பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு 2 (16/9/23)

 


எங்களின் 'குறுங்கதை வகுப்பின்' இரண்டாம் அமர்வு சிறப்பாக அமைந்தது. இவ்வகுப்பில் சம்பவங்களில் இருந்து கதைகளையும் கதைக்கருக்களையும் கண்டறிவது குறித்துப் பேசினேன்.

கவனித்தவரையில் புதிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் சம்பவங்களையே எழுதி அதனை சிறுகதையென நினைத்துக் கொள்கிறார்கள். அதற்கான விமர்சனத்தையோ பார்வையையோ நாம் முன்வைக்கும் போது அவர்கள் சொல்லும் காரணம், 'இது எனக்கு நடந்தது!', 'பக்கத்து வீட்டு கதை!' ‘தெரிந்தவர் சொன்ன அனுபவம்' இப்படி அடுக்குகிறார்கள்.

அனுபவங்களையும் சம்பவங்களையும் சிறுகதைகளாக எழுதக்கூடாதா என்றால் இல்லை, தாராளமாக எழுதலாம். அப்படி எழுதி கவனம் ஈர்த்த படைப்புகள் பல உள்ளன. ஆனால் அதில் மேலோங்கியிருக்கும் உணர்வுகளின் குறைபாடுதான் புதியவர்களுக்கு பலவீனமாக இருக்கிறது.

வெறுமனே என்ன நடந்தது? எப்படி நடந்தது? என சொல்லிச்செல்வது செய்தியாகவும் தகவல்களாகவும் நின்றுவிடுகின்றன. அதிலிருந்து கதைகளை கண்டறிவதற்கான பயிற்சி அவசியம் என நினைக்கிறேன். அதிலிருந்து ஓர் உரையாடலைத் தொடங்கவேண்டும் என விரும்புகிறேன்.

சம்பவங்களின் பின்னணி என்ன ? யாரின் அனுபவம்? அந்த அனுபவத்தின் நீட்சி என்ன? என்ன பாதிப்பு? யாருக்கு பாதிப்பு? அதில் நாம் கதாப்பாத்திரமா அல்லது கதைச்சொல்லியா? என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே சம்பவத்திலிருந்து கதையைக் கண்டறிய வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் இவ்வகுப்பினை வடிவமைத்தேன். பங்கேற்பாளர்களுக்கு முன்னமே, தங்களை பாதித்த ஏதாவது ஒரு சம்பவத்தை பேசுவதற்கு தயார் செய்ய சொல்லிவிட்டேன். தொடக்கமாக எது சம்பவம் எது கதை எது கதைக்கரு எது கதாப்பாத்திரம் என ஒன்றிலிருந்து இன்னொன்றையும் அந்த இன்னொன்றிலிருந்து வேறொன்றையும் பிரித்து பேசினேன்.

எனக்கு நடந்த சம்பவத்தையும் அதனை எப்படி குறுங்கதையாக மாற்றினேன் என்பதையும் அதிலிருந்து எப்படி சிறுகதைவரைச் செல்லலாம் என்பது பற்றியும் விளக்கினேன்.

அதன்பின் அவர்களுடனான உரையாடலை ஆரம்பித்தேன்.

பின் சிலர் அவர்களை பாதித்த சம்பவங்களைப் பகிர்ந்தார்கள். இதிலிருந்து எப்படி கதையைக் கண்டறியலாம் என்றும் எது அங்கு கதைக்கருவாக மறைந்திருக்கிறது என்றும் விளக்கினேன். அவர்களின் உரையாடலை மெல்ல மெல்ல அதற்கு ஏற்ற இடத்திற்கு இழுத்தேன்.

நடந்த சம்பவத்திலிருந்தும் அவ்வனுபவத்தில் இருந்தும் இன்னொரு சம்பவத்திற்கான கதைக்கருவை கண்டுபிடித்தோம். பலருக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் அது கொடுத்ததை உணர்ந்தேன்.

பொதுவில் பகிர முடியாத அனுபவங்களையும் கூட சிலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பகிர்ந்தார்கள். அவற்றை கதையாக்கும் விதம் குறித்து விளக்கினேன். நிச்சயம் பல மாறுபட்ட கதைகளை இவர்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கலாம்.

இந்தக் கட்டண வகுப்பில் கலந்து கொண்ட சிலரின் கருத்துகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் எங்கள் குறுங்கதை வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால் தாராளமாக தொடர்பு கொள்ளுங்கள். இங்கு குறுங்கதை எழுதுவது குறித்து மட்டுமல்லாது நம்முள் இருக்கும் கதைகளை எப்படி நாமே எழுதுவது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

 

எழுதுங்கள்.

அதுதான் ரகசியம்.

அதுவேதான் தியனம்.

அன்புடன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்