பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 27, 2016

அ.முத்துலிங்கத்தின் அமெரிக்கக்காரி





வாசித்து முடித்த அ.முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ சிறுகதை தொகுப்பையொட்டி;

கதை 1.  புவியீர்ப்புக் கட்டணம்
 
நல்ல கதை. தலைப்பு கதையை சொல்லிவிட்டாலும் ,தொடக்கம் முதல் கடைசிவரை அதன் சுவாரஷ்யம் குறையவில்லை. சமகால வரி கட்டண விபரங்களை நாசுக்காக பகடி செய்யும் கதை. இப்படி ஒரு கதையை இதற்கு முன் படித்த நினைவு இல்லை.

கதை 2 - வேட்டை நாய்

சிலாகித்துச்சொல்ல ஒன்றுமில்லை. யூகிக்க முடியாத சுவாரஷ் யமே கதையை காப்பாற்றுகிறது. யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கவேண்டிய கதை, ஆனால் அதன் நகைச்சுவை அ.முத்துலிங்கத்தால் மட்டுமே கூடியதாக இருக்கிறது.

கதை 3 - உடனே திரும்ப வேண்டும்

தலைப்பில் இருந்தே கதை தொடங்குகின்றது. நன்றியை நினைத்துப்பார்க்கும் பாணியிலான கதை. அ.முத்துலிங்கத்தின் முத்திரையில் எழுதப்பட்டுள்ளது. யார்க்கும் அத்தனை எளிதில் கிடைத்திடாத அனுபவத்தை வாசகர்களும் உணரும்படி எழுதியுள்ளார். கதையின் கடைசி இரண்டு வரிகள் சிரிக்க வேண்டுமென்பதற்காகவே சேர்க்கப்பட்டுள்ளதாகப்படுகிறது. அவ்விரு வரிகள் இல்லாமலும் இக்கதை நிற்கும். ரசிக்கவும் வைக்கும். தன் அனுபவத்தை எப்படி சிறுகதையாக புனையலாம் என புதியவர்கள் கண்டுக்கொள்ள உதவும் கதை.

கதை 4 - வெள்ளிக்கரண்டி

பேய்கள் இல்லாமலேயே பேய்கதை சொல்லியிருக்கிறார்.புதிய தீவு குறித்து பேசுகையில் அத்தகையதொரு தீவு உண்டா என எண்ணிப்பார்த்து தேட வைக்கிறது . முன் யூகங்களை அவராகவே தகர்த்து தகர்த்து அடுத்த எதிர்ப்பார்ப்புக்கு அழைத்துச்செல்கிறார். புதிய கணவன் மனைவி, பழைய ! கணவன் மனைவிக்கு இடையெயான உரையாடல்களும் காட்சிகளும் சிரிக்க வைக்கின்றன . வெள்ளிக் கரண்டியை குறித்து தெரியும்வரை பேய் நமக்காக காத்திருக்கிறது.

கதை 5 - பத்து நாட்கள்

பணக்காரர்கள் வாழும் குடியிருப்பில் உழைப்பை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பவனின் கதை. காலை முதல் மாலை வரை அந்த இளைஞனின் கடைக்கு வராதவர்கள் இல்லை . ஆனால் பத்து நாட்கள் அவனுக்கு என்னமோ ஆகிறது . யாரும் அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இன்னமும் கூட தங்களில் அதிகாரத்தை சாமானிய மக்கள் மீது பயன்படுத்துகின்றவர்களும் இருக்கிறார்கள் , தாங்கள் அதிகார கால்களால் மிதிபடுவதை விரும்புகின்றவர்களும் இருப்பதை இக்கதை காட்டுகிறது.

கதை 6 - சுவருடன் பேசும் மனிதர்

இரண்டாவது பக்கம் படிக்கையில் தலைப்பை அவதானிக்க முடிகிறது. முடி திருத்தும் நபரின் மொழி நேசமும் அது அழியும் அபாயமும்தான் கதை. ஏசுநாதர் பேசிய மொழி என்றாலும் தனித்த நாடு இல்லாத எம்மொழியும் தத்தம் தன்மையை அருங்காட்சியகத்திலேயே வைக்க நேரிடும். அழிந்து வரும் மொழிகளில் முக்கியமாக கருதப்படும், மொழிக்கான நாடு இல்லாமை , அம்மொழியில் தேசிய கீதம் தமிழில் இல்லாமை போன்றவை, நம் மொழி குறித்த ஐயமாக கதையில் வைக்கிறார்.

