பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 21, 2024

அந்தக் குரல் கேட்கிறதா?


 தினமும், நாளொன்றுக்கு எத்தனை பக்கங்களை என்னால் வாசிக்க முடிகிறது என ஒரு பயிற்சியாகவே நான் வாசித்து வருகிறேன்.

   குறைந்து 50 பக்கங்கள் வரை என்னால் வாசிக்க முடிகிறது. சில சமயம் அரை பக்கம் மட்டுமே அன்றைய தினத்தில் வாசித்திருப்பதும் நடந்திருக்கிறது. வாசிக்கும் புத்தக பக்கங்களை மட்டுமே இதில் சொல்கிறேன். அது தவிர

  இணையத்தில் வாசிக்கின்றவற்றை சேர்க்கவில்லை.

  நாளொன்றுக்கு இருநூறு பக்கங்களும் அதற்கும் கூடுதலான பக்கங்கள் வரை வாசித்த சமயமும் அனுபவும் இருக்கிறது. இப்போது அது முடியவில்லை. பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் தம்மை முதன்மைபடுத்தி கொள்கின்றன. ஆனாலும் குறைந்தபட்சம் என்கிற கணக்கில் அரை பக்கத்தையாவது வாசிக்கின்றேன்.

  அவ்வப்போது வரும் ஒற்றைத் தலைவலியால் (மைக்ரீன்) கண்களில் சிறு வெளிச்சம் பட்டாலும் தலை சுற்றி மயக்கமும் வாந்தியும் வந்துவிடும். அப்போது மாட்டும் குறைந்த பட்ச அரைபக்க வாசிப்பு, சில வரிகள் அல்லது புத்தகத்தைத் திறந்து ஆங்காங்கே சில வரிகளை வாசித்து சட்டென கண்களை மூடிக்கொள்வேன். அல்லது கண்களைச் சுருக்கிக் கொள்வேன்.

   அப்படியே விடக்கூடாது என்பதை எனக்கு நானே சொல்லப்பழகிவிட்டேன். வாசிப்பும் எழுத்தும் என்னை இயக்கும் ஆக்க சக்திகள் என முழுமையாக ஏற்றுக்கொண்டேன்.

  இப்போது குடும்பப்பொறுப்புகளுக்கு மத்தியில் மேற்சொன்ன இரண்டையும் இணைத்து ஒரு மாதிரியாக வாழ்க்கையை அமைத்திருக்கிறேன்.

  உங்களிடம் வாசியுங்கள் என நான் சொல்வதற்கு பின்னால், பல வலி வேதனைகளையும் அவமானங்களையும் இழப்புகளையும் சுமந்திருக்கும் ஒருவனின் குரல் இருக்கிறது. 

  அந்தக் குரல்தான் வாசிப்பை உதாசினம் செய்து தங்களை எழுத்தாளர்களாக சொல்லிக்கொள்பவர்கள் மேல் கோவமாகவும் வெளிப்படுகிறது.

  எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான். ஒருவேளை

   உங்களுக்கு அந்தக் குரல் கேட்டால்; அதற்கு பதில் கொடுக்கும் விதமாக நீங்கள் வசிப்பதே எனக்கு மகிழ்ச்சி.

  பின் அதைப்பற்றி உரையாடுவது; கொண்டாட்டம்.

கொண்டாடுவோம்...

ஜூன் 16, 2024

மாணவர்களுக்கான கதைச்சொல்லி


 ஓர் எழுத்தாளனாக எனக்கு, நான் எழுதிய கதைகள் பேசப்படுவது பிடிக்கும், அதைவிடவும் நான் வாசித்த கதைகளைப் பேசுவது பிடிக்கும். அதே போல மாணவர்களுக்கும் எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கும் கதைகளைச் சொல்வதென்றால் லட்டு சாப்பிடுவது போல் ஒரு கொண்டாட்டமாகவே அதனை நான்  மாற்றிக்கொள்வேன்.


யாருக்கு என்ன கதைகளைச் சொல்வதென்று எனக்கு நன்றாகவே தெரியும். ஒரே கதையை இரு வகையாக மாற்றியும் கூட இரு தரப்பினர்க்கு சொல்லியிருக்கிறேன். எங்களது குறுங்கதை எழுதும் வகுப்பில் பிரதான பாடமே குறுங்கதைகளை வாசித்து, வாசித்த கதைகளை மற்றவர்களுடன் சொல்லி மேலும் கதையை செறிவாக்கம் செய்வதுதான்.



