பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 23, 2024

மாணவர்கள் சிறுகதைப் பட்டறை




 சமீபத்தில்  புத்திரி தித்திவங்சா, இடைநிலை பள்ளிக்கு (SMK PUTERI TITIWANGSA) அழைத்திருந்தார்கள். அப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் பட்டறையை வழிநடத்தினேன்.

ஆசிரியை சுகந்தி அவர்கள், இப்பட்டறையை ஏற்பாடு செய்தார். அவருடன் ஆசிரியை தனம் அவர்கள், அவரின் பள்ளிக்கூடமான டத்தோ இப்ராஹிம் யாக்கோப் இடைநிலை பள்ளியில் (SMK DATO IBRAHIM YAACOB) இருந்து சில மாணவர்களையும் அழைத்து வந்திருந்தார். 


  சிறுகதைகளை எழுதுவதற்கு முன்பாக; ஏன் சிறுகதைகளை நாம் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் என் பட்டறையைத் தொடங்கினேன். மாணவர்கள் பரீட்சைக்கு எழுதுவிருக்கும் கதைகளுக்கு முன்பாக கதைகள் என்றால் என்ன? ஏன் கதைகள் எழுதப்படுகின்றன? யார் எழுதுகிறார்கள்? யாருக்காக எழுதுகிறார்கள் என மாணவர்களுடன் பேசினேன்.

 மாணவர்களுக்கு சில உதாரண சிறுகதைகளை சொல்லச்சொல்ல அவர்களுக்கு கதைகள் மீதான ஆர்வம் அதிகமானது. அதன் பின் அவர்களுக்கு கதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், தொடர்கதை போன்ற வடிவங்களை விளக்கினேன்.





 சிறுகதை எழுதுவதற்கான அடிப்படை யுக்திகளைச் சொல்லி எப்படியெல்லாம் அதனைப் பயன்படுத்தலாம் என உதாரணங்களைச் சொன்னேன். பின் அந்த யுக்திகளைப் பயன்படுத்தி மாணவர்களும் கதைகளை எழுதுவதற்கு வசதியாக குழுக்களாக மாணவர்களை பிரித்தோம். அவர்களுக்கு இருபது நிமிடங்கள் கொடுத்து எழுத வைத்தோம்.

 ஒவ்வொரு குழு மாணவர்களும் தங்களின் படைப்பை வகுப்பின் முன் பகிர வேண்டும்.

மாணவர்களால் கதைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கே தொடங்குவது எப்படி கதையை அமைப்பது எப்படி முடிப்பது போன்றவற்றை மாணவர்களே பேசினார்கள். சில மாணவர்களின் படைப்புகள் சினிமா பாணியிலும் இருந்தன. அவற்றை எப்படியெல்லாம் நம் கதைகளாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக்கூறினேன்.

பின் ஆசிரியை தனம், பரீட்சைக்கு எழுத வேண்டிய சிறுகதைகள் எப்படி அமையவேண்டும் மற்றும் தன் புள்ளி விபரங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நிறைவாக;

 பள்ளியில் இருந்து எனக்கு பழக்கூடையும் சான்றிதழும் வழங்கினார்கள். நானும் வழக்கம் போல இரு பள்ளிக்கூட நூல் நிலையத்திற்கும் எனது ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி’ என்ற புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ என்ற கவிதைத் தொகுப்பை வழங்கினேன். 

 இந்த மாணவர்களில் சிலரேனும் பரீட்சைகளைத் தவிர்த்தும், சிறுகதை எழுதுபவர்களாக வந்தால் மகிழ்வேன். அதற்கு என்னளவில் செய்ய முடிந்ததை நானுமே செய்வதற்கு தயாராய் இருக்கிறேன்.

ஜூலை 21, 2024

சிறகுகளின் கதை நேரம் - 30வது கலந்துரையாடல்

💙சிறகுகளின் கதை நேரம்; சிறுகதைக் கலந்துரையாடல்.💙





இன்று 30-வது சந்திப்பு நடைபெற்றது. இன்றைய கலந்துரையாடலில் எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன் எழுதிய 'சிற்பம்' சிறுகதையைக் குறித்து கலந்துரையாடினோம்.


வழக்கம் போல வாசிப்பில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.


மூத்த எழுத்தாளர் கோ.புண்ணியவான் கலந்துரையாடலில் பேசியவை; எழுத்தாளர்களுக்கு மட்டுமின்றி வாசிக்கின்றவர்களுக்கும் பயனாக அமைந்தது.


அதே போல இளம் எழுத்தாளர் பிருத்வி ராஜு சிறுகதைகளை உள்வாங்கி பேசும் விதமும் கவர்ந்தது. சிங்கபூரில் இருந்து ஒவ்வொரு வாரமும் தவறாது கலந்து கொண்டு தத்தம் கருத்துகளைப் பகிரும் எழுத்தாளர் சூர்ய ரத்னாவும் உற்சாகம் கொடுக்கின்றார்.


