பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 31, 2022

எம்பி குதிப்பதும் ஏற்றுக்கொள்வதும்

சில ஆண்டுகளுக்கு முன் நடன நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக  அமைந்தது. அதிலிருந்த பலர் கலையுலகில் ஆளுக்கொரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். புதிய நடன கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்பும் அதன்வழி அமைந்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்கள். நடனத்தின் ஒரு அங்கமாக நாயகன் நாயகியை தன் இடுப்பில் தூக்கி வைத்து ஆடினார். சில வினாடிகளிலேயே அடுத்தடுத்த நடன அசைவுகளுக்கு சென்றுவிட்டார்கள்.

சில நாட்கள் கழித்து பத்திரிகைகளில் அந்த நடன அசைவு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் காலக்கட்டத்தில் இப்போது மாதிரியான சமூக வலைத்தளங்கள் பிரபலமாக இருக்கவில்லை. அதன் பயன்பாடும் சொல்வது போல இல்லை.
நாளிதழ் முதற்கொண்டு வார மாத இதழ்கள் மட்டுமே இருந்தன.

மக்களின் அதிருப்திகள் எல்லாமே எழுத்துகள் மூலமாகத்தான் வந்துகொண்டிருந்தன. வானொலியில் உச்சரிப்பு பிழையைக் கேட்டாலும் ஒரு வாரம் கழித்து காட்டமான வாசகர் கடிதமாக பிரசுரமாகும்.

அந்த நடன நிகழ்ச்சி முடிந்த மறுவாரத்தில், 
எப்படி ஒரு பெண்ணை ஆணொருவன் இடுப்பில் தூக்கி வைத்து ஆடலாம்!!!?
சமுதாயம் கெட்டுவிட்டது...!!!?
இதுவா ஒழுக்கம்...!?
ஆபாச நடனம்..!?
நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்..!?
போன்ற விமர்சனங்கள் நான்கு வாரங்களாக வந்தன. அதன் பிறகு நிகழ்ச்சியில் நடனக்கலைஞர்கள் வேறு மாதிரி ஆடலானார்கள்.

இது நடந்து பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும். இன்று எதார்த்தமாக உள்ளுர் நாடகம் ஒன்றின் ஒரு காட்சி கண்ணில் பட்டது.

கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை. மனைவி கணவனை சமாதானம் செய்வதற்கு எம்பி குதித்து இடுப்பில் அமர்கிறார். முகமும் முகமும் பார்த்துக்கொள்ள இரு கன்னங்களிலும் முத்த மழையை ஆக்ரோஷமாகப் பொழிகிறார்.

'எனக்கு பக்குனு தூக்கி வாரிப்போட்டது.' ஆனால் இதுபற்றி பெரிதாக இனி யாரும் பேசமாட்டார்கள். சமூக வலைத்தளங்களின் இதைவிட மோசமானவையைப் பார்த்து பழகிவிட்டார்கள்.

என் ஐயம் ஒன்றுதான். இடுப்பில் அமர வைப்பதைப் பார்த்து ஏற்றுக்கொள்வதற்கு ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆன நிலையில் கணவனின் இடுப்பில் எம்பி குதித்து உதட்டோடு உதடு முத்தமிட்டு சமாதானம் செய்யும் காட்சி வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய அதே சூழலில் அதன் எல்லையை நினைத்து முன்னெச்சரிக்கையும் கொள்ள வேண்டியுள்ளது.

ஆகஸ்ட் 28, 2022

அதற்காகத்தான் சொல்கிறேன் நண்பர்களே...

 

நம் நிதானம் எப்போது தவறுகிறது?  நாம் விசுவாசிக்கும் ஏதாவதொன்றில் தவறு நிகழ்ந்து அது பேசு பொருளாகும் போது. நம்மை அறியாமலேயே நாம் அதற்காக குரலெழுப்பிடுவோம். இதுவும் ஒரு வகையில் போதைக்கு அடிமையாவது எனலாம். இலக்கியம் அரசியல் குடும்பம் வேலையிடம் விளையாட்டு என எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு போதை நமக்கு தேவைப்படுகிறது. அப்படியிருந்தும் சிலரால் மட்டுமே தெளிவாக அமைதி காக்கவும் ஒப்புக்கொள்ளவும் முடிகிறது. இன்னும் சிலரால் அது சாத்தியப்படுவதில்லை. நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

 

என்னதான் திருடினாலும்

கொஞ்சமாவது கொடுத்தார்

என்கிறீர்களே

கொடுப்பதற்கே இனி

கொஞ்சமாகத் திருடலாம் என்று

அடுத்தவர் கிளம்பினால்

என்ன செய்வீர்கள்

 

சமீபத்தில் கைதான முன்னால் பிரதமரின் , கைது குறித்து முகநூலில் முழங்கிக்கொண்டிருப்பவர்கள் மீதான் ஓர் எளிய குரல்தான் இது. அவர் குற்றவாளிதான் அவர் செய்தது குற்றம்தான் என் உறுதியாகவோ மறைமுகமாகவோ கூட அது பேசவில்லை. அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? தமிழர்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா என்பது மாதிரியான இன்பாக்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவெல்லாம் எனக்கு தெரியாதா நண்பர்களே நானும் உங்களுடந்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் மட்டும் என்ன ஆப்பிரிக்காவிலா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அதோடு அக்கவிதைக்கு கீழுள்ள கமெண்டுகளிலும் பெரும்பாலும் ‘மாட்டிக்கொள்ளாதவரை எல்லோருமே திருடர்கள்தானே’ என்பதாகவும் ‘மனிதன் என்றாலே திருடன் தானே’ என்பதாகவும் கருத்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இதற்குத்தான் புத்தகங்களை வாசியுங்கள், கவிதை கதைகளை வாசித்து உரையாடுங்கள், குறைந்தது ஏதாவது நாவலையாது நேரம் இருக்கும் போது புரட்டிப்பாருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நீங்கள் கோவப்படுவதற்கு முன்பாகவும் நான் மேற்கொண்டு எழுதவதற்கு முன்பாகவும்   சமீபத்தில் நான் வாசித்த கவிஞர் நரனின் கவிதையைக் குறித்து கொஞ்சம் பேசவேண்டும்.