ஏறக்குறைய பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மின்னல் பண்பலையில் அறிவிப்பாளராக இருந்த சமயம். எங்களுகென்று சில நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது சிறுவர் நிகழ்ச்சியான ‘செல்லமே செல்வமே’ எனும் நிகழ்ச்சிக்கு அதன் தயாரிப்பாளராக சித்ரா இருந்தார். மாணவர் படைப்புகளை ஒளிப்பதிவு செய்வதற்காக சில பள்ளிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனை பயன்படுத்தி ‘மாணவர்களுக்கு கதை சொல்லலாமா’ என நிர்வாகத்திடம் கேட்டிருந்தேன். சம்மதம் கிடைத்தது. தயாரிப்பாளர் சித்ராவுடன் நானும் பள்ளிகளுக்கு சென்றேன்.


அவர் மாணவர் படைப்புகளை ஒலிப்பதிவு செய்யும் போது நான் மற்ற மாணவர்களுக்கு கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பேன். பெரிய நம்பிக்கையுடன் தொடங்கியது திட்டம்; சில எதிர்ப்பாராத சூழலால் தொடர முடியாமல் போனது.


அவ்வப்போது பள்ளிக்கூடங்களுக்கு சிறுகதைகள் , குறுங்கதைகள் எழுதும் பட்டறையை வழிநடத்த செல்லும் போது கதை சொல்வது அத்தியாவசியமானதாகவும் இருக்கிறது முக்கியமானதாகவும்  இருக்கிறது.


மீண்டும் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கு கதை சொல்ல சென்றிருந்தேன். மீண்டும் என்பதற்கு காரணம், பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு முறை இப்பள்ளிக்கு கதை சொல்ல சென்றிருந்தேன். ஆசிரியரும் எழுத்தாளருமான ம.நவீன் அழைத்திருந்தார்;இப்போதும் அவர்தான் அழைத்தார்.



அப்போது மாணவர்கள் பள்ளியில் தங்கியிருந்தார்கள். நானும் சில நண்பர்களும் முதல் நாள் இரவு மாணவர்களுக்கு கதை சொல்ல சென்றோம். கதை சொல்லி முடிந்ததும் எங்களுக்கு புத்தக பரிசுகளைக் கொடுத்தார்கள். எனக்கு சுந்தர ராமசாமியின் கட்டுரை புத்தகத்தை ம.நவீன் கொடுத்தார். அந்த அனுபவத்தைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அன்றைய மனநிலையில் அவற்றை புகைப்படம் எடுத்து சேமிக்க தோன்றவில்லை. 


தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் கருவூல மையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான் உட்பட எழுத்தாளர்களான ஶ்ரீகாந்தன், விஸ்வநாதன், அரவின் குமார், சாலினி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தோம்.


காலை 8.30க்கு நிகழ்ச்சி தொடங்குகிறது. நானும் நண்பர்களும் அதிகாலை 6 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துவிட்டோம். ஏனெனில் கொஞ்சம் தாமதித்தாலும் வாகன நெரிசலில் மாட்டிக்கொள்வோம். சரியான நேரத்திற்கு பள்ளி வர முடியாமல் போய்விடும்.


காலை சிற்றுண்டியில் மாணவர்கள் குறித்தும் இன்றைய நிகழ்ச்சி குறித்தும் ம.நவீன் விளக்கினார். தமிழ்மொழி வார நிறைவு நாள் என்பதால் சில போட்டிகளையும் நடத்தியிருக்கிறார்கள். அதில் இரு போட்டிகள் மட்டும் இன்று நடக்கவுள்ளதையும் சொன்னார்.



பின் நாங்கள் தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினோம். வழக்கம் போல நான் என் சார்பாக பள்ளிக்கு நான் எழுதிய ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ கவிதைத் தொகுப்பையும் கொடுத்தேன்.


 பிறகு நாங்கள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ம.நவீன் எங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். அதோடு கதை சொல்லுதலில் முக்கியத்துவத்தையும் பேசினார்.


எங்கள் ஐவருக்கும் தலா ஆளுக்கு ஏறக்குறைய 20-25 மாணவர்களை ஒப்படைத்தார்கள். அப்படியே ஆளுக்கொரு ஒரு இடமும் வழங்கப்பட்டது. நானும் என் மாணவர்களை அழைத்துகொண்டு வகுப்பறைக்குச் சென்றேன்.


என்னைப் பற்றிய சிறு அறிமுகத்தை மாணவர்களுக்கு சொன்னேன். ‘கதை என்றால் என்ன?’ என்ற கேள்வியுடன் தொடங்கினேன். சில நிமிடங்களில் மாணவர்கள் என் பேச்சை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நமக்கும் அதுதானே வேண்டும்.