எழுத்தாளர் டேவிட், ஆசிரியை விசித்ரா ஆகியோரும் சிறுகதையையொட்டி தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் நிறைவாக, எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன் வாசகர்களும் எழுத்தாளர்களும் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் சொன்னதோடு தான் எழுதிய சிறுகதை குறித்தும் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். அவரும் நன்றி.



இன்றைய நிகழ்ச்சி, அதுவும் இன்று நமக்கு 30வது கலந்துரையாடல். இலக்கிய செயல்பாடுகளில் எண்ணிக்கைக்கு பெரிய கவனம் தேவையில்லை என்றாலும் இதுவரை வருவதற்கு உறுதுணையாக இருக்கும் எழுத்தாளர் தம்பி பிருத்வி ராஜுவிற்கு நன்றி.


மீண்டும் அடுத்த வார திங்கட்கிழமை மற்றொரு சிறுகதைக் கலந்துரையாடலில் சந்திப்போம்.

சிறகுகளின் கதை நேரம்; இது எழுத்தாளருக்கும் வாசகருக்குமான உரையாடல் களம்.


உரையாடுவோம்... கலந்துரையாடுவோம்...


அன்புடன் #தயாஜி 

#சிறகுகளின்_கதை_நேரம் #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

சிறகுகளின் கதை நேரம் - 31வது கலந்துரையாடல்

 


கடந்த திங்கட்கிழமை, வாராந்திர 'சிறகுகளின் கதை நேரம்' சிறுகதைக் கலந்துரையாடல் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்றது. 


இது 31வது கலந்துரையாடல், இதில் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய 'கரகம்' சிறுகதைக் குறித்து உரையாடினோம்.


'இச்சிறுகதையில் அதன் உரையாடல்கள் எதார்த்தமானவையாகவும் அச்சூழலைக் கண்முன் கொண்டுவந்ததாகவும் எழுத்தாளர் சச்சிதானந்தன் கூறினார். அதோடு எழுத்தாளர் சிறுகதையில் பயன்படுத்திய வருணனைகள் தன்னைக் கவர்ந்ததாகவும் கூறினார்.


எழுத்தாளரும் மருத்துவருமான ராஜேஸ், 'கரகம்' சிறுகதையின் களம் குறித்தும் எழுத்தாளர் பயன்படுத்திய மொழி குறித்தும் பேசினார். அதோடு இச்சிறுகதையில் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் கரக பூசாரிக்கும் கரகம் ஆடுகின்றவரும் ஒருவரா அல்லது வெவ்வேறு ஆட்களா என கேள்வி எழுப்பினார். பின்னர் எழுத்தாளர் கோ.புண்ணியவான் அதற்கு பதிலும் கூறினார்.


இளம் எழுத்தாளர் பிருத்வி, இச்சிறுகதை வாசிக்க வாசிக்க, எழுத்தாளரின் கையறு நாவலை மீண்டும் வாசிக்கும் உணர்வைம் கொடுத்ததாகக் கூறியதோடு, திருவிழா , தீமிதி கொண்டாட்டச்சூழல் அழகாகச் சொல்லப்பட்டதாகவும் கூறினார்.


எழுத்தாளர் ஆ.வி.டேவிட், எழுத்தாளர் இச்சிறுகதையில் தீர்வு கொடுத்தாரா என்ற கேள்வியை முன்வைத்ததோடு, 90களில் நடந்த சில உண்மை சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார்.






எழுத்தாளர், ஆசிரியர் அன்பரசி, ஒரு குழுவிற்கும் ஒரு அமைப்பிற்கும் தலைவர் ஏன் வேண்டும் என்பதனை இக்கதையின் ஊடாக புரிந்து கொண்டதைக் கூறினார்.


சிங்கை எழுத்தாளர் சூரிய ரத்னா, சிங்கை சூழலில் கொண்டாடப்படும் சமய விழாக்களும் மலேசிய சூழலில் கொண்டாடப்படும் சமய விழாக்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பேசினார். 


அடுத்ததாக சிங்கப்பூரில் இருந்தே எழுத்தாளர் அருள் குமரன் இச்சிறுகதையில் வரும் தலைவர் கதாப்பாத்திரத்தை முன்வைத்து இருவேறு புரிதல்கள் இருப்பதைப் பேசினார்.


எழுத்தாளர் மணிராமு, தோட்ட வாழ்க்கையை எழுத்தாளர் எழுதிய விதத்தைப் பேசினார்.


எழுத்தாளர் இராமசாமி, இச்சிறுகதையில் வந்த கரக பூசாரியின் கதாப்பாத்திர வடிவமைப்பின் உண்மைத் தன்மையைக் கேள்வி எழுப்பினார்.


என்னளவில், 1990ம் ஆண்டு காலக்கட்டத்தில் லூனாஸ், கெடாவில் சம்சு என்னும் கள்ளச்சாராயம் குடித்து ஏறக்குறைய 40 பேர் இறந்தார்கள், மேலும் சிலருக்கு பார்வை பறி போனது.