 

இரவில் பிறந்து

ஒரு மழையை மட்டும் பார்த்துவிட்டு இறந்து போன குழந்தை

 

இதனை படித்ததும் என்ன தோன்றுகிறது. ஒரு குழந்தை இறந்துவிட்டது. அடுத்தது அந்தக் குழந்தையால் மழையை மட்டும் பார்க்க முடிந்தது, அல்லது அன்று மழையாக இருக்கலாம் என நினைத்துக்கொள்ளலாம்.

மேல்மட்ட வாசிப்பில் இருக்கும் பிம்பங்கள் வழி இதனை நாம் இப்படித்தான் காண்போம். ஆனால் அதை மட்டும்தான் இக்கவிதை பேசுகிறா என்றால் இல்லை. இக்கவிதையை வாசித்ததும் எனக்கு ஒரு மன நெருக்கடி ஏற்பட்டது. மழையை மட்டும் பார்த்து இறந்துவிட்டது அந்தக் குழந்தை என்கிறது கவிதை. ஆனால், அக்குழந்தை எதையெல்லாம் பார்க்கவில்லை என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். தன் அம்மாவை அப்பாவை உறவுகளை அன்பை காதலை வாழ்வின் ருசியை என அக்குழந்தை தவறவிட்டதற்காக நான் அழுகிறேன். அடுத்த கணமே, மழையை மட்டும் பார்த்த அக்குழந்தை துரோகத்தை பழியுணர்ச்சியை ஏமாற்றத்தை வறுமையைப் பார்க்கவில்லை என என்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறேன்.

ஒரு கவிதை ஒரு வரியில் அதற்காக அழ வைக்கிறது அதே கவிதை அதே வரியில் அதற்கான  சமாதானத்தையும் செய்கிறது. நேரடி பொருளில் இருந்து விலகும் போதுதான் கவிதை தன்னை முழுமையாக அடையாளம் காட்டுவதாக நம்புகிறேன். அதற்கு அந்தக் கவிதையின் நேரடி பொருளையும் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

இனி நான் சொல்ல வந்ததைத் தொடர்கிறேன்.

நான் எழுதிய கவிதையில் சமகால சிக்கலை முன்வைத்தும் தங்கள் விசுவாசம் சார்ந்த மனநிலையிலும் பலர் புரிந்துகொண்டார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் அதன்வழியே அவர்கள் ஏதோ ஒன்றைத் தவறவிடுவதை அறியவில்லை. உண்மையில் அங்கிருந்து நான் என் எழுத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முயல்கிறேன். என் கேள்வி ‘எற்றுக்கொள்ளும், சமாளிக்கும் மனப்போக்கின் எதிரொளியைத்தான்’.

நீதிமன்றம் குற்றவாளி என சொல்லிவிட்டவரை நிரபராதி என சொல்லுவதால் வரக்கூடிய சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கவசம்தான் இத்தகைய மனநிலை. அவர் திருடியிருந்தாலும் அதன் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபனம் கண்டு குற்றவாளியாக தண்டனை கொடுக்கப்பட்டாலும், அவர் திருடியதாகச் சொல்லப்படும் பணத்தில் இருந்து மக்களுக்கு கொடுத்தார் என்பதுதான். முகநூலில் முன்னால் ஆசிரியர் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது ஒரு திருடன் நூறு வெள்ளியைத் திருடிவிட்டு அதிலிருந்து பத்து வெள்ளியை உங்களிடம் கொடுத்தால் அவர் செய்தது குற்றமா அல்லது தர்மமா?

இத்தனைக்கும், இதுவரை வந்த பிரதமர்களில் இவரின் மீதே எனக்கு மிகுந்த மரியாதை. நான் இவரின் அபிமானியும் கூட. என்னுடன் நெருக்கமானவர்களுக்கு இது தெரியும். ஆனால் அதுவல்ல இங்கு ஏற்பட்டுள்ள சிக்கல். நாம் எதை எதிர்ப்பாக்கிறோம் என்பதுதான் சிக்கல். இது மேலும் பல புதிய திருடர்களை உருவாக்கும். குற்றம் தண்டனைக்குரியது என்பது மாறி குற்ற லாபத்தில் ஒரு சிறு பகுதியை மக்களுக்கு கொடுக்கலாம் அது நம்மை காப்பாற்றும் என்பது உண்மையில் மோசம்தானே.

தாங்கள் அவர் சார்ந்த கட்சியில் இருப்பதாலும், அதன் வழி லாபம் வரலாம் என்கிற எதிர்ப்பார்ப்புகளினாலும், அகப்பாடாத வரை எல்லோருமே குற்றவாளிகள்தான், மனிதனாய் இருப்பதாலேயே நாம் குற்றவாளிகள்தான் என உளறுவது நமக்கே நியாயமாக இருக்கிறதா.

யாராக இருந்தாலும், எத்தனை தர்ம காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும் குற்றம் பழகிய கைகள் எப்படியும் கைதாகும் என்கிற அடிப்படை அறத்தை புரிந்து கொள்வது அவ்வளவு சிரமமானதா என்ன?