அவர்களுக்காக கொண்டு வந்திருந்த கதைகளில் அவர்களையே கதாப்பாத்திரங்களாக மாற்றி பேச வைத்தேன். அது மாணவர்களை கவர்ந்தது. கதைகளுக்கு இடையிடையே கேள்வி பதில் அங்கமும் இருந்தது. பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்குமே சிறு சிறு பரிசுகளைக் கொடுத்தேன். நேரம் போனதே தெரியவில்லை. ஒரு மணி நேரம் கதைகளிலேயே கரைந்திருந்தது. கதை சொல்லும் அமர்வு முடிந்ததும் மீண்டும் மண்டபத்திற்கு சென்றோம்.



அங்கு பாடல் போட்டியும், மாறுவேட போட்டியும் நடந்தது. நாங்கள் அதற்கு நீதிபதிகளாக தனித்தனியாக நியமிக்கப்பட்டோம். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எங்களுக்கும் நினைவுப்பரிசு, நற்சான்றிதழ், புத்தம்  என கொடுத்து சிறப்பு செய்தார்கள்.

நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. 


மாணவர்களுக்கு  சொல்லிய கதைகளில் அவர்கள் மட்டுமல்ல நாங்களும் உற்சாகமாகிவிட்டோம். பள்ளியிலேயே எங்களுக்கும் பிரியாணியை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வேளையில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருக்கும், கருவூல மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு , ஆசிரியர் ம.நவீன் அவர்களுக்கும் எங்கள் நன்றி.

ஜூன் 10, 2024

தமிழ்மொழி வாரம் - சிறப்பு விருந்தினர்

 


சமீபத்தில் தேசிய வகை கிளன்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்பள்ளியின் ‘தமிழ்மொழி வார’ திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தனராக எழுத்தாளர் என்ற அடிப்படையில் அழைத்திருந்தார்கள்.

நிகழ்ச்சி காலையில் தொடங்கியது. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்; வந்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை நிறைவைக் கொடுத்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் வழக்கமானவற்றை செய்தார்கள்.


நான் மாணவர்களிடம் தமிழ் மொழி குறித்து பேசினேன். பதினைந்து நிமிடங்கள் என முடிவெடுத்திருந்தாலும் பேசப்பேச அது அரைமணி நேரம்வரைச் சென்றது. மொழி குறித்து பொதுவான சிலவற்றைப் பேசினாலும் குறிப்பாக தமிழ்மொழியின் வழி நமது பொருளாதாரத்தை எப்படி வளர்க்கலாம் என்கிற அடிப்படையில் மாணவர்களுடன் பேசினேன்.

அரசாங்க தொலைக்காட்சி வானொலி, தனியார் தொலைக்காட்சி வானொலி போன்ற ஊடகங்களுக்கு தமிழ் அறிந்தோர் எப்படியெல்லாம் பயன்படுகின்றார்கள் அவர்களுக்கு அங்குள்ள வேலை வாய்ப்புகள் போன்றவற்றை சுட்டுகாட்டினேன்.


அதோடு கலை சார்ந்தும் மொழிவழி எப்படியெல்லாம் நம்மை வளர்க்கலாம் என்பதற்கான சில உதாரணங்களையும் பகிர்ந்து கொண்டேன்.

எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் அங்குள்ள மணவர்களுடன் நேரடியான கேள்வி பதிலை நான் விரும்புவேன். அதற்காகவே என்னால் முடிந்த சில பரிசுகளையும் கொண்டு செல்வேன். இப்பள்ளியில் ஏறக்குறைய இருபது மாணவர்கள் வரை கேள்விகளை கேட்டார்கள்.

“நீங்க எப்படி கதை எழுதறீங்க?” என்ற கேள்வியில் இருந்து பலவிதமானக் கேள்விகள் மாணவர்களிடமிருந்து வந்தன. அது எல்லோரையும் உற்சாகப்படுத்தியது. நான் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லி முடித்து; கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினேன்.


என் உரை முடிந்தது; தமிழ் மொழி வாரத்தை திறந்து வைத்தேன். ஆசிரியர்கள் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

கதவதைத் திறந்ததும் திருவள்ளுவர் வெளியில் வந்தார், ஓலைச்சுவடிகளைக் கொடுத்து எங்களுடன் படம் எடுத்துக்கொண்டார்; இல்லையில்லை நாங்கள்தான் அவருடம் படம் எடுத்துக் கொண்டோம்.