அந்தச் சம்பவத்தில் இருந்து ஒரு பகுதியை எழுத்தாளர் 'கரகம்' சிறுகதையாக எழுதியுள்ளார். தோட்டச்சூழல் அங்கு வாழும் மனிதர்கள் அவர்களில் வாழ்க்கை முறை என, அளவாக தன் சிறுகதையில் எழுத்தாளர் கோ.புண்ணியவான் பயன்படுத்தி இருக்கிறார்.


நிகழ்ச்சியின் நிறைவில் எழுத்தாளர், வாசகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்ததோடு இச்சிறுகதை உருவான கதையையும் அவர் சந்திந்த மனிதர்களைக் குறித்தும் பேசினார்.


வழக்கம் போல பல்வேறு வேறுபட்ட பார்வையோடு  நிகழ்ச்சி நிறைவடைந்தது. அடுத்த வார திங்களில் இன்னொரு சிறுகதையோடும் அதன் எழுத்தாளரோடும் உரையாடுவோம் கலந்துரையாடுவோம்.


#சிறகுகளின்_கதை_நேரம் #தயாஜி 

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஜூலை 04, 2024

🌹செந்தமிழ் விழா 2024🌹



மீண்டும் செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) சென்றிருந்தேன். 'செந்தமிழ் விழாவின்' நிறைவு நாளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.


மேலும் சில போட்டிகளை இன்றும் நடத்தினார்கள். இம்முறை மாணவர்களின் 'இளம் நிருபர்'  போட்டிக்கு நானும் , கவிஞரும் ஊடகவியலாளருமான பூங்குழலி வீரனும் ஆசிரியை தனமும் நீதிபதிகளாக இருந்தோம்.


 ஒவ்வொரு மாணவர்களும் தத்தம் திறமையைக் காட்டினார்கள். ஊடகத்துறை மீதான ஆர்வம் இம்மாதிரி போட்டிகள் வழி மாணவர்களுக்கு ஏற்படும் என்பதில் மகிழ்ச்சி.



பிறகு ஒவ்வொரு போட்டியிலும் பங்கெடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நீதிபதிகளாக பொறுப்பேற்ற எங்களுக்கும் சிறப்பு செய்து நினைவுச் சின்னத்தையும் நற்சான்றிதழையும் வழங்கினார்கள்.


இன்றைய பொழுது மாணவர்களுடன் சிறப்பாக அமைந்தது. வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர் சுலோச்சனாவிற்கும் அன்பும் நன்றியும்...





ஜூலை 02, 2024

- வாசிப்பின் கொண்டாட்டம் –




(பொறுப்பு துறப்பு - 

தினமும் பக்கம் பக்கமாக வாசித்து எழுதுகின்றவர்களுக்கு மத்தியில் இதனை எழுத கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. மற்றபடி வாசிப்பின் சுவையைக் கொஞ்சமும் உணராமல் தங்களை எழுத்தாளர்கள் எனவும் படைப்பாளிகள் எனவும் ஊடக வெளிச்சத்தில்  சிரித்தபடி நிற்பவர்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லாமலே இதனை எழுதுகிறேன் )


பொம்மி பிறந்ததும் நெருங்கிய நண்பர்கள் இப்படி சொன்னார்கள், “உனக்கு குழந்தை பிறந்திருச்சி.. இனிமேல் நீ எப்படி புத்தகங்களைப் படிப்பன்னு பாக்கறோம்.. நேரமே கிடைக்காது இனி உனக்கு….”


அவர்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அந்த உண்மை தலைகீழாக என்னிடம் நடக்கிறது. இன்னும் கூடுதலாக புத்தகங்களை வாசிக்க முயல்கிறேன். முன்பு வரை என் தனிப்பட்ட காரணங்களுக்குகாக வாசித்தேன். ஆனால் இப்பொழுது, என் பொம்மிக்கு நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யவேண்டும் என்ற கூடுதல் கவனத்தோடும் கூடுதல் கொண்டாட்டத்தோடும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். எழுதுகிறேன். பேசுகிறேன். அவள் வளர்ந்து வரும் சமயத்தில் அது அவளுக்கும் புலப்படும்.


2024-ம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் வாசித்த புத்தகங்களை மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்க்கிறேன். ஆச்சர்யமாக இருந்தது. வாசித்த புத்தகங்களை முதற்கட்டமாக அடுக்கும் சிறு புத்தக அடுக்கு நிறைந்திருந்து. வழக்கமாக ஓராண்டில் வாசித்த புத்தகங்களை கைக்கு எட்டிய சிறிய அலமாரியில் அடுக்கி வைத்து அடுத்த ஆண்டில் அவற்றை அதற்குரிய இடங்களில் தனித்தனியே அடுக்குவேன்.


கடந்த ஆறு மாதங்களில் வாசித்த புத்தகங்களைப் பார்க்கலாமா?


