பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு (வகுப்பு 3) - 24/9/23

 

 


                                      - சொல்லிச்சொல்லி எழுதச் சொல்லுவோம் –

 

ஞாயிறு; மூன்றாம் ‘குறுங்கதை எழுதும் வகுப்பு’ சிறப்பாய் நடந்தது. வழக்கமாக சனிக்கிழமை நடைபெறும் வகுப்பு இம்முறை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

இன்றைய வகுப்பிற்கான பாடமாக வாரத்தின் தொடக்கத்திலேயே ஒரு இடுபணியைக் கொடுத்திருந்தேன். தங்களுக்கு பிடித்த திரைப்படமும் அதற்கான காரணமும் என்பதுதான் அது. இது கதை எழுதும் வகுப்புதானே? அதற்கு ஏன் பிடித்த திரைப்படங்களையும் அதற்கான காரணத்தையும் எழுத வேண்டும் என்கிற கேள்வி எழலாம்.

இன்றைய நம் வாழ்வில் குறிப்பாக தமிழர்களின் வாழ்வில் சினிமா ஒரு அங்கமாகவே ஆக்கிரமித்துவிட்டது. வாசிப்பவர்களின் நேரத்தையும் இன்னும் சொல்லப்போனால் எழுத வேண்டும் என ஆசைப்படுகின்றவர்களின் நேரத்தையும் அது தனக்காய் எடுத்துக் கொண்டது. அதிலிருந்து முழுமையாக யாரையும் விடுவிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். ஆனாலும் அதன் மூலம் நக்கான சில நன்மைகளை நாம் செய்துக்கொள்ளலாம். அதனை நமக்காக வேலை செய்ய வைக்கலாம். நமது படைப்பாற்றலையும் கற்பனைத் திறனையும் அதன் வழியில் சென்று கூர்மைப்படுத்தலாம். கொஞ்சம் பிசகினாலும் இருக்கும் கூர்மையைக் கூட அது மொக்கையாக்கிவிடும் என்கிற எச்சரிக்கையுடன் தான் இதனை செய்கிறேன். 

ஒரு திரைப்படத்தை நாம் எப்படி அணுகுகின்றோம் என்பது ரொம்பவும் முக்கியம். அவர்கள் நமக்கு என்ன காட்டுகிறார்கள் என்பதைவிடவும் நம்மால் அதில் எதை கண்டறிய முடிகிறது என்பது அதைவிட முக்கியம்.

எங்கள் குறுங்கதை வகுப்பில் பங்கெடுத்தவர்கள் அவர்களுக்கு பிடித்த திரைப்படத்தையும் அது தங்களுக்கு பிடித்ததன் காரணம் குறித்தும் எழுதி அனுப்பியிருந்தார்கள். இன்றைய நிகழ்ச்சியில் அவற்றைப் பற்றிதான் பேச வேண்டியிருந்தது. ஆனால் பேசவில்லை. அதனை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துவிட்டோம். 

அதைவிட இப்போது அவசியமாக இருப்பது; கதைகளை வாசித்து நாம் எப்படி உள்வாங்குகின்றோம் என்பது என தோன்றியது. அதற்கு ஏற்றார்ப்போல நான்கு குறுங்கதைகளைத் தேர்வு செய்து கூகுள் வகுப்பில் பகிர்ந்தேன்.


1. ‘ஓஷோவின் குட்டிக்கதை’ தொகுப்பிலிருந்து; மாமியாரைக் கொல்ல முயன்ற குடிகார மருமகன் பற்றிய கதை.

2. ‘ஜென் கதை- உன்னையறிய உனக்கொரு திறவுகோல்லென்னும்’ புத்தகத்திலிருந்து, ‘உண்மையான பாதை’ என்னும் கதை. இக்கதை நாம் இறக்கவும் இல்லை பிறக்கவும் இல்லை என நிறுவும் இரண்டு ஜென் துறவிகள் பற்றியது.