நாளையே இவரின் குற்றங்கள் எல்லாம் ஏதுமில்லாமலாகி,. நிரபராதி என வெளியேறலாம். அப்படி நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். அப்படி வந்தாலும் கூட என் கூற்று ஒன்றுதான். அதனைத்தான் நான் திரும்பத்திரும்ப சொல்கிறேன். அதுதான் என் கவிதை. அது கேட்கும் கேள்வி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஒரு முறை சிறைச்சாலையில் ஒருவரை பேட்டி காண சென்றிருந்தேன். வன்முறையாலும் வழிப்பறியாலும் கைதானவர். அந்தப்பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட பல விடயங்கள் முக்கியமானது. அதையொட்டி நான் கதைகளும் எழுதியுள்ளேன். அவர் சொன்னதை அப்படியே சொல்வதென்றால்; “எங்கம்மாவை எனக்கு பிடிக்கல சார்… அன்னிக்கு கூட்டாளியோட பேனாவை நான் எடுத்துட்டு வந்துட்டேன்.. அதுக்கு எங்கம்மா என்னைய திட்டல.. பாராட்டனாங்க..  அன்னிக்கே என்னைய அடிச்சியிருந்தா நான் அதுக்கு அப்பறம் திருடியிருக்கவே மாட்டேன்”

அந்தக் கைதி சொன்னதற்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். ஏனெனில் ஒரு கவிதையை எழுதி அதற்கு ‘நான் என்ன சொல்ல வருகிறேன் தெரியுமா?’ என விளக்கம் கொடுக்கும்  துரதிஷ்டம் ஒரு முறைக்கு போதுமானது.

அதற்குத்தான் நினைவுப்படுத்துகிறேன் புத்தகங்களை வாசியுங்கள். அது குறித்து உரையாடுங்கள். எந்த சார்பின் பக்கமாக நின்றுகொண்டிருந்தாலும் தனிநபர் லால நஷ்டங்களை கணக்கில் எடுக்காமல், தர்மத்தைக் கையில் எடுங்கள்.

குற்றவாளிகள் மன்னிக்கப்படலாம், ஆனால் எதற்காகவும் குற்றவாளிகளை உருவாக்கிவிடாதீர்கள் நண்பர்களே.

 

{*ஆமாம், அதற்கு ஏன் புத்தகங்களை வாசியுங்கள் என்கிறேன். ஒரு வரியைப் புரிந்து கொள்ள குறைந்தது நூறு வரிகளையாவது வாசித்து உரையாட வேண்டிய அவசியம் இருக்கிறது.}

 

- தயாஜி

 

ஆகஸ்ட் 26, 2022

தகப்பன்சாமி

ஆச்சர்யம்தான். அவர் ஏகே ரமேஷ். தோழர் பொன்கோகிலம் மூலம் அறிமுகமானார். சமயத்தில் ஈடுபாடும், சமயம் சார்ந்த பல முன்னெடுப்புகளையும் செய்து வருபவர் என்பதே எனக்கான அவரின் அறிமுகம். வழக்கமாக பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதியிருந்த சர்ச்சைக்குள்ளான கதையின் வழி பலரும் என்னை அறிந்திருந்தனர். பலர் அங்கிருந்த நகர்ந்திருந்தாலும் சிலர் அங்கேயே நின்றுகொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஏகே ரமேஷ் உடனான அடுத்த சந்திப்பில் அசோகமித்திரனின் பயணம் சிறுகதைப் பற்றி பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. கதைகள் குறித்து பேசுவது எனக்கு விருப்பமான ஒன்றென்பதால் பேசிக்கொண்டே போவேன். அன்றும் அப்படித்தான் என் பேச்சு வளர்ந்தது. அருகில் இருந்தவர்களைவிடவும் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த ஏகே ரமேஷ் என் பேச்சை ஆழமாக கவனித்தார். கதையில் இருந்து சில கேள்விகளையும் கேட்க எங்கள் உரையாடல் வளர்ந்தது. அவர் எழுதிய கதைகள் பக்கம் எங்கள் உரையாடல் நீண்டது. அதில் எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தன. மாற்றுக்கருத்துகள் என்பதை விடவும், இன்னும் மெருகூட்ட வேண்டிய இடங்களைச் சுட்டிக்காட்டினேன்.
அடுத்ததாய்த் தான் எழுதவிரும்பும் கதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர் எழுதிய கதைகளைவிட இனி எழுதப்போகும் கதைக்களன் மீது எனக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. சமயம் சார்ந்து தொடர்ந்து செயல்படுவதாலும் சில சிக்கலுள்ள மனிதர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்புள்ளதாலும் அதுவே அவருக்கான கதைகளின் கச்சா பொருளாக அமைந்துள்ளது புரிந்தது. அன்றைய உரையாடல் அழகாய் முடிந்தது. ஏனெனில் இங்கு பெரும்பாலான இலக்கிய உடையாடல் யாரோ ஒருவரின் தோல்வியில்தான் முடிந்துகொண்டிருக்கிறது.
அதன் பிறகு இயல் குழுமத்தில் கதைகள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் பேச்சு குறித்தும் என் கதைகள் மீதான பார்வை குறித்து அவர் சிலாகிக்கலானார். அது அவருக்குள் இருக்கும் கதைகளையும் உசுப்பியிருக்க வேண்டும் அல்லது இனியும் பொறுமை கூடாது என நினைத்திருக்கக்கூடும். ஆர்வமானார்.