நாவல்கள்

1. தாரா – ம.நவீன்

2. கரிப்புத் துளிகள் – அ.பாண்டியன்

3. கையறு – கோ.புண்ணியவான்

4. ஆழம் – சி.முத்துசாமி

5. பிறிதொரு நாள் – ரெ.விஜயலெட்சுமி

6. வாழும் மாமலை – அமிதாவ் கோஷ் (தமிழாக்கம் கண்ணன்)

7. பனியரசி – ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் (தமிழாக்கம் சூ.ம.ஜெயசீலன்)


சிறுகதைகள்

8. தேவதைகளற்ற வீடு – கே.பாலமுருகன்

9. முரண் – ந.பச்சைபாலன்

10. இளந்தமிழன் சிறுகதைகள் – இளந்தமிழன்

11. மிட்டாய்க் கதைகள்  - கலீல் கிப்ரன் (தமிழாக்கம் என்.சொக்கன்)


கவிதைகள்

12. துப்பாக்கிக்கு மூளை இல்லை – எம்.ஏ.நுஃமான்

13. அகப்பறவை – பூங்குழலி வீரன்

14. மங்கிய நீலப் புள்ளி – சந்துரு

15. வாடியது கொக்கு – ஹைக்கு கவிதைகள்


பிற

16. எழுத்தாளராக இருப்பது எப்படி – ஆர்.அபிலாஷ்

17. மேடைப் பேச்சின் பொன்விதிகள் – செல்வேந்திரன்

18. இலக்கியமும் இலக்கியவாதிகளும் -  வண்ணநிலவன்

19. பெருங்கனவு காணத் துணியுங்கள் – அங்கூர் வரிக்கூ (தமிழாக்கம் நந்தினி)

20. படிப்பது சுகமே ! -  வெ.இறையன்பு

21. On Writing Well – William Zinsser

22. How to enjoy your life and your job -  Dale Carnegie


மேற்கொண்டு, வாசித்த சில புத்தகங்களைப் பொதுப்பட்டியலில் சேர்க்க முடியாது. அது முழுக்க முழுக்க என் அகம் சார்ந்த தேடலுக்காக நான் வாசிப்பது. அது வேண்டாம். அதனால்தான் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. மேற்சொன்ன கணக்கிலேயே வைத்து கொள்வோம்.


இவை தவிர (புத்தகங்களாக அல்லாமல்) வாசித்த சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகளும் உள்ளன. 


மற்றபடி அடுத்த ஆறு மாதங்களுக்கான ‘புத்தக வாசிப்பு’ பட்டியலையும் தயார் செய்துள்ளேன். வாசிக்கும் போது மனம் அந்தப் பட்டியலை பின்பற்றுமா அல்லது அதன் தன் விருப்பப்படி புத்தகங்களைத் தேர்ந்தெடுக்குமா என இப்போது தெரியவில்லை. ஆனாலும் நாம் திட்டமிடலை தள்ளிப்போடவும் தவிர்த்துவிடவும் கூடாதுதானே.


பட்டியலை வாசிக்க எனக்கே அச்சர்யமாக இருக்கும் விடயம் என்னவெனில், இந்த ஆறுமாதங்களில் எப்பொழுதும் என் வாசிப்பு பட்டியலில் இருக்கும் எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருசஷணனின் புத்தகங்கள் இல்லை. அவர்களின் இணைய தளத்தில் தினம் வாசித்தாலும் புத்தகமாக தொகுத்தவற்றை வாசிப்பதில்தானே முழுமை இருக்கிறது.


இவ்வாண்டு தொடக்கத்தில். மாதம் ஒரு நாவலை வாசிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதன் படி ஒவ்வொரு மாதமும் ஒரு நாவல் என வந்து; கூடுதலாக ஏழு நாவல்களாக அவை அமைந்துவிடடன.


வாசிப்பில் ஒரு ரகசியம் இருக்கிறது. Size doesn’t matter ! என சொல்வார். ஆனால் வாசிப்பில் அந்த சைஸும் ஒரு மேட்டர்தான் !.


எடுத்த உடனே இருநூறு முன்னூறு பக்க புத்தகங்களையோ பேருக்கு வாசிக்கிறேன் என ஐநூறு ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை திறந்து வைத்து உட்கார்ந்தீர்கள் என்றால் நீங்கள் தொலைந்தீர்கள். உங்களால் ஐம்பது பக்கங்களைக் கூட வாசித்து கடக்க முடியாது. கண்கள் வலிக்கும், காதுக்குள் சத்தம் கேட்டு தொந்தரவு செய்யும், முதுகு வலிக்கும், வாசிப்பதைவிட முக்கியமான வேலைகள் இருப்பதை மூளை நினைவுப்படுத்தும். ஆக எச்சரிக்கை அவசியம்.


முதலில் ஐம்பது பக்க புத்தகங்களை வாசிக்க தொடங்குங்கள். சிறுகதைப் புத்தகத்தில் தினம் ஒரு சிறுகதை என வாசியுங்கள். கவிதைத் தொகுப்பில் தினம் சில பக்கங்களில் உள்ள கவிதைகளை வாசியுங்கள்.


