியம் குறித்து பேசவும் எழுதவும் சில கருத்துகளும் விமர்சனங்களும் உள்ளன. வாய்ப்பிருப்பின் விரைவில் அதுபற்றி எழுதுகிறேன்.

ஒரே இடத்தில் அறிந்த எழுத்தாளர்களையும் இளம்/புதிய எழுத்தாளர்களையும்  பார்த்ததில் மகிழ்ச்சி. அறிவிப்பாளராக இருந்ததால் பலருடன் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆனால் அடுத்தடுத்து எழுதுவதற்கான பல கதைகள் அங்கு கிடைத்தன.

இம்மாநாட்டிற்கு அறிவிப்பாளராகும் வாய்ப்பைக் கொடுத்தமைக்கு கவிரத்னா டாக்டர். அருள் ஆறுமுகம் அவர்களுக்கும் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்திற்கும் எனது அன்பும் நன்றியும்.

(அதிகம் எழுதவேண்டியுள்ளன; முதற்கட்டமாக இப்பதிவு இருக்கட்டும்💙)

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்