பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் – எனது பார்வை


(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை குறித்து கங்காதுரை எழுதிய கட்டுரை)



முதலில் இந்தச் சிறுகதையை எழுதிய நண்பர் தயாஜியை மனதார பாராட்டுகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறுகதை அதிகம் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன் முறை. இம்மாதிரியான கருவை கையில் எடுத்துக்கொண்டு எழுதுவது என்பது சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்ள ஒரு ‘தில்’ வேண்டும். அது தயாஜிடம் இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
 
“கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற இந்தச் சிறுகதையை வாசித்தபோது எனக்குள் எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. அதற்கான காரணம் இம்மாதிரியான படைப்புகளை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். மலேசிய இலக்கியச் சூழலில் இம்மாதிரியான கருப்பொருளில் கதைகள் வந்திருப்பது மிகக் குறைவு. அதைவிட இங்கு வாசிப்புப் பழக்கம் என்பது மிகக் குறைவு. ஆக இம்மாதிரியான சிறுகதையை வாசித்திறாத பெரும்பாலோருக்கும் முதலில் ஏற்பட்டது அதிர்ச்சி மட்டுமே. அந்த அதிர்ச்சியில் அவரவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் இச்சிறுகதைக்கு எதிராக பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டன. சிலரின் விமர்சனங்கள் அறிவுநிலையிலிருந்து முன்வைக்கப்பட்டன. சிலரின் விமர்சனங்கள் அடித்து வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் வைக்கப்பட்டன. இன்னும் சிலர் காழ்ப்புணர்ச்சியில் மேற்கொண்ட கீழறுப்பு நடவடிக்கைகள் கழிவறையில் கிடக்கும் மலத்தை விட மோசமாக இருந்தன. முதலில் நம்மவர்கள் ஒரு விசயத்தை எதிர்கொள்ள முறையான அணுகுமுறையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இச்சிறுகதை குறித்து சில எழுத்தாளர் நண்பர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் முன்வைத்தது பின்வருமாறு:
 
“நமக்கு அறிமுகமாகாத இன்னொரு வாழ்வை நுட்பமாக பேசும் மிக முக்கியமான கதை இது. பொருளாதார ரீதியில் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தனிமனித உறவுகளில் எத்தனை பலவீனமானது என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்தும் கதையிது”
 
இனி, என் பார்வையில் சிறுகதையின் முக்கிய அம்சம் ஒரு மனப்பிறழ்வாளன் தான் கழிவறையில் சிக்குண்டதாக சொல்லி கதையைத் தொடங்குகிறான். கழிவறையில் நடந்தேறிய அவலங்களை நினைத்துப்பார்த்து அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சம்மந்தப்பட்டவர்களிடம் கெஞ்சி போராடுவதாக கதை அமைகிறது. கதையைப் படித்துவிட்டு பெரும்பாலோர் இச்சிறுகதை கலாச்சாரம் பண்பாட்டு கட்டமைப்பை மீறியுள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் இரண்டு. ஒன்று தாய்மையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், மற்றொன்று தெய்வத்தை இழிவுப்படுத்தியதாகவும் என்பதேயாகும்.
 
எங்கிருந்து வந்தது கலாச்சாரமும் இந்த பண்பாடும்? மனிதன் முதலில் வாழத்தொடங்கியதே காட்டுமிராண்டியாகத்தானே? வரையறையின்றி கிடந்த வாழ்க்கை முறை ஒழுங்குபடுத்தி பின்னர் கலாச்சாரம் பண்பாடு என கட்டமைக்கப் பட்டபோது அதிலிருந்து சிதறிய உதிரி மனிதர்களின் பாலியல் சிக்கல்களைப் பற்றி இச்சிறுகதை பேசுகிறது.
 
சம்பவங்களே இச்சிறுகதையை வளர்க்கின்றன. முதல் சம்பவத்தில் சிறுவன் தான் பார்த்த ஆபாசப் படத்தின் உந்துதலால் தன் தாயை குளிப்பதை எட்டிபார்க்க முயற்சி செய்ததாகக் காட்டப்பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பலரும் வன்மையாக கண்டித்தனர். தாய்மையின் புனிதத்தை கெடுத்துவிட்டதாக புலம்பினர். ஆனால் இச்சம்பவமே கதையின் முக்கிய காட்சியாக நான் கருதுகிறேன். இந்தக் காட்சியில் முக்கிய விடயமொன்று வைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன்.
 