வாசிப்பின் சுவையை நம் மனம் உணரவேண்டும். அதை ஒரு தொந்தரவாக அது நினைத்துவிடக்கூட்டது. என் வாசிப்பு பட்டியலைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் சில அதிக பக்கங்கள் உள்ள புத்தகங்களுக்கு பின் குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகங்களை நான் வாசிப்பேன். அது நம் வாசிப்பில் சோர்வு தட்டாமல் இருக்க உதவும்.


கூடுதலாக; குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகத்தை நம்மால் சீக்கிரமே வாசிக்க முடியும். (ஆனால் உண்மையில் பத்து-பதினைந்து பக்கங்களைக் கூட இங்கு பலர் வாசிக்க உயிரை பணையம் வைப்பது போல கற்பனை செய்து கொள்கிறார்கள் என்பது வேறு விசயம்) . அப்படி வாசித்து முடித்ததும் நமக்கு கிடைக்கும் மனநிறைவை நாம் கொண்டாட வேண்டும். அது நம்மை அடுத்த புத்தகத்தைத் தேடி ஓட வைக்கும். அப்படியே மெல்ல மெல்ல புத்தகங்களின் பக்க எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகலாம். அங்கிருந்து செவ்விலக்கியங்கள், எழுத்தாளர் பரிந்துரைகள் போன்றவற்றில் இருக்கும் பெரிய புத்தகங்களுக்கு நாம் செல்லலாம்.


எல்லாவற்றுக்கு அடிப்படை; அடுத்தவர்களை வாசிக்கச்சொல்லி கைக்கட்டி நின்று அதிகாரம் செய்யாமல், அவர்களுடன் இணைந்து வாசிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களைவிட அதிகமாக வாசிக்க வேண்டும்.

வாசிப்பதற்கு ஒரு நோக்கத்தை ஒரு போட்டியை உருவாக்கி கொள்ளலாம்.


 இந்த ஆண்டு நான் குறைந்தது இத்தனை புத்தகங்களையாவது வாசித்திருப்பேன் என நம்மிடமே நாம் சவால் விடலாம். நம்மையே நாம் வெல்வதைவிட வேறென்ன தன்முனைப்பு நமக்கு இருந்துவிட போகிறது சொல்லுங்கள். 


அதோடு வாசிக்கின்றவர்களோடு நட்பை வளர்த்து கொள்ளுங்கள். புத்தகங்களைக் குறித்து உரையாடுங்கள். 


ஒரு விளையாட்டாக கூட நாம் இதனை தொடங்கலாம். வாசித்தால் வீடியோவில் வருவோம் , பரிசு கொடுப்பார்கள் என்பதை எல்லாம் தாண்டி. ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுங்கள். (சரி நமக்கான புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுப்பது? இதுபற்றி இன்னொரு நாள் விரிவாகவே எழுதுகிறேன்)


 எப்பொழுது வாசித்த தொடங்கினீர்கள் என எழுதுங்கள். தினமும்  உங்களால் எத்தனைப் பக்கங்கள் வரை வாசிக்க முடியும் என நீங்கள் நம்புகிறீர்கள். குறைந்தது பத்து பக்கங்கள் என வைத்து கொள்வோமா? புத்தகத்தின் பக்கங்களில் இருந்து உங்களால வாசிக்க முடிந்த பத்து பக்கங்களை வகுத்துப் பாருங்கள். எத்தனை நாட்களில் இந்தப் புத்தகத்தை உங்களால் வாசிக்க முடியும் என ஒரு கணக்கு உங்களிடம் வந்துவிடும்.


 அப்புறம் என்ன உங்கள் குலதெய்வத்தை வேண்டி கொண்டு வாசியுங்கள். தினமும் பத்து பக்கங்கள் வாசிக்காவிட்டால் உங்கள் குலதெய்வமே உங்கள் கண்ணை குத்திவிடும்.


நீங்கள் திட்டமிட்டபடி வாசித்து முடித்துவிடுவீர்கள். இன்னும் சொல்லப்போனால்; குறிப்பிட்ட கெடுவிற்குள்ளேயே நீங்கள் வாசித்து முடித்துவிடும் அதிசயம் நடக்கும். பத்து பக்கங்களையும் தாண்டி நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

அவ்வளவுதான் .

சரி வாசித்துவிட்டீர்கள். அடுத்த என்ன?

 அதற்கு பிறகுதான் எல்லாமே இருக்கிறது நண்பர்களே. எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.


 வாசிக்கின்றவர்களோடு உரையாடி கலந்துரையாடி வாசிப்பையும் வாசிக்கின்றவர்களை நாம் கொண்டாடுவோம். நம்மைத் தவிர நம்மை வேறு யார்தான் கொண்டாடுவார்கள்.

ஜூன் 30, 2024

- கொடுக்கும் கணக்கு -

 


 

காலையில் நகைக்கடைக்கு சென்றிருந்தேன். என்னது நகைக்கடையா? விக்கற விலைவாசிக்கு நகை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கோ? அதுவும் மாசக்கடைசியில் எப்படி முடிகிறது? என நினைத்தீர்கள்தானே? பதற்றத்தைக் குறையுங்கள். நகைக்கடை பக்கத்தில்தான் வழக்கமாக செல்லும்  அடகுக்கடை இருக்கிறது.