அடுத்த நிகழ்ச்சியில் இயல் குழுமத்தினர் எழுதியிருந்த கதைகளைப் பற்றி பேசினேன். அப்போது இவரது ஒரு சிறுகதை கிடைத்தது. ‘முத்ததானம்’ என்கிற தலைப்பில் சிறுகதையை எழுதியிருந்தார். ஆளுக்கும் கதையில் தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லையே என்கிற மனநிலையில் வாசிக்க ஆரம்பித்த கதை, மன நிறைவை கொடுத்தது. கோவிட் போன்ற பெருந்தொற்று காலக்கட்டம் ஒரு குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்கிற வழக்கமான கதையில் அவரவர் நியாயங்களை அழகாகச் சொன்னார். கதை வாசித்து முடித்தது எனக்கு சீனு ராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. ஏனெனில் யாரும் கெட்டவர்கள் அல்ல, யாரும் நல்லவர்கள் அல்ல. முத்ததானம் சிறுகதையில் அந்தச் சூழலே காரண கர்த்தாவாக இருந்தது. 

அது அவரிடம் என்னை அதிகமாய் நெருங்க வைத்தது. இயல் குழுகம் பின்னர் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமாக பரிணாமம் அடைந்தது. அதன் வழி பல எழுத்தாளர்களை அறியும், சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்துக் கொண்டும் இருக்கிறது. 

பின்னர் மலேசியத் தமிழ் இயல் மன்றத்தின் ஏற்பாட்டில்  குறுங்கதை பயிற்றுனராக  நிகழ்ச்சிகளை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்க பத்து நிமிட இடவெளியில் ஒரு குறுங்கதையை மின்னஞ்சல் செய்து, தாமதத்திற்கு மன்னிப்பும் கேட்டு வாய்ப்பிருந்தால் படிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இயல்பாகவே நான் கடைசி நேரத்தில் எதனையும் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவசரமான வாசிப்பு கதையை சிதைத்துவிடக்கூடும் அல்லது நமது முன்னேற்பாடுகளை குழப்பிவிடக்கூடும்.

முன்னமே ஒரு கதையின் வழி நம்பிக்கையைப் பெற்றவர் என்பதால், வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையில் அக்கதையை தவறவிட்டிருந்தால் எனக்குத்தான் இழப்பு என்று எண்ணும்படியானது.
‘சகதி’ என்னும் குறுங்கதை, தன்னார்வளர்களின் மனப்போக்கைக் காட்டுவதாகவும் தொண்டு செய்கிறேன் என புறப்படுபவர்களின் மன அழுக்குகளையும் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்தது. அக்குறுங்கதை எனக்கு பிடித்தற்கான காரணம் அது எழுப்பும் கேள்வி. தொண்டு செய்வதாக களம் இறங்கியவர்கள் குறை சொல்பவர்களாக இருக்கும் போது அவர்கள் கையில் எடுத்திருக்கும் தொண்டு முழுமையடையாமல் நிற்பதை அழகாக காட்டியிருப்பார். 
கவனிக்க வேண்டிய எழுத்தாளராக, குறைந்தது கவனிக்கத்தக்க கதைகளைக் கொடுக்கக்கூடியவராக அவர் வருவார் என்ற நம்பிக்கை தோன்றியது. அப்படி தோன்ற வைக்கும் யாரையும் அப்படியே விடுவதில் எனக்கு உடன்பாடில்லை ஆகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகள் குறித்தும் எழுதுச்சொல்லியும் பேசினேன். சில சமயங்களில் அப்படி பேசுவதற்கே நேரத்தை ஏற்படுத்திக்கொண்டேன். 

சந்திக்கும் போதெல்லாம் கதைகள் குறித்தே எங்கள் உரையாடல் இருந்தது. முக்கியமாக சமயம் சார்ந்து இங்கு அதிகம் எழுதப்படதில்லை. இவர் அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும், அவரும் எழுத வேண்டும் என கேட்டுக்கொண்டேன். மலேசியத் தமிழ் இயல் மன்ற நிறுவனரும் இயல் பதிப்பக நிறுவனருமான தோழர் பொன்கோகிலம் அவர்கள் அதனையே வழிமொழிந்தார்.

இயல் பதிக்கத்தின் மூலம் பல எழுத்தாளர்களின் முதல் புத்தகம் இவ்வாண்டும் வெளிவரவுள்ளது. அதற்கான பெரிய திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கும் தோழர் பொன்கோகிலத்துடன் அச்சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தை பின்னர் எழுதுகிறேன்.
ஏகே ரகேஷ் அவர்களின் முதல் புத்தகத்திற்கான சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது எங்களின் உரையாடல் இம்முறை எழுத்தில் இருந்து சமயம் நோக்கி சென்றது.

என்னுடைய சமய நம்பிக்கையும் என் வழிபாடும் கொஞ்சம் வித்தியாசமானது. அதனை புரிந்துகொள்வது சிரமம். அன்பை ஆதாரமாக வைத்து என் கடவுளை நான் அணுக நினைக்கிறேன்.

ஆனால், எனது 10 அல்லது 11 வயதில் நான் சென்ற மூன்று நாள் சமய வகுப்பு குறித்து பேசினேன். இன்றும் என் நினைவுகளில் அந்த நாட்கள் கொஞ்சமேனும் இருக்கிறது. அங்கு எங்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகள், விளையாட்டுகள், இந்து சமயப்பாடல்கள் போன்றவற்றை பேசினேன். அங்கு எங்களுக்கு சமய வகுப்பு நடத்திய நான்கு ஐந்து இளைஞர்களில் ஒருவர் சொன்ன கதையை இங்கும் பகிர்ந்தேன். ஒரு ராமர் கோவில் இடிக்கப்படுகிறது, அதன் கோபுரத்தில் உள்ள கொடி கீழே விழுகிறது. எங்கிருந்தோ ஓடி வந்த குரங்கொன்று அந்தக் கொடியை தூக்கிக்கொண்டு மீண்டும் உடக்கப்படும் கோவிலில் மேலே ஏறுகிறது. அப்போது இந்தக்கதையை கேட்க எங்களுக்கு உடல் சிலிர்ந்தது. கதையும் கதை சொன்ன விதமும் அப்படித்தான் இருந்தது.

