பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 15, 2025

முடியாது என் கதை 3


(This is my personal story. You may read it if you wish)

இரவு மணி 8க்கு பொது மருத்துவமனையை அடைந்தோம். காரை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்து சேர 8.30 ஆனது.

கிளினிக்கிள் கொடுத்திருந்த பரிந்துரை கடிதத்தையும் எனது அடையாள அட்டையையும்  சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து பதிந்து கொண்டேன்.
 
அதற்கிடையில் மூன்று வாகன விபத்துகளில் காயப்பட்ட நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். காத்திருப்போர் இடம் முழுக்க நோயாளிகள் நிறைந்திருந்தார்கள்.

என் பெயரை பதிந்து கொண்டவர், என்னிடம் என்னால் நாற்காலியில் அமர முடியுமா? இன்னமும் மயக்கம் வருகிறதா? உங்களால் சமாளிக்க முடிகிறதா? என கேட்டார்.

நானும் , சுற்றி என்னைவிட அவசர சிகிச்சைக்கு சிலர் இருப்பதை புரிந்து கொண்டு என்னால் காத்திருக்க முடியும் என்றேன். அதுதான் நான் செய்த தவறு என பின்னர் புரிந்தது. அது புரிய எனக்கு ஐந்து மணிநேரம் ஆனது.

அவசர சிகிச்சைக்கு இரு இடங்களில் காத்திருப்பார்கள். ஒன்று பச்சை பகுதி. இங்கு இருப்பவர்கள் கொஞ்சம் காத்திருக்கும்படி ஆகும். அடுத்தது சிவப்பு பகுதி. இங்கு ரொம்பவும் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் இருப்பார்கள். 

விஷம் குடித்தவர்கள், வலிப்பு வந்தவர்கள், மூச்சு தினறல் உள்ளவர்கள், விபத்தில் அதிகம் காயப்பட்டவர்கள், மாரடைப்பு வந்தவர்கள் என காத்திருத்தல் அதன் அபாயத்தை கூட்டிவிடக்கூடியவர்கள் இந்த சிவப்பு பகுதியில் இருப்பார்கள்.

எந்த நேரத்தில் என்னால் காத்திருக்க முடியும் என சொன்னேனோ தெரியவில்லை. அவரிடம் பெயரை பதிந்து பதிவு கட்டணத்தை இன்னொரு இடத்தில் கட்டுவதற்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆனது.

எனக்கு அடுத்ததும் உடனடி சிகிச்சை தேவைப்படுவோர் வந்து கொண்டே இருந்தார்கள். தொழிற்சாலை விபத்தில் சிக்கிய வெளிநாட்டுக்காரர். பள்ளிக்கூட விளையாட்டு சீருடையுடன் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருக்கும் சீன மாணவி. 
இரண்டாம் முறையாக மாரடைப்பு வந்த தமிழர். விஷத்தை கிடைத்த விட்ட தமிழ்ப்பெண்ணும் அவளது பெரிய குடும்பமும். சுவாசிக்க சிரமப்பட்டு கொண்டிருந்த சில வயோதிகர்களும் அவர்களது குடும்பமும் என எந்த நாற்காலியும் காலியில்லாதபடிக்கு ஆட்கள் நிறைந்திருந்தார்கள்.

நானும் இல்லாளும் மற்றவர்களுடன் சாலைக்கு அருகில் இருக்கும் சாக்கடைக்கு பக்கத்தில் (சாக்கடையை கம்பி போட்டு மூடியிருப்பார்கள்) அமர்ந்திருந்தோம்.

எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணை அழைத்தார்கள். உள்ளே சென்று மீண்டும் எனக்கு என்ன பிரச்சனை என சொல்லி பதிவிற்கான ஒரு ரிங்கிட்டை  கட்டினேன்.  அங்கு எனக்கு ஏழாம் அறையில் இருக்கும் மருத்துவரை சந்திக்க வேண்டும் எனச் சொல்லி அதே எண்ணை மீண்டும் அழைக்கும்வரை காத்திருக்க சொன்னார்கள்.

இதற்கிடையில் மணி பத்தை தாண்டியது. மதியம் நானும் இல்லாளும் சாப்பிடாததால் பசி எங்களை மேலும் சோர்வாக்கியது. பக்கத்தில் அங்காடி திறந்திருந்ததால் அப்போதைக்கு ரொட்டிகளை வாங்கி சாப்பிட்டோம்.

 நேரம் ஆகிறது. நோயாளிகள் கூடுகிறார்களே தவிர எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணை அழைக்கவேயில்லை. அதிலும் குறிப்பாக ஏழாம் எண் அறையில் இருக்கும் மருத்துவரை சந்திக்க எந்த நோயாளியும் அழைக்கப்படவில்லை.

