விசாரணை அதிகாரி - புத்தக வாசிப்பு 1 (2023)
அதற்கு உழைக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் எப்போது நன்றிக்கு உரியவர்கள்.
சில மொழியாக்கங்கள் தொழில் ரீதியாக வியாபாரத்தையும் விற்பனையையும் முதன்மைப்படுத்தி வாசகர்களை படுத்தி எடுக்கிறது. கூகல் மொழியாக்கத்திற்கு சற்றும் குறைவைக்காத நேரடி மொழியாக்கங்கள் அவை. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை மொழியாக்கம் செய்துள்ளோம் என்கிற விளம்பரத்தைத் தவிர அம்மொழியாக்கத்தில் வேறொன்றும் இருக்கவில்லை.
அதற்காகவே மொழியாக்கப் படைப்புகளை தேர்ந்தெடுக்கையில் பலவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எந்தப் பதிப்பகம், எந்த எழுத்தாளர், யார் மொழிபெயர்ப்பாளர் போன்றவை அதில் முக்கியமாக அடங்கிவிடும்.
இவ்வருட தொடக்கத்தில் எனக்கு பிடித்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துகளை வாசிக்க எடுத்தேன்.
விசாரணை அதிகாரி என்கிற புத்தகம்; கரமசோவ் சகோதரர்கள் நாவலின் திருப்புமுனை அத்தியாயம் என்ற குறிப்பில் வந்துள்ளது. நூல்வனம் பதிப்பகம் மிகவும் நேர்த்தியாக புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். சமீப காலமாக சொல்வனம் பதிப்பகத்தின் வெளியீடுகள் தரமானதாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. முதல் பார்வையிலேயே கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றன. நூல்வனம் மணிகண்டனுக்கும் அவரின் குழுவினரின் அக்கறைக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள்.
‘விசாரணை அதிகாரியை’ கவிஞர் ஷங்கர்ராமசுரமணியன் மொழிபெயர்த்துள்ளார். அதற்கு காரணமாகவும் அவர்தான் மொழிபெயர்க்க வேண்டும் என எஸ்.ராமகிருஷ்ணன் முன்மொழிந்துள்ளார். எஸ்.ராவின் கணிப்பு வாசகர்களுக்கு விருந்தாக அமைந்துவிட்டது.
விசாரணை அதிகாரியை வாசித்து முடிக்கவும்; எப்படியாவது கரமசோவ் சகோதரர்களை வாசித்துவிட வேண்டும் என்கிற விருப்பம் எழுந்துவிட்டது. பல நாட்களாக என் புத்தக அலமாரியில் இருக்கும் அப்பெருநாவலை வாசித்திட வேண்டும்.
கடவுளின் பெயரால் உருவான ஒன்று பின்னர் கடவுளுக்கே எதிராக; அந்தக் கடவுளே இனி தெவையில்லை என்ற நிலைக்கு வருகிறது. அதற்கான காரணக்காரியங்களை அடுக்கிக்கொண்டுப்போகும் விசாரணை அதிகாரி கதாப்பாத்திரம் நம்மையும் ஒருகணம் தன்வசம் இழுத்துக் கொள்கிறது.
கடவுள் பூமிக்கு வந்து அவர் எதிர்க்கொள்ளும் சிக்கலையும் அவரால் எதிர்க்கொள்ளப்படும் சிக்கல்களையும் பல கதைகளில் வாசித்திருப்போம் திரைப்படங்களாகவும் பார்த்திருப்போம். எழுத்தாளர்களுக்கு முழு சுதந்திரம் உள்ள கதையோட்டம் அது. சிலர் அதில் நகைச்சுவையையும் சீர்த்திருத்த கருத்துகளையும் இன்றைய காலக்கட்டத்தின் மாற்றத்தையும் சொல்லியிருப்பார்கள்.
‘கரமசோவ் சகோதரர்கள்’ எழுதிய தஸ்தயெவ்ஸ்கி; அதன் விசாரணை அதிகாரி அத்தியாயத்தில், எழுப்பியிருக்கும் கேள்வி மிக முக்கியமானது. இன்றளவும் ஒவ்வொரு மனிதனாலும் அவனவன் சூழலுக்கு அக்கேள்வி ஏதாவது ஒரு வடிவில் வந்து நிற்கிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மதி மயங்குகிறோமா அல்லது அதனை தாண்டி வருகின்றோமா என்பதுதான் ரொம்பவும் கடினமான ஒன்று. அவற்றை கேள்வி பதிலிலிருந்து குறிப்பாக முடிவான கேள்விகளில் இருந்து கதையை நகர்த்தியிருக்கிறார்.
‘அதைப் பொறுத்தவரை நீ சொன்னது சரிதான். மனித இருப்பின் ரகசியம் வெறுமனே பிழைத்திருப்பதில் இல்லாமல் எதற்காக நாம் வாழ்கிறோம் என்பதிலேயே உள்ளது………..’ என்ற நாவலில் வரிகளிலேயே இந்த வாசிப்பனுபவத்தை நிறைவு செய்கிறேன்.
0 comments:
கருத்துரையிடுக