நான் இதனைச் சொல்லி முடிக்கவும், தோழர் பொன்கோகிலமும் ஏகே ரமேஷ் அவர்களும் என்னை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது. அந்த வயதில் எங்களுக்கு சமய வகுப்பு நடத்தி இந்தக் கதையை சொன்னவரே ஏகே ரமேஷ்தான் என்று.

எனக்கும் அது இன்ப அதிர்ச்சியாய் அமைந்துவிட்டது. இத்தனை நாட்களாய் பார்த்துப்பேசி பழகியவர் எனது சின்ன வயது சமய ஆசிரியர். இன்றளவும் அவர் தொடர்ந்து சமயப்பணியில் இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நாம் ஒருவரோடு பழகுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருப்பது உண்மைதான் போல. அன்று எனக்கு சமய வகுப்பு/பட்டறை நடத்தியவரிடமே இன்று சமயம் சார்த்து எழுத சொல்லும் இடம் என்னை நெகிழ வைக்கிறது. யோசிக்கையில் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை நினைத்துக்கொண்டேன்.

அவர் குறித்து இத்தனை நாட்கள் தெரியாமல் இருந்து, இன்று தெரிவதற்கு காரணமாக அமைந்ததும் ஏகே ரமேஷ் எழுதியிருந்த சிறுகதையின் வழிதான். அச்சிறுகதையின் பெயர் ‘தீக்ஷா’. விரைவில் வெளிவரவிருக்கும் அவரது சிறுகதைத் தொகுப்பில் அச்சிறுகதையை நீங்கள் வாசிக்கலாம்.   

இதுவரை வாசித்த உங்களுக்காக ஒரு ரகசியம் அந்தச் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பும் அதுதான்.

ஆகஸ்ட் 14, 2022

புத்தகவாசிப்பு_2021 ‘ரூஹ்’


புத்தகவாசிப்பு_2021 ‘ரூஹ்’
தலைப்பு –‘ரூஹ்’ 
வகை – நாவல்
எழுத்து – லஷ்மி சரவணகுமார்
வெளியீடு – எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

                         - ரூஹ் – மனம் காட்டும் கண்ணாடி - 

வாசித்து முடித்ததும், அழுதுவிட்டேன். உண்மையில் வாசிக்கும் போதே அழ ஆரம்பித்துவிட்டேன். 

நமக்குள் இருக்கும் நமது பலவீனங்களை அதன் நகர்வுகளையும் லஷ்மி சரவணகுமாரால் எளிதில் கண்டறிய முடிகிறது.  அப்படித்தான் ‘ரூஹ்’ எனது பழைய நினைவுகளையும் எனது நண்பர்களின் வாழ்க்கையையும் மீள் செய்வதாக அமைந்திருந்தது.

ல.ச.கு-வின் எழுத்துகளின் நமக்கு தெரியாத மனிதர்கள் பற்றிய அறிமுகம் எப்போதுமிருக்கும். அவர்களின் வன்மம், காமம், கனிவு, அன்பு, நம்பிக்கை, அழுகை,  என பல திசையிலிருந்து கதாப்பாத்திரங்களை அவரால் ஒரு மையப்புள்ளியில் இணைக்க வைக்க  முடிகிறது. 

வாசகர்களையும் அதில் சேர்ந்து பயணிக்க வைக்கிறது. தொடர்ந்து ல.ச.கு-வின் எழுத்துகளை வாசிக்கின்ற வாசகன் என்கிற முறையில் அவரது ‘ரூஹ்’ நாவலை பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பகிர நினைக்கின்றேன். 

‘ரூஹ்’, தன்னை வெளிகாட்டிய வடிவம் புதுமையாக இருந்தது. காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி அதனை ஒற்றை மையத்தில் கொண்டு வரும் யுக்தி நாவலை ஆர்வத்துடன் வாசிக்க வைக்கிறது. 
மலாய் மொழியில் ரூஹ் (ROH) என்றால் ஆவி, ஆன்மா என்பதைக் குறிக்கும். புனித ஆத்மாவையும் அப்படி அழைப்பார்கள். இந்நாவலில் அப்படியான புனித ஆன்மாவாக ராபியாவைப் பார்க்க முடிகின்றது. 

பதினெட்டாம் நூற்றாண்டில் விலை மதிப்பற்ற பச்சை நிற  கல்லை  அதற்கான  இடத்திற்கு சேர்ப்பதற்கு அஹமத் என்னும் தேர்ந்த மாலுமியுடன் சில ஞானிகள் பயணமாகிறார்கள். அக்கல் கொள்ளைப்போகிறது. அதனை மீட்க எதனையும் சந்திக்கத் துணிவுடன் அஹமத்தும் ஞானிகளும் மீண்டும் அந்த கடற்கொள்ளையர்களிடமே செல்கிறார்கள். அந்த கல்லால் ஈர்க்கப்பட்ட அரசன் அக்கல்லை கொடுக்க மறுக்கிறார். ஆனால் அந்த அரண்மனையில் இருந்தே கல் வெளியேற்றப்படுகிறது. அந்த பச்சை நிற கல், அரண்மனையில் இருந்து ஊர் ஊராய் செல்லும் பொம்மலாட்டக் கலைஞருக்கு  கிடைக்கிறது. அக்கல் வேறொரு பயணத்தை ஆரம்பிக்கிறது.