எப்போதும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்போது; என் சார்பாக சில புத்தகங்களைப் பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கு கொடுப்பது வழக்கம். இம்முறை நான் எழுதிய ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ போன்ற குறுங்கதைப் புத்தகங்களுடன் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ என்ற கவிதைத் தொகுப்புகளையும் கொடுத்தேன். அவர்களும் எனக்கு பழக்கூடையையும் ருசியான சாப்பாட்டையும் கொடுத்தார்கள். மீண்டும் அம்மாணவர்களை சந்தித்துப் பேசும் ஆவலுடன் விடைபெற்றேன்.

இப்பள்ளிக்கு என்னை அறிமுகம் செய்த  அன்பிற்குரிய  ஆசிரியரும் கவிஞருமான நித்தியா வீரரகுவிற்கும், பள்ளி தலைமையாசிரியருக்கும் அவரின் நிர்வாகத்திற்கும் , அனைத்து ஆசிரியர்களுக்கும் நம் மாணவர்களுக்கும் என் அன்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஜூன் 09, 2024

அடுத்தது என்ன ?

 


வழக்கம் போல, ஆதித்தன் மகாமுனியையும் இளமாறனையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சந்திப்பின் நேரம் நீளமானதை பின்னர்தான் உணர்ந்தோம். நமக்குப் பிடித்தமானவற்றைப் பேசும் போது நமக்குள் தானாய் ஓர் உற்சாகம் வந்துவிடுகிறது. இந்தச் சந்திப்பும் அப்படித்தான் எங்களுக்கு அமைந்திருந்தது. எங்கள் மூவருக்கும் பொதுவாக இருந்தது எழுத்துதான். பேச்சு எங்கெங்கோ போனாலும் கூடக் கடைசியாய் அது சேருமிடம் எழுத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.


இம்முறை சிலவற்றை முக்கியமானவற்றைக் கவனத்தில் கொண்டு பேசினேன். சில காரணங்களாலும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலாலும் எழுதுவதில் இருந்து விலகி இருந்த ஆதித்தன் மகாமுனியை மீண்டும் எழுத சொன்னேன். தொடர்ந்து ‘விமர்சனத்தால் ஒருவர் எழுதாமலேயே போய்விட்டார்’ என்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துபவர்கள் செய்த காரியத்தால் ஓர் இளைஞன் எழுதுவதில் மனஅழுத்தததை எதிர்க்கொள்கிறான் என்பதுதான் எத்துனை முரண்.


எல்லாவற்றையும் கடந்து நாம் எழுத வேண்டி இருக்கிறது. எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எதுவும் தடை போடாதுதானே. உரையாடலில் ஆதித்தன் மகாமுனியிடன் பச்சை விளக்கிற்கான சமிக்ஞை தென்பட்டது. மீண்டும் அவரின் எழுத்துகளை நானுமே பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனெனில் எழுத எழுததான் ஒருவர் எழுத்தாளர்தானா என நாம் மட்டுமல்ல; எழுதியவரே தன்னைக் கண்டறிய முடியும்.

தன்னால் எழுத முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்த பின் அதற்கு முயலாமல்; தன்னை மற்ற இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாகக் கட்டமைத்துக் கொள்ளும் கோமாளித்தனங்களுக்கு மத்தியில் நாம் எழுதியெழுதிதான் நம்மை வளர்த்தெடுக்க முடியும். இல்லையெனில் எழுத்தின் மீதான நமது மொத்த உழைப்பையும் இன்னொருவரின் கோமாளித்தனங்களுக்குத் தாரைவார்த்து கொடுக்கும்படி ஆகிவிடும்.


ஆதித்தன் மகாமுனி மட்டுமல்ல; எழுத ஆர்வம் உள்ள எல்லோருக்குமே நான் சொல்வது ஒன்றுதான் வாசியுங்கள் எழுதுங்கள். ஆனால் இப்போது இன்னொன்றையும் சொல்ல நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். இளம் எழுத்தாளர்களே (சில சமயங்களில் தேர்ந்த எழுத்தாளர்கள் என நாம் நம்பும் சிலரும் உட்பட), யாராவது உங்களுக்குக் கதை எழுத கற்றுக்கொடுக்கிறேன் என்றாலும்; கதை என்றால் என்னவென்று பாடம் எடுக்க முனைந்தாலும்; அவர்களில் இலக்கியப் பார்வை என்ன? அவர்கள் எழுதிவைதான் என்ன என விசாரியுங்கள். கொஞ்சம் நீங்கள் அசந்தாலும் உங்களை அவர்கள் தங்களுக்கான சிஷ்ய பிள்ளைகளாக மாற்றிவிடுகிறார்கள்.


இதில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும்; விடயம் தெரியாதவர்களுக்கு நாம் எடுத்துரைக்கலாம். ஆனால் எல்லாம் தெரிந்தும் மனம்வந்து சிஷ்யர்களாக உழைக்கத் தயாராய் இருப்பவர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது.