            அடுத்த மாத முதல் வாரத்தில் சில நகைகளுக்கான கெடு முடிகிறது. அன்றைய தினம் எனக்கு வெளியில் செல்ல வேண்டிய வேலை இருப்பதால் சில நாட்களுக்கு முன்னமே அடகு வைத்திருக்கும் நகைகளுக்கான மாதாந்திர பணத்தைச் செலுத்த நினைத்தேன். நான் நினைத்தேன் என்பதைவிடவும் வீட்டம்மா நினைத்துவிட்டார். எனக்கு அதை மறுக்கும் அளவிற்கு துணிவில்லை .

            வீட்டு தேவைகளுக்கே பணம் பற்றாகுறையா இருக்கின்ற காலகட்டம்; இம்மாத கட்டணங்களையே இன்னும் முழுமையாக கட்ட முடியாத சூழலில் நகைகளுக்கான கட்டணத்தை எப்படி செலுத்துவது. ஏற்கனவே வைத்திருக்கும் நகைகளின் சீட்டை காட்டை மேற்கொண்டு அதில் பணத்தை கேட்கலாம். குறைத்த பட்சம் கெடு முடிகின்ற நகைக்காவது அதை கட்டிவிடலாம். அடுத்த ஆறு மாதங்களுக்கு சிக்கல் இல்லை. இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் கெடு முடிய காத்திருக்கும் நகைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

            மாதக் கடைசி என்பதால் அடகுக்கடையில் ஆட்கள் அதிகம் இருந்தார்கள். நான்கு கவுண்டர்களிலும் பணியாளர்கள் மும்முரமாக இருந்தார்கள். அனைத்து முகங்களும் ஒரே அச்சில் வார்த்தது போல இருக்கும். பெரும்பாலும் சீனர்கள் நடத்தும் அடகுக்கடையை அவர்களின் குடும்பத்தினரே வேலை செய்பவர்களாக இருப்பார்கள். பணம் என்று வந்துவிட்டால் அவர்களைப் போல கறாரானவர்களைப் பார்க்க முடியாது.

            நாம் கொடுக்கும் நகைகளின் தரத்திற்கு அவர்கள் சொல்வதுதான் விலை. ஒரு நாள் தாமதமாக பணம் கட்ட வந்தாலும் வட்டியை அதிகப்படுத்திவிடுவார்கள். அதற்கு பயந்தே சில நட்களுக்கு முன்னதாகவே பணத்தைக் கட்டிவிடுவோம். 

            இன்று; எனக்கு முன்பாக சிலர் இருந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக பணத்தைப் பெற்றும்; கட்டணத்தைக் கொடுத்தும் வெளியேறி கொன்டிருந்தார்கள்.

            முன் வரிசையி ஒருவர் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். நேற்றும் இங்கு வந்திருக்கின்றார். நகையை அடகு வைத்திருக்கிறார். இவர்களும் ஐம்பது வெள்ளித்தாட்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் சில தாட்களின் நடுவே வெள்ளையாக கோடு இருந்ததாம். அதாவது அது ஒரு வகையில் கள்ள நோட்டு. எங்கோ எப்படியே அடகுக்கடையில் நுழைந்து இவரிடம் சேர்ந்துவிட்டது.

            இதனைக் கேட்டதும் அங்கு பணத்தை எண்ணிக்கொண்டிருந்தவர், “ஐயோ…! அந்த பணத்தைக் கொண்டு வா.. நாங்க மாத்தி தறோம்… எங்கயோ மிஸ் ஆகிருச்சி போல..” என்றார்.

            இவரோ , அந்த பணத்தை அவராகவே மாற்றிவிட்டதாகவும் சொன்னார். “நல்லவேளையா வங்கியில் வாங்கியிருக்காங்க.. இல்லன்னா உங்களுக்கு எவ்வளவு சிரமமாயிருக்கும்..?” என்று சொல்லிய பணியாளர் மீண்டும் பணத்தை எண்ண ஆரம்பித்தார்.

            “யாரு… பேங்கு-க்கு எல்லாம் போனா… நான் எல்லாத்தையும் ஒவ்வொரு கடையில் ஜாமான்களை வாங்கி வாங்கி நாசுக்கா மாத்திட்டேன்ல…” என்று சிரிக்கலானார்.

            இதையெல்லாம் கேட்ட பக்கத்து கவுண்டரில் இருந்த வயதான சீனக்கிழவி எழுந்து, கொஞ்சம் கரகரப்பா குரலில்; “நீ மாற்றவில்லை… மற்றவர்களை ஏமாற்றியிருக்கிறாய்… இனி இப்படி செய்யாதே.. பணத்தை வாங்கியவுடன் இங்கயே ஒரு முறை சரி பார்த்துக்கோ… மறுபடியும் அப்படி இருந்தா இங்கயே கொண்டு வா.. நாங்களே மாத்தி தரோம்… மத்தவங்கள ஏமாத்தாதா…” என்றார்.

