- இரகசியம் -
- இரகசியம் -
இன்று லிங்கம் முதலாளி கடைக்கு வருவார். அவரிடம் இதனைக் கேட்டுவிட வேண்டும். பல நாட்களாக மனதில் வைத்து வைத்து, இனி முடியாது. சேகருக்கு இன்று ஒரு பதில் தெரிந்தாக வேண்டும்.
சில ஆண்டுகளாக இந்தச் சாப்பாட்டுக் கடையில் வேலை செய்கிறவர் சேகர். கடை திறப்பது முதல் கடை சாத்துவது வரை சேகர்தான். வடிவேலுக்கு 'நாய் சேகர்' என்றால் இந்தக் கடைக்கு இவர்தான் 'தாய் சேகர்'.
லிங்கம் முதலாளிக்கு சேகர் மீது அபார நம்பிக்கை. வாரம் ஒரு முறை மட்டுமே கடைக்கு வருவார். கல்லாப்பெட்டியில் அமர்வார். அந்த வார வருமானமாகச் சேகர் எவ்வளவு கொடுத்தாலும் குறை சொல்ல மாட்டார்.
இவ்வளவு நம்பிக்கை உள்ள முதலாளி, ஏன் கடையில் சிசிடிவியை வைத்திருக்கிறார் என சேகருக்கு ஒருநாள் சந்தேகம் வந்தது. அதுவும் அந்தச் சிசிடிவி பதிவைக் கடையில் எங்கும் பார்க்க முடியாது. ஒருவேளை லிங்கம் முதலாளி வீட்டிலிருந்தபடியே தன் கைப்பேசியில் பார்க்கலாம்.
லிங்கம் முதலாளி வந்தார். சேகரின் முகம் வாடியிருந்ததைக் கண்டவர், தானே அழைத்து விபரம் கேட்டார். சேகரும் மனதிலிருந்த சிசிடிவியைக் கேட்டுவிட்டார்.
முதலாளிக்குக் கோவம் வரவில்லை. மாறாகச் சிரிக்கலானார். சேகருக்கு ஏதும் புரியவில்லை.
அது சிசிடிவி அல்ல, சிசிடிவி மாதிரி என்பதை முதலாளி சொன்னார். தன் கடை பணியாளர்களின் மீது நம்பிக்கை கொண்ட முதலாளி, மற்ற வாடிக்கையாளர்களின் பார்வைக்கு இங்குச் சிசிடிவி இருப்பதாகக் காட்டினால் அவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வார்கள் என நம்பியிருந்தார். அதன்படியே இதுவரை வாடிக்கையாளர்களால் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. லிங்கம் முதலாளி சேகரின் தோளைத் தட்டி "உன்னை நம்பாமல் யாரை நம்புகிறேன்" எனச் சிரித்துவிட்டுப் புறப்பட்டார்.
சேகருக்கு மனசே சரியில்லை. இவ்வளவு நம்பிக்கை வைத்த முதலாளி மீது சந்தேகம் கொண்டோமே என மற்ற பணியாளர்களைக் கடிந்துகொண்டார்.
அன்றிரவு சேகருக்குத் தூக்கமே வரவில்லை. சிசிடிவியும் முதலாளியின் சிரிப்புமே வந்து வந்து போனது.
மறுநாள் சேகர் கடையைத் திறக்கவில்லை. வேலைக்கும் வரவில்லை. கல்லாப்பெட்டியும் சேகரும் காணாமல் போய்விட்டார்கள் எனத் தெரிந்தால் லிங்கம் முதலாளி என்ன செய்வார்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்
0 comments:
கருத்துரையிடுக