3. கவிஞர் பெருந்தேவியின் ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தின் வாழும் பேய்’ என்னும் குறுங்கதை தொகுப்பில் இருந்து ‘பக்கத்து வீடு’ என்னும் குறுங்கதை – பக்கத்து வீட்டில் யார் யாருக்கு தொந்தரவாக இருக்கிறார் என சொல்லும் குறுங்கதை.

4. சந்தோஷ் நாராயணனின் ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பிலிருந்து பொம்மைகள் என்னும் குறுங்கதை.

 

நான்கு கதைகளையும் வாசிக்க அனுப்பிவிட்டு மீண்டும் ஒரு முறை நான் கதைகளை வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். ஆனால் நிகழ்ச்சியின் போதே அதிஷ்டவசமாக எனது இரண்டு குறுங்கதைகளையும் நண்பரின் கேள்வியின் மூலம் இந்தப் பட்டியலில் இணைத்தேன்.

 

5. எனது ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ தொகுப்பிலிருந்து ‘அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ என்னும் குறுங்கதை. இது அகத்தில் கவனம் செலுத்தாமல் புறத்தில் கவனம் வைக்கும் பக்திமான் பற்றிய கதை.

 

6. எனது ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ தொகுப்பிலிருந்து மேலும் ஒரு கதையா கடவுள் VS சாத்தான் என்னும் குறுங்கதை. இது மனிதனின் இயல்பை கிண்டல் செய்யும் கதை.

 

கதைகளை வாசித்தவர்கள் அவர்களின் பார்வையைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்படியாக ஓஷோவின் குட்டிக்கதையை வாசித்த நண்பர் அவரது புரிதலைச் சொன்னார். ஆனால் அவரால் அதையும் தாண்டி கதைக்குள் செல்ல முடியும் என யூகித்தேன். 

பின் நானே அக்கதையை வாசிக்கலானேன். நிறுத்தி நிதானமாக வாசித்தேன். சில இடங்களில் அழுத்தமும் சில இடங்களில் மெல்லிய தொணியிலும் கதையை வாசித்துக் காட்டினேன். இப்போது நண்பர் அக்கதையின் அடிநாதத்தைப் பிடித்துக்கொண்டார்.

    இது ஒரு சிக்காலாக இருக்கிறது. நாம் வாய் திறந்து வாசிக்காமல் மனதிலேயே வாசித்துக் கொள்கிறோம். வாய்த்திறந்து வாசிக்கும் போது கதை நமக்கு இன்னும் கூடுதலாப் புரிதலைக் கொடுக்கின்றது. அதே சமயம் நாம் எழுதும் போது வாய்த்திறந்து சொல்லிச்சொல்லி எழுதுவதில்லை.

தேர்ந்த எழுத்தாளர்களுக்கு அது அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்க கால எழுத்தாளர்களுக்கு அது அவசியம் என பரிந்துரைத்தேன். நாம் எழுதும் கதைகளை நாமே சொல்லிச் சொல்லி எழுதும் போது உரைநடையில் சிக்கல் வராமல் அது தடுக்கின்றது. குறிப்பாக வசனங்கள் எழுதும் போது அது பெரிதும் உதவுகின்றது.

ஒருவேளை சொல்லிச்சொல்லி எழுத முடியாதவர்கள்; எழுதி முடித்த பின் ஒரு முறைக்கு இரு முறையாவது வாய்விட்டு வாசிக்க வேண்டும். ஏனெனில் நாம் எழுதியவற்றை வாசகன் எப்படி வாசிக்கிறான். எங்கே அவனது தொணி மேலும் எங்கே அவனது தொணி கீழும் போய்வருகின்றன, எங்கே அவன் நிறுத்தி நிதானிக்கப்போகின்றான் என நாம் கண்டுக்கொள்ளலாம். நாம் எழுதும் கதைகளை வாசித்து திருத்தும் சிலாகிக்கும் முதல் வாசகன் நாம் தானே.!

 

                                           பகுதி 1 - நிறைவடைகிறது

 


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்