            அவர் பணத்தை வாங்கி கொண்டார். வெளியேறுவதற்கு முன்பாக என்னைப் பார்த்து “ஆமா.. ஊர்ல உள்ளவனுங்களையெல்லாம் இவனுங்க ஏமாத்துவானுங்கலாம்… நம்மல சொல்ல வந்துட்டானுங்க..” என்றார்.

இப்போது என் முறை மூன்றாம் கவுண்டரில் இருந்து அழைத்தார்கள்.

அப்போதுதான் கவனித்தேன் நான்காவது கவுண்டரில் ஒரு பெண் நீண்ட நேரமாகவே நின்று எதையோ கேட்டு கொண்டிருந்தார்.

அவரிடம் இருந்த நகைச்சீட்டைக் காட்டி, அதற்கு இன்னும் கொஞ்சம் பணம் கிடைக்குமா என கேட்டார். நானும் அதற்குத்தான் வந்திருக்கிறேன். ஒரு சீட்டில் காசை வாங்கி அதனை இன்னொரு சீட்டுக்கு கட்ட வேண்டும்.

ஆனால் அந்தப் பெண் கொண்டு வந்திருந்த நகைச்சீட்டில் வேறொருவர் பொயர் இருந்தது. சம்பந்தப்பட்டவர் வந்தால்தான் இப்படி கூடுதல் பணம் வாங்கவோ அல்லது முழு நகைக்கான பணத்தைக் கட்டி நகையை எடுக்கவோ முடியும்.

அந்த பெண்ணிடம் அங்குள்ள பணியாளர் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி கொண்டிருந்தார். இவருக்கு புரிகிறதா இல்லையா என தெரியவில்லை. அவர் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் கிடைக்கும் என கெஞ்ச தொடங்கிவிட்டார்.

இதை கவனித்த அந்தச் சீனக்கிழவி இந்தக் கவுண்டருக்கு வந்தார். அவரது கரகரப்பான குரலில் தெளிவாக ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லத் தொடங்கினார். யார் நகையை வைத்தார்களோ அவர்தான் வர வேண்டும். அல்லது அவரது அடையாள அட்டை இருந்தாலும் பரவாயில்லை என்றார்.

இது எதுவுமே சாத்தியமில்லை என்பதை அந்தப் பெண் புரிந்துகொண்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. நகைச்சீட்டையும் தனது அடையாள அட்டையையும் வைத்து கொண்டு நூறு வெள்ளி இல்லாவிட்டாலும் ஐம்பது வெள்ளியாவது கொடுங்க என்றார்.

ஏறக்குறைய முப்பதை நெருங்காத வயதாக இருக்கலாம். ஆண்கள் அணியக்கூடிய சட்டையை அணிந்திருந்தார். அது அவரை விட பெரியதாக இருந்தது. மூச்சு வாங்கி மூச்சு வாங்கி பேசினார். கவுண்டரில் போடப்பட்டிருக்கும் மேஜையை தன் பிடிமானத்திற்காக பிடித்து நிற்பது நன்றாகவே தெரிகிறது.

சீனக்கிழவி மீண்டும் நிதானமான விளக்க முயன்றார். அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கிவிட்டன. “என் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்ல… இதை வச்சிதான் நான் போய் பால் வாங்கனும்… என்னோட அடையாள அட்டையை வச்சிக்கோங்க.. கொஞ்ச காசா இருந்தாலும் பரவால..” என்று அந்தப் பெண் சொல்லவும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவரிடம் வந்து போனது.

எனக்கும் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. அவர் குழந்தைக்கு பால் வாங்க பணம் இல்லை என்பது என்னை ஏதோ செய்தது. நான் என் பொம்மியை நினைத்து கொண்டேன். குழந்தைக்கு எத்தனை வயது என சீனக்கிழவி விசாரிக்கவும், நான்கு மாதங்கள் என்றார்.

எனது கவுண்டரில் நான் வந்த வேலை முடிந்தது. அவர்களிடமே பணம் வாங்கி அவர்களிடமே கட்டணத்தைச் செலுத்தி மிச்ச பணத்தைச் சரி பார்த்தேன். பெரிதாக ஒன்றும் மிச்சமில்லை. குறைந்தது இரண்டு நாட்களுக்கு சமைப்பதற்கு சிலவற்றை வாங்கி போகிற அளவிற்குதான் இருந்தது.

அதிலிருந்து பதினைந்து வெள்ளியை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தேன். அந்தப் பெண் என்னை அதிர்ச்சியில் பார்த்தார். எனக்கும் என்ன சொல்வது என பிடிபடவில்லை. “இது உங்களுக்கு இல்ல.. உங்க குழந்தைக்கு பால் வாங்க… என் வீட்டுலயும் ஒரு குழந்தை இருக்கு… வச்சிக்கோங்க..” என்றேன்.

