பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 25, 2023

யாரிந்த தீக்‌ஷா ?



ஞாயிறு (26/03/23) காலை 9மணிக்கு ஏ.கே.ரமேஷ் அவர்களின் தீக்‌ஷா’ நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. அதனையொட்டி தீக்ஷா சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறிய அறிமுகத்தைக் கொடுக்க நினைக்கிறேன்.

ஏ.கே.ரமேஷ் பற்றி அதிகம் நான் பேசப்போவதில்லை. சமயப்பற்றாளராகவும் சமய உரை நிகழ்த்துபவராகவும் மாணவர்களுக்கு சமயம் சார்ந்த வகுப்புகளை நடுத்துபவராகவும் நீண்ட நாட்களாக  மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் உதவித்தலைவராக பொறுப்பில் இருப்பவராகவும் பலருக்கு அவர் நன்கு அறிமுகம். ஓர் எழுத்தாளராக நான் அவரைக் குறித்து அவரின் கதைகள் குறித்து இங்கு சிலவற்றை பகிர்கிறேன்.

இயல்பாகவே எழுத்தாளர் என்றார் அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கக்கூடாது என சொல்லுபவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். 

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சந்திப்பில், ஒருவருடன் என்னை எழுத்தாளர் என என் நண்பர் அறிமுகம் செய்தார். உடனே அவர், “ஓ எழுத்தாளரா..? அப்ப கடவுள் நம்பிக்கை இல்லாதவரா..” இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது யோசிக்கையில் ‘பகுத்தறிவு’ என்ற சொல்லையே கடவுளுக்கு எதிராக பொருள்கொண்டவர்களிடம் எப்படி பகுத்தறிவின் பகுத்து அறிதலை நம்மால் விளக்கம் கொடுக்க முடியும்.


உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; உங்களிடம் இந்த சமூகத்திற்கு சொல்ல ஏதும் இருந்தால்; குறிப்பாக் எழுதும் ஆற்றல் சிறிதாக இருந்தாலும் அதனை ஊதியூதி பெரிதாக்கவே நான் விரும்புகிறேன்.

ஏனெனில் உங்களின் சிந்தனையில் உதிக்கும் கதையையும் உங்கள் அனுபவத்தையும் உங்களைத்தவிர வேறொரு மனிதனால் நிச்சயம் உள்வாங்கிவிட முடியாது. ஆகவேதான்; உங்களிடம் என்ன கொள்கை இருந்தாலும் சரி உங்களால சிறிதாவது எழுத முடிந்தால் அது கதையோ கவிதையோ நாவலோ எதுவாக இருந்தாலும் எழுதிவிடுங்கள். அதற்கான தேவையைக் காலம் முடிவு செய்துக்கொள்ளும். நீங்களாக முன்முடிவு செய்து எதனையும் மூடிவிடாதீர்கள்.

ஏ.கே.ரமேஷை சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அது நேரடியான சந்திப்போ அல்லது தொலைபேசி உரையாடலோ. எதுவாக இருந்தாலும் அவரை “எழுதுங்க சார்….” என்றே சொல்லுவேன். சமயம் சார்ந்து தீவிரமாக இயங்குபவரிடம் கூடுதல் பணியாக எழுத சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அவருடைய எழுத்து அவரது பணியை மேலும் இலகுவாக்கும், ஒரு தனித்த அடையாளத்தை அவருக்கு கொடுக்கவும் செய்யும்.
இன்னும் சொல்லப்போனால் கடவுள் இல்லையென்று சொன்னவர்களிடமிருந்து வந்ததைவிட கடவுள் மீதான அன்பின் வெளிப்பாடாக நமக்கு கிடைக்கும் இலக்கியங்கள்தானே அதிகம்.

இவர் போன்று சமயத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் எழுதும் போது அவர்கள் எதனை எழுதுகிறார்கள். அதனால் இச்சமூகத்தில் என்ன மாற்றங்கள் வந்துவிடப்போகிறது ஏன் மாற்றங்கள் வேண்டும் என்கிற கேள்விகளை நாம் அவர்களின் எழுத்துகள் மீது வைக்கலாம். அந்த கேள்விகளே விவாதங்களையும் அந்த விவாதங்களே உரையாடல்களையும் உருவாக்கும். முடிவில் யாரோ ஒருவர்தான் வெல்லப்போகிறார். ஆனால் அதற்கு முன்பாக நாம் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளும் பல இருக்கின்றன.