இளமாறனைப் பொருத்தவரை கவிதை எழுதுவதில் அதிகம் விருப்பம் உள்ளவர். அவரிடம் கவிதைகள் குறித்துப் பேசினால் அவர் கண்களில் ஓர் ஒளிவெள்ளம் பாய்வதை நாம் பார்க்கலாம். இன்று அந்த ஒளிவெள்ளத்தை நானே கொஞ்சம் தூண்டிவிடவும் செய்தேன்.


கவிதைகள் குறித்த உரையாடல் இங்கு அதிகமாய் நடப்பதில்லை. ‘சிறகுகளின் கதை நேரம்’ நண்பர்கள் சார்பாக நாமே அதற்கான ஓர் உரையாடல் தளத்தை ஏற்படுத்தலாம் என்றேன். அதற்கான முதற்கட்ட திட்டங்களை மட்டுமே கூறினேன். மற்றபடி இளமாறன்தான் அதனை முன்னின்று நடத்த வேண்டும். அவர் அதனைப் பொறுப்பாகச் செய்வார்.


கவிதைகள் மீது ஆர்வம் உள்ளவர்களுடன் ஒரு சந்திப்பு. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து கவிதைகளைக் கொண்டு வரவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டுவந்த கவிதைகள் குறித்துப் பேச வேண்டும். அவ்வளவுதான். இங்குக் கவிதைகள் குறித்த தற்கால உரையாடலை இங்கிருந்துதான் தொடங்கினால் அது ஓர் உரையாடல் களமாக மாறும் என நம்புகின்றேன்.


இன்றைய சந்திப்பில் இன்னும் நிறையப் பேசினோம். ‘அடுத்தது என்ன?’ என்னும் கேள்வியோடு நண்பர்களுக்கு விடை கொடுத்தேன். நிச்சயம் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம்..

மே 21, 2024

ஐஸ் வண்டி

 



அடிக்கும் வெயிலுக்கு ஐஸ் சாப்பிடலாம்  என்றிருந்தேன். நினைத்ததும் மணி சத்தம் கேட்டது.  இப்போதெல்லாம் நினைப்பவை உடனுக்குடன் நடந்துவிடுகிறது. அந்த மணி சத்தம்,
எங்கள் இளமை காலத்தை கொண்டட்டமாக்கிய சத்தங்களில் இதுவும் ஒன்று. மீண்டும் குழந்தையாகி பொம்மியைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தேன்.

மோட்டாரில் அவர் ஐஸ் கிரீம் விற்று கொண்டு வந்தார். 'ஐஸ் வண்டி' சொல்லும்போதே நாக்கு சில்லிடுகிறது. குழந்தையைப் போல துள்ளி குதிக்க தோன்றுகிறது.

அதைவிட குளிர்ச்சியைக் கொடுத்தது, அவர் தமிழில் விளம்பரம் செய்திருந்தார். தமிழால் பெரும் வணிகம் செய்பவர்களே தமிழைப் புறக்கணிக்கின்ற சூழலில், தமிழில் வாசிக்கவோ எழுதவோ செய்யாமல் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு கதை எழுதும் பட்டறை நடத்துகின்றோம் பேர்விழிகள் மத்தியில்  தன் சிறு வணிகத்திற்கு தன்னாளான வகையில் விளம்பரத்தை தமிழில் எழுதி வைத்திருக்கிறார்.

அதற்காகவே வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்குமே ஐஸ் கிரீம்களை வாங்கி கொடுத்தேன்.

தமிழில் உள்ள விளம்பரத்தை (ஐஸ் கிரீம் தமிழா என நீங்கள் வம்பிழுக்காத பட்சத்தில்) குறித்து கேட்கவும் அவர் மகிழ்ச்சியாகி பேசத்தொடங்கினார். இதுவரை இருந்த அசதியை உதரித்தள்ளினார்.





சுங்கைப்பட்டாணியில் உள்ளவர்களுக்கு  நன்கு அறிமுகம் ஆனவர்தான். இம்மாதிரி சிறு வணிகர்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவு அவருக்கு வருமானத்தை மட்டும் தராது தமிழ் தன்னை காப்பாற்றுகிறது என்கிற அன்பையும் அதிகப்படுத்தும்.