சங்க இலக்கிய பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “ஆசாரக்கோவை” மனித வாழ்க்கையில் பேணப்படவேண்டிய ஆச்சாரங்களைப் பற்றி பேசுகிறது. அதில் தாயுடன் மகன் தனித்திருக்கக் கூடாது. மகளுடன் தந்தை தனித்திருக்கக் கூடாது. உடன்பிறந்தவளுடன் (அக்கா அல்லது தங்கை) சகோதரன் தனித்திருக்கக் கூடாது. தனித்திருந்தால் என்னவாகி விடும்? ஐந்து புலன்களையும் அடக்கி வைத்தல் அரிது. ஆகவே புணர்ச்சி நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லபட்டிருக்கும். தாயுடன் நிகழும் புணர்ச்சியைக் குறிக்கும் வசையாக இன்றைக்கும் பயன்படுவது ‘தாயோலி’ என்பது. அதேபோல சகோதரியோடு நிகழும் புணர்ச்சியைக் குறிக்க ‘ங்கொக்காலோலி’ எனும் வசைச்சொல் பொதுவாக பயன்படுகிறது. இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகின்றது.

இதையே இச்சிறுகதையின் முதல் காட்சி உணர்த்துவதாக நான் கருதுகின்றேன். சிறுவன் தனித்திருக்கும் வேளையில் ஆபாசப்படங்களைப் பார்க்கிறான். அதன் கிளர்ச்சியில் தன் தாயை குளிப்பதை எட்டிப்பார்க்க நினைக்கிறான். இங்கே இன்னொரு விடயமும் பதிவு செய்யப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அல்லது ஒடுக்குமுறைகள் தொடங்கும் முதல் இடம் குடும்பம். இக்கருத்தை ஒருமுறை கவிஞர் குட்டி ரேவதி “நீயா நானா” நிகழ்ச்சியில் முன்வைத்திருந்தார். நானும் அக்கருத்தை ஆதரிக்கிறேன். பாலியல் சார்ந்த வன்முறைகள் அல்லது ஒடுக்குமுறைகள் சிலருக்கு நேரிடையாகவே நிகழலாம் அல்லது அவர்கள் அறியாதும் நிகழலாம். இக்கதையில் தாய் தனக்கு நிகழ்ந்ததை அறியாதிருந்தாள். அவள் மகனிடம் வெளிப்படுத்திய அன்பும் அதையடுத்து சிறுவன் அடைந்திருந்த மனநிலையும் இச்சிறுகதையில் யதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது.
 
இச்சிறுகதையில் தொடர்ந்து காட்டப்பட்ட சம்பவங்கள் எல்லாமே நம் கண் முன் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பங்களே. காதல் பெயரில் காமத்தை விதைத்து கலவி கொள்வதும், அதை மறைந்திருந்து வேடிக்கை பார்ப்பதும், பதிவு செய்வதும், ஓரினப்புணர்ச்சி கொள்வதும் என எல்லாமே நம் சமூகத்தில் மட்டுமில்லாது எல்லா சமூகங்களிலும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்கள். இதை பற்றி எந்த சமூக இயக்கங்களும் அக்கறை கொண்டதுமில்லை ஆய்வுக்கு உட்படுத்தியதும் இல்லை. எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் சமூகத்தின் ஓர் அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதை எழுத்தாளன் தன் கதைக்குள் கொண்டுவரும்போது சமூகத்தின் உன்னத வாழ்விற்கு களங்கம் விளைவித்ததுபோல கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக இக்கதையில் தெய்வத்தை இழிவுப்படுத்தியதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இச்சிறுகதையின் இறுதி சம்பவத்தில் காளியைக் கடவுளாக பாராமல் தன் காதலியாக பார்க்கிறான் மனப்பிறழ்வாளன். காளியால் மட்டுமே அவனை கழிவறையிலிருந்து மீட்க முடியுமென நம்புகிறான். காளியை உரிமையோடு அழைக்கிறான். அழைத்தவன் காமத்தை விதைக்கிறான். காளியைக் காதலியாக நினைத்து அவளோடு காமம் கொள்ள அழைக்கிறான்.