தீக்‌ஷா’ இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இயல் பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறார்கள்.  எழுத்தாளர் ஆசிரியருமான திரு.கே.பாலமுருகனும், மலேசியக் கல்வித்துணையமைச்சரின் சிறப்பதிகாரி திரு.சிவா இராஜேந்திரன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள். 


இச்சிறுகதைகள் தொகுக்கின்ற சமயத்தின் நானும் சிறிது பங்களித்துள்ளதால் இச்சமயத்தைப் பயன்படுத்தி இத்தொகுப்பின் கதைகள் குறித்த சிறு அறிமுகத்தை நான் கொடுப்பதில் மகிழ்ச்சி.

தீக்ஷா மொத்தம் 8 சிறுகதைகள் அடங்கியத் தொகுப்பு. அடடே வெறும் எட்டே எட்டு சிறுகதைகளை வைத்து புத்தகம் போட்டுவிட்டாரே என காலரை தூக்கிக் கொள்வதற்கு, அட வெறும் எட்டு சிறுகதைகளுக்கு ஒரு புத்தகமா என காதை திருகுவதற்கும் ஒன்றுமில்லை. ஏனெனில் இதனைவிடக் குறைவாக சிறுகதைகள் அடங்கியத் தொகுப்புகள் எல்லாம் வர ஆரம்பித்து அதிக நாட்கள் ஆகிவிட்டன. அதோடு ஒரே கதையை (நீள்கதையை) ஒரே புத்தகமாக போடவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

விடை, சுட்டக்கதை, கோட்சே, கடா, முத்ததானம், குட்டிச்சாத்தான், சகதி, தீக்‌ஷா’ ஆகியவை அந்த எட்டுக்கதைகள்.

‘விடை’ சிறுகதை எனக்கு முதல் வாசிப்பிலேயே கவர்ந்த சிறுகதையாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், ஒரு குறுநாவலுக்கான கதைக்கருவை அப்படியே சிறுகதையாக்கி ஏழு பக்கங்களில் கொடுத்துள்ளார். சமீபத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பில், இக்கதையை எப்படி குறுநாவலாக மாற்றிவிடலாம் இன்னும் ஆழமாக எதனை கவனிக்கலாம் என்றும் பேசியுள்ளேன். விமான நிலையம். பயணிகள் காத்திருக்கிறார்கள். நாயகன் நாயகியை சந்திக்கின்றார். இருவருக்கும் இருவேறு பின்னணிக்கதைகள். மெல்ல வளர்ந்த உரையாடலில் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறார்கள். காதல் மெல்ல அரும்புகிறது. இருவரும் விடைபெறுகிறார்கள். அப்பெண் ஏறவிருக்கும் விமானத்தின் பெயர் அறிவிக்கப்படுகிறது. அதுவரை காதல் கதையாக இருந்த ‘விடை’ அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. வாசகர்களை அது அதிர்க்குள்ளாக்குகிறது. அந்த அதிர்ச்சி நம்மிலிருந்து நீங்க நீண்ட நாட்கள் ஆகும். ஏனெனில் அம்முடிவால் எதிர்கொண்ட சிக்கல்களையும் இழப்புகளையும் நாம் இன்றுரை நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

‘சுட்டக்கதை’.  கைப்பேசியில் மூலம் பல ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. அப்படியான ஒரு நவீன திருடனுடன் பேசுகிறாள் நாயகி. அவன் ஒரு போலி என அறிந்ததும் அவள் என்ன செய்கிறாள் என்பதுதான் மீதி கதை.

‘கோட்சே’ கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் உரையாடலில் அகிம்சை மீதான எதிர்ப்பார்ப்பையும் சமூகம் அதற்கு செய்யும் ஏளனத்தையும் சொல்கிறார் எழுத்தாளர். இந்தத் தலைப்பு இல்லாமலே கூட இக்கதையைச் சொல்லியிருக்கலாம்தான், ஆனால் இந்தத் தலைப்பிற்கு கதையிலேயே ஒரு காரணத்தையும் மலேசியாவில் நடந்த உண்மை சம்பவத்தையும் ஒரு கோட்டில் இணைத்திருக்கிறார்.