கூடுதல் தகவல்; அந்தப் பனிக்கூழ் சுவையாகவே இருந்தது. பொம்மி கொஞ்சமாய் ருசி பார்த்த முதல் பனிக்கூழும் அதுதான்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

மே 14, 2024

- பிறவிக்கலைஞனும் வைரல் மனிதர்களும் -

 


நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம். குறிப்பாக ஆசிரியர்களிடம். அதிலும் குறிப்பாக மாணவர்கள் மீது அக்கறையுள்ள ஆசிரியர்களிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்க நினைக்கிறேன்.

ஒருவேளை என் சந்தேகம் தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன். அதற்கு நான் எப்பவும் தயார்தான்.

கணக்கு பாடம் குறித்த அறிவு இல்லாத, இதுவரையில் கணக்கு பாடத்தில் தேர்ச்சி அடையாத யாரையும், குறைந்த பட்சம் கணக்கில் தேர்ந்தவர்கள் யார் எது அவர்களின் சாதனை என தெரியாத தெரிந்து கொள்ளும் உழைப்பைப் போடாத எவரையும் நம் பள்ளி மாணவர்களுக்கு  கணக்கு பாடமோ அல்லது கணக்கு பட்டறையோ எடுப்பதற்கு நாம் அனுமதிப்போமா?

ஒருவேளை ஏதோ ஒரு வகையில் அவர் பிரபலமானவர் என்றாலும் கூட அவருக்கே கைவராத ஒன்றை, அவரே முயலாத ஒன்றை அல்லது அவரே பலவீனமாக இருக்கும் ஒன்றை குறித்து நம்  மாணவர்களுக்கு  வகுப்பு நடத்த நாம்  அனுமதிப்போமா?

பெரும்பாலான பள்ளிகளில் எழுத்தாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள். கதைகள் குறித்தும் இலக்கியம் குறித்தும் மாணவர்களுக்கு நால்லதொரு அறிமுகத்தைக் அவர்கள் கொடுக்கிறார்கள். நம்மைப் போன்ற எழுத்தை நேசிக்கின்றவர்களுக்கு அது பெரிய மகிழ்ச்சி. ஏனெனில் மாணவ சமூகத்திடம் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.  ஒருவகையில் அது தொடக்கப்புள்ளியும் கூட.

நாளை அம்மாணவர்கள்தான்

வாசகர்களாக எழுத்தாளர்களாக விமர்சகர்களாக உருவாகப் போகிறார்கள். அவர்கள் இத்தமிழ்ச் சமூகத்திற்கு ரொம்பவும் முக்கியமானவர்கள்.

அவர்களிடமே போலியான முன்னுதாரணங்களை நாம் காட்டலாமா? இளம் வயதிலே இப்படியான தவறான போதனைகளைக் கொடுப்பது நாளை அவர்களிடம் இருந்து வரவிருக்கும் எழுத்தாற்றாலுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடாதா?

மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய எழுத்தாளர்கள் எவ்வளவோ பேர் இங்கு இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுகிறவர்கள். இலக்கிய வெளிச்சம் தவிர மற்ற எந்த வெளிச்சத்தையும் அவர்கள் தங்கள் மீது சுமந்து திரிகிறவர்கள் அல்ல. அவர்களை அடையாளம் காணுவது அவ்வளவு சிரமமா?

'படித்த ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படைக்காதீர்கள்; படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள்’ என்கிறார் தத்துவவாதி கலீல் ஜிப்ரான். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தவர்.

அப்படி நீங்கள் உங்கள் பள்ளிக்கு அழைக்கும் எழுத்தாளர்கள் என சொல்லப்படுகின்றவர்களின் எழுத்துகளை இதுவரை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?

நிற்க, 

நாம் அவர்களை வாசித்துதான் நம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்துங்கள் பட்டறை நடத்துங்கள் அடுத்த ஆண்டு புத்தகம் வெளியிடுங்கள் என சொல்கிறோமா?

சரி,

எதை முன்வைத்து 'எளிய முறையில் குறுங்கதை பட்டறைகளை'  மாணவர்களுக்கு வழிநடத்த அந்த எழுத்து வகையில் எதையுமே செய்திடாதவர்களை  அழைக்கிறோம். சரி, யார் அவர்களை அழைக்கச்சொல்கிறார்கள். அப்படி  அழைக்கச்சொல்கிறவர்கள் அழைத்தவர்களின் எந்தப் படைப்பை எந்த எழுத்தை வாசித்து ரசித்து உள்வாங்கி, " அடடே என்ன மாதிரியான படைப்பை/ குறுங்கதையை இவர் எழுதியிருக்கிறார்... இவரல்லவா நம் மாணவர்களுக்கு கதை எழுதுவதற்கான பட்டறையை நடத்த வேண்டும்.." என சொன்னார் என தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஒருவேளை எங்கள் வாசிப்பில் நாங்கள் அதனைத் தவற விட்டிருக்கலாம். நீங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள். நாங்களும் வாசிக்கின்றோம்.