இதன் ஊடே இன்னொரு கதையாக, ஜோதியின் வாழ்க்கையும் நகர்கின்றது. ஜோதிக்கு பெண் குரல். அதனால் பல அவமானங்களையும் உதாசினங்களையும் சந்திக்கின்றான். தன் மூதாதையர்கள் தொன்று தொட்டு செய்து வைத்த பொம்மலாட்ட கூத்தில் அவனால் பங்காற்ற முடியவில்லை. ஜொதியை வாசிக்கும் போது நம்மால் அதனை எளிதில் கடந்துவிட முடியாது. 

மனமும் அதன் கட்டற்றத் தன்மையை ஒரு மனிதன் எதிர்க்கொள்வது சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண்களால் ஜோதி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆழாகிறான். ல.ச.கு அதனை எழுதியிருக்கும் விதம் நம் தூக்கத்தை தொலைக்கிறது. மனிதனுள் இருக்கும் மிருகம் வேட்டையாட வெளி வரும் பொழுதுகளை அவரால் எளிதில் வாசகர்களுக்கு கடத்திவிட முடிகிறது. என் நண்பர்களில் சிலர் இது போன்ற சிக்கல்களால் காணாமலே போய்விட்டார்கள். அந்த வயதில் என்னால் புரிந்தும் புரியாமல் போன பல கேள்விகளுக்கு ஜோதியின் வாழ்க்கை மூலமாக பதில்களைக் கொடுத்திருக்கிறார். 

இன்னொரு பக்கத்தில் , ஒரு தேவதை போல, எல்லோர்க்குமான அன்பை தானே சுமந்துக் கொண்டிருப்பதாக ராபியா அறிமுகம் ஆகிறாள். 

ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படியான ஒருத்தி இருக்க வேண்டும் என ஆசைப்படும் அளவிற்கு ராபியாவை காட்டியுள்ளார். ராபியாவின் கணவன் அன்வரை நம் அன்றாக வாழ்க்கையில் சந்திப்போம். அன்வர், எல்லா துடிப்பு மிக்க இளைஞர்கள் போலவே  தானே செயல்பட நினைத்து, முனைந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அன்வருக்கும் ராபியாவிற்கு திருமணமாகிறது. அழகான மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்கிறார்கள். வாழ்க்கை சமயங்களில் நமது எந்த நிலையையும் தூக்கியெறிந்துவிடும்.   ராபியாவிற்காக நம்மை அழவும் வைக்கிறார். நல்லவர்களுக்குத்தான் எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள் என நினைக்கும் போது நம்மால் எப்படி    அழாமல் இருக்க முடியவில்லை. 

கொள்ளைப்போகும் மரகத கல் – அமானுஷ்ய பயணம் , ஜோதியின் நிலையற்ற தன்மை – மன போராட்டம், ராபியாவின் அன்பும் அழுகையும் என மூன்று முடிச்சுகளும் ஒரு மையத்தில் வந்து நிற்கிறது. 

நாவலில் ஆங்காங்கு வாசித்தவைகள் ஒரு கோட்டில் வருகின்றன. 

பாலோ கொயலோவின் ‘ரசவாதி’ என்னும் நாவலை சில இடங்களில் ரூஹ் நினைக்க வைத்தது. இரண்டிலுமே மையமாக இருப்பது மானிதனின்  மனம் நம்பும் ஒன்றிற்கான பயணத்தை இப்பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம்.
ரூஹ்- வாழ்க்கையின் விளையாட்டு எங்கிருந்தும் அடுத்ததொரு பயணத்தை கொடுக்கும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. லாபங்களை போன்றதே இழப்புகளும் , சிரிப்பை போன்றே அழுகையும் என்கிற தேற்றுதலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றது. 

வழக்கத்திற்கு மாறாக இந்நாவல் வாசிப்பைக் குறித்து குறைவாகே எழுதியுள்ளேன். ஒரு கண்ணாடி போல பல இடங்களில் என்னை எனக்கு காட்டிய இந்நாவலில் பல நாட்கள் தொலைந்திருந்தவன் நான். நீங்களும் உங்களை கண்டுணர்ந்து தொலைய வேண்டும் என்பதற்காகவே நாவலின் முழு சித்திரத்தையும் கொடுக்க விரும்பவில்லை. 

நான் எதை எப்படி சொல்லியிருந்தாலும், வாசிப்பவர்களுக்கு வேறொரு வாசிப்பு அனுபவத்தையேக் கொடுக்கக்கூடய  நாவல்  இது.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#புத்தகச்சிறகுகள்_வாசிப்பாளர்_குழு

புத்தகவாசிப்பு_2021 ‘கானகன்’


புத்தகவாசிப்பு_2021 ‘கானகன்’
தலைப்பு –‘கானகன்’ (யுவ புரஸ்கார் விருது பெற்ற நாவல்)
வகை – நாவல்
எழுத்து – லஷ்மி சரவணகுமார்
வெளியீடு – எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

லஷ்மி சரவணகுமாரின் நாவல்; ‘கானகன்’. இந்நாவலைப் பற்றி எழுதும் போது பெரும்பாலானவர்கள் ஒரே வரியில் எழுதி சென்றதை கவனித்துள்ளேன். ‘புலியின் வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் நாவல்’ என எழுதுவதன் மூலம் தாங்களும் இந்நாவலை வாசித்துவிட்டோம் என காட்டுகின்றார்களே தவிர இன்னொரு வாசகர்களுக்கு இந்நாவலை அறிமுகம் செய்யும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஒற்றை வரி விமர்சனத்தையும் ! (விமர்சனமா…?) நாவலின் பின்னட்டையில் பேராசிரியர் எஸ்.வி.ஆர் சொன்னதில் இருந்து எடுத்திருக்கின்றார்கள்.

