- சுவாரஸ்யமான திருப்பம் -
சமீபத்தில் இலக்கியவாதி ஒருவரைச் சந்தித்தேன். முன்னமே கொடுத்திருந்த குறுங்கதைகளில் அவர் வாசித்திருந்த சில குறுங்கதைகளைப் பற்றி பேசலானார்.
தனக்கு இப்படி குட்டிகுட்டியாக வாசிப்பது பிடிக்கவில்லை என்றார். கதையைப் புரிந்து கொள்ளும் முன்பே கதை முடிந்துவிடுவதை ஒரு குறையாகவே சொன்னார். எழுத்தாளர்கள் இப்படி எழுத சோம்பல்பட்டு குறைவாக எழுதாமல் இன்னும் விலாவாரியாக எழுதினால்தான் என்ன என்றார்?
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒரு முறை அவர் வாசித்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி சொல்லும்போது, வாசிக்கறவங்களை யோசிக்க விடாம எல்லாத்தையுமே கதையில் சொல்லிடறாங்க. ஒரு வாசகனா எனக்கும் அதில் கொஞ்சம் உழைப்பும் தேடலும் இருக்க வேணாமா. இப்படி எழுத்தாளரே கதையை சொல்லிட்டு போய்ட்டா வாசகனா என்னோட வேலை சும்மா வாசிச்சிட்டு போறதுதானா? சொற்சிக்கனம்தான் கதைகளுக்கு முக்கியம் என்றார்.
சரி இன்னொரு முறை முயற்சிக்கலாமே என்று, உள்நாட்டு எழுத்தாளரின் புத்தகமொன்றை வாசிக்க கொடுத்தேன்.
இதெல்லாம் வேணாம் தம்பி, உள்நாட்டுல என்ன எழுதறாங்க எல்லோரும் ஒரே கதையைத்தான் சுத்தி சுத்தி எழுதறாங்க. அதனால நான் உள்நாட்டு புத்தகங்களை வாசிக்கறதில்ல என்றவர் சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவராய், "ஏன் தம்பி... இந்த விஜய் முதலமைச்சர் ஆகிட்டாருன்னா இனிமே படம் நடிக்க மாட்டாரா?" என்ற கேட்கவும் எனக்கு புரிந்தது மலேசிய இலக்கியச் சூழலில் பலரும் பாராட்டும் இலக்கியவாதியாக
நூறு சதவீதம் பொருந்தகூடிய ஒருவராக அவர் மாறிகொண்டிருந்தார்.
நிச்சயம் ஒருநாள் அவருக்கு விருது கொடுப்பார்கள்; ஊடகங்களில் அவரை பேட்டி எடுப்பார்கள், மலேசிய இலக்கியம் குறித்து பேச மேடை அமைத்து அழைப்பார்கள் என்பதால் அவர் யார் என்பதை இப்போது நான் சொல்லவில்லை.
பிறகு நீங்களே தெரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வாங்களேன்.
அடடே இதுவல்லவா இந்தப் பத்தியில் வந்த திருப்பம். சுவாரஸ்யமாக இருக்கிறதுதானே....
0 comments:
கருத்துரையிடுக