வெளியில் லேசாக மழை தூறல் போட்டது. கொஞ்ச நேரத்தில் உடன் வந்திருந்த இல்லாளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு தலைவலியும் வந்துவிட்டது. அவரால் அங்கு உட்காரவும் முடியவில்லை. வாந்தி வருவதாகக் கூறினார்.

அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை கழிவறைக்குச் சென்றேன். நான் வாசலில் நின்று அவரை பார்த்து கொண்டிருந்தேன். உண்மையாகவே வாந்தி எடுத்தார். அந்தச் சத்தத்தில் எனக்கும் வாந்தி வந்தது. அவர் வந்ததும் பக்கத்து கழிவறைக்கு செல்ல நினைத்தேன்.
நான் நினைக்கவும் அவர் உள்ளிருந்து என்னைப் பார்க்கவும் சரியாக இருந்தது. மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பி வாயைக் கொப்பளித்துக் கொண்டார்.

குடுகுடுவென என்னிடம் வந்தார். எனக்கு வாந்தியுடன் சேர்ந்து வயிறும் கலக்கியது. வந்தவரிடம் சொல்லிவிட்டு பக்கத்து கழிவறைக்கு செல்ல நினைத்தேன். வந்தவர் உடனே, "நீங்க அதைப் பார்த்தீங்களா?" என்றார். 

எனக்கு புரியவில்லை. "யாரை?" என்றேன்.

"அதான் நான் வாந்தி எடுக்கும்போது என் பின்னால நின்னாளே அந்த மலாய்க்கார பொண்ணுதான்..."

"என்னம்மா சொல்ற....!!!!"

"அங்கதான் நின்னுகிட்டு இருந்தா டக்குன்னு காணோம்.. அதான் வெளியே வந்தாளான்னு கேட்கறேன்..."

எனக்கு வாந்தியும் நின்றது வயிறும் சரியானது. இல்லாளை அழைத்துக்கொண்டு மறுபடியில் சாக்கடை கல் மீது அமர சென்றேன். மழையில் எல்லாம் நனைந்திருந்தன. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டோம்.

மணி பன்னிரெண்டை நெருங்கியது. வீட்டில் இருந்து மனைவியின் அப்பா அழைத்தார். திடீரென பொம்மி அழத்தொடங்கிவிட்டாள் என கூறினார். வீடியோ காலில் இருவரும் பேசி சமாதானம் செய்தோம். ஏனோ அவள் சமாதானம் ஆகவில்லை. அழுகை அதிகமானது.

எனக்கும் இல்லாளுக்கும் மனசு சரியில்லை.  நான் பணம் கட்டியதில் இருந்து ஏழாம் எண் அறைக்கு எந்த எண்ணையும் அவர்கள் அழைக்கவில்லை. கூட்டம் கூடிக்கொண்டே போனது. எண்ணை அழைக்காவிட்டாலும் நாமே சென்று மருத்துவரைப் பார்க்கலாம் என்று இல்லாள் என்னை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

வரிசையாக இருந்த அறைகளில் இரண்டில் மட்டுமே மருத்துவர்கள் இருந்தார்கள். ஏழாம் எண் அறையில் ஒரு மலாய் இளைஞன் கையொடிந்த நிலையில் கட்டு போட்டு அமர்ந்திருந்தான். 

அந்த இளைஞனிடம் மருத்துவரைப் பார்த்தாரா என கேட்டேன். வெளியில் நாற்காலி இல்லாததால் தான் இங்கே அமர்ந்திருப்பதாக சொன்னவர். தனக்கும் இந்த அறை எண் தான் கொடுத்த்தார்கள். அதான் முன்னமே வந்ததாகவும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இந்த அறைக்கு யாரும் வரவில்லை என்றார்.

அந்த நேரம் என் பெயரை பதிவு செய்த பணியாளர் குறுக்கே நடந்தார். இந்த அறைக்கு மருத்துவர் வரவே இல்லையாம் என்றேன்.

ஒருகணம் நின்றவர் எங்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தார். செல்லும் வழியில் நான்காம் எண் அறையில் இருக்கும் மருத்துவரைக் காட்டி இதோ இவர்தான் ஏழாம் அறைக்கான மருத்துவர் என்றார்.

அந்த நான்காம் எண் அறையில் இரு மருத்துவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டிருக்க, ஒரு நோயாளி அந்த அறைக்கு நுழைந்தார்.

என்னைவிடவும் இல்லாளுக்கு கோவம் வந்துவிட்டது. உடனே என்னை இழுத்துக்கொண்டு நான்காம் என் அறைக்கு செல்கிறார்......

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்