 ///காளி. என் காதலி. மண்டையோட்டு சூளி. இங்கே வாடி. காதலனை இப்படி பழிவாங்குதல் முறையோ சொல்லு. இத்தனை காலம் உன்னை மறந்திருந்தது தவறுதான். இனி நீதான் எனக்கு எல்லாம் வாயேன் காளி. சீக்கிரம் வாயேன். உன் மார்பில் சூழ்ந்திருக்கும் மண்டையோடுகளை கழட்டு. என் முகத்தினை அதில் பதிக்கிறேன். உன் திறந்த மார்புகளை என் தோளால் போர்த்துகிறேன். கையில் இருப்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிடு. காதலை தாங்கிப்பிடி. கண்ணில் இருக்கும் குரோதங்களை தூக்கியெறியலாம். காமத்தை விதைக்களாம்.///
 
எப்படி இந்து கடவுளான காளியை இவ்வளவு ஆபாசமாக சித்தரிக்கலாமென பலர் கொதித்தெழுந்தனர். இதில் வேடிக்கை யாதெனில் ஒரு பெண் தெய்வமான காளியை ஆதி முதல் திறந்திருக்கும் மார்புகளோடு மேற்சட்டை அணிவிக்காமல் பொதுவில் தெய்வமாக வைத்து வழிபடுதலில் உள்ள ஆபாசத்தை விட வேறென்ன ஆபாசமாக இருக்கமுடியும்?இருந்தபோதிலும் எனக்கும், தயாஜி கதையின் முடிவில் சறுக்கியிருப்பதாகவே தோன்றுகிறது.
 
இச்சிறுகதையில் கழிவறை பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறது. கழிவுகளை வெளியேற்றும் இடமான கழிவறையில்தான் எல்லா சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அல்லது ஒவ்வொரு சம்பங்களுக்குப் பின்னும் அவன் ஒளிந்துகொள்ளும் இடமாக கழிவறை அமைகிறது. தயாஜி ஏன் கழிவறையைத் தேர்ந்தெடுத்தார் என்று யோசிக்கும்போது அவர் அதை ஒரு குறியீடாக பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
 
வியர்வை, சிறுநீர், மலம் என உடல் வெளிப்படுத்தும் மலங்கள் வெளியேற்றப்படும் இடம் கழிவறை. அதுபோல் உள்ளத்து உணர்வு வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று. அவற்றைப் பொதுநெறியில் காமம், வெகுளி, மயக்கம் என சொல்லப்படுகிறது. சமயநெறியில் ஆணவம், கன்மம், மாயை என சொல்லப்படுகிறது. இவை வெளியேற்றப்படும் கழிவறை உடல். இப்போது கதை முழுக்க பயன்படுத்தப்பட்ட கழிவறை எனுமிடத்தில் உடலைப் பொறுத்திப் பார்த்தால் இச்சிறுகதை வெறொரு கோணத்தில் பயணிக்கும்.
 
சிறுகதையின் சறுக்கல்
 
தயாஜி எடுத்துகொண்ட கரு கத்தி மேல் நடப்பது போன்றது. கத்தி மேல் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்துவைக்க வேண்டும். அதைபோல இச்சிறுகதைக்கான சொற்பிரயோகம். தயாஜியின் அநாவசியமற்ற சொற்பிரயோகம் இக்கதையின் மீதான முத்திரையை மாற்றியமைத்துவிட்டது. சிறுகதையில் சில இடங்களில் புகுத்தப்பட்டிருக்கும் தேவையற்ற விவரிப்பு வாசகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. எல்லாவற்றையும் யதார்த்தமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு அப்பட்டமாக எழுதுவதை தவிர்த்திருக்க வேண்டும். சில இடங்களில் நாசுக்கான சொல்முறை அவசியம் என கருதுகிறேன். அதோடு இச்சிறுகதையில் வடிவமைதி தேவைப்படுவதாகவும் கருதுகிறேன். தயாஜி ஒட்டுமொத்தமாக சறுக்கிய இடம் கதையின் முடிவுதான். தெளிவற்ற ஒரு முடிவு அல்லது முரணான ஒரு முடிவு வாசகர்களை குழப்பிவிடுகிறது.
ஆனால், சிறுகதையின் வடிவம் குறித்து பேசாமல் பெரும்பாலோர் அதை கருத்து ரீதியாக மோதி வீழ்த்த முனைவதுதான் இலக்கியம் எதிர்க்கொள்ளும் பெரிய சவாலாக இருக்கிறது நம் நாட்டில்.
 
-கங்காதுரை
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்