- நட்ட கல்லும் ஊற்றும் பாலும் –
“கல்லுக்கு
ஊத்தற பாலை… பசிக்கு அழும் குழந்தைக்குக் கொடுக்கலாமே..?” ரொம்பவும் பழைய பழகிப்போன
கேள்வியை இங்கு விடாது கேட்டுக்கொண்டே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கமாகத்
தைப்பூச தினத்தன்றும் அல்லது இதர விழாக்காலங்களில் மட்டுமே இந்தக் கேள்வி பெருமளவு
படையெடுக்கும். மற்ற நாட்களில் அதன் வீரியம் குறைவாகவோ அல்லது பெரிதாக அலட்டிக்கொள்ளாதவாரோ
இருக்கும்.
இந்த
நாட்களில் மட்டும் ஏன் வறுமையில் சிக்கிய மனிதர்கள் மீது இன்னொரு மனிதனுக்கு அத்துணைப்
பெரிய கருணை! மற்ற நாட்களில் அம்மனிதன் வயிறார சாப்பிட்டுக்கொண்டா இருக்கிறான்.
பசி
கொண்டவனுக்குப் புசி கொள்ள ஏதும் கொடுக்க நினைப்பதே ஆதார நினைப்பு/தேவை என்றால், நாள்
கிழமை பார்த்து பசிக்கு பால் கொடுக்க யாரும் சொல்ல மாட்டார்கள். இங்குச் சிக்கல் பசியும்
பசிக்கின்ற மனிதனும் அல்ல. நம்பிக்கை;கொள்கை.
“கல்லுக்கு
ஊத்தற பாலை…!” என்று தொடங்கும் அதே வார்த்தையின் சாயலில், “பத்து பேருக்கு மாலையும்
பொன்னாடையும் வாங்கிப் போடற காசையும் ஒரு குடும்பத்துக்குச் சாப்பிட கொடுக்கலாமே?”,
“இவ்வளவு செலவு செய்து மேடை நிகழ்ச்சி செய்றதுக்குப் பதிலா கஷ்டப்படுற பிள்ளைங்களுக்குப்
புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாமே?” என யாரும் கேட்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படிக்
கேட்கத்தான் வேண்டும் போல. ஏனெனில் இங்கு எல்லோருக்கும் இன்னொரு மனிதன் இடர்பாடுகளில்
இருந்து வெளிவர வேண்டும் என்றுதானே எண்ணுகிறோம்.
ஆனால்
அதனை ஏன் நேரடியாகச் செய்யாமல் இன்னொருவன் செய்வதில் இருந்து அதற்குப் பதிலாக இதனைச்
செய்யவேண்டும் என அவனுக்கு அறிவுரைகளைச் சொல்லிகொண்டிருக்கிறோம். செய்கின்றவன் பேச
மாட்டான் ஏனெனில் அவனுக்கு அதற்கான நேரம் இருக்காது; என என் பள்ளி ஆசிரியர் ஒரு முறை
சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன்.
“நட்ட கல்லைத் தெய்வமென்று
காலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண்
மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ?’’
(சிவ
வாக்கியர் பாடல்-5)
கல்லில்
என்ன இருக்கிறது எனக் கேட்ட சிவ வாக்கியரை விடவா ஒருவர் கேள்வி எழுப்பிட முடியும்.
ஆனால் இதனை எப்போதும் பேச்சிற்கிடையில் கொண்டுவர மாட்டார்கள். கொண்டு வந்தால்; ‘நட்ட
கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?’ என்ற கேள்விக்குப் பதில் தரவேண்டிவரும். கல்லும்
இல்லை கடவுளும் (நாதனும்) இல்லை என்ற கொள்கை உள்ளவர்களுக்குச் சிவ வாக்கியர் எப்படி
உதவுவார்.
உண்மையில்
கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாலேயே சிவ வாக்கியரின் கேள்வியை ஆழந்து யோசித்துப்
பதில் காண முடியவில்லையே. இதனைப் புரிந்து கொண்டிருந்தால் கோவில்களில் நடக்கும் உள்ளரசியல்
இல்லாமலேயே இருந்திருக்கும். வீட்டுக்கு ஒரு கோவில் அதற்கொரு தலைவர் என்கிற குழப்பங்கள்
இருந்திருக்காது. மரங்களுக்கு மத்தியிலும், தகரக் கொட்டகைக்குள், அடுத்தவர் நிலத்தில்
எனத் தோன்றும் கடவுள்கள் யாரும் உள்ளிருக்கும் நாதனாய் உருமாற முடியவில்லையே.
ஒரு
முறை இயல் பதிப்பக நிகழ்ச்சியில் மீதமான உணவு பொட்டலங்களை யாருக்காவது கொடுக்கலாம்
எனப் புக்கிட் பிந்தாங் வட்டாரத்திற்கு வண்டியை விட்டோம். வெளியில் இருந்து பார்க்க
பணக்காரர்கள் அதிகம் உலாவும் இடமாகத் தெரியும். ஆனால் அன்று நான் பார்த்தது இன்று கூட
நினைவில் இருக்கிறது. மலாய்க்காரர், சீனர், இந்தியர், வெளிநாட்டவர் என எந்தப் பாகுபாடும்
இன்றியும் கடையோரங்களிலும் சாலையோரங்களிலும் அட்டைப்பெட்டியைப் போட்டு அதில் படுத்திருக்கிறார்கள்.
சிலருக்கு அதுகூட இல்லை. வெறும் சிமெண்டு தரையில் நாளிதழ்களை விரித்துப் படுத்திருக்கிறார்கள்.