சரி பள்ளி பாடத்திட்டத்தில் இல்லதா ஒன்றான குறுங்கதைப் பட்டறையைத்தான் நடத்துவதாக முடிவெடுத்தால் அதற்கு இங்கு பலர் இருக்கிறார்கள். குறிப்பாக எழுத்தாளர் மணிராமுவை சொல்லலாம். முகநூலில் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிவருகின்றார். எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன், மாணவர்களுக்கு கதை எழுதுவது குறித்து  பேசிவருகின்றார். தொடர்ந்து எழுதுகின்றார். அல்லது நாடறிந்த (ஆசிரியர்) எழுத்தாளர் கே.பாலமுருகன் இருக்கிறார். மாணவர்களும் இலக்கியத்தில் ஈடுபட வேண்டும் என பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றார்; அது கூடுதலான வேலையாக இருந்தாலும். (போலியானவர்கள் பள்ளிகளில் நுழைந்து மாணவர்களுக்கு கதை எழுத கற்றுக்கொடுக்கின்றோம் என சொல்வதை எவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என தெரியவில்லை). இப்படி பல எழுத்தாளர்கள், உண்மையில் எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். மேலே சொன்னது மாதிரி அவர்கள் எழுத்து வெளிச்சம் தவிர வேறெந்த வெளிச்சத்தையும் சுமந்து திரிபவர்கள் அல்ல. இவர்களைத்தானே நாம் நம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்?

நிற்க, குறுங்கதை வடிவம் என்பது, (நான் இந்த வடிவம் குறித்து தொடர்ந்து வாசித்தும் பேசியும் எழுதியும் வருகிறேன் என்பதால்...!) அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது; கூடாது.

தற்சமயம் இவ்வடிவம் கவனம் ஈர்ப்பதாக தேரிந்தாலும், குறுங்கத்தைகளுக்கென பெரிய வரலாறு இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் இருந்தும் கூட அதற்கான சாத்தியக்கூறுகளை நாம் எடுத்துரைக்கலாம். பல முக்கியமான படைப்பாளிகள் குறுங்கதைகளை எழுதி அதன் வழி இன்றளவும் பேசப்படுகின்றார்கள்.

தமிழ் மொழியிலேயே முன்னணி எழுத்தாளர்கள் சிறந்த குறுங்கதைகளை எழுதியிருக்கிறார்கள். இப்படி குறுங்கதைகள் குறித்து நாம் அதிகம் பேசலாம். அதனால்தான் நாங்கள் நண்பர்களுடன் இணைந்து தனியே குறுங்கதை வகுப்புகளையும் நடத்தி வருகின்றோம்.

நிற்க,

யாரையும் காயப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ  இதனை எழுதவில்லை. அவரவர் திறமையில் அவரவர் உழைப்பில் அவரவர் மிளிர வேண்டும் எனதான் கேட்டுக்கொள்கிறோம். வாசியுங்கள். எழுதுங்கள். உங்களுக்கு எழுத்தாளர் என்கிற அசல் அடையாளம் தானாய் உருவாகும். அதைவிடுத்து இப்படியான செயல்பாடுகள் குறைந்த ஆயுளுக்கான பிரபலத்தை மட்டுமே கொடுக்கும். நாளை நீங்கள் கற்றுக்கொடுத்த மணவனே வளர்ந்து வந்து உங்களை விமர்சித்து புறக்கணிப்பான். அந்த துரதிஷ்டம் உங்களுக்கு வரக்கூடாது எனபதற்காகவே இதனை நாங்கள் எழுத வேண்டியுள்ளது.

உதாரணாமாக,

நாம் நாட்டு கலைஞர்களில் கே.எஸ். மணியம் ரொம்ப முக்கியமான கலைஞர். அவரைத் தெரியாதவர்கள் ரொம்பவும் குறைவு. இன்றைய இளம் இயக்குனர்கள் உருவாக்கும் கதாப்பாத்திரங்களுக்கும் இயல்பாக உயிர் கொடுத்து அசத்திவிடுகின்றார். கலைத்துறையில்  பலருக்கும் அவர் வழிகாட்டி; ஆசான்.

இன்னொரு பக்கம் , டிக்டாக்கில் மோசமான செயல்களால் 'வைரல்' ஆன ஒருவர் இருக்கிறார். 