வழக்கமாக எழுதுவது போல நாவல் வாசிப்பு குறித்து இம்முறை நான் எழுதப்போவதில்லை. இந்நாவலில் நான் கண்ட வேறொன்றை எழுத முயல்கிறேன். 

அதற்கு முன்;

இயல்பாகவே லஷ்மி சரவணகுமாரின் எழுத்துகளில் மனதின் வெளிப்பாடுகளை காணலாம். அன்பாக கருணையாக காமமாக வன்மமாக மனிதனை அலைக்கழிக்கும் உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவே கதாப்பாத்திரங்கள் அமைந்திருக்கும். ல.ச.கு எழுதும் பெண்கள் பெரும்பாலும் வாசிக்கின்றவர்களை வசீகரிக்கவே செய்வார்கள். அப்படியும் பெண்களால் முடியுமா என்கிற கேள்வியை எழ வைத்து, அவள் நினைத்தால் இன்னும் கூட செய்ய முடிந்தவள் என்கிற எண்ணத்தை வாசகர்கள் மனதில் வர வைக்கும். 

விரைவிலேயே ல.ச.குவின் எழுத்துகளின் பெண்கள் என யாரும் ஆயுவுகள் செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.

அவரின் சிறுகதைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். கானகன் நான் வாசித்திருக்கும் ல.ச.குவின் மூன்றாவது நாவல். ‘உப்பு நாய்கள்’  நாவலில் தொடங்கி ‘ரூஹ்’ பிறகு கானவன் நாவலை வாசித்து முடித்தேன். ரூஹ் நாவல் வாசிப்பு அனுபவம் குறித்து எழுதியுள்ளேன். ஆனால் இன்னவரைக்கும் அவரது ‘உப்பு நாய்கள்’ நாவல் பற்றி என்னால் முழுமையாக எழுத முடியவில்லை. மீண்டும் அதனுள் செல்ல இயலவில்லை. 

இன்றுவரை அந்நாவலில் வரும் சம்பத்தை மறக்கவும் மறுக்கவும் முடியவில்லை. 

அந்நாவல் வாசித்த சில ஆண்டுகளில் அது போலவே; அதனைக் காட்டிலும் பல சம்பவங்களை கேள்விப்பட்டும் பார்த்தும் வந்திருந்தாலும் அந்த உப்பு நாய்கள் கொடுத்த அதிர்ச்சியும் காட்டிய வாழ்க்கையும் மனதில் அப்படியே இருக்கிறது. 

இனி…

கானகன், எழுத்துகள் வழி காட்சிகளை காட்டியபடி நகர்ந்துச் செல்கிறது. தங்கப்பனின் புலி வேட்டையில் நாவல் ஆரம்பமாகின்றது. அப்பழுக்கற்ற ஒரு வேட்டைக்காரனாக நாவல் முழுக்க தங்கப்பன் வருகிறான். அவனை எதற்காக நேசிக்கின்றோமோ அதற்காகவே அவனை வெறுக்கவும் செய்கிறோம். இவனல்லவா வேட்டைக்காரன் என சொல்ல வைத்து, ச்சே இவனெல்லாம் ஒரு வேட்டைக்காரனா என்கிற கேள்வியை எழ வைக்கின்றார் ஆசிரியர். எண்ணம் செயல் முழுக்க வேட்டைக்காரனான தங்கப்பன் காட்டின் வேட்டையிலும் கட்டிலின் வேட்டையிலும் தான் ஒரு தேர்ந்த வேட்டைக்காரன் என்பதை காட்டிக் கொண்டே இருக்கின்றான். 

தன் மூன்றாம் மனைவிக்கு பிறந்த வாசியை முழுமனதாக தங்கப்பன் ஏற்றுக் கொள்ளும் போது அவன் செய்த எல்லா தவறுகளுக்கும் நாம் அவனை மன்னித்துவிடுகின்றோம். தனக்கு துரோகத்தால் தான் ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்பட போகின்றோம் என தங்கப்பன் அதிர்ச்சியாகும் போது நாமும் அதிர்ச்சியாகின்றோம். அதற்கு காரணமான வாசியை வெறுக்கின்றோம். ஆனால் நிலமையை அடுத்த சில வினாடிகளிலேயே உணர்ந்துவிட்ட தங்கப்பன் தனக்கு இதைவிட கௌரவமான சாவு வாய்க்காது என முழுமனதாக புலிக்கு தன்னை கொடுக்கின்றான். உண்மையில் நான் தங்கப்பனுக்காக வருத்தப்படுகின்றேன். 

தான் நம்பியதை நம்பியபடியே செய்த ஒரு தேர்ந்த வேட்டைக்காரனுக்கு இப்படியா  சூது செய்து சாவு வரவேண்டும். ஆனால், அவன் சாவு இந்த வனத்தை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையப்போகின்றது என நினைக்கையில் அவனது சாவிற்கு வாசி கொடுத்திருக்கும் அர்த்தம் புரிகிறது.

செல்லாயிக்கும் சடையனுக்கும் பிறந்தவன் வாசி. சடையனும் ஒரு சித்தன் போல சில இடங்களில் தென்படுகின்றான். அவன் ஓர் அப்பாவி பைத்தியம் என நம்ப வைக்கின்றான். துரத்திக் கொண்டு வரும் யானை கூட்டத்தின் முன்னே பெரிய யானையின் தோளில் அமர்ந்து அவற்றை விரட்டி மாவீரனாக மாறியும் விடுகின்றான். ஆசிரியர்  அக்காட்சியை சொல்லியிருக்கும் விதம் வாசிக்கையில் அந்த யானை கூட்டத்தில் நாமும் சிக்கிக் கொண்டதாக நினைக்க வைக்கிறது.