இதை கவனித்து கொண்டிருந்த சீனக்கிழவியை அலுவலகத்தின் உள்ளே யாரோ அழைத்தார்கள். உள்ளே சென்றவர் உடனே வெளியில் வந்தார். அந்தப் பெண்ணிடம் நூறு ரிங்கிட்டைக் கொடுத்தார். அந்தப் பெண்ணும் அதை வாங்கி கொண்டு தனது அடையாள அட்டையையும் நகைச்சீட்டையும் கொடுத்தார்.

சீனக்கிழவி அதனை வாங்கவில்லை. இது அவரது முதலாளி கொடுக்க சொன்னதாகவும், குழந்தைக்கு பால் வாங்க பயன்படுத்து என்றார். அந்தப் பெண்ணால் அழுகையை அடக்க முடியவில்லை. அந்தச் சீனக்கிழவிக்கும் நன்றி சொல்லி. அலுவலகத்தை எட்டி பார்க்க அங்கு வெறும் கறுப்பு கண்ணாடிகள்தான் தெரிந்தன. அங்கும் நன்றி சொல்லிவிட்டு என்னிடமும் நன்றி சொல்லிவிட்டு தாங்கி தாங்கி நடந்து வெளியேறினார்.

அந்தச் சீனக்கிழவி என்னைப் பார்த்து “பாஸ் உள்ள கூப்ட்டு  சொன்னாரு.. அவ உண்மையாவே குழந்தைக்கு பால் வாங்கதான் காசு கேட்டாள்ன்னு..  எப்படி கண்டுபிடிச்சாருன்னு தெரியல..”  என்றவர் அவரது கவுண்டருக்குச் சென்றார்.

நானும் வெளியேறினேன். என் காரில் அமர்ந்தேன். என்னை அறியாமல் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தேன்.

இது என் இயலாமையை நினைத்து வந்த அழுகை அல்ல. எனக்கும் பண நெருக்கடிதான். கடன் தான். அடுத்த மாதத்தை எப்படி சமாளிக்க போகிறேன் என தெரியவில்லைதான். ஆனால் ஒரு குழந்தைக்கு பால் வாங்க என்னிடமிருந்து சிறிய தொகையை அந்த கடவுள் கொடுக்க வைத்திருக்கிறார் என்ற நன்றியுணர்வில் வந்தக் கண்ணீர்.

அழுதக் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு, கடவுளுக்கு நன்றி சொல்லிகொண்டேன். கண்களைத் திறந்தேன். தூரத்தில் அந்தப் பெண் கையில் குழந்தைக்கான பால்  பாக்கெட்டுகளை வாங்கி கொண்டு தாங்கித்தாங்கி போய்க்கொண்டிருக்கிறார்.

- தயாஜி

 

 

ஜூன் 24, 2024

செந்தமிழ் விழா24 - நீதிபதிகள்



 செந்துல் , கான்வெண்ட் இடைநிலை பள்ளிக்கு (SMK CONVENT, SENTUL) அழைத்திருந்தார்கள்.  அப்பள்ளியின் 'செந்தமிழ் விழா 2024' க்கு பல பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பல போட்டிகள் நடந்தன.

போட்டிகளுக்கு பல தமிழறிஞர்கள் நீதிபதிகளாக வந்திருந்தார்கள்

கல்வியாளர் மன்னர் மன்னன்,  ஆசிரியை சுகந்தி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்.

நாங்கள் மூவரும் கவிதை போட்டிக்கு நீதிபதிகளாக பொறுப்பேற்றோம்.

அப்போட்டி இரு பிரிவுகளாக நடந்தன, முதற்கட்டமாக 26 மாணவர்கள் கவிதை வாசிக்கும் போட்டியில் பங்கெடுத்தார்கள். அதிலிருந்து பத்து மாணவர்கள் இரண்டாம் கட்டத்திற்கு வந்தார்கள். அவர்களில் ஐந்து மாணவர்கள் பரிசுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

மாணவர்கள் பெரும்பாலும் மலேசிய கவிஞர்களின் கவிதையை வாசித்தது மனதைக் கவர்ந்தது. 

போட்டி முடிந்ததும், பங்கெடுத்த மாணவர்கள் செய்த சிறுசிறு தவறுகளை ஐயா மன்னர் மன்னன் எடுத்துரைத்தார். அவருக்கே உரிய பாணியில் அவர் பேசியது மாணவர்களைக் கவர்ந்தது. 

நானும் என் பங்கிற்கு ஆசிரியரிடம் மாணவர்கள் குறித்து பேசினேன். வாசிப்பின் வழி மலேசிய எழுத்தாளர்களை நம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியது பற்றி அது அமைந்திருந்தது.


பிறகு ஒவ்வொரு போட்டியிலும் பங்கெடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நீதிபதிகளாக பொறுப்பேற்ற உங்களுக்கு சிறப்பு செய்து நினைவுச்சின்னத்தையும் நற்சான்றிதழையும் வழங்கினார்கள்.

அன்றைய பொழுது மாணவர்களுடன் சிறப்பாக அமைந்தது. வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர் சுலோச்சனாவிற்கும் அன்பும் நன்றியும்...


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 

#வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்