கதை 7 - பொற்கொடியும் பார்ப்பாள்

போருக்காக தன்னை பலி கொடுத்த மகள் குறித்து சிலாகித்து பேசுகிறார் அம்மா . பொற்கொடி என்கிற பெயர் மீதான சுவாரஷ்யமே கதையை தொடங்குகிறது. போரில் மடிந்த ஆயிரமாயிரம் பேர்களில் தன் மகளும் இருந்தாள் என்பதில் அம்மாவிற்கு பெருமை இருப்பதுபோல அவர் தன்னையே ஏமாற்றி வந்தாலும் , எழுத்தாளரின் கடைசி கேள்வி அவரின் போலி பெருமையை உடைத்துவிடுகிறது. பின்னர் அந்த தாயின் கண்ணீரில் இருந்து தன்னை துண்டித்து கொள்கிறார். எங்கோ கதை தன்னை தொடங்கியதாகப் பட்டாலும், அது சரியான வழியிலெயே சென்றடைந்திருக்கிறது.

கதை 8 - பத்தாவது கட்டளை

வயோதிகனின் காதல் கடிதம்.காதலில் நனைத்து எழுதப்பட்ட வரிகள். காட்சிகளாக கதை நகர்ந்து வாசகர்களையும் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. அவளை சந்திக்கும் நேரங்கள் காட்சிகள் கவிதைகளாக விழுகின்றன . கடைசியில் கதையின் சூட்சுமம் வெளிபடுகிறது. பின்னர் அந்த ரகசியத்தை நாமும் ரகசியமாக வைத்திருக்க விரும்பி விடைபெற்றுக்கொள்ளலாம்.

கதை  9 – 49வது அகலக்கோடு

கதை நேர்த்தியாக நகந்துக்கொண்டே இருக்கிறது. முன் அனுமானிக்க முடியாத சூட்சுமத்தை இதில் கையாண்டிருக்கிறார் அ.முத்துலிங்கம். சொல்லப்படும் தகவல்களை ஆழமாக கவனிக்காதவர்கள் கதை முடிந்தும் மீண்டும் படித்துப்பார்க்க வைக்கிறது. குப்பென்ற சிரிப்பை கதையின் நிறைவாக நாம் பெற்றுக்கொள்கிறோம்.

கதை 10 – புகைக்கண்ணர்களின் தேசம்

தந்தை தன் மகனுக்கு சொல்லிச்செல்லும் ரசியம்தான் கதை. ஆனால் அது
அதே ரகசியமாகவே இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கதையும் அதற்கான சூழல்களும் அத்தனை அழகாய் அமைந்துள்ளது. ஜாதியை இத்தனை மேலோட்டமாக சொல்லியிருக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

கதை 9 – மன்மதன்

உண்மையிலேயே மன்மத குணம் கொண்டவனின் கதை. அவனை விவரிப்பதாக  கதை அமையாமல் அவனால் ஈர்க்கப்படும் பெண்களே கதையின் களமாக இருக்கிறது. அவர்கள் ஒரே குடும்ப பெண்கள் என்பதில் தொடங்கும் அதிர்ச்சியை , கதையின் கடைசி வரை கொண்டு சென்றுள்ளார்.

கதை 10 – மயான பராமரிப்பாளர்

தந்தையின் பாசம். ஆனால் எப்படி சொல்கிறார் யாராக இருந்து சொல்கிறார் என்பதுதான் அவருக்கே உரித்தான சிறப்பு அம்சமாக இக்கதையில் வெளிப்படுகிறது.

கதை 11 – அமெரிக்கக்காரி

அமெரிக்க மோகத்தை கிண்டல் செய்யும் கதை கடைசி வரியில் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிடுகிறது.

இச்சிறுகதை தொகுப்பில் இன்னும் சில கதைகள் உள்ளன. படித்திருந்த இந்த கதைகள் எனக்கு போதுமென்றே நினைக்கிறேன். எங்கிருந்து சிறுகதை தொடங்கலாம் எங்கு முடிக்கலாம் என்கிற சிக்கல் கொண்ட புதியவர்களுக்கு அ.முத்துலிங்கத்தின் கதைகளை பரிந்துரை செய்கிறேன். கண்டிப்பாக உதவியாக இருக்கும். தன் அனுபவங்களை எவ்வாறு கதைகளாக்கலாம் என்கிற விபரங்கள் தெரிந்துக்கொண்டால் நம்மிடம் சொல்லவேண்டிய கதைகள் ஏராளம் வரும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது இச்சிறுகதை தொகுப்பு.

-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்