ஆனால் கே.எஸ்.மணியத்தை புறக்கணித்து அந்த 'வைரல்' மனிதனை கலைத்தாயின் தவப்புதல்வன் என பாராட்டி மேடை ஏற்றி விருது வழங்கினால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோமா? அல்லது கைத்தட்டி கலைஞனை வாழ்த்துங்கள் என கூட்டம் சேர்ப்போமா?

நிறைவாக,

மீண்டும் இப்பதிவின் முதல் பத்தியை வாசித்துவீடுங்கள்.

'ஒருவேளை என் சந்தேகம் தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்.'

வக்கீல் நோட்டிஸ்கள் எதையும் அனுப்பாதீர்கள். நாங்கள் எழுத்தாளர்கள். தினமும் எழுதுகிறவர்கள், எங்களுக்கு எழுதத் தெரியும் அவ்வளவே...


#தயாஜி

மே 09, 2024

- அவர் சிரிச்சா வேற மாறி... -

 



 எழுத்தாளர் ஸ்ரீகாந்தனை சந்தித்தேன்.  வழக்கம் போல பல சுவையானவற்றை பேசி சிரித்தோம்.

சிரித்தோம் என்றதும்தான் சொல்லத் தோன்றுகிறது. இயல்பாக; பேசும் போதே நகைச்சுவை வெடிகளை போடும் பழக்கமுள்ளவர் அவர். முதலில் நம்மை சிரிக்கவிட்டு பிறகுதான் சிரிப்பார். அதோடு அவரின் சிரித்த முகம் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

ஆனால் பாருங்கள் எந்தப் புகைப்படத்திலும் அவர் சிரிக்கவே மாட்டார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுப்போம். இன்னும் கிச்சுகிச்சு மூட்டிதான் சிரிக்க வைக்கவில்லை.

சில படங்களில் அவரது வலது பக்க உதடு கொஞ்சமாய் பின் நகர்ந்திருக்கும், அதுதான் அவரின் புகைப்பட சிரிப்பு என சுய சமாதானம் செய்து வந்தேன்.

இன்று கொஞ்சம் கராராகவே சிரிக்க வைக்க முயன்றேன். சிரித்தார். அழகாக இருந்தார். 'அப்படியே ஒரு புகைப்படம்' என்றேன். உடனே முகம் இறுக்கமாகத் தொடங்கியது.

சில புகைப்படங்களுக்கு பிறகு, அவரின் சிரித்த முகத்தை படம் பிடித்தேன்.





அவரின் சிரித்த முகம் ஏனோ இரட்டையாகத் தெரிகிறது. பக்கத்தில் இருக்கும் என் முகத்தில் எந்த தடுமாற்றமும் இல்லை. ஆனால் அவரின் சிரித்த முகம் மட்டும் ஏன் அப்படியாக இருக்கிறது என தெரியவில்லை.

ஒருவேளை அவர் சிரிக்கும் போது அவரின்  உள்ளிருந்து வேறொரு ஆள் எட்டிப்பார்ப்பார் போல ! அந்த இன்னொரு மனிதனைத்தான் தன் சிரிப்பின் பின்னால் இவர் மறைத்து வைத்திருக்கிறாரோ என்னமோ...!

அதிர்ச்சியாகதான் இருக்கிறது. அதைவிட அதிர்ச்சியாய் இன்னொன்றும் உள்ளது. அது இன்று நாங்கள் சாப்பிட்ட பில்.. "அவ்வளவுக்காக சாப்டோம்...!"

அதுசரி அப்படி எதைதான் சுவையாக பேசினோம்!
- சமீபத்திய அவரது புத்தக விமர்சனம்
- நாங்கள் எழுத நினைத்திருக்கும் கதைகள்
- கோ.புண்ணியவான் படைப்புலகம் நிகழ்ச்சி குறித்து
- சமீபத்தில் உருவாகியிருக்கும் திடீர் சிறுகதை பயிற்றுனர்கள்
- வாசிக்காமல் எழுதாமல், தங்களை எழுத்தாளர்கள் என் பிறரை வைத்து சொல்ல வைப்பவர்கள்
- மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
- லத்தின் எழுத்தாளரின் சிறுகதை
- உடல் ஆரோக்கியம்
- உமா மகேஸ்வரி எழுதிய குளவி சிறுகதை
- ஆட்டிசம் குறித்து வாசித்த சிறுகதை
- சிறகுகளின் கதை நேரம்
இப்படியாக மேலும் சில...

ஒருநாள் நீங்களும் வாங்களேன் ஜாலியாக கதைகளைப் பேசிக்கொண்டே சாப்பிடுவோம்.
ஒரே நிபந்தனை சாப்பாட்டு பில்லுக்கு நீங்கதான் பொறுப்பு...

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #சிறகுகளின்_கதை_நேரம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்