சடையனுக்கு பிறந்து அம்மா செல்லாயி உடன் தங்கப்பன் இருப்பிடத்தில் வாழ்ந்தாலும் தனக்குள் இருக்கும் தன் அப்பா சடையனை கண்டுக்கொள்ளவே வாசி முயல்கிறான். அவனைச் சுற்றி நடக்கும் அமானுஷ்யங்கள் ஆச்சர்யங்கள் எல்லாம் அவனை அவன் பிறப்பின் நோக்கம் அறிய அழைத்துச் செல்கிறது. 

தங்கப்பனின் நண்பனாக அவனை மனிதனாக பாவிப்பவனாக அன்சாரி வருகிறான். நாவலில் அன்சாரிக்கு முக்கிய இடம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ஆண்களின் மனம் எத்தனை கொடுமை செய்யக்கூடியது எத்தனை அன்பு காட்டக்கூடியது என சொல்வதற்கு உதாரணமாக அமைந்திருக்கின்றது. அன்சாரிக்கு தங்கப்பனின் இரண்டாவது மனைவி மாரி மீது ஈர்ப்பு இருக்கின்றது. மாரிக்கும் இது ஓரளவிற்கு புரிந்தாலும் அவள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

மாரியிடம் அன்பாகவும் பண்பாகவும் பழகிக் கொண்டிருந்த அன்சாரி, அவளை அடைவதற்கான வாய்ப்பு கை நழுவி செல்வதை தாங்காது மாரியிடம் மிருகமாக மாறுகின்றான். முரண்டு பிடித்தவள் இறுதியில் இறங்கிவிடுகிறாள். அன்பும் காமமும் யார் யாரை விட முக்கியமானவர்கள் என்கிற கேள்விக்கு இவர்கள் இருவருமே பதிலை தேடிக் கொள்கிறார்கள். 

நாவலில் காட்டப்பட்டிருக்கும் முக்கியமான பெண் 
கதாப்பாத்திரங்கள்; தங்கப்பனின் மனைவி சகாயராணி , இரண்டாவது மனைவி மாரி, மூன்றாவது மனைவி செல்லாயி (சடையனின் மனைவி), ஜமிந்தாரின் மனைவி, குயிலம்மாள் (வாசியின் மனைவி). 

தன் கணவனின் இரண்டாம் மனைவில் மாரி, அன்சாரியை பிடித்திருப்பதாக சகாயராணியிடம் சொல்லும் போது அவள் அதனை புரிந்துக் கொண்டு பேசுவது முக்கியமான ஒன்று. ஒரு தாயைப் போல மகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டவளாய் சகாயராணி தெரிகிறாள்.

தான் பிறந்த குலத்தில் பெண்கள் வேட்டைக்கு செல்பவர்கள் அல்ல. மாறாக காட்டையும் அதன் ஜீவராசிகளையும் பாதுகாப்பவர்கள். ஆனாலும் தனக்குள் இருக்கும் வேட்டைக்காரியை இழந்துவிடாமல் அதற்காகவே தேர்ந்த வேட்டைக்காரனான தங்கப்பனிடம் செல்கிறாள் செல்லாயி. அவளை திரும்ப அழைக்கவும் விரும்பாத சடையன். அவள் விருப்பத்திற்கு எந்த தடையும் சொல்லவில்லை.

நாவலில் வரும் ஜமீந்தாரின் பகுதி, தனி ஒரு நாவலாக நம்மை எழுத வைக்கிறது. மது மயக்கத்தில் எல்லோரும் மயங்கி உறங்கிவிட வாசியிடம் உறவு கொள்கிறாள் ஜமிந்தாரின் மனைவி. 

ஒரு பெண்ணை எத்தனை பூட்டு போட்டு பூட்டி வைத்தாலும் அவள் விரும்பினால் அன்றி எந்த பூட்டும் அவளை பூட்டிவிடுவதில்லை. அங்குதான் வாசி தான் ஒரு முழுமையான ஆணாகிவிட்டதை உணர்கிறான். மறுநாள் அனைவரும் வேட்டைக்கு கிளம்ப, கர்ப்பிணி மானை பலர் தடுத்தும் சுட்டுவிகிறார் ஜமிந்தார். வாசி உடனே மானிடம் சென்று அதன் வயிற்றில் இருந்து மான் குட்டியை வெளியில் எடுக்கின்றான். இக்காட்சி ஜமிந்தாரை ஏதோ செய்தது. அலறிக்கொண்டே ஓடியவர்தான் அதன் பின் திரும்பவே இல்லை. சில நாட்கள் கழித்து ஜமிந்தார் இல்லாமலேயே அவரின் குடும்பம் திரும்ப அவர்கள் ஊருக்கு செல்கிறது.

யானை ஏன் ஊருக்குள் வருகிறது. கொல்லும் புலியை ஏன் கடவுளாக பார்க்கிறார்கள். காட்டில் வசிப்பவர்களை ஏன் விரட்டுகிறார்கள். அழியும் காடு யாருக்கு லாபத்தைக் கொடுக்கின்றது. போன்ற பலவற்றை இந்நாவல் வழி அறிய செய்கிறார் ஆசிரியர்.

வழக்கமான வாசிப்பு அனுபவத்தை எழுதாமல், கானகன் நாவலில் உள்ள கதாப்பாத்திரங்களை எழுதியுள்ளேன். நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்தான். 

இன்னும் சொல்லப்போனால் ஒரு வரியில் இந்நாவலை சொல்லிவிட்டு கடந்து போகவே முடியாது. நான் சொல்லியிருப்பது மிகவும் குறைவுதான் இன்னும் அதிகம் எழுதலாம். அதற்கான அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கிய நாவல்தான் கானகன். நாவலை கொடுத்த லஷ்மி சரவணகுமாருக்கு அன்பும் நன்றியும்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்