சிறகுகளின் கதை நேரம்; சிறுகதைக் கலந்துரையாடல் – ஓர் அறிமுகம்
நண்பர்களுக்கு
வணக்கம். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான உரையாடல் களத்தை இக்கலந்துரையாடல் வழி
ஏற்படுத்துகின்றோம். இது முழுக்க முழுக்க வாசிப்பை அடிப்படையாக வைத்து வாசகர்களுடன்
கைக்கோர்க்கும் நண்பர்கள் குழு. யார் இந்த நண்பர்கள் என்று கேட்டால் வாசிப்பை நேசிக்கும்
நீங்கள் எல்லோரும் எங்கள் நண்பர்கள்தான். அதோடு; மலேசிய படைப்பிலக்கியத்தை முன்னிருத்தி
மலேசிய படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே எங்கள் நோக்கம்.
கடந்த டிசம்பரில்
இக்கலந்துரையாடலைத் தொடங்கினோம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி எட்டு முதல் ஒன்பது
வரை இணையம் வழி இக்கலந்துரையாடல் நடக்கின்றது. தொடக்கத்தில் எனக்கு தெரிந்த எல்லோரிடமும்
இத்தகவலைச் சொன்னேன். சிலர் கலந்து கொண்டார்கள் சிலர் காரணம் சொன்னார்கள். கலந்து கொண்டவர்களிடம்
நிகழ்ச்சி குறித்தும் கலந்து கொள்ளாதவர்களிடம் அவர்கள் சொன்ன காரணம் குறித்தும் பேசினேன்.
நேரமில்லை, கலந்து கொள்வதில் சிக்கல், இணைய சிக்கல் போன்ற வழக்கமான காரணங்களுக்கு மத்தியில் புதிதான ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அதாவது இதுபோன்ற இன்னொருவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் இப்போது தாங்கள் இணைந்திருக்கும் குழுவில் இருந்து விலக்கப்படுவோம் என்கிற பயம் இருப்பதாக சொன்னார்கள். இதுபற்றி இனிமேலும் நான் பேச விரும்பவில்லை. யாருக்கு எங்கிருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்கள் அங்கேயே இருந்து கொள்ளலாம்.
டிசம்பர் மாத
கலந்துரையாடலில்;
4/12/23 தி.ஜானகிராமனின்
‘முள்முடி’
11/12/23 மா.அரங்கநாதனின்
‘சித்தி’
18/12/23 ஆதி.இராஜகுமாரனின்
‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’
25/12/23 அரு.சு.ஜீவானந்தனின்
‘புள்ளிகள்’
ஆகியோரின் சிறுகதைகளைக் குறித்து பேசி கலந்துரையாடினோம். முதல் இரு நிகழ்ச்சிகளுக்கு பின் மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைக்குச் சென்றோம். அதில் மறைந்த ஆதி.இராஜகுமாரனின் சிறுகதை முத்தாய்ப்பாய் அமைந்தது அனலாம். அதே போல எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன்தான் முதன்முதலாக இக்கலந்துரையாடலில் வாசகர்களுடன் பேசினார். அது எங்களுக்கு மேலும் உற்சாகம் கொடுத்தது.
ஜனவரி மாத கலந்துரையாடலில்
8/1/24 கோ.புண்ணியவானின்
‘சான்ஸ்’
15/1/24 காந்தனின்
‘ஐ லவ் யு’
22/1/24 வே.ராஜேஸ்வரியின்
‘குழந்தை இன்பம்’
29/1/24 இராஜேஸ்
இராமசாமியின் ‘தொடுகை’
ஜனவரி மாதம்
முழுவதும் கலந்துரையாடல் சிறப்பாகவே நடந்தது. கதைகளை வாசித்த வாசகர்களும் கதையை எழுதிய
எழுத்தாளரிடம் நேரடியாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
பிப்ரவரி மாதம்
முழுவதும் சிங்கப்பூர் எழுத்தாளகளின் சிறுகதைகளைக் குறித்து பேசவுள்ளோம். அதில் தொடக்கமாக
எழுத்தாளர் அழகுநிலாவின் ‘விலக்கு’ சிறுகதை அமைந்தது. இம்மாதத்திற்கான மற்ற மூன்று
சிறுகதைகளையும் அதனை எழுதிய எழுத்தாளர்கள் பற்றிய அறிவிப்பும் இந்த வாரம் அறிவிக்கப்படும்.
தொடர்ந்து சிங்கை எழுத்தாளர்களின் படைப்புகளையும் இந்த உரையாடல் களத்தில் பயன்படுத்தவுள்ளோம்.
அந்த முன்னெடுப்பிற்கு எழுத்தாளர் அழகுநிலா உதவுவதாகச் சொல்லியுள்ளார். அவருக்கு எங்கள்
நன்றி.
இவ்வருடத்திற்கான
அடுத்த கட்ட திட்டங்களாக
1.
அறிவியல் சிறுகதைகள் ஓர் அறிமுகம்
2.
நவீனச்சிறுகதைகள் என்றால் என்ன, எப்படி புரிந்து
கொள்வது?
3.
சிறுவர் இலக்கியம்
4.
நான் ஏன் கவிதை எழுதுகின்றேன்?
5.
நாவலாசிரியரின் அனுபவம்
6.
எதை வாசிப்பது எப்படி வாசிப்பது?
போன்ற தலைப்புகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருகின்றோம்.
வாசிப்பின் வழி நாம் தொடர்ந்து இணைந்திருப்போம். எப்போதும் உடனிருக்கும் உங்கள் அனைவருக்கும்
எப்போதும் என் அன்பு.
0 comments:
கருத்துரையிடுக