நாங்கள்
எங்கள் வண்டியை நிறுத்தி உணவு பொட்டலங்களை வெளியில் எடுக்கவும், பசியில் ஒவ்வொருவரும்
ஓடி வந்ததைப் பார்க்கையில் மனம் உடைந்துவிட்டது. உணவு பொட்டலங்கள் முடிந்து வண்டியில்
ஏறும் சமயத்தில் ஒரு பாட்டி தாமதமாக வந்து சாப்பிட ஏதும் இருக்கா எனக் கேட்டார். அந்தக்
கண்கள் பசியில் பெரிய எதிர்ப்பார்ர்ப்புடன் இருந்தது. சட்டெனப் பாக்கெட்டில் இருந்த
பத்துவெள்ளியை எடுத்து கொடுத்துவிட்டு அவர் முகத்தை மேற்கொண்டு பார்க்க இயலாமல் வண்டியில்
ஏறிவிட்டேன். ஏதோ ஒரு மன உளைச்சல் கொஞ்ச நேரம் என்னை அமைதியாக வைத்திருந்தது.
சில
ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் இணைந்து பள்ளிகளுக்கான புத்தக விற்பனையைச் செய்தேன்.
அப்போதுதான் ஆரம்பித்தோம் என்பதால் எதிர்கால வருமானத்தைக் கணக்கில் கொண்டு எனக்கான
சம்பளத்தைக் குறைவாகவே பெற்றுக்கொண்டேன். அப்போதும் கடன்களைக் கட்டுவதற்கும் குடும்பச்
செலவுக்குமே அது கைகடிக்கும்படி இருக்கும். ஒரு ரொட்டி துண்டையும் ஒரு பாட்டிலில் தண்ணீரையும்
பிடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்புவேன். அந்த ரொட்டியை இரண்டு வேலையாகப் பிரித்துக்
காலை உணவாகவும் நண்பகல் உணவாகவும் சாப்பிட்டுக்கொள்வேன்.
அப்போதுதான்
நண்பர் மூலமாகச் சாய் பாபா செண்டர் குறித்துத் தெரிய வந்தது. தினமும் அங்கு உணவு இருக்கும்.
யார் வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம் என்றார். அதுவரையில் எனக்கு அது தோன்றவில்லை.
அவ்வப்போது சாய் பாபா செண்டருக்கு சென்றாலும் அங்குள்ள உணவை கவனிக்கவில்லை. அப்போது
அது எனக்கு தேவையாகவும் இல்லை.
பின்னர்
தொடர்ந்து, என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சாய் பாபா செண்டரில் சாப்பிட ஆரம்பித்தேன்.
வேலை முடிந்ததும் நேராக அங்குச் சென்று பாபாவிற்கு ஒரு வணக்கத்தைக் போட்டுவிட்டு வயிறார
சாப்பிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்துவிட்டுதான் திரும்புவேன்.
யாரோ
ஒருவர் கொடுக்கும் அரிசியிலும் காய்கறிகளிலும் அவருக்கு நேரடியாகத் தொடர்பில்லாத எனக்குத்
தினமும் உணவு கிடைத்தது. இப்போது கூட நான் அங்குச் சென்று சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.
ஒவ்வொரு
மாதமும் என் கையிருப்புக்கு தகுந்த மாதிரி சில காய்கறிகளையோ அரிசி பைகளையோ வாங்கிகொண்டு
சாய் பாபா செண்டரில் கொடுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இப்போது ‘புத்தகச்சிறகுகள்
புத்தகக்கடை’ என்னும் இணையப் புத்தக அங்காடியை நடத்தி வருகிறேன். என்னிடம் புத்தகம்
வாங்குகின்றவர்களின் மூலம் எனக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பகுதியில் அதனைச்
செய்து வருகிறேன்.
யாரோ
ஒருவரின் பிரார்த்தனையிலும் நம்பிக்கையிலும் என் வயிறு நிறைந்தது போல, என்னால் முடிந்ததை
நான் செய்யும் போது அது இன்னொரு மனிதனின் வயிறை நிறைக்கிறது என்பது எனக்குள் சக மனிதன்
மீதான அன்பை அதிகப்படுத்துவதாகப் பார்க்கிறேன்.
சிலர்
தெருவோரங்களில் இருப்பவர்களுக்கு உணவுகளைத் தினமும் கொடுக்கிறார்கள். ஆதரவற்ற கால்நடைகளுக்கு
மருத்துவம் முதல் உணவுகள் வரை பல தொண்டூழியர்கள் கொடுத்துக்கொண்டும் செய்துக்கொண்டும்
இருக்கிறார்கள்.
இவர்கள்
எல்லோருமே ‘உள்ளிருக்கும் நாதனை’ உணவுகள் கொடுப்பதன் மூலமாகக் கண்டுகொள்கிறார்கள் தானே.
அது
கடவுள் ! அது கல் ! என்கிற சண்டைகளுக்கு மத்தியில் அந்த மனிதன் பசியோடு இருக்கிறான்,
கல்வி இன்றி இருக்கிறான்… என்பதே முதலில் பதிலளிக்க வேண்டிய கேள்வி.
1 comments:
''இப்போது ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணையப் புத்தக அங்காடியை நடத்தி வருகிறேன். என்னிடம் புத்தகம் வாங்குகின்றவர்களின் மூலம் எனக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பகுதியில் அதனைச் செய்து வருகிறேன்.''
என் சார்பில் நன்றியும் - வாழ்த்திகளும் சகோ...
கருத்துரையிடுக