- விடியும் எப்படியும் விடியும் -
எதிர்ப்பாராத இரவு வெள்ளத்தில் எல்லாம் அடித்துக் கொண்டு போனது. மிச்சமிருப்பது உயிர்தான் என்றான நிலையில் வட்டார மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
இக்கட்டான நிலை. ஆடம்பர வீடுகளை விழுங்கிய வெள்ளம் வீட்டுக்கூரைகளை விழுங்க முயல்கின்றன. அக்கம்பக்க மலிவு விலை வீடுகள் எல்லாம் வெள்ளத்தின் வயிற்றில் புகுந்தே விட்டன. கூரை முழுக்க மனிதர்களாக அமர்ந்தும் நின்றும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள்
விடிந்தும் கூட வற்றிடாத வெள்ளத்தை கேள்விபட்ட மந்திரிகள் அவசர கூட்டம் போட்டார்கள். வெள்ளம் நெருங்க முடியாத இடம் கண்டறியப்பட்டது. பிரியாணிக்கு ஆடர் கொடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் கூடினார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்கு புதிய திட்டத்தையும் குழுவையும் உருவாக்கி அதற்காக கேக் வெட்டி திறப்பு விழா செய்தார்கள்.
அங்கிருந்து புறப்பட்டவர்கள் உடனடியாக மக்களுக்கு உதவும்படிக்கு சில படகுகளை ஏற்பாடு செய்யலானார்கள். படகுகளின் நான்கு பக்கங்களிலும் கட்சி கொடியை ஏற்றிவிட்டார்கள். கட்சி வண்ணத்தை படகுகள் முழுக்க பூசி, அதனை நன்றாக காய வைக்க படாத பாடு பட்டார்கள்.
படகுகள் எப்படி தனியாகப்போகும். அதற்காக ஒவ்வொரு படகிலும், அந்த படகின் தலைவர், அவரின் துணைத்தலைவர், யாருக்கு என்ன உதவி தேவை என கண்டறிந்து குறிப்பு எழுத இரண்டு செயலாளர்கள், இரண்டு கேமரா மேன்கள், துடுப்பு போடுவதற்கு நான்கு பேர், இவர்களின் பாதுகாப்பு கருதி நான்கு பேர், இவர்களுக்கு குடை பிடித்தவாறே நான்கு பேர் இருந்தார்கள்.
அப்படகில் மொத்தமே இருபது பேர்வரைதான் அமர முடியும் என்பதை அறிந்துகொண்டவர்கள், காலியாக இருக்கும் இடத்தில் எந்த பாதிக்கப்பட்டவர்களை ஏற்றலாம் என கண்டறிய மேலும் இரண்டு உதவியாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் போய் சேர்ந்து, உதவி செய்துவிடுவார்கள்.
1 comments:
சாட்டையடி கொடுத்த குறுங்கதை.மனிதநேயம் எங்கே வாழ்கிறது என்பதை தேட வைத்துள்ளது.
கருத்துரையிடுக