‘கடா’ நல்லது செய்தால் நல்லது நடக்கும் என எவ்வளவோ பேர் சொல்லிவிட்டார்கள். அதையேத்தான் எழுத்தாளரும் செய்கிறார். ஆனால் அதற்கு அவரது பார்வையில் அவர் எப்படி பார்த்து அதனைக் கதையாக்கியிருக்கிறார் என்பதை கதையை வாசித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்
.
‘முத்ததானம்’. எழுத்தாளரின் எழுத்துகளில் நான் வாசித்த முதல் சிறுகதை. ‘அட’ என சொல்லும் அளவிற்கு நன்றாகவே கதையைச் சொல்லியுள்ளார். இக்கதையில் வரும் எல்லோரும் நல்லவர்கள்தான். ஆனால் கதையில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு அது தெரியவில்லை. கொரானா காலத்து கதைகளில் இதுவும் ஒன்று.

குட்டிச்சாத்தான். வானொலியில் ஒலிபரப்பான சிறுகதை. வானொலிக்கு ஏற்ற அம்சம் தூக்கலாக இருக்கிறது. உண்மைச் சம்பவத்தை கதையாக்க முயன்றுள்ளார். அப்படி கதையாக்கும் போது ஏற்படும் வழக்கமான சிக்கல் இக்கதையிலும் வெளிப்படுகிறது. இருந்தும் போலி சாமியார், பயம், குட்டிச்சாத்தான் என நம்மை பயமுறுத்த தவறவில்லை.

சகதி. இதனை குறுங்கதையாக வாசித்தேன். அதனைச் சிறுகதையாக முயன்றுள்ளார். குறுங்கதையில் இருந்த ஆழம், சிறுகதையாக வாசிக்கையில் குறைந்துள்ளதாகப்படுகிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வளர்களின் மனநிலையைச் சொல்லும் கதை. இன்னும் கூட சொல்வதற்கு கதையில் பலவிசயங்கள் இருக்கவே செய்கின்றன. ‘சக்திக்கும் சகதிக்கும் ஒரு புள்ளிதானே வித்தியாசம்’ என்பதுபோல அந்த ஒரு புள்ளிதான் இச்சிறுகதையின் மையம்.

தீக்‌ஷா’புத்தகத்தின் தலைப்புச்சிறுகதை. புத்தக முகப்போடு தொடர்பு கொண்ட சிறுகதையும் கூட. கொஞ்சம் தடுமாறினால் பெரிய சிக்கலையேக் கூட கொடுக்கக்கூடிய கதைக்கரு. ஆனால் இங்கு நம்மில் பலர் சந்திக்கக்கூடிய சிக்கல். இக்கதையை சுதந்திரமாக எழுதி இச்சிக்கலில் ஆழத்தைக் காட்டலாம். அப்படி காட்டிவிட்டால் எழுதியவரின் சுதந்திரம் கேள்விக்குறியாகிவிடும். 

இது தீக்‌ஷா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு அறிமுகமே. இதன் நோக்கம் இதன் வழி நீங்கள் புத்தகத்தை வாங்கி வாசித்து அதன் வழி ஓர் உரையாடலை சாத்தியப்படுத்துவது மட்டுமே. ஆகவே என்ன இது விமர்சனம். கதையின் ஆழத்தைப் பற்றி பேசவில்லை அகலத்தைப் பற்றி பேசவில்லை என யாரும் தயவு செய்து கம்பு சுத்த வேண்டாம்.


‘யாரிந்த தீக்‌ஷா’?’ என கேட்ப்பவர்களுக்கு, வேறு யாராக இருக்க முடியும், பாதிக்கப்பட்ட பலரில் அரைகுறையாய்ப் பெயர் தெரிந்த ஒருத்தி.

வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள் நாளை, நிகழ்ச்சியில் சந்திப்போம். வாய்ப்பில்லாதவர்கள்; சிக்கலில்லை வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

அன்புடன